திங்கள், 11 ஜனவரி, 2021

"நடுவோம் வாரீர்" பசுமை இயக்கம். #GrowWithCAP


2020 –ஆம் ஆண்டு நாம் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. விவசாயத்தின் மகிமையை அதன் அவசியத்தை உணர்ந்த ஆண்டு என்றுகூட சொல்லலாம். கோவிட் தொற்று பரவிய காலத்தில், உணவு பொருட்களின் பற்றாக்குறை, காய்-கறிகளை வாங்க முடியாத சூழ்நிலை என்று பல விஷயங்கள் விவசாயத்தின் தேவையை நமக்கு உணர்த்தி இருக்கின்றன. இது ஒரு படிப்பனை. இந்தப் படிப்பனையை செயல்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகவும் இருக்கிறது. 
 அதற்காக பல தன்னார்வ அமைக்கள் களத்தில் இறங்கியுள்ளன. அதன் நீரோட்டத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் இணைகிறது. இந்தியர்களான நாமும் அதில் இணைவது நாட்டிற்கு மட்டுமல்ல நமக்கும் நம் வருங்கால சந்ததியினருக்குமே கூட அவசியமாகும். பிறக்கப் போகும் 2021 ஆண்டின் முதல் தேதியில் நமது விரல்கள் பசுமையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் "நடுவோம் வாரீர்" என்ற இயக்கத்தைத் தொடங்கி உள்ளது. 

அனைத்து மலேசியரும் 1.1.21 வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது ஒரு காய்கறி, விதை, செடி, மரம் அல்லது பூக்கள் நட வேண்டும். வாழை, பப்பாளி, முருங்கை, மா, வெண்டை, கத்திரி, மிளகாய், கறிவேப்பிலை, புதினா, வல்லாரை, கற்பூரவல்லி, மஞ்சள் என உங்களுக்கு பிடித்த அல்லது தேவையான ஏதாவது ஒன்றை நீங்கள் நட வேண்டும். இதன் நோக்கம் உணவு தேவைக்கு மட்டுமல்ல. ஒரு விவசாயியின் அனுபவத்தை நாம் பெறுவதோடு, நாம் இந்தப் பூமித்தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற உண்ணத நோக்கமும் அடங்கியுள்ளது. 

நமது மண், விவசாயத்திற்கு ஏற்ற வளமான செலுமையான மண். அதனால்தான் இதற்கு முன்னால் நமது நாடு ஒரு விவசாய நாடாக பெயர் பதிக்க முடிந்தது. வெற்றியின் பாதையில் முன்னோக்கிச் செல்ல இன்று தொழிற்துறை நாடாக நாம் உருமாறிவிட்டோம். ஆனால், உண்ணும் உணவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டிருப்பது வெற்றியை நோக்கிய பயணமா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. பூக்கள் முதல் பழங்கள் காய்-கறிகள் என எல்லாமெ கிடுகிடுவென விலை உயர்ந்திருக்கும் இந்தச் சூழலுக்கு நாமும் ஒரு காரணமே. 


வாசலில் புல் மண்டிவிட்டால் அதை பிடுங்கி சீர் செய்ய சோம்பேரிப் பட்டுக்கொண்டு சிமண்ட் போட்டு மூடி மண்ணை பயனில்லாமல் செய்யும் ஆட்கள்தானே நாம். சம்பளப் பற்றாக்குறை, வேலை நிறுத்தம் போன்றவற்றால் கஷ்டப்படும்போது உணவுக்காகவும் கஷ்டப்படும் நிலையை எப்படி எதிர்கொள்வது? 

‘தூங்கி விழித்துப் பார்க்கும் போது நாம் அடிக்கடி பயன்படுத்தும் அல்லது வாங்கும் பொருளின் விலை 50 காசிலிருந்து ஒரு வெள்ளி வரையில் உயர்ந்திருக்கிறது. இனி ஒவ்வொரு நாளும் நமக்கு விலையேற்றம் தினமாகவே தொடங்கும்’’ என பயனீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரி என் வி. சுப்பாராவ். 

வானத்தில் வட்டமிடும் பருந்து, கீழே விளையாடி கொண்டிருக்கும் கோழிக் குஞ்சுகளைக் கொத்திச் சென்று விடுவது போல, இந்த விலை உயர்வும் ஒரு நாள், பயனீட்டாளர்களை ஒரு காலைப் பொழுதில் கொத்தி தூக்கிச் சென்று விடுமோ என்ற பயம் இப்பொழுது எழத் தொடங்கியிருக்கின்றது என சுப்பாராவ் உதாரணம் காட்டினார். பயனீட்டாளர்களிடையே ஒரு முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டால், மிகப்பெரிய நிதி பிரச்சினைகளை பயனீட்டாளர்கள் எதிர்நோக்க வரும் என் எச்சரிக்கு அவர், நமக்கு மிக அருமையான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். 



நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். நீங்கள் தரைவீட்டில் உள்ளவர் என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது நிலத்தில் மரம், செடி கொடி என்று ஏதாவது நடலாம். நிலம் இல்லாதவர்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தாத பழைய பாத்திரமோ, குவைளையோ, உடைந்த வாளியோ ஏதாவது ஒரு பாத்திரத்தில் மண்ணை நிரப்பி, உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு செடியை நட வேண்டும். காய்கறி வகைகள் அல்லது பூக்கள் மூலிகைகளாக இருந்தால் கூடுதல் சிறப்பு. காரணம் அவை நம் தேவைக்கு உதவக்கூடும். குறிப்பாக புதினா, துளசி உள்ளிட்டவை மூலிகைகளாகும். நடப்பட்ட செடியை புகைப்படம் எடுத்து ‘பயிர் செய்வோம்! பசுமையை பாதுகாப்போம்!’ என்று குறிப்பிட்டு உங்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து #GrowWithCAP  என்ற தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உங்களின் இந்த நடவடிக்கை பசுமையைத் தோற்றுவிக்க உதவுவதோடு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சியில் நாமும் பங்களிப்பு செய்திருப்பதற்கு ஒரு சான்றாகவும் அமையும். ஒரு சோதனையான காலக்கட்டதை கடந்திருக்கிறோம். ஆனால், அந்தக் காலக்கட்டம் இன்னும் முடியாமலே இருக்கிறது. பூச்சிகொல்லி மருந்து தெளித்த, அதிக உரம் பயன்படுத்திய அல்லது மரபனு மாற்றப்பட்ட உணவுகளுக்கு நம் உடலை பழக்கப்படுத்தி மிக எளிமையாக நோயை இலவசமாக வாங்கி அதற்கு உணவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் காரணம் சொல்கிறோம். ஒரு முறை ஒரே முறை நீங்க நட்டு வைக்கும், விஷம் தெளிக்காத கத்தரி அல்லது வெண்டைக்காயை சாப்பிட்டுப் பார்க்க இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்களேன். 2021-ஆம் ஆண்டு இயற்கைக்கு திரும்பும் இந்த முயற்சிக்கு வாருங்கள்! இப்பொழுதே நடவு செய்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக