வியாழன், 28 ஜனவரி, 2021

வால்காவிலிருந்து கங்கை வரை

 

2019-ஆம் ஆண்டிலிருந்து அதிகமானோர் வால்காவிலிருந்து  கங்கை வரை எனும் இப்புத்தகத்தை முகநூலில் பதிவதையும் சிலாகித்துப் பேசுவதையும் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.  அதே ஆண்டு நான் திருவண்ணாமலைக்கு போயிருந்த நேரத்தில்  எனது அருமை நண்பரும் தோழருமான சரவணன் கருணாநிதி அந்தப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். அந்தப் புத்தகத்தை மட்டுமல்ல சில முக்கிய இடதிசாரி புத்தகங்களை எனக்கு அவர் பரிசளித்தார். 

வால்காவிலிருந்து  கங்கை வரை என்ற இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கும்போது ஒரு மனநிலை இருந்தது.  நல்ல தொடக்கம். என்பதுமாறியான மனநிலை அது.  20 பெயர்கள்.  20 பெயர்களுக்கும் 20 கதைகள். சில கதைகளுக்கு கிளைக் கதைகளும் இருக்கின்றன.  சிலப் பெயர்கள் எங்கோ எதிலோ வாசித்த மாதிரியாக எனக்கு தோன்றினாலும்,  என்னால்  உறுதி செய்ய முடியவில்லை.  சிலப் பெயர்கள் புதியவையாக தோன்றினாலும், கதையை எங்கோ வாசித்த மாதிரியான மாயை. அதையும் எங்கே என என்னால் உறுதி செய்ய முடியவில்லை.

மூன்றாவது பெயரை வாசித்து முடிக்கும்போது, சிறு குழப்பம் தொடங்கி முதல் பாகம் முடியும்வரை அந்தக் குழப்பம் நீடித்தது.  கற்கால மனித வரலாறு தொடங்கி உலோகத்தினாலான ஆயுத காலத்தையும் கடந்து போகும்போது  டைனோசர்களின் வரலாற்றையும் ஒரு சொல்லில் கடந்து போகிறது.  இப்படி வால்கா நதியிலிருந்து கங்கைக்கு பெரும் பாய்ச்சலில்  பதிவு போய்கொண்டிருக்கிறதே, என்ற குழப்பத்தோடு தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தாலும், 11-வது கதையான பிரபாவிலிருந்து  மதம், ராஜியம்,  அடிமை, ஜாதி உள்ளிட்ட, முதலாளித்துவம் என அதே பாய்ச்சலோடு கதைகள் அமைந்திருக்கின்றன. இறுதி பகுதிகளில் குழப்பநிலை நீங்கி, இந்தப் புத்தகத்தை எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு தெளிவான பார்வை எனக்கு கிடைத்தது. 

ஆதிகால மனிதன், மனிதியின் தலைமையில், சைகை மொழியில் பேசி, குகைகளில் வசித்து, வேட்டையாடி  தொடங்கிய மனித ஜென்மம், தற்போது போர், வன்கொடுமை, கொலை போட்டி பொறாமை என்று மாறியிருப்பதை இந்தப் புத்தகம் பேசுகிறது.  

முன்னதாக பிரபாகர் சான்ஸ்கிரி எழுதியிருக்கும் 'மனிதக் கதை' மனிதன் உருவான வரலாறு வாசித்திருந்தால் 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தை புரிந்துக்கொள்வது இன்னும் எளிமையாக இருக்கும் என்பது எனது அனுமானம் ஆகும். 

புராதர இந்திய ஜோதிட சஆத்திரப்படி கிருத யுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது மகாயுகம் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்தால் 43,20,000 ஆண்டுகள் மனித வரலாற்றைப் பேசுகிறது. கற்காலம் தொடங்கி, தாமிர (உலோகம்) காலத்திற்கு மாறி, அடுத்தடுத்த கட்டத்திற்கு காலம் நகரும்போது அதை ஏற்றுக்கொள்ளகூடிய மனபக்குவம் மிகவும் சர்ச்சையோடே நடந்திருக்கிறது. உடை, நகைகள், ஆபரணங்கள்கூட மிக சர்ச்சஒயோடுதான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 

இப்படியான பலபல மாற்றங்கள்தான் மனிதர்களை அடிமைச் சந்தையில் விற்று-வாங்கும் அளவுக்கும், பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டவும், ஜாதி ரீதியிலும், வர்ணாஸ்ரம ரீதியிலும் பிரித்து அடிமைப்படுத்துகிற வரை இன்று வளர்ந்துள்ளது. அதை எதிர்க்கிற வர்கமும் தோன்றிவிட்டாலும், வர்ணாஸ்ரம முறையை இன்னும் தூக்கி பிடிக்கும் நிலையை நாம் காண்கிறோம். புத்தகத்தின் இறுதி அத்தியாயம் சுமேர் எனும் சக்கிலியரும், காந்தியின் சீடர் ராம்பாலக் ஓஜா என்பவும் பேசிக்கொள்ளும் உரையாடலாகும். இந்தப் புத்தகம் 1950களில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அந்த உரையாடல் இன்றுவரை தீராமல் நடந்துக்கொண்டிருப்பதை  நாம் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக