அதிகாலை விழிப்பு, ஏதாவது வாசிக்கலாம் எனும்போது கண் சிமிடியது அந்த சிவப்பு பூனை. வீட்டு விலங்குகளில் நான் ஆர்வம் கொள்ளாதது பூனையிடம்தான். சிவப்பு அட்டைப்படத்தில் காத்திருந்த கினோவை கையில் எடுத்தேன். ஹருகி முரகாமி சிறுகதைகள். ஹருகி முரகாமி சிறுகதைகளை ஒரு தொகுப்பாக வாசித்தது எனக்கு இதுதான் முதல் அனுபவம்.
தொகுப்பின்
முதல் கதையே கினோ தான். கினோ என்பவன் மது கடை நடத்துகிறான். அவன் மனைவி, பெரியம்மா,
கமிதா எனும் நண்பன் (நண்பன்தானா என உறுதியாக
தெரியவில்லை) இதயத்தை வெளியில் வைத்திருக்கும் மூன்று பாம்புகள், அஞ்சல் அட்டைகள்,
அவனின் பயணங்கள் என தொடர்கிறது கதை.
தன் மதுகடைக்கு
வந்த இருவர் கினோவுக்கு கொடுக்கும் பிரச்னை,
தன் மனைவிக்கு விவாகரத்து கொடுக்கும்போது பேசிக்கொள்ளும் உரையாடல், கமிதா கினோவுடனான
உரையாடல் மிக முக்கிய அம்சமாக இந்தக் கதையில் அமைந்திருக்கிறது.
இந்தத் தொகுப்பில்
இன்னும் 9 கதைகள் உள்ளன. அனைத்தும் ஒவ்வொரு
விதத்தில் வித்தியாச கதையம்சம் கொண்டவை. குறிப்பிட்டு
பேசக்கூடியவர்களாக, ஹருகி முரகாமி கதைகளில் வரும் பெண்கள் இருக்கிறார்கள். ஹருகி முரகாமியின் கதைகள் வரும் பெண்கள் பெருவாரியாக
கிளை பாத்திரங்களாக வந்தாலும் மிக நுனுக்கமான பாத்திரவாதிகளாக கதையை நகர்த்திச் செல்கிறார்கள்.
நேரடியாகவும்
கதைகளுக்குள் ஒரு கதையாகவும் சூழலை நகர்த்திச்
செல்லும் பெண்கள் நம்மைவிட்டு நகர்ந்துச்செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஹருகி முரகாமியின்
ஸ்டைல் இவ்வாறுதான் இருக்குமோ என்று நமக்கு தோற்றும்போது பிரபஞ்சனின் கதைகளில் வரும்
பெண்களும், இமையம் கதைகளில் வரும் பெண்களும் சற்றே நம் சிந்தனைக்குள் நுழைந்து வரிசையில்
நிற்கிறார்கள்.
இந்தத் தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளில் 8 கதைகள் பெண்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.
நகரும் சிறுநீரக வடிவக்கல் கதையில் வரும் கிர்ரீ
எனும் பெண் தன் லட்சியத்திற்காக தன் இலக்கை
நோக்கி பயணிக்கிறாள். அதற்கு இடையில் நடக்கும் எழுத்தாளர் ஜுன்பே உடனான தற்காலிக உறவு எப்படி இருக்கிறது என்பதை
மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.
அதுபோல டோனி
தகிதானி என்ற கதையில் வரும் டோனியின் மனைவி உடைகள் மீது பிரியம் கொண்டவளாக இருக்கிறாள்.
கட்டுப்படுத்தமுடியாத உடைகள் மீதான ஆர்வம் அவர்களின் வாழ்கையை எப்படி புரட்டி போடுகிறது.
இரு பெண்கள் அந்தக் கதையில் தன்னிலை பேசுகிறார்கள்.
ஹருகி முரகாமி
பதிவு செய்திருக்கும் ஆண்-பெண் உறவு பல இடங்களில் மிக அழகாகவும் புரிதலோடும் இருக்கிறது.
சில சம்பவங்கள் ஜப்பானிலும் சில சம்பவங்கள் அமெரிக்காவிலும், நடப்பதைப்போல அமைந்தாலும் சுதந்திரமான வாழ்க்கையையும் அந்த வாழ்கையில் ஏற்படும் நடைமுறை
சிக்கலையும் எதார்த்தையும் அனுமானிக்க முடிகிறது.
பெண் பாத்திரங்களை
சரியான புரிதலோடு கொண்டுச் செல்வது ஒரு பெண்ணாக அதன் உணர்வை என்னால் புரிந்துக்கொள்ள
முடிகிறது. அவ்விடம் முரகாமி மீது மதிப்பு
பிறக்கிறது. அந்த மதிப்பு எல்லா எழுத்தின்மீதும் அத்தனை சுலபத்தில் வந்துவிடுவதில்லை.
இந்தக் கதைகளை தமிழில் ஸ்ரீதர் ரங்கராக் மொழிபெயர்த்திருக்கிறார். எதிர் பதிப்பகம் வெளியீடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக