சனி, 16 ஜனவரி, 2021

நாங்கள் வரலாறு படைத்தோம் (we were making history)

தலைப்பு: நாங்கள் வரலாறு படைத்தோம் (we were making history) 
தமிழில் : பேரா.ஆர் சந்திரா வெளியீடு: பாரதி புத்தகாலயம்
48 பக்கங்கள் கொண்ட கையேடு மாதிரியான இந்தப் புத்தகம் ‘வீரம் செறிந்த தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற பெண் வீராங்களைகளின் பங்கை எடுத்துக்கூறும் வாய்மொழி வரலாறு’ என்று அடிக்கோடிட்டு  அறிவித்துவிட்டு பேச தொடங்குகிறது. 

இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கும் பெண்கள் மேட்டுக்குடி வீராங்கனைகள் அல்ல. இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்களில் முக்கியமாக இடம் பிடித்திருக்கும் தெலுங்கானா விவசாய சமூகத்தைச் சேர்ந்த கடைநிலைப் பெண்கள். நிஜாம்களும், தேஷ்முக் குகளும், தேசாய்களும் இவர்களுக்கு செய்த கொடுமைகளை பார்க்கும்போது மண்டையில் சூடு ஏறுகிறது. நில பிரபுகளிடம் கூலி கேட்காமல் கட்டாய உழைப்பை வரியாக செலுத்தியிருக்கிறார்கள் சலவை தொழிலாளிகளும், முடி வெட்டுபவரும், மரவேலை செய்பவர்கள் உட்பட தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பலரும். இதில் பெண்களின் நிலை படுபயங்கரமாக இருக்கிறது. நல்ல துணி உடுத்திக்கொள்ளக் கூடாது. தலையில் பூ வைத்துக்கொள்ளக்கூடாது, சாப்பிட்டுக்கொண்டிருந்தால் கூட ‘துரை’ அல்லது துரைசாணி அழைத்தால், சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓட வேண்டும். நிலப்பிரபுவின் நிலத்தில் வேலை செய்யும்போது குழந்தைக்கு பாலூட்டக்கூட விட மாட்டார்கள். இந்தப் பெண்கள் மீது நிலப்பிரபுக்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. நிலப்பிரபுகளின் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகிய விவசாயப் பெண்கள் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 

 1916-லிருந்து மகளிர் அமைப்புகளை அமைத்து, ஒடுக்குமுறையை எதிர்த்து செயல்பட தொடங்கியிருக்கின்றனர் பெண்கள். குறிப்பாக கல்வி, விபச்சார ஒழிப்பு, பர்தா முறை ஒழிப்பு, விதவை மறுமணம் உள்ளிட்ட விஷயங்களை விவாதித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக 1936 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாதர் சங்கம் விவசாயப் பெண்களை திரட்டும் பணியை செய்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் 16 விவசாயப் பெண்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படையாக வைக்கின்றனர். 



 தெலகா இனத்தைச் சேர்ந்த கமலம்மா என்பவரின் கொள்ளுப்பாட்டி, பாட்டி, தாய் உள்ளிட்டவர்கள் தல்லதலைமுறையாக ஜமிந்தார் குடும்பத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்திருக்கின்றனர். இந்தப் பெண்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடக்காது. தவிர கமலம்மாவின் கொள்ளுப்பாட்டி ஒரு பிராமண குடும்பத்திற்கு ஒரு படி அரிசி மற்றும் ஒத்த ரூபாய்க்காக விற்கப்பட்டிருக்கிறாள். அந்த நிலப்பிரபு வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு அவள் பாலியல் சேவையையும் செய்ய வேண்டும். நிலப்பிரபுகளின் வீடுகளில் அடிமையாக போகும் பெண்கள் திருமணமாகாதவர்களாகவும் கன்னிகழியாதவர்களாகவும் இருக்க வேண்டும். அதனாலேயே குழந்தைகள் திருமணம் அதிகம் நடந்திருக்கிறது. இதுபோக துரை மார்களின் அட்டகாசமும் அதிகமாக இருந்திருக்கிறது. துரைமார்களின் இச்சைக்கு பலியாவதென்பது சர்வ சாதாரணம் எங்கிறார் கமலம்மா. அதை பெண்கள் வெளியில் சொல்லக்கூடாதாம் ; துரையை எதிர்த்தால் வாழ்க்கையே நரகம் ஆகும் என்கிறார். அப்படி வெளியில் சொன்னதற்காக கூட்டு பலாத்காரத்திற்கு அந்தப் பெண் ஆளானதை நினைவு கூறுகிறார் கமலம்மா. 

கமலம்மாவின் தந்தை கொஞ்சம் முற்போக்கானவர் என்று சொல்கிறார்கள். தன் மனைவியை திருமணம் செய்யாவிட்டாலும், தன் பிள்ளைகளை கவனமாக வளர்த்திருக்கிறார். படிக்க வைத்திருக்கிறார். நிலபிரபுகளிடமிருந்து காப்பாற்ற 8 வயதிலேயே திருமணம் செய்துவைத்திருக்கிறார். கால ஓட்டத்தில் தெலுங்கானா போராட்டத்தை கேள்விபட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஆயுதம் ஏந்தி போராடியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் காட்டில் தன் சொந்த குழந்தையை விட்டுவிடக்கூட துணிந்திருக்கிறார். பின் தோழர் ஒருவரின் மூலம், குழந்தை இல்லாத ஒருவருக்கு தன் குழந்தை கொடுத்துவிடலாம் என்று கேட்கவும் கொடுத்துவிட்டு இன்றுவரை அந்தக் குழந்தை குறித்த தகவலை அவரால் அறியவே முடியவில்லை. 

தயானி பிரியம்வதா என்ற போராளி கட்சியில் மிக முக்கிய பொறுப்பினையாற்றியிருக்கிறார். பெண்களுக்கு கல்வி, தற்காப்பு போன்றவற்றை சொல்லிகொடுத்திருக்கிறார். கட்சியோடு விவாதிப்பார். விவசாயிகள் அதிககூலி கேட்கவேண்டும், குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்கள் வேலையின்போது சில மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது அவர்களிம் உரிமை என்பதையும் விளக்குவார். கட்சியில் தீவிரமாக செயலாற்றியவர் சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். மோசமான உணவு உள்ளிட்ட காரணங்களுக்காக அங்கும் போராட்டம் நடத்தியிருக்கிறார். 

தெலுங்கானா போராட்டம் முடிந்த பின்பு கட்சி பலபெண்களைம் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. அதில் பிரியம்வதாவும் ஒருவர். போராட்டத்திற்கு பிறகு கட்சியில் தீவிரமாக பணியாற்ற முடிந்திருந்தால் மனதிருப்தி இருந்திருக்கும் என்கிறார். வீட்டுக்கு அனுப்பப்பட்ட பெண்களை அவர்களை சுற்றியிருந்தவர்கள் தாழ்வாக பார்த்ததையும் வலியோடு பதிவு செய்திருக்கிறார் பிரியம்வதா. சலவைத்தொழிலாளியான அயிலம்மா என்பவரும் தெலுங்கான போராட்டத்தில் தனித்துவமானவர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது 9 ஏக்கர் நஞ்சை நிலத்தை பாதுகாக்க பெரும்பாடு பட்டு போராடியிருக்கிறார். பெரும் ஆதிக்கம் செலுத்திவந்த நிலப்பிரபுவை எதிர்த்து நீதிமன்றம் வழக்கு என அலைந்து 9 ஆண்டுகள் துணிவுடன் போராடியிருக்கிறார். 

அதுபோல சாலம்மா எனும் போராளியை சிங்கம் என்று சொல்கிறார்கள். ஒரு பெண் சமையல் வேலையைத்தான் செய்ய வேண்டுமா என்று கேட்கும் அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என்கிறார்.

கணவனும் மனைவியுமாக கம்யூனிச இயக்கத்தில் போராளியாக இருந்த லலிதம்மா தன் கணவர் சிறைக்கு சென்ற பிறகு மிகுந்த துன்பத்தை அனுபவித்திருக்கிறார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த லலிதம்மா இயக்கத்தில் இருந்தது அவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஓர் உதாரணம் சொல்கிறார்; 14 வயதில் மகன் பிறந்தான். கணவர் சிறையில் இருந்தார். வேறு வழியின்றி அம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். நான் அங்கு போவதற்கு முன்பு, நான் சுத்தமாவதற்கு பிராயச்சித்தம் செய்ய சொன்னார்கள். தங்க கம்பியை பழுக்கக் காய்ச்சி நாக்கில் சூடு வைப்பார்கள். இதற்கு ‘உவுலா’ என்று பெயர். இதை செய்ய மறுத்தால் பெற்றோர் செத்துவிடுவதாக மிரட்டினார்கள். எனக்கு வேறு ஆதரவு இல்லாததால் ஒத்துக்கொண்டேன்” என்கிறார். 

 கம்யூனிஸ்களை திருமணம் செய்துக்கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக அமையாது என்று எண்ணியவர்களுக்கு, இந்தப் போராளி பெண்கள் அப்படியல்ல என்று வாழ்ந்துக்காட்டியுள்ளனர். மகளிர் அமைப்புகளுக்கு அரசியலும், இடதுச்சாரி சிந்தனைக்கொண்ட புத்தகங்களும் பெண்கள் வாசிக்க வேண்டும் என்று மிக அழுத்தமாக கூறுகின்றனர். 

இந்தப் பெண்கள் பேசியிருப்பதில் இயக்கம் குறித்து நிலைப்பாட்டை இரண்டு விதமாக பார்க்க முடிகிறது. சில பெண்கள் எல்லா வேலைகளியும் பால்நிலை வேறுபாடு இன்றி செய்தோம் என்று சொல்கிறார்கள். அச்சமாம்பா என்பவர் கூறும்போது துணிவைப்பது சமைப்பது என்று நிறைய வேலைகள் இருக்கும் என்கிறார். தவீர ஆண் தோழர் ஒருவரோடு இணைத்து பேசப்பட்டதையும், பின் வேறு முகாமிற்கு மாற்றப்பட்டதையும் சொல்கிறார். செய்யாத தவறை செய்ததாக ஒப்புக்கொள்ள சொன்னதும் அதை மறுத்ததிற்காக கட்சி விட்டு நீக்கியதையும்கூட அச்சமாம்பா பதிவு செய்திருக்கிறார். 

தெலுங்கானா போராட்ட காலம் முடிந்ததும், பெண்களை கட்சியிலிருந்து விடுவித்து திரும்பவும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். போராட்டத்தின் போதுவ் கையில் ஆயுதம் ஏந்தி உணவு வழங்குபவர்களாகவும், செய்திகளை தெரிவிப்பவர்களாகவும், ரகசியத்தொடர்புகளை பாதுகாப்பவர்களாகவும் இருந்திருக்கும் இந்தப் போராளிகள், இப்போது வீட்டில் தையல் மிஷின் முன்பு உட்கார வேண்டுமா? என்று கேட்டிருக்கிறார்கள். ஆண்-பெண் சமத்துவத்தை கட்சிக்கு யார் வகுப்பெடுப்பது? 

 -யோகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக