திங்கள், 18 ஜனவரி, 2021

ஜூதான் - ஓம்பிரகாஷ் வால்மீகி

கடந்த சில நாட்களில் வாசித்த முடித்த புத்தகம் ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய ஜூதான். ஜூதான் என்றால் எச்சில் என்று அர்த்தம். இந்தப் புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பை வாசித்தப் பிறகு, என்னை இந்தப் புத்தகம் உண்டு-இல்லை என்று செய்திவிடும் என்று தோன்றியது. தெரிந்தே அதிர்ச்சியில் விழ நான் விரும்பவில்லை. எனவே புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வந்து விட்டேன். 

 ஆனால், அப்புத்தகத்தின் பின் அட்டைக் குறித்த சிந்தனையை கிளட்டி வைக்க என்னால் முடியவில்லை. அந்தப் புத்தகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் சமூகம் என்னை பின் தொடர்ந்துகொண்டே இருந்தது. மறுநாள் அப்புத்தகத்தை வாங்கிவிட்டேன். 2020-ஆம் ஆண்டு எனக்கு மிகுந்த சோதனையான ஆண்டாக இருந்த வேளையில், 2021-தொடங்கப்போகும் நேரத்தில் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டுமா என்று தோன்றியது. தோன்றிய வேகத்தில் என் புத்தி புத்தகத்தின் முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கியிருந்தது. 



 சில பக்கங்களை கடக்க முடியாத தடுமாற்றத்துடன் மூடி வைத்தேன். சில பக்கங்களை கண்ணீரில் நனைத்துக்கொண்டேன். ஒரு சில அனுபவங்களின் வலி என்னால் உணர முடிந்தது; மிகத் துள்ளியமாகவே. மேலும், வசைகளின் காயங்களை என்னால் தொட்டுப் பார்க்கவும் முடிந்தது. மாணவர் பருவம் முதல், குடும்ப வாழ்கைக்கு பிறகும்கூட சாதியானது எவ்வாறு தனி மனிதனொருவனை ஆட்டிப் படைக்கிறது என்பதனை நம்மோடு பேசுகிறார் ஓம்பிரகாஷ். 

பார்ப்பன ஆதிக்கம் மற்றும் தம் சாதியிலேயே கூட இருக்கின்றன கலாச்சார அதிர்வுகளையும், படித்தவர்கள் தம் சாதியை மறைப்பதற்காக போட்டுக்கொள்ளும் வேஷத்தையும் வெட்ட வெளிச்சமாக பேசுகிறார். பல இடங்களில் பகுத்தறிவாதியாக செயல்படும் ஓம்பிரகாஷ், பல இடங்களில் தன் சாதிய கட்டமைப்புக்குள்லிருந்து மீற முடியாத தருணங்களை பதிவு செய்திருக்கும் விதம் ரத்தக்களரியாய் தெறித்து நம்மீதே ஒட்டிக்கிடக்கிறது.

 “பேய்கள் இல்லையென்று என் பகுத்தறிவு மறுத்து வந்தாலும், கலாச்சாரரீதியாக என் மனதின் ஆழத்தில் அது பற்றிய அச்சம் இருந்தது. அந்த அச்சத்திலிருந்து விடுபட எனக்கு நீண்ட காலம் பிடித்தது எனும் ஓம்பிரகாஷ், ஒரு முறை வயிற்றுபோக்கினால் காய்ச்சல் ஏற்பட்டு அவதியுற்றிருக்கிறார். அவரின் அப்பா இரண்டொரு மந்திரவாதிகளிடம் கூட்டிச்சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. பேயோட்டும் தூரத்து உறவினர் ஒருவர் பேயட்டை விரட்டுகிறேன் என்று சவுக்கடி கொடுத்திருக்கிறார். மிகவும் பலவீனமாக இருந்த ஓம்பிரகாஷ், வலிதாங்க முடியாமல் அடிப்பதை நிறுத்த சொல்லியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சவுக்கை பிடிங்கி தனக்கு பேய் பிடிக்கவில்லை என்று கத்தவே, சாமியாடியை பிடித்திருந்த பேய் ஓடிப்போனது. சாமியாடி ஆடுவதை நிறுத்தி தலையில் கையைவைத்துக்கொண்டு ஊருக்கே போய்விட்டார். 

 ஏழை தலித் சமூகத்தில் மருத்துவ வசதியை நாடிப்போவது அவர்களின் சக்திக்கு மீறிய ஒரு செயலாகவே இருந்திருக்கிறது. சாமியாடிகள் செய்வது ஏமாற்றுவேலை என்பது தெரியாமலே பல உயிர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பூசாரிகள் மீதான நம்பிக்கை குறையவே இல்லை என ஓம்பிரகாஷ் பதிவு செய்கிறார். சாராயமும் பன்றி இறைச்சி சமையலும், பன்றி வளர்ப்பும், பன்றியை பலியிடுவதும் சுஹ்ரா சமூகத்தில் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால், அதுவே அவர்களை மிகவும் தாழ்ந்த சமூகத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. அதை தவிர்க்க இளம் தலைமுறையினர் தன் சமூகத்தையே மறைத்து, அல்லது மறந்து தாம் ஒரு மேட்டுக்குடி சமூகத்தைபோல காட்டிக்கொள்ள முயல்கின்றனர். 

யாருமே கேட்காதவரை இவர்கள் எந்த ஜாதி என்று சொல்வதில்லை. தவிரவும் ஓம்பிரகாஷ் வால்மீகி மாதிரி யாரும் தமது சாதியை பெயரில் வைத்துக்கொள்வதில்லை. தலித்துகள் மத்தியில் உட்சாதி முரண்பாட்டுகள் என்ற பிரச்னை தீவிரமடைந்திருக்கிறது. உள்முரண்பாடுகள் குறித்து யாரும் விவாதம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை மிக தீவிரமாக முன்வைக்கிறார் ஓம்பிரகாஷ். மலேசியாவில் எனக்கு ஜாதி எவ்வாறு அறிமுகமானது என்பதை முன்பே எழுத்து பூர்வமாக வைத்திருக்கிறேன். எழுதப்படாத பக்கங்களை சிக்கல்களை எழுதுவதற்கு ஓம்பிரகாஷ் தூண்டிவிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக