ஞாயிறு, 6 டிசம்பர், 2020

சாமானியர்கள்தான் விவசாயிகள், ஆனால் சாமானியர்கள் அல்ல !







இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது இந்தியாவில் நடந்துக்கொண்டிருக்கும் 'செல்லோ டெல்லி' விவசாயப் போராட்டம். என் வரையில் அப்போரட்டத்தை மெய் சிலிர்க்க பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் கொரானா காலத்து அச்சத்தை தூக்கிப் போட்டுவிட்டு அவர்களோடு ஓர் ஆளாக குரல்கொடுக்க டெல்லிக்கு பறந்துப்போக முடியவில்லையே என்று என் மனம் ஏங்கி தவிக்கிறது.

 
மலேசியாவில் களப்பணிகளில் ஈடுபடும் ஒருவளாக, அங்கு நடந்துக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், ஒரு போராட்டத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் கல்வி போதனையாகவும் பார்க்கிறேன். மலேசியாவிலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் குரல் நம் நாட்டிலேயே கேட்காத போது, நாடு கடந்து கேட்க வாய்ப்பே இல்லை. சாமனிய மக்கள் முன்னெடுக்கும் ஒரு போராட்டத்தின் திட்ட வரைவு எப்படி இருக்க வேண்டும் என்பதை செயலில் பஞ்சாப் விவசாயிகள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் நான் கற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினை என்கிறேன். 

உணர்ச்சிவயப்பட்டு ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், விரைவாகவும் விரிவாகவும் சிந்தித்து செயலாற்றுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முதலாவதாக முன்னெடுக்கும் போராட்டத்தின் நோக்கம் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்னென்ன தடைகள் வரும்? அத்தடைகளை எப்படி எதிர்கொள்வது போன்ற அனைத்துமே மிக துரிதமாக விவசாயிகள் கையாண்டிருக்கிறார்கள். தமக்கான உணவையும் அவர்கள் சேர்த்தே கையோடு கொண்டு வந்தது மட்டுமல்லாமல் தம்மை வழிகளில் டெல்லிக்கு போக விடாமல் தடுக்கும் காவல்படைக்கும் சேர்த்தே உணவு பரிமாறுகிறார்கள். உணவின் தேவை மற்றும் அதன் பயிறிடுதல் சிரமம் குறித்து ஒரு விவசாயியைத் தவிர வேறு யார் சரியாக புரிந்துக்கொள்ள முடியும்? 

பசிக்காக மட்டும் உணவு தேடுபவர்கள் நாம். நமக்கான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்ன? 1927-ஆம் ஆண்டு சீனாவின் ஹூனான் விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு, விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் வரலாற்றுப்பூர்வமான போராட்டம் இதுவென வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 




 எதற்காக இந்த விவசாயப் போராட்டம்?

மத்திய பாஜக அரசு கொரோனா அவசரக் கோலத்தில், ஜனநாயகத்திற்கு விரோதமாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமலும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 

அவை... 
 1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 
2.விவசாய விளைப்பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் 2020 3.விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 

இந்த மூன்று சட்டங்களையும் நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நாடு தழுவிய நிலையில் போராட்டத்தை முடக்கிவிட்டிருக்கிறார்கள். 

இந்த மூன்று சட்டங்களையும் அவர்கள் எதிர்ப்பதின் காரணம் என்ன? 

1.விளைபொருட்கள் சந்தகளை கார்ப்பரெட் நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும். 
2.பெரு வியாபாரிகள் அதிகளவில் உணவுப் பொருட்களை பதுக்க வாய்ப்பு ஏற்படும் 
3.வேளாண் திருத்த சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனகளை ஊக்குவிக்கும் 4.குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு தட்டிக்கழிக்கப்படும். 

 விவசாயிகள் சுயநலமாக அவர்களுக்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதை சற்று ஆராய்ந்தாலே புரிந்துவிடும். உலகின் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வருகை கோட்டின்கீழ் இருக்கும் மக்களே அதிகம். அவர்களுக்கு கிடைக்ககூடிய ரேஷன் அரிசுக்கும் இதனால் பங்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ( தவிர இதே பிரச்னை வேறு ஒரு வடிவில் நமது நட்டின் கதவையும் தட்டலாம்.) 


 உலகமே திரும்பி பார்க்க வைத்திருக்கும் 'செல்லோ டெல்லி' போராட்டத்தை இந்திய செய்தி ஊடகங்கள் பெரிதாகக் கண்டுக்கொள்ளாத போது, எப்படி இது உலக மக்கள் பார்வையை எட்டியது? நிச்சயமாக சமூக ஊடகங்கள் இல்லை என்றால் அது சாத்தியமில்லாமலே போயிருக்கும். சமூக ஊடகங்களை போராட்டத்திற்கு பயன்படுத்தும் விதம், சலிக்காமல் அதை தோழர்கள் பகிர்ந்து பங்களிப்பு செய்தது, அனைத்துமே மிக நுட்பமாக அவதானிக்க கூடியதாகும்.

 அதோடு ஓவியர்கள் மற்றும் டிஜிட்டல் டிசைனர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். நமது நாட்டிலும் நிறைய புகழ் பெற்ற ஓவியர்கள் இருக்கிறார்கள். நமது நாட்டிலும் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதில் நமது ஓவியர்களின் பங்களிப்பை சல்லடையில் சலித்துவிடலாம். 

 அனைத்திலும் மேலாக பஞ்சாப் விவசாயிகள் நெஞ்சுரமென்றால் என்ன என்பதை போராட்டத்தில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த ஹீரோஹிசத்தை, பெரியவர்கள் "அது இல்லை மகளே, ஹீரோ என்றால் என்னைப்பார் என ஒவ்வொருவரும் அவர்கள் பாணியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். செய்துமுடி அல்லது செத்துமடி என்பார்கள். பெரியவர்கள் அதை செயலாற்றி கொண்டிருப்பதை பார்த்து பாடம் படிக்கிறேன்.

போராட்டத்தில் பெண்கள்

‘செல்லோ டெல்லி’ விவசாயப் போராட்டத்திற்கு பல மாநிலங்களிலிருந்து பெண்களும் அணி திரண்டு வந்துக்கொண்டிருப்பது பார்ப்பதற்கு அத்தனை எளிச்சியை கொடுக்கிறது. பெண் விவசாயிகளை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்களை ஓட்டிக்கொண்டு போராட்டக்களத்திற்கு விரைகிறார்கள். அவர்களுக்கான உணவை சாலை ஓரங்களில் தயாரித்து சாப்பிட்டுவிட்டு போராட்டத்திற்கு விரைகிறார்கள். கையில் பதாகையுடன் அவர்கள் போராட்டத்தில்  தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது அத்துனை கம்பீரமாக இருக்கிறது.  அது இந்தப் போராட்டத்தின் நம்பிகையை அதிகப்படுத்திக்கொடுத்திருக்கிறது. 


மலேசியாவில் விவசாயிகளும் சில போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். உதாரணமாக 1990-களில் கெடா மாநிலத்தின் நெல் விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தைச் சொல்லலாம். கெடாவில் அராப் சௌதியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இறால் வளர்ப்பு திட்டத்தை மேற்கொண்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் வரைச் சென்று போராடி வெற்றி பெற்றார்கள் நெல் பயிர் செய்யும் விவசாயிகள். அதேபோல ரப்பர்பால் விலையேற்றம் தொடர்பாகவும் ஒரு போராட்டம் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 நான் அறிந்த விவசாயிகளின் பெரிய ஒரு போராட்டம் என்றால் 2015-ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில் நடந்தது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்த நிலத்தில், சில தரப்பினர் அத்துமீறி நுழைந்து மேம்பாட்டுத்திட்டத்திற்காக நில ஆக்ரமிப்பு செய்ய நினைத்தது தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். கிட்டதட்ட 30 வட்டாரங்களிலிருந்து விவசாயிகள் அதில் இனபேதம் இல்லாமல் பங்கெடுத்து தங்கள் எதிர்ப்பை மாநில அரசுக்கு தெரிவித்தனர். கடந்தாண்டு கேமரன்மலை விவசாயிகளின் விவசாய நிலம் அழிக்கப்பட்டு அமளி துமிளி ஏற்பட்டதும் நாம் அறிந்த ஒன்றுதான். 

 விவசாயிகளுக்கு விவசாயிகள் அல்லாத நமது ஆதரவு என்ன? எதிலும் தரத்தை எதிர்பார்க்கும் நாம், அதற்காக வாதாடும் நாம், விவசாயிகள் நலனுக்கு என்ன பங்களிப்பு செய்திருக்கிறோம்? மூன்றாம் தரப்பினர் போல, கல்வியறிவு இல்லாதவர்களை போல ஏளனப் பார்வை பார்க்கும் நாம் அவர்கள் கைபடும் உணவைத்தான் வயிற்றுக்கு கொடுக்கிறோம் என்பதை எப்படி மறக்கிறோம்?

 விவசாயிகள் போராட்டம் என்பது தனி ஒரு சமூகத்தின் போராட்டம் அல்ல. அது நமக்கான போராட்டம்; மனித சமூகத்திற்கான போராட்டம். உணவு பொருள்களின் விலை ஏற்றம், விளைநிலங்கள் அழிப்பு அல்லது அபகறிப்பு, இடைதரகர்களின் இடையூறுகள், பயிர்கள் அல்லது தானியங்கள் தனியார்மயமாக்கப்படுதல் உள்ளிட்ட அனைத்தும் விவசாயிகள் பிரச்னை மட்டுமல்ல. பணத்தை செலவழித்து உணவு உட்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அது பிரச்னைதான். ஒரு காலத்தில் விவசாய நாடாக இருந்த நமது நாடு இன்று தொழிழ்நுட்ப நாடாக மாறியிருக்கிறது. நமது நாட்டிலேயே விளைந்த பல உணவுப் பொருட்கள் இன்று இறக்குமதி செய்தால்தான் நமக்கு கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பல விளைபொருட்கள் நமக்கே போதாமையாகிவிட்டது. அதன் வெளிபாடுதான் விளையேற்றம். 

 சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து போய் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்காக ஆதங்கம் பிறந்தது. இன்று பஞ்சாப் விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் போராட்டத்தில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. அந்த நம்பிக்கை நமது நாட்டு விவசாயிகள் மேலும் பிறக்கிறது. சாமானியர்கள்தான் விவசாயிகள் ஆனால் அவர்கள் சாமானியர்கள் அல்ல என்பதை இந்தப் போராட்டம் மெய்ப்பித்திருக்கிறது.

-நன்றி தமிழ்மலர் (6/12/2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக