மறுநாள் விடிய நாங்கள் "ஆதரவு" அமைப்பினரின் வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக கிளிநொச்சி, அக்கரையன்குளம் போன்ற இன்னும் சில இடங்களுக்குச் சென்றோம். ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் "ஆதரவின்" வேலைத்திட்டங்கள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பதையும் "ஆதரவின் "(SUPPORT)மூலம் கிடைக்கப்பெற்ற உதவிகளை, அதை பெற்றவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை காண்பதற்காக நாங்கள் தொடந்து அந்தப் பயணத்தை மேற்கொண்டோம். உதவி பெற்றவர்களின் கருத்துக்களையும் செவிமடுத்தோம். மனதுக்குக் கொஞ்சம் இறுக்கமான சூழல் இருந்தது எங்களுக்கு .
தந்தை சிறையில் இருக்க, பள்ளிக்குப் போகும் சின்னப் பொண்ணு வாழ்வாதாரத்திற்காகப் பள்ளிக்கூடம் முடிந்துவந்து வீட்டிலேயே வேலை செய்கிறாள். மிக்ஸர், முறுக்கு உள்ளிட்ட நொறுக்கு தீனி வகைகளை அந்தச் குழந்தை பொட்டலம் செய்துகொண்டிருந்தாள். எங்களைப் பார்த்ததும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளிடம் சில போட்டலங்களை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டோம். தயங்கியபடியே இருந்தாள் அவள். எங்களுக்கு அவள் சங்கடப்படுவதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. அவளுடைய சங்கடமான சூழலைப் புரிந்துகொண்ட நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். தின்பண்டங்களைப் பொரித்து எடுத்த அடுப்பில் உஷ்ணம் இன்னும் மிச்சம் இருந்தது.
நாங்கள் அக்கரையன்குளம் கடக்கும்போது அங்கிருந்த இயற்கை சூழல் மனதைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தவே வண்டியை நிறுத்தினோம். எங்களோடு வந்திருந்த ராஜன் அண்ணாவின் நண்பரும் ஆதரவு" அமைப்பினரில் ஒருவருமான, இன்னொரு அண்ணா ஒரு விஷயத்தைச் சொன்னார். அங்கே நெடுக வளர்ந்திருந்த மரங்களைக் காட்டினார். தமிழ் ஈழத்தலைவர் அண்ணா பிரபாகரன் கொஞ்சக் காலம் இங்குத் தங்கியிருந்தபோது நிறைய மரங்களை நடச்சொன்னார். அவர் கட்டளையின்பேரில் இந்தமரங்கள் நடப்பட்டன. அவரும் சில மரங்களை நட்டார். அதனால், இந்த இடம் மனதோடு கொஞ்சம் நெருக்கம் கூடியதாக எங்களுக்கு இருக்கிறது என்றார். மனதில் ஒருவகை உணர்வு பரவ அதுவரை மகிழ்ச்சியாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த நாங்கள் அமைதியானோம். அந்த மரங்கள் நிசப்தமாக எங்களைப் பார்க்க, எங்களுக்கு இது கொடுப்பினைதான் என்று எண்ணியபடி தகவல் சொன்ன அண்ணாவுக்கு நன்றி கூறி கிளம்பினோம். எங்கள் இலக்கு யாழ்ப்பாணத்தை நோக்கி இருந்தது.
2015-ல் நான் மலையகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்ததற்கும், தற்போதைய இந்தப் பயணத்திற்கும் நிறையவே வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. 2015-ல் ஆங்காங்கே இருந்த இராணுவ முகாம்கள் குறைந்திருந்தன. போருக்குப் பின்பு வைக்கப்பட்டிருந்த போர் அருங்காட்சியகத்தை காணவில்லை. இந்திய அரசு கட்டி தருவதாகச் சொன்ன கோழிக்கூண்டு வீடுகளை அப்போதும் பார்க்க கிடைக்கவில்லை; இப்போதும் அதைப் பார்க்கமுடியவில்லை. வீடுகளோ அல்லது விவசாயமோ இல்லாமல் இரு புற நிலங்கள் நெடுக்க பொட்டாலாகவும் அங்கொரு இங்கொரு வீடாகவும் இருந்தன. எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை.
நாங்கள் மேற்கொண்ட பயணம் சங்குபிட்டி பாலத்திற்குக் கொண்டு வந்தது. அதைத் தாண்டினால் யாழ்ப்பாணம்தான். யாழ்.குடாவையும் பூநகரியும் இணைக்கும் இந்தப் பாலம் 288 மீட்டர் நீளமும் 7.35 மீட்டர் அகலமும் கொண்டது. உள்நாட்டுப் போரின்போது பாதிக்கப்படைந்த அந்தப்பாலத்தை பிரித்தானிய அரசிடம் 80 கோடி ரூபா கடன் பெற்று இலங்கை அரசாங்கம் அந்தப் பாலத்தை புனரமைத்திருக்கின்றனர். மிக அழகான பாலம் அது. சூரியன் அஸ்தமனம் ஆகும் அந்த வேளையில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. நாங்கள் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து, யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் வடலியடைப்பைச் போய்ச் சேர்ந்தோம். அங்கு தான் எங்கள் யாழினியின் வீடு அமைந்துள்ளது.
தொடரும்.. ஏழாம் பாகம் வாசிக்க
https://yogiperiyasamy.blogspot.com/2018/11/7.html






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக