திங்கள், 15 அக்டோபர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 3


பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள், பல முக்கியமான தலைப்புகளில் பெண்கள் கலந்துரையாடலில் நடத்துவதற்கு முன்கூட்டியே ஒழுங்கு அமைத்திருந்த படியால், எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே இருந்தன. அன்றைய நிகழ்வை ஓவியைக் கமலா வாசுகியும்  அவர்தம் தோழியரும் கொண்டுவந்திருந்த மேள முழக்கத்துடன் தொடங்கியது. கமலா வாசுகி ஒரு பன்முக திறமைகொண்டவர் என்பதைப் பலர் அப்போதுதான் தெரிந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சூரியா பெண்கள் அமைப்பின் கலாச்சார நிகழ்வாக ஒரு  நாடகத்தை அரங்கேற்றினர். வாழ்க்கையையே புரட்டி போட்ட போரும் பெண்ணின் வாழ்க்கையையும் அந்த நாடகம் பேசியது. அதிக இரைச்சல் இல்லாத கை இசையும் வாய்ப்பாட்டும் மட்டக்களப்பு மற்றும் போரை சந்தித்த பெண்களின்  இறுக்கமான சூழலை அங்குக் கொண்டு வந்ததுடன்,  வந்திருந்த அனைவரையுமே அது இறுக்கத்தில் தள்ளியது. உண்மையில் பாதிக்கப்பட்ட பலர் அங்கிருந்ததால் இந்தச் சூழலிருந்து வெளியில் வருவதற்கு அதிக நேரமெடுத்தது. கடந்த காலத்திற்கு போய்விட்ட பலரை அவர்களின் கண்ணீரிலிருந்து மீட்டுக் கொண்டு வரத்தெரியாத எங்களுக்குச் சங்கடத்தையே ஏற்படுத்தின. வடியும் கண்ணீரை அடக்குவதற்கு  ஆறுதல் வார்த்தைகள்தான் ஏது?


கலந்துரையாடல் தொடங்கியது.

ஆண்மொழியின் கட்டுடைப்பு, சடங்குகளும் சட்டமும், வர்க்கமும் சாதியும் மற்றும் கலைகளின் ஊடாக ஆகிய நான்கு பிரிவுகளில் சந்திப்புகள் 10 கட்டுரைகள் அன்றைய தினம் சமர்ப்பிக்கப் பட்டன.

 முதல் அமர்வில்

பழமொழிகளும் பெண்களும் - ஞானவள்ளி
அவர் சந்திப்புக்கு வரமுடியாத காரணத்தினால் இளைய தலைமுறையை சேர்ந்த தோழியினால் வாசிக்கப்பட்டது.
பாலிழிவு- செவ்வியல் வழக்கும் வாய்மொழி வழக்கும் - மாலதிமைத்ரி

இரண்டாவது அமர்வில்..

பாலியல் தொழிலும் ஆண் மேலாதிக்கமும் - வழக்கறிஞர் ரஜனி
முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்தமும் பெண்களும் - லறீனா அப்துல் ஹக்
மலேசிய இஸ்லாமியப் பெண்களுக்கு கந்துமுனை அகற்றும் சடங்கு - யோகி

மூன்றாவது பிரிவில்

பெண்ணிய நோக்கில் சாதி,மதம்,வர்க்கம் - சுகிர்தராணி
சாதியும் பெண்களும் - கவின்மலர்

நான்காவது பிரிவில்

ஓவியங்களின் ஊடான பெண்ணியப் பார்வை - கமலா வாசுகி
கவிதைப்பெண்களும் என் கவிதை அனுபவமும் - விஜயலக்சுமி
ஓவியங்களும் எனது அனுபவங்களும் - ஜெனனி

இந்த இருநாள் அமர்வுகளில் ஓவியை கமலா வாசுகி, வாணிசைமன், ஔவை, காயத்ரீ, ஹஷானா, சந்திரலேகா, வெற்றிச்செல்வி, யோகி, ஆகியோர் தலைமைதாங்கினோம்.

மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் வெவ்வேறு காலக்கடத்தில்  போரின் சுவடுகள் பதிவாகியிருக்கின்றன. ஆனாலும் அதன் ரணங்களும் வலிகளும் தீர்ந்தபாடில்லாமல் பெண்களையும் சிறுவர்களையும் பெரிய அளவில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. குறிப்பாகப் போரில் ஈடுபட்ட பெண்களுக்கு கிடைக்கும் உதவித்தொகை சிலக் காரணங்களைக் காட்டி நிராகரித்ததும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் கசப்பான உண்மையையும் கண்கூடே காண முடிந்தது. 

இப்படியான கலந்துரையாடலும் முரண்பாடுகளும் அதைப் பேசி தீர்ப்பதும் என அன்றைய பொழுது எங்கள் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் எங்கள் நாளாகவே நகர்ந்தது.
இறுதியாகக் கமலா கொண்டுவந்திருந்த மேளத்தைக் கொட்டி தோழிகள் கவிதை வாசிக்க, ஆனந்த நடனத்துடன் பெண்கள் சந்திப்பை நிறைவு செய்து தோழிகளுக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தோம்.

தொடரும்..
நான்காம் பாகம்  வாசிக்க  https://yogiperiyasamy.blogspot.com/2018/10/4.html







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக