சனி, 13 அக்டோபர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 2

ஊடறு பெண்கள் முதல்நாள்  சந்திப்பு..


பெண்கள் என்றாலே அவர்களுக்கு நேரத்தோடு எதையும் செய்யத் தெரியாது, அவர்கள் அலங்கரிக்க நேரத்தை எடுத்துக்கொள்வார்கள் உள்ளிட்ட புளித்துப்போன குற்றச்சாட்டுகளுக்கு இனி வேலையே இல்லை என்பதைப் பெண்கள் நிரூபித்துக்கொண்டே வருகிறோம். எங்காவது சிலர் இன்னும் பழையபடியே  இருக்கலாம்? அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அது ஒரு நோய்மை; அவ்வளவுதான்.

சூரியா பெண்கள் அமைப்பினரின் பெண்களின் எழுச்சிப்பாடலோடு  சரியாகக்  காலை 10 மணிக்கு எங்கள் சந்திப்பு தொடங்கியது. ( இதன் காணொளியைக்  காண சொடுக்கவும் https://www.youtube.com/watch?v=wOdAj_OoxPY&feature=youtu.be ) நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள்,  இலங்கையின் பல பாகங்களிலிருந்து வந்திருந்தனர். ஊடறுக்கே இதுவே பெரிய வெற்றி எனக் கருதுகிறேன்.  தொடர்ந்து கொட்டகலை ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களின் தப்பிசை நடனம் வந்திருந்தவர்களை மேலும் உற்சாகம் மூட்டியது. பெண்கள் சந்திப்புக்காக  ஆசிரியைகள் ஓரிரு நாட்களிலேயே தங்கள் பயிற்சியை மேற்கொண்டு அதை நிறைவாக மேடையேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காணொளியைக்  காண சொடுக்கவும் https://www.youtube.com/watch?v=omgnwlqEQ7M&feature=share.
 
அதனைத் தொடர்ந்து அரசியல் சமூகவியல், கலந்துரையாடல், வன்முறைகளின் முகங்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் 12 தோழிகள் தங்களின் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அவர்களது கலாசாரம் பேணப்படுகின்ற ஒரு சூழலில் பெண்கள் தமது கருத்துக்களை கூறுவதற்கு பொதுவாக முன்வருவதில்லை. இவ்வாறான சூழல்களில் தைரியமாக முன்வருகின்ற பெண்களை வரவேற்கவேண்டும். ஊக்குவிக்க வேண்டும். அதைத்தான் ஊடறு பெண்நிலைச்சந்திப்பின் முக்கிய கருப்பொருளாகும் என றஞ்சி பதிவு செய்தார்.

 "அரசியல்"

இந்நிகழ்வு ஓவியை கமலா வாசுகியின் தலைமையில், அரசியலில் பெண்களின் பங்கேற்பு என்ற கருத்தில் கல்பனாவும், அரசியலும் பெண்களும் என்ற தலையங்கத்தில் செல்வியும் கலைவாணியும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஓரு நாட்டின் சனத்தொகையில் அரைப்பங்கிற்கும் அதிகமாக உள்ளவர்கள் பெண்கள். அவர்கள் அரசியலில் முடிவெடுக்கும் இடங்களிலும் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லையாயின் அது ஜனநாயக நாடாகாது.  பெண்கள் ஆண்களில் இருந்து வேறுபட்டவர்கள். அந்த வகையில் முடிவெடுக்கும் இடங்களில், கொள்கைகளை உருவாக்கும் நிலைகளில் பெண்களின் தேவையும் நோக்கமும் வேறுபட்டே அமையும். இது பெண்-ஆண் இணைந்த சமூகத்தை அரசியலினூடாக பிரதிபலிப்பதாக அமையும். போன்ற கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

சிறைக்கைதிகளாக இருக்கும் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி பிரியதர்சினி சிவராஜா, பெண் தடுப்பு கைதிகள் மீது குரூரமாக சிறை அதிகாரிகள் மேட்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தீர்மானித்துள்ளது என்ற தகவலை கூறினார்.
இணைய வீடியோ ; https://www.youtube.com/watch?v=aTNwNF2_AM4

முதலாம் தலைமுறையினர் ,இரண்டாம் தலைமுறையினர், மூன்றாம் தலைமுறையினர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் பெண்கள் பங்கெடுத்தது இன்னுமொரு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
அமர்வதற்கு நாற்காலிகள் அதிகமாக இருந்தும் எங்கே அரங்கை விட்டு நழுவி விடுவோமா என்ற எண்ணத்தில் அதை எடுத்துப்போட்டுக்கொள்ளாமல் பாயை விரித்து அமர்ந்து முழு கவனத்தையும் சந்திப்பிலேயே வைத்திருந்த தோழிகளுக்கு எப்படி அன்பைச் சொல்லாமல் இருப்பது? ஒவ்வொரு அங்கமாக முடிய, சிறு தோய்வும் ஏற்படாத அளவுக்கு அவ்வப்போது தேநீர் பலகாரங்கள் என வழங்கி எப்போதும் புத்துணச்சியோடே தோழிகளை  வைத்திருந்து ஏற்பாட்டுக் குழுவினர் அசத்தி விட்டனர். இதற்காகவே விஜி சேகர்(மாவுக்கும்) சூரிய அமைப்பு தோழிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஒரு அமர்வு முடிய நடக்கும் கலந்துரையாடலில் தோழிகள் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் கருத்துகளையும் வெளிப்படைத் தன்மையோடு பகிர்ந்துகொண்டனர். இதனால் மற்ற நாடுகளிலிருந்தும் மாகாணங்களிலிருந்தும் வந்திருந்தவர்களுக்கு நிறைவான ஒரு சந்திக்கவும் கலந்துரையாடலாகவும்  அது இருந்தது.

சௌமி முதல்நாள் சந்திப்பின் நெறியாளராக இருந்தால். அவளை நம்பிக் கொடுத்திருந்த பொறுப்பைக் கொஞ்சமும் பிசுராமல் செய்து முடித்திருந்தாள். மேலும், இந்தச் சந்திப்பை முழுமையாகக் காணொளி பதிவு செய்யும் பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். நான் கோகில தர்சினி, அனுதர்ஷி லிங்கநாதன் ஆகியோர் புகைப்படம் எடுக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தோம்.
இதுவரை நான் கலந்துகொண்ட பெண்கள் சந்திப்பில் முதல்நாள் அங்கத்தில் நடைபெறும் மனம் திறத்தல் என்ற அங்கம் இந்த முறை நடைபெறவில்லை. அதற்கான நேர அவகாசமும் இல்லாமல் போனது.  

அன்றைய எங்களை வரலாறு இவ்வாறு  எழுதத் தொடங்கியிருந்தது...

(தொடரும்)

மூன்றாம் பகுதி வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/10/3.html

1 கருத்து: