திங்கள், 22 அக்டோபர், 2018

ME TOO என்ற நானும்...

ME TOO குறித்து உன் பார்வை என்ன?


எதைக்குறித்துப் பேசாமல் நான் மௌனமாக இருந்தேனோ, அதுகுறித்து என்னைப் பேசச் சொல்லும்போது, கொடூர மீசைக்கொண்ட முகங்களும் முகமறியாத வறட்டு விரல்களும் ஒரு வகை முடை நாற்றத்தோடு என் பழைய நினைவுகளைக் கொண்டு வருகின்றன. 

அவளை முயற்சிக்கலாம்  என்ற மனோபாவம் ஒருவனுக்குத் தோன்றுவது  இயற்கை என இந்தச் சமுதாயம் பேசுகிறது; என்றால் இந்தச் சமுதாயத்தை எதைக்கொண்டு கழுவுவது? பிறந்த குழந்தையிலிருந்து மாதவிலக்கு நின்ற மூதாட்டிவரை பாலியல் அத்து மீறலுக்கு ஆளாகி வரும் சூழலில், அப்போது  சொல்ல திராணியற்ற அந்த வலியை, இப்போது அவள்   எழுதத் தொடங்கியிருப்பது, பல ஆண்களின்  டப்பா ஆட்டங்கண்டுதான் போயிருக்கிறது.
முன்னதாக ME TOO விஷயத்தைப்  எவ்வாறு புரிந்துவைத்திருக்கின்றனர் என்ற  கலந்துரையாடலை, பொதுவெளியில் செய்வது  முக்கியம் எனத் தோன்றுகிறது.

தன் கவனத்தை ஒரு பெண் கவரும்போது, அவள் பால் அவன் ஈர்க்கப்படும்போது, தன் ஆசையை அவளிடம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, அவன் குறிப்பால் உணர்த்த முயற்சி செய்வான்.

அதை அந்தப் பெண் எப்படி எடுத்துக்கொள்கிறாள்? ஏற்கிறாளா ? அல்லது நிராகரிக்கிறாளா என்ற மனநிலை அவரவர் உரிமையைச் சார்ந்ததாக இருக்கிறது. அவள், அவனின் காதலையோ அல்லது காமத்தையோ ஏற்கிறாள் என்றால் பிரச்னை இல்லை. அவளுக்கு அது பிடிக்காத போது, தொடக்கத்திலேயே அதை நிராகரிக்கிறாள் என்றால் அத்தோடு அவளைத் தொல்லை செய்யாமல்,  சாதாரண மனநிலையோடு அவளோடு பழகுகிறவன்தான் சரியான ஆண்.  அதை விட்டுவிட்டு தொடந்து அவளிடம் வக்கிரத்தை வெளிப்படுத்துகிறவனை MEE TOO-வில் போட்டு தோலுரிக்கலாம்

முதல் நிராகரிப்பிலேயே, அவளுக்குப் பிடிக்கவில்லை என்று உணர்ந்து ஜென்டில்மேனாக நடந்துகொள்ளும் ஒருவனை, அந்தப் பெண், என்னை அவன் முயற்சித்தவன் என்று காரணம் சொல்லி சொல்லி தொடர்ந்து பலரிடம் புகார் கூறுகிறாள் என்றால் அவளிடம் ஒரு தெளிவில்லாத தன்மையிருக்கிறது என்றுதான் நான் கூறுவேன். ஒரு ஆண் தன் விருப்பத்தை  வெளிப்படுத்தத் தொடங்கும் நொடியே அந்த எண்ணத்தை விருப்பமில்லாத ஒரு பெண்ணால் உடைக்க முடியும். பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நெருங்குவது நிச்சயமாகத் தப்புதான். அதேதான் ஆணுக்கும். ஒரேயடியாக யாரையும் பொறுக்கின்னு சொல்லிட முடியாது. அப்படி சொல்லவும்கூடாது.

பாலியல் அத்து மீறல்களுக்குப் பலியாகியிருப்பவள்தான் நானும். வெளியில் சொல்ல பயந்துகொண்டு என்னை அத்துமீறி தொட்டவனை பார்க்க நேரும்போதெல்லாம் மரவட்டை போலச் சுருங்கி ஓடி ஒளிந்துகொள்வேன். எந்தக் குற்ற உணர்வும் இல்லாத அவனெல்லாம் தைரியமாக மீண்டும் மீண்டும் பார்வையாலேயே என்மீது வக்கிரத்தைக் காட்டியபோது ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையை  கண்ணீராகத்தான்  வெளியேற்றிருக்கிறேன்

.
நான் ஒருவாராகப் பேச துணிந்தபோதுதான் இந்தப் பாலியல் அத்து மீறலிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை mee too, நிச்சயமாகப் பெண்களுக்கு ஒரு மனதைரியத்தை கொடுத்திருக்கிறது. ஆண்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் தனக்கான உரிமையைப் பெற்றிருக்கின்றனர். இந்த ME TOO,  ஓர் அமைப்பாக உருமாறும் பட்சத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும்  பாலியல் வன்கொடுமைகளும் அத்து மீறல்களும் குறையும் என்றே எனக்குத் தோன்றுகிறது. 

நன்றி ஊடறு

http://www.oodaru.com/


19.10.2018

யோகி

 

2 கருத்துகள்:

  1. அந்தப் பெண், என்னை அவன் முயற்சித்தவன் என்று காரணம் சொல்லி தொடர்ந்து பலரிடம் புகார் கூறுகிறாள் என்றால் அவளிடம் ஒரு தெளிவில்லாத தன்மையிருக்கிறது என்றுதான் நான் கூறுவேன்

    நல்ல அற்புதமான பார்வை...

    இப்படிக்கு
    பிற்போக்குத்தனமானவன்
    சமூகவிரோதி

    பதிலளிநீக்கு