கிட்டதட்ட மூன்று நாட்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்தாலும், எங்கும் போய் சுற்றிபார்க்கூடிய சூழல் எனக்கு அமையவே இல்லை. அதனால் எல்லாரும் சொல்லும் மட்டகளப்பின் அழகியலை என்னால் விவரிக்கமுடியாதது வருத்தம்தான். ஆனாலும், நான் எதையுமே மட்டகளப்பில் பார்க்கவில்லை என்று சொல்லிட முடியாது. ஊரணியில் தங்கியிருந்த நாட்களில் தினமும் காலையில் காப்பி டம்ளரோடு எதிரிலிருக்கும் வாவியைப் பார்த்துக்கொண்டே அருந்தி முடித்துவிட்டு ஒரு நடைப்பயணம் போய் வருவேன். மனதிற்கு இதமான பொழுது அது. ஊரைவிட்டு வந்து 3 நாட்கள் ஆகியிருந்தது. என்னைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு தகவலும் சொல்லவில்லை என்பது மட்டும் அந்த நேரத்தில் என் சிந்தனைக்கு வந்துபோனது.
அந்த மனநிலையோடு கடற்கரையில் கால் நனைக்கப் போனேன். எனக்குக் கடற்கரைகளில் குளிப்பது என்பது கொஞ்சம் பயம்தரும் விஷயமாகும். ஆனால் எந்தக் கடற்கரையிலும் கால் நனைக்காமல் வந்ததே இல்லை. எங்கிருந்தோ வரும் அலை என் காலை பற்றிக்கொள்ளும்போது உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா என மனதில் கேட்டுக்கொள்வேன். எப்போதிலிருந்து இப்படிக் கேட்க தொடங்கினேன் எனத் தெரியவில்லை. பூலோகத்தின் எந்தக் கடற்கரைக்கு போனாலும் நான் இதை கேட்காமல் இருக்கப்போவதில்லை என்று மட்டும் தெரியும்.
எங்களோடு சில இலங்கை தோழியரும் இருந்தனர். அவர்கள் சுனாமியின்போது ஏற்பட்ட இடர்களை விவரித்த படி வந்தனர். இலங்கை போர் ஒரு வரலாற்றுச் சோகம் என்றால் சுனாமி மற்றோரு சோகம். இந்த நூறாண்டில் பிறந்தவர்களால் இந்தக் காயங்கள் ஏற்படுத்தியிக்கும் வலியைச் சாகும் வரை சுமந்துகொண்டுதானே இருக்க முடியும்?
தொடர்ந்து நாங்கள் தோழி பிரொபி வீட்டுக்குச் சென்றோம். அவித்து சுட்ட மரவள்ளிக்கிழங்கையும் மாட்டிறைச்சி சாம்பலையும் பரிமாறினார். அது ஒரு வித்தியாசமான சாப்பாடு. இதுவரை நான் எந்த நாட்டிலும் அதைச் சாப்பிடவில்லை. காரப்பொடி தூவிய வெறும் கிழங்கை சாப்பிட்டாலே அவ்வளவு சுவையாக இருந்தது. மட்டகளப்பு உணவு என்றார்கள்.
இரண்டாம் உலகப் போரின்போது உணவு தட்டுப்பாடு இருந்த காலத்தில் பலர் உயிர்வாழக் காரணமாக இருந்தது மரவள்ளிக்கிழங்குதான் என்றேன் அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவில்லை.
17-ஆம் தேதி காலையில் நாங்கள் விஜி சேகர் அம்மா வீட்டில் கண்விழித்தோம். விஜிமா, கல்பனா மா, மாலதி மைத்திரி, கவின் மலர் மற்றும் நான் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கடற்கரைக்கு நடந்தே சென்றோம். அது மீனவர்கள் பகுதி. தோணியும் வலையுமாகக் கடற்கரைக்கு போகும் மற்றும் திரும்பும் மீனவர்களைப் பார்க்க முடிந்தது. இஸ்லாமிய மீனவர்களாக அவர்கள் இருந்தனர். வெளியூரிலிருந்து வந்திருந்த எங்களைப் பார்த்தும் அவர்கள் உரையாட வந்தனர். மணற்கரையில் அமர்ந்து அறிமுக உரையாடல் தொடங்கியது. மலேசிய மீனவர்கள் தொடங்கி சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் வரை பேசினோம்.
அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் தோணி நிறைய வித்தியாசமாக இருந்தது. மலேசியாவில் அந்த மாதிரியான தோணியே இல்லை. பெரிய பெரிய வால்பாறை மீன்களைக் கரைக்கு கொண்டு வந்து அங்கேயே, மணலை அள்ளிப்போட்டு ஆய்ந்து விற்பனைக்கு ஏற்றுகிறார்கள். மீனின் கழிவை காக்கைகள் சண்டையிட்டு தின்று தீர்கின்றன. சூரியன் மெல்ல மேலெழும்ப, நாங்கள் மீனவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம். வவுனியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன...
தொடரும்.. ஐந்தாம் பாகம் வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/10/5.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக