புதன், 10 அக்டோபர், 2018

ஊடறு பெண்கள் சந்திப்பு 2018



ஊடறு பெண்கள் சந்திப்புக்கான எனது பயணம் 2015-ஆம் ஆண்டு இலங்கையிலிருந்துதான் தொடங்கியது. இலக்கிய குழுவோடு இணைந்து எழுத்தில் ஆர்வம் செலுத்திக்கொண்டிருந்த நான் இந்தப் பெண்கள் சந்திப்புக்குப் பிறகுதான் பொது செயற்பாடுகளில் என் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன். மேலும், ஆளுமை நிறைந்த பெண்களை  குறிப்பாக இலங்கை தமிழ்நாட்டு பெண்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு மிக எளிதில் கிடைத்தது. என்றாலும் அந்த வாய்ப்பு அமைய நான் என்னை அதற்கு  தகுதியுடைவளாக  உழைப்பைச் செலுத்தியிருந்தேன் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் பல அனுபவங்கள் இந்தப் பெண்கள் சந்திப்பு எனக்குக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு சந்திப்பு முடிய நான் அதைப் பதிவும் செய்திருக்கிறேன். அண்மையில் நடந்து முடிந்த ஊடறு பெண்கள் சந்திப்பு எனக்கு நான்காவது ஆண்டாகும். ரஞ்சி (மா) மற்றும் ஆழியால்(மா) இவர்களோடு புதியமாதவி (மா), யாழினி ஆகியோரின் கலந்துரையாடலில் முன்னெடுக்கப்படும் இந்தச் சந்திப்பு நினைப்பது போல சுலபமானதல்ல.  வெளியிலிருந்து பார்க்கும்போது எளிதாகத் தெரியும். ஆனால் பார்வைக்கும் செயலுக்கும் நிறைய நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதன் சவால்களும் கொடுக்கும் மனஉளைச்சல்களும் கொஞ்சம் நஞ்சமில்லை.  ஒரு பங்கேற்பாளராக வெளியிலிருந்து பார்க்கும் நான்  ஊடறுவிடமிருந்து நிறையவே அனுபவப் பாடங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

எனது பார்வையில், இந்த ஆண்டுக்கான  ஊடறு பெண்கள் சந்திப்பை எழுதுவது  சவாலான ஒன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதற்கு மூன்றுக் காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக இலங்கையில் பெண்கள் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பே, முதல் நாள் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்ற விடயத்தைச் சர்ச்சையாகிய விஷயம். ஊடறு பெண்கள் சந்திப்பு நடத்தத் தொடங்கியதிலிருந்து இந்த அஜெண்டா இப்படித்தான் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் , இது அஜெண்டா மட்டுமல்ல; இதற்காக ஊடறு தனக்கான  வலுவான  நியாயத்தையும் வைத்திருக்கிறது.

இரண்டாவதாகக் கொழும்பு விமான நிலையத்தில் நாங்கள் (பங்கேற்பாளர்கள்)  வந்திறங்கியதிலிருந்து கிளம்பும் வரைக்கும் எங்களின் இருப்புகளைத் தொடர்ந்து புகைப்படங்கள் மூலமாக தோழியர்  பதிவு செய்ததில் சிலருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை. அதன்  காரணமாக,  பதிவிட்டிருந்த கருத்துக்கள். "அந்த மண்ணில் நின்று எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது? "அங்கே என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது" உள்ளிட்ட முகநூல் நண்பர்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை. அவர்கள் இழவு நடந்த வீட்டில் தினம் தினம் ஒப்பாரியை எதிர்பார்க்கிறவர்கள். எம்மினம் எப்பவும் துக்கத்திலேயே இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு பேசுபவர்கள். உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், இலங்கையில் நடந்த இனஅழிப்பு அவர்கள் மனங்களைப் புண்ணாகி தழும்பாகி வைத்திருக்கிறது என்பதை நினைக்காமல், தன் பங்குக்கு ஏதாவது பேசிப் பேசி புண்ணை நோண்டிக் காயப்படுத்திக்கொண்டே இருக்கும் ரத்தப்பிரியர்கள்.

 மூன்றாவதாக மாலதி மைத்திரி நேர்காணலில் ஏற்படுத்திய சர்ச்சை. அது ஒரு தனி மனித தாக்குதல்போல் கையாளப்படுகிறது. கருத்து ரீதியாக விவாதம் செய்யாமல் விதண்டாவாதம் செய்யப்பட்டதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு பெண்கள் சந்திப்பை இத்தனை சர்ச்சைகளையும் தாண்டி பயணத்தையும் முடித்து நாடு திரும்பியிருக்கிறோம். எங்கள் சந்திப்பும் பயணமும் வெற்றிகரமாக முடிந்தது என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. குறைகள் இல்லாத செயற்பாடுகள் ஏது? குறைகளும், தோல்விகளும், முரண்பாடுகளும்தான் தேடலுக்கான கதவினை திறந்து நிறைவுக்கான பாதையை காட்டித் தருகிறது. சிறு குழந்தையைப்போல தவழ்ந்து, நின்று, நடைபழகி பின்புதான் பந்தயத்தில் ஓட வேண்டும். ஊடறு பெண்கள் சந்திப்பு எந்த நிலையில் நிற்கிறது என்று ரஞ்சி மா தான் சொல்லவேண்டும்.

கொழும்பில் தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகு கொழும்பிலேயே முடிவடைந்த என் இலங்கைப் பயணத்தை இரண்டாவது முறையாக வேறொரு பார்வையில் நாளையிலிருந்து எழுதப் போகிறேன்.   இந்தப் பெண்கள் சந்திப்பு தொடருக்கு 'பெண் எப்பொழுதும் பெண்ணாகதான் இருக்கிறாள்' என்று தலைப்பு வைத்திருக்கிறேன்...



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக