சண்டிலிப்பாய் வடலியடைப்பில் இரண்டு நாட்கள் நாங்கள் தங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதற்கான பொறுப்பினை தோழி யாழினி ஏற்றிருந்தாள். அவளின் வீட்டில் ஒடியல் கூழோடும் இடியப்பம், மீன் வறுவலோடும், கூடவே வாழைப்பழமும் என இரவு உணவை அமர்க்களப்படுத்தியிருந்தனர். நான் இரண்டாவது முறையாக யாழினி வீட்டிற்குச் செல்கிறேன். அப்பா - அம்மாவைப் பார்த்து இரண்டு ஆண்டுகளாவது இருக்கும். அது எனது வீடு என்ற உணர்வையே தந்தது. இருந்தபோதும் 2015-ல் குறைவான தோழிகளோடு சென்ற ஊடறு தோழியினர் இம்முறை 9 பேரோடு சென்றிந்தோம். வீட்டுக் கிணறு, அதை ஒட்டினாற்போல கதவில்லாத குளியலறை, அதை மறைக்க பனை மர ஓலை பின்னல், திரையாக பழைய சேலை, சுற்றிலும் பனை மற்றும் தென்னை மரங்கள், அதில் கதை பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கும் அணில் மற்றும் காக்கைகள் எனப் பழைய சூழல் மாறாமல் எல்லாம் அப்படியே இருந்தது.
அங்குத் தங்கிய இரு நாட்களில் சில முக்கிய இடங்களைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதன்மையாக
சண்டிலிப்பாயில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்றோம். அங்குதான் யாழினி பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். அந்த வட்டாரத்திற்கு பொறுப்பான கலெக்டர் உடனான சந்திப்பு எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகவும் எளிமையான, அன்பாகவும் மரியாதையாகவும் பேசக்கூடிய பெண் கலெக்டர் அவர். பெண்களுக்காக ஏற்படுத்தியிருக்கும் சலுகைகள், தீர்மானங்கள், அடுத்தகட்ட திட்டங்கள் என சில விஷயங்களை மனம் திறந்து பகிந்துகொண்டார். மேலும் பல நாடுகளிலிருந்து வந்திருந்த எங்களிடமும் அந்நாட்டு அரசியல் குறித்த சில விவரங்களையும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டோம். எந்தப் பகட்டும் பந்தாவும் இன்னும் சொல்லப்போனால் மிகையான அலங்காரம்கூட அவர் செய்துகொள்ள வில்லை. அவர் பேச பேச ஆச்சரியமுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைக் கவனித்தனர் மலேசியாவுக்கு மிகச் சமீபத்தில்தான் போயிருந்தேன். அழகான ஊர் என்றார். எங்கள் ஊரில் அரசுத் துறையில் வேலை செய்பவர்கள்கூட நிரம்ப அலங்காரத்தோடுதான் இருப்பார்கள்.
மூன்று நாய்க்குட்டிகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் யாழ் நுலகத்தினுள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தன. தோல்வியாதிக் கண்ட தெருநாய் ஒன்று அப்பக்கம் வரவே அனைத்துக் குட்டிகளும் துள்ளிக்கொண்டு ஓடிவந்து குவிந்தன.
சொறி சிரங்குகண்ட நாய்க்குட்டிகளாக இருந்தாலும் அவற்றைப் பார்க்க ஆசையாக இருந்தது. குட்டிகளை மறைத்து மறைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.
நூலகத்தைவிட்டு வெளியேறிய எங்களில் சிலருக்கு நன்கு அறிமுகமான தோழர் கிறிஸ்டினா அவருடைய உறுப்பினர் அட்டையை பயன்படுத்தி வந்திருக்கும் முன்னணி எழுத்தாளர்கள் விவரத்தையும் சொல்லி பிரத்தியேக அனுமதியை வாங்கி அவரே எங்களை நூலகத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். யாழ் நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கும் சில அறிய வகை ஓலைச்சுவடிகள் இருக்கும் அறைக்குத் தோழர் அனுமதி பெற்றுவந்த அழைத்துச் சென்றார். சாதாரணமாக யாரையும் காண அனுமதிக்கும் அறை அல்ல அது. மிகுந்த பாதுகாப்புக்கிடையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓலைச் சுவடிகளை தொடுவதற்குக்கூட அனுமதியில்லை. அதிகாரிகளின் உதவியோடு வேண்டும் என்றால் காணலாம். சில எழுத்துக்கள் எழுத்து வடிவமே இல்லாதமாதிரி இருந்தது. சில வாக்கியங்கள் என்ன என்றே புரியவில்லை. அதுகுறித்து அதிகாரிகளிடம் வினவியபோது, இது குறித்து ஆராய்ச்சி செய்பவர்களால்தான் சரியாகச் சொல்ல முடியும் என்றார். கை பட்டாலே உதிர்ந்து போய் விடும் நிலையில் உள்ள சில ஓலைச் சுவடிகளையும் உதிர்ந்துவிடட ஓலைச்சுவடிகளை தகுந்த பாதுகாப்புடன் மறு உருவாக்கம் செய்து வைத்திருந்தனர்.
உண்மையில் அதைப் பார்த்து ஒரு கொடுப்பினைதான். அழிந்துவிடட ஓலைச்சுவடிகளின் நகல்களை ஒளிவடிவமாகப் பாதுகாத்து வைத்திருப்பதும் மற்றுமொரு சிறப்பு. சேகரித்துவைத்திருக்கும் பல ஆண்டுகளுக்குப் பிந்திய செய்தித்தாள்களிலிருந்து உலக தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள்வரைக்கும் குறுகிய நேரத்தில் முக்கியமான பல ஆவணங்களையும் கண்டோம். அவற்றைப் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை எனும்படியால் நான் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்து விட்டேன்.
நாங்கள் நூலகத்தை விட்டு வெளியேறும்போது நாய்க்குட்டிகளும் அதன் தாயும் சரஸ்வதி சிலைக்கு கீழிருந்த மண்தரையில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தன. நாங்கள் நல்லூர் கோட்டையை நோக்கிக் கிளம்பினோம்.
2015-ஆம் ஆண்டு பயணத்தில் எழுதப்பட்ட நூல்நிலையம் மற்றும் கோட்டை பற்றிய பதிவுகள் பதிவுகள் ...
https://yogiperiyasamy.blogspot.com/2015/05/12_22.html 13
http://yogiperiyasamy.blogspot.com/2015/05/14.html 14
தொடரும்..
எட்டாம் பாகம் வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/11/8.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக