சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை
தொடர் 14
யாழ்ப்பாணக் கோட்டைக்குப் போகிறோம் என்றதும் எனக்குள் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மலேசியாவின் மலாக்கா மாநிலத்திலும் இது மாதிரியான கோட்டைகள் உள்ளன. அதை அரசு நல்ல முறையில் பாதுகாத்து வருகிறது. அதோடு, ஓல்லாந்துக்கு (ஹோலந்த்) கட்டிய கோட்டையும் இங்கு இருப்பதால் ஏறக்குறைய அதன் வடிவம் ஒரு வாரியாக என்னால் கணிக்க முடிந்தது.
நாங்கள் கோட்டையை அடைந்த நேரம் மாலை 3 மணியைக் கடந்திருந்தது. கோட்டைக்குள் போகும் வழி கொஞ்சம் குறுகிய பாதையாக அமைந்து, பிறகு பெரிய முகப்பை சென்றடைகிறது. அதன் வாயிற் பகுதி பேரமைதியுடன் நம்மை வரவேற்றது. எந்த ஒரு குதூகல கொண்டாட்ட நிலையும் மனதில் வாய்க்கவே இல்லை. போய்க்கொண்டே இருந்தோம். றஞ்சி அவருக்குத் தெரிந்த சில கோட்டைப் பற்றிய விவரங்களைக் கூறிக்கொண்டே வந்தார்.
அங்குப் பணியில் இருந்த கோட்டையின் பொறுப்பாளர் ஒருவர் எங்களைப் பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றார். இந்தியா என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம். கோட்டையில் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் கோட்டையின் புகைப்பட விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்புகளில் கோட்டையின் வரலாறு இப்படிப் பதிவாகியிருந்தது:
"போர்த்துகேயர் இலங்கையின் வடபகுதியில் கி.பி. 1619-ல் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கில் இந்தக் கோட்டையை நிர்மாணித்துள்ளனர். ஒல்லாந்தர் கால வரலாற்று ஆவணங்களின்படி இக்கோட்டை சதுர வடிவத்தில் இருந்ததாகவும் மூலை பகுதியில் சூடுதளங்கள் இருந்ததாகவும், இக்கோட்டையின் சுவர்கள் வழக்கத்தைவிட மூன்று மடங்கு அகலமானவையாகவும் குறிப்புகள் உள்ளன.
1658-ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் இக்கோட்டைக் கைப்பற்றப்பட்டு அவை இடிக்கப்பட்டு மீண்டும் கி.பி 1665-ஆம் ஆண்டுத் தொடக்கம் 1680 வரையிலான காலப்பகுதியில் தற்போது காணப்படும் ஐந்து பக்கங்கள் கொண்ட நட்சத்திர வடிவிலான அகழியையும், 5 சுடுதளங்களையும் உருவாக்கப்பட்டு 1792-ல் கட்டுமானப் பணிகள் யாவும் நிறைவு பெற்றன. கோட்டையின் மூலைப்பகுதிகளில் அமைக்கப்பட்ட அச்சுடுதளங்களுக்கு ஒல்லாந்து, சீலாந்து, பிறிஸ்லாந்து, உற்றேச், ஹொல்டர்லாந்து எனப் பெயரிட்டனர். கோட்டையின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த ஒல்லாந்தர் மூடிய பாதைகளையும், எதிரிகளைத் தாக்குவதற்காகக் கோட்டை சுவர்களைச் சரிவாகவும், கோட்டையின் வாயிற் பகுதியில் அகழிக்கு வெளியே காவல் அரண்களையும் அமைத்திருக்கின்றனர். அவற்றை அமைக்கும் வேலைகள் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்து 1792-ல் முடிவடைந்துள்ளது.
பின்னர் இக்கோட்டை 1795ம் ஆண்டு எந்தவித போராட்டமும் இன்றி ஆங்கிலேயர் வசமானது. 1948-ஆம் ஆண்டு இலங்கை, சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர் வசமே இக்கோட்டை இருந்துள்ளது.
இதுபோல கொழும்பு காலியில் இருக்கும் ஒல்லாந்து கோட்டைகள் பாதுகாப்பு அரண்களால் சூழப்பட்ட நகரங்களாக இருந்ததாகக் கூறப்பட்டது, ஆனால், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த மையமாக விளங்கியது. ஆனால், இலங்கையில் பல சிறப்புகள் கூடியதாக இருக்கும் ஒரே கோட்டை இந்த யாழ்ப்பாணக் கோட்டை தான் என வர்ணிக்கப்படுகிறது. அக்காலத்தில் கீழத்தேய நாடுகளில் அதிசிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த பீரங்கி தளங்கள் கொண்ட கோட்டைகளில் இதுவும் ஒன்றாக விளங்கியது எனவும் கூறப்படுகிறது.
முதலில் போர்த்துக்கேயரும், பின்னர் ஒல்லாந்தரும் தொடர்ந்து ஆங்கிலேயரும் யாழ்ப்பாண நீரேரிக்கு அருகில் இக்கோட்டையைக் கட்டியது, இலங்கையில் 400 வருடகாலக் காலனித்துவ கட்டிடக்கலைச் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
முன்பு கோட்டைக்குள் ஆளுநரின் வாயிற்தளம், அரசு ஊழியர்களின் வசிப்பிடங்கள், அரசு அதிகாரிகளைச் சந்திக்க வருபவர்களின் வசிப்பிடங்கள், இராணுவத்தினரின் வசிப்பிடங்கள், வேலைப்பட்டறைகள், வைத்தியசாலை, களஞ்சி அறைகள் போன்றவைக் கோட்டைக்குள் அமைந்திருந்ததாம். 1980-ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னர், இக்கோட்டை நன்கு பாதுகாக்கப்பட்டு இருந்ததாம். கோட்டைக்குள் இருந்த கிறிஸ்துவத் தேவாலயம் முற்றாக அழிந்து இன்று ஒரு கற்குவியலாகக் கிடக்கிறது."
(இது அங்கிருந்த குறிப்புப் பலகையில் உள்ள விவரமாகும்)
றஞ்சி புலிகள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றிய விவரங்களை மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருந்தார். காரணம் ‘புலிகள்’ என்ற சம்பாஷனையே பெரிய எதிர்வினையைக் கொண்டு வரும் என்பதும், தற்போது புலிகள் கைவசம் இருக்கும் கோட்டையின் ஒவ்வொரு பாறைகற்களும் சிங்கள் அரசுக்கு விசுவாசமாகக் காதைத் தீட்டி வைத்திருப்பதும், எங்களுக்குப் புரியாமல் இல்லை. என்ன தான் சுதந்திரமாகக் கோட்டையைப் பார்வையிட்டாலும் ஒரு ஜோடி கண் நம்மைக் கண்காணிக்கிறது என்ற உணர்வு எழாமல் இல்லை.
மனம் நினைத்தது சரியாகத் தான் இருந்தது. அந்தக் கோட்டையின் பொறுப்பாளர் எங்கள் திசையை நோக்கி வந்தார். றஞ்சி எதையும் பேசவில்லை. நாங்களும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. அவர் கோட்டையைப் பற்றிக் இன்னும் கொஞ்சம் மேல் விவரங்களைக் கொடுத்தார்.
'சங்கிலியன் என்ற இந்திய தமிழன் 1519 தொடக்கம் 1560 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். பிறகு போர்த்துகீஸ், டச் (ஓல்லாந்த்), வெள்ளையர் போன்றவர்கள் இந்தக் கோட்டையில் ஆதிக்கம் செலுத்தினர். இதன் மொத்த பரப்பளவு 64 ஏக்கராகும்.
சுதந்திரத்திற்குப் பிறகு, 1983 முதல் சிறைச்சாலையாக இந்தக் கோட்டை செயல்பட்டு வந்தது. உள்நாட்டு யுத்தம் தொடங்கி 1986 முதல் இது இராணுவ முகாமாக செயல்படத் தொடங்கியது. 1990-ஆம் ஆண்டின் இறுதி முதல் 1995-ஆம் ஆண்டு அக்டோபர் வரை புலிகளின் வசமிருந்த கோட்டையை மீண்டும் சிங்கள ராணுவம் கைப்பற்றும் போது, புலிகள் இந்தக் கோட்டையின் முக்கியப் பகுதிகளை வெடி வைத்து தகர்த்தனர். ராணுவத்திற்கு இந்தக் கோட்டை பயன்படாமல் போகவே அப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, ராணுவ வசமான இந்தக் கோட்டை 2009-ஆம் ஆண்டு வரை (யுத்தம் முடியும் வரை) சிங்கள் ராணுவமே ஆக்கரமித்திருந்தது.'
இந்த விவரங்களோடு அவர் மேலும் சில விவரங்களையும் கொடுத்திருந்தார். ஆனால், இராணுவம் சிறைப்படுத்திய தமிழர்களின் உயிர்கள் இங்குதான் காற்றில் பறக்கவிடப்பட்டன என்ற விவரம் மட்டும் அவர் சொல்லவே இல்லை.
தொடர்ந்து அவரின் பார்வையில் நாங்கள் சந்தேகிப்பவர்களாகத் தெரிந்தோமோ என்னவோ தெரியாது. அதுவும் நான், அவருக்குக் கேள்வி எழுப்பக்கூடிய வகையில் தெரிந்தேனோ விளங்கவில்லை. இவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்று மீண்டும் கேட்க, என்னால் அதற்குமேல் பொறுமையாய் இருக்க முடியவில்லை. உங்களுக்கு என்ன? ஏன் என்னையே கேள்வி கேட்குறீங்க என்றேன். அதற்கு மேல் அவர் பேசவில்லை.
நாங்கள் கோட்டையின் மேல் ஏறி நின்று பார்த்தோம். மொத்த யாழ்ப்பாணமும் தெரியும் விதத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்து தூக்கிலிடப்படும் தளத்தில் ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். 'புலியின் கோட்டையில் இப்படியான கூத்து நடப்பதாகக் கேள்விப்பட்டேன். இப்போதுதான் பார்க்கிறேன்' என்றாள் யாழினி. அவளின் அந்த ஆதங்கத்தில் இருந்த வருத்தம் நன்றாகவே உணர முடிந்தது.
தற்போது அங்கு ஏதோ தங்கும் விடுதி இயங்க போகிறதாம். கோட்டை என்னதான் சிங்கள ராணுவ வசம் இருந்தாலும், அது புலிகளின் புகழையும் ராணுவத்தின் வன்கொடுமையையும் தான் பேசுகிறது. வரலாற்றின் வாயை எந்தக் கைகளினாலும் மூடிவிட முடியாது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக