சனி, 24 நவம்பர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 9


 மறுநாள் விடியலில்  தோழி  சுரேகா பணிபுரியும் அரசுநிறுவனத்தின் மேயருடனான சந்திப்பும், மகளிர் மேம்பாட்டுக்குப் பொறுப்பானவருடனான சந்திப்பும் இடம் பெற்றது. தகுந்த மரியாதையோடு எங்களிடம் அவர்கள் கலந்தாலோசித்தனர். குறிப்பாக மேயர் மிக எதார்த்தமாக, எங்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது, அரசியல் வட்டாரங்களில் அவரின் கட்சி பெரிய விமர்சனத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்று. இலங்கை தோழியருக்கு இவ்விவகாரம் தெரிந்திருந்தபடியால் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்யும்போது கவனமாக இருங்கள் என எச்சரித்தனர். சட்ட சபையில் அமர்ந்து மகளிர் மேம்பாட்டுக்குப் பொறுப்பானவருடனான அதிகாரி ஒருவரோடு யாழ்ப்பாண  பெண்கள் குறித்த நிலைப்பாட்டை கேட்டறிந்தோம். அந்தச் சந்திப்பின் முக்கியமான அங்கம் அது.


நான் பார்த்த வரையில் யாழ்ப்பாண வட்டார அரசு நிறுவனங்கள், தற்போதிருக்கும்  கணினி யுகத்திற்கு இன்னும் மாற வில்லையோ என்றுதான் தோன்றியது. சில நவீன வசதிகள், தரமான  கதிரைகள் இருந்தாலும்,அதன் மொத்த தோற்றம்  அரசு அலுவலகங்கள் மேம்படுத்தப்படாதவையாகத் தெரிந்தன. நான் சொல்வது அரசு அலுவலக கட்டடம் மற்றும் அதன் வசதிகள் குறித்துத்தான். அரசு சேவையை அல்ல. அது குறித்து நான் சரியாக அறியவும் இல்லை. இந்நிலைக்குப் போரை ஒரு காரணமாக சொன்னாலும், அதை முழுசாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. சீனா தேசமாக மாறிக்கொண்டிருக்கும் கொழும்பை பார்க்கும்போது ஆதங்கமாக இருக்கிறது. அந்த நிலத்தை வேறொரு நாடக மாற்றிக்கொண்டிருக்கும்  நவீனத்துவம் கொஞ்சமாவது தமிழ் அரசு அதிகாரிகள் பணியாற்றும் கட்டிடங்கள் மற்றும் நவீன வசதிகளைப் பயன்படுத்த செய்துகொடுக்கலாம். இது எனது பார்வை மட்டுமே.

பின்னர் பருத்தித்துறையில் ரவி பாவின் சகோதரி  வீட்டில் மத்திய உணவு  விருந்து கொடுத்தனர். அங்கும் நான் இரண்டாவது முறையாகச் செல்வதால் அவர்களுக்கு என்னைத் தெரிந்திருந்தது. விருந்திற்குப் பின் அவர்களிடமிருந்து விடைபெற்று வல்வெட்டித்துறையை  நோக்கிப் பயணித்தோம். தேசியத்தலைவரின் இல்லத்தைப் பார்க்க வேண்டும் என்ற எங்களின் ஏக்கம், கனத்த வலியாக மாறியிருந்தது. எங்கள் வாகனம் வல்வெட்டித்துறை மண் நோக்கிச்சென்றுகொண்டிருக்க, பேசுவதற்கான  சொற்களில்லாத எங்கள் வாகனம் வல்வெட்டித்துறை மண் நோக்கிச்சென்று கொண்டிருக்க, பேசுவதற்கான  சொற்களில்லாதவர்களாக மௌனித்துக் கிடந்தோம். சாலை ஓரத்தில்  பச்சை ஓலைக் கட்டிய ஆலமரத்தை ஒட்டி வண்டி நுழைந்தது. ஓலையின் பக்கத்திலேயே எம் ஜி ஆர் போஸ்ட்டர் தொங்கிக் கொண்டிருந்தது. சிலர் ஆலமர திண்ணையில் அமர்ந்திருந்தனர். மதில் மட்டுமே இருந்த நிலத்தைக்  கடந்த சற்று ஒதுக்குப்புறமாக வாகனம் நிறுத்தப்பட்டது.


ரவி பா சகோதரிகளோடும் அவர்கள் குடும்பத்தோடும்
 இதுதான் தலைவரின் வீடு என வெற்று மதிலைக் காட்டி  கூறினார்கள். . அதை உறுதி செய்வதாக மதில் மேல் 'தமிழ் ஈழ தேசியத்  தலைவர் வேலுபிரபாகரன் இல்லம்' என எழுதப்பட்டிருந்தது. மதிலைத் தாண்டி அங்கு ஒரு வீடு இருந்ததிற்கான அடையாளமே இருக்கவில்லை. வெற்று நிலத்தில் புற்கள்  மண்டி கிடந்தன. ஈழப் போர் முடிவுக்கு வந்தபோது தலைவரின் வீடு உடைக்கப்பட்டதாகவும், பின் சிங்கள மக்கள் உட்பட நிறையப் பேர், நம் நாட்டில் வாழ்ந்த தன்னிகரற்ற ஒரு வீரன் வாழ்ந்த வீடு என  அந்த வீட்டின் மண்ணை எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர் என்றும் சொல்லப்பட்டது. இதை அனுமானித்த இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயம் மக்கள்  உணர்ச்சிவசப்பட வைக்கும் எனப் பயந்து தலைவரின் வீட்டையே இல்லாமல் செய்து விட்டதாக சொன்னார்கள்.


 தலைவரின் பெயர் எழுதியிருந்த மதில் மீது சாயம்போல ஏதோ ஊற்றப்பட்டிருந்தது. பாதி எழுத்து காணாமல் போயிருந்தன. காணாமலும் மீதி எழுத்து மங்கிய நிலையிலும் இன்னும் சில நாட்களில் அடையாளமற்று நினைவில் மட்டுமே வாழக்கூடிய வகையில் தலைவரின் இல்லம் மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. முறையாகப் பராமரிக்கப்பட்டு, அதைத் தலைவரின் நினைவு இல்லமாக மாற்றியிருக்கக் கூடாதா? என மனம் கவலையடைந்தது. இனி அதற்கான சாத்தியங்கள் வாய்க்கும் என்பதும் சந்தேகம்தான். 



எனது நண்பர் சிவா லெனின் தலைவர் வேலுபிரபாகரன் மீது மிகுந்த பற்று கொண்டவர். அவருக்காக ஒரு பிடி மண்ணை எடுத்து வைத்துக்கொண்டேன். எனக்குத் தெரிந்த வரையில்  அந்த மண்ணின் மதிப்பும்  அருமையும் பெருமையையும் உணர்ந்து பாதுகாக்கக்கூடியவர் என் நட்பு வடத்தில் சிவா மட்டும்தான். இதற்கிடையில் ஒரு போலீஸ் வாகனம் எங்களை நோட்டமிட்டபடியே கடந்து சென்றது. ஆலமர திண்ணையில் அமர்ந்திருப்பவர்களிடம் பேசலாம் எனப் போனோம். ஏன் இங்குப் பச்சை ஓலை கட்டப்பட்டிருக்கிறது என கேட்டேன். முதல் வீட்டில் மரணம் நடந்திருக்கிறது. அதை அறிவிக்கும் முகமாக இந்தப் பச்சை ஓலை இப்படி கட்டப்பட்டிருக்கிறது என்றார்கள். தலைவரைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டேன். பார்த்திருக்கிறோம் என்றார்கள். அடுத்த கேள்வியை கேட்பதற்குள் இரண்டாவது முறையாக போலீஸ் வாகனம் எங்களை நோட்டமிட்டு சென்றது. ரஞ்சி மா அனைவரையும் வண்டியில் ஏறச் சொன்னார். எனக்கும் இனம்புரியாத ஒரு படபடப்பு ஏற்பட்டது. ஆலமர வளைவை அடுத்திருந்த தெருவில் புரட்சி தலைவர் எம்.ஐி.ஆர் சிலையையும் 4 அடி தள்ளி அமைத்திருக்கும் மாவீரர்  திலீபன் நினைவூட்டக் கூடாரத்தையும் ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்சனையையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாகவே ரஞ்சி மா இருந்தார்.

தலைவரின் இல்லம் இருக்கும் தற்போதைய தோற்றத்தை வீடியோ எடுத்திருந்தேன். அதை இந்த https://www.youtube.com/watch?v=OopoVP2dEvE லிங்க்கை சொடுக்கி பார்க்கலாம்.

 
இது இன்னுமொரு வீடியோ பதிவு.
தொடரும்..




பத்தாம் பாகம்  வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/11/10.html

        





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக