செவ்வாய், 20 நவம்பர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 8




நல்லூர் கோட்டையை சேர்ந்தபோது உச்சி வெயில் மண்டையைப் பிளந்துகொண்டிருந்தது. நான் கோட்டையையும் முன்பே பார்த்துவிட்டபடியாலும் உடல்நிலை கொஞ்சம் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் இருந்ததாலும் நான் கோட்டையினுள் செல்லவில்லை. கொஞ்சம் ஆதரவாக வெளியிலேயே உலாத்திக்கொண்டிருந்தேன். கடற்கரையை ஒட்டி நின்ற தென்னை மரத்தில் சில காக்கைகள் கரைந்துகொண்டிருந்தன. கோட்டைக்கு முதன்முதலாகச் சென்றிருந்த தோழிகள் சற்று நேரத்தில் திரும்பி வந்தனர்.

நாங்கள் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்றோம். கோயில் நடை சாத்தியிருந்தது. ஆனாலும் , கோயிலுக்கு சாமிக்கூம்பிட பக்தர்கள் வந்துகொண்டுதான் இருந்தனர். சிலர் சிதறு தேங்காய்களை உடைக்க ரஞ்சி மா, அதை பொறுக்கி சாப்பிட எங்களுக்குத் தந்தார். எப்போதோ சிதறு தேங்காய்களை சாப்பிட்ட ஞாபகம் எனக்கு. கோயிலின் வெளி வளாகத்தில் பெரியவர் ஒருவர் மரம் வைக்கக் குழி தோண்டிக்கொண்டிருந்தார். நாங்கள் கிளம்பும்போது அவர் மரத்தை நட்டு முடித்திருந்தார். 

எங்களுக்கு மாலையில் யாழ்ப்பாண தோழர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக நாங்கள் கோயிலுக்கு  அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றோம். "அங்கு ஐஸ்கிரீம் குடிக்க போகலாம்" என யாழினி தான் ஏற்பாடு செய்தாள். ஐஸ்கிரீம் குடிக்க போகலாம் என்ற வார்த்தையை முதன்முதலாக கேட்டதிலிருந்து எனக்கு வார்த்தைகளின் உபயோகங்களில் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. சாதாரணமாக ஐஸ்கிரீம் சாப்பிட போகலாம் என்ற வார்த்தையை, இலங்கைத் தமிழர்கள் ஐஸ்கிரீம் குடிக்க  போகலாம் என்று பயன்படுத்திக்கின்றனர். குளிப்பதை மேலே கழுவுதல் என்று சொல்வதைப் போலவும் கொசுக்கு நுளம்பு எனப் பெயர் இருப்பதுபோலவும்.   இப்படி நிறைய வார்த்தைகளைப் பட்டியலிடலாம். அது அழகாகவும் இருக்கிறது.


ஐஸ்கிரீம் கடைக்கு வெளியே மாவீரர் திலீபன் நினைவாலயம் இருந்தது. என்னைத்தவிர எல்லாருமே ஐஸ்க்ரீம் சாப்பிடப் போயிருந்தனர்.
ஐஸ்கிரீம் கடைக்கு போவதற்கு முன்பு நான் நினைவாலயம் முன்பு நின்றுகொண்டிருந்தேன். ஒரு கல்லூரி மாணவனின் தியாகம், விடுதலைக் கனவு இன்னும் இன்னும் எத்தனையோ இருந்தது தியாகி திலீபனுக்குள். இதை இன்று இலங்கை மக்களைத் தவிர அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எத்தனைப் பேர் அறிவார்கள்? கொழும்பிலிருந்து வந்து
மலேசியாவில்  வேலைசெய்துகொண்டிருக்கும் சகோதரரிடம் இன்று திலீபனின் நினைவுநாள் என்று சொன்னேன். அவருக்கு திலீபன் யார் என்றே தெரியவில்லை. இத்தனை நாள் அவரைத் தெரிந்துகொள்ளாமல் இருந்துவிடடோமே என அவர் வருத்தப்பட்டுக் கொண்டது வேறு கதை. நிஜ ஹீரோக்களை தவிர்த்து சினிமா பிரபலங்களைப் போராளிகளாக கொண்டாடுபவர்கள்தானே நாம். வேறென்ன சொல்ல முடியும்?  பின் தோழிகள் அனைவருமே ஐஸ்க்ரீம் கடையை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு மாவீரர்  திலீபனுக்கு வணக்கம் செலுத்தினர்.சிலர் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டனர்.




 தோழர்கள்  எமில் மற்றும் கிரிசாந் யதார்த்தன் ஆகியோர் முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடறு பெண்களுடனான  கலந்துரையாடலுக்கு அடுத்துச் சென்றோம். கலைத்தூது அழகியல் கல்லுரியில் நீ.மரியா சேவியர் அடிகள் என்ற பாதிரியார் ஆதரவுடன் நடந்தது.  சந்திப்பு  நல்ல காரசாரமாகவே சென்றது. கவிதைகள், செயற்பாடுகள், அரசியல், களப்பணி எனப் பெண்கள் இயங்கும் எல்லா நிலைகளிலிருந்து விவாதம் செய்யப்பட்டது. பாதிரியார் நீ.மரியா சேவியர் அடிகள் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். இலக்கிய செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டவர். 'கலைமுகம்' என்ற கலை இலக்கிய சமூக இதழை நடத்தி வருகிறார். இலங்கையின் முக்கிய ஆளுமைகள் அந்த இதழில் எழுதிவருகிறார்கள்.  தோழர்களும் ஊடறு தோழியரும் விவாதத்தில் ஈடுபட்டிருக்க அனைத்தையும் அமைதியாக உள்வாங்கியபடியே இருந்தார்.


 
சந்திப்பு முடிய இரவாகியிருந்தது. நாங்கள் பொது பேருந்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தோம். இரண்டு பேருந்துகளை மாறிச் சென்றால்தான் யாழினி வீட்டை அடைய முடியும். முதலாவது பேருந்து எடுத்து பெரிய பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்துதான் சண்டிலிப்பாய்க்கு  பேருந்தை மாற வேண்டும். விடிய மறுநாள் நாங்கள் திரும்ப கொழும்பு போகவேண்டியிருந்ததால் யாழ்ப்பாண சந்தையில் சில பொருள்களை இரவே வாங்கிக்கொள்ளலாம் என முடிவு எடுத்தோம். சாம்பால், மாசி, பெரிய பெரிய கருவாடுகள், வடகம் என யாழ்ப்பாண பிரசித்தி பெற்ற பொருள்களை தேடி வாங்கத் தொடங்கினோம். தாழம்பூ பாயை மாலதி மைத்திரி வாங்கினார். யாழ்ப்பாண சந்தையின் SPECIAL கருவாடுகள்தானா என்று தோன்றியது. ராட்சச வகையிலான கருவாடுகளை, புடவைகளைத் தொங்க விடுவது போன்றும் புடவைகளைப் பேழைகளில் அடுக்கி வைத்திருப்பது போன்றும் அடுக்கி வைத்திருந்தார்கள். கருவாட்டின் நெடிய வாசனை நாங்கள் வீடு வந்து சேர்ந்தபின்பும் எங்களில்  நிறைந்திருந்தது. 



 
தொடரும்.. ஒன்பதாம் பாகம்  வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/11/9.html
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக