வியாழன், 29 நவம்பர், 2018

குழந்தையும் தெய்வமும் ஒன்று எனும் அபத்த வார்த்தையை இனி யாரும் சொல்ல வேண்டாம்


பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா..
என்றார் பாரதி.

 இரக்கமில்லாமல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிர்பறிக்கும் கொடூரம் நிகழும்போது துணையாக இருந்திருக்க வேண்டிய தெய்வங்கள் கண்களை மூடிக்கொண்டிருந்தது ஏன்?  அல்லது தெய்வமாக இருந்து பாதுகாப்புடன் நடந்திருக்க வேண்டியவர்களே குழந்தையை வேட்டையாடியது ஏன்?


 
காஜாங்கில் 11 மாதக் குழந்தை சாரா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு , சுயநினைவு இழந்து,  இரண்டு நாள் உயிருக்குப் போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி நவம்பர்  9-ஆம் தேதி  இறந்துபோனாள். அவளுடைய மண்டை ஓடு உடைந்திருந்ததாக அவளுடைய மருத்துவ அறிக்கை கூறுகிறது.

குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொலை மற்றும் வன்கொடுமை என்பது  மலேசியாவுக்கு புதியது இல்லை.  ஒவ்வொரு ஆண்டுமே சொந்த ரத்த சொந்தங்கள் மூலமாகவும், மாற்றாந்தந்தை அல்லது மாற்றாந்தாய் மூலமாகவும் சில சமயம் பாதுகாவலர் மூலமாகவும் வன்கொடுமைகள்   நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.  குழந்தைகள் மீது கட்டவிழ்க்கப்படும் பாலியல் பலாத்காரமும் வன்கொடுமையும் படுகொலைகளும் குழந்தைகள் வாழ்வதற்கு இந்த உலகம் ஏற்றதாக இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.
குழந்தை சாரா மீது பாலியல் வன்கொடுமையை நடத்திய  முடி வெட்டும் தொழிலாளியான ஹஸ்மி மஜிட் (36 வயது) என்பவன், அவளைக் குழந்தை என்று பார்க்காமல் அவனின் காம பசிக்கு இரையாகத்தான் பார்த்திருக்கிறான்.  சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் இருக்கும்போது குழந்தையின் வாய் பகுதியில் காயம் இருப்பதைக் குழந்தையின் தாய் கவனித்திருக்கிறார். அது குறித்து குழந்தை பாதுகாவலர், தனது ஆண் குழந்தை தவறிக் கடித்துவிட்டதாக காரணம் கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.  ஆனாலும் குழந்தை சாரா  இயல்பாக இருந்ததை அனுமானித்து, தாம் அவர்களை  நம்பி விட்டதாக அந்த இளம்தாய் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.


ஒவ்வொரு குழந்தை முறைகேடு  சம்பவம் நிகழும்போதும் அரசு புதிய புதிய சட்டங்களை கொண்டு வருவதுடன், இருக்கும் சட்டத்தில் திருத்தத்தையும் கொண்டு வருகிறது. என்றாலும் அதனால் எந்தப் பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகள் மீது எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லாமல் சித்திரவதை செய்யும் இவர்களை மனம் பிறழ்தவர்களாகவோ, அதிக மன அழுத்தம் கொண்டவர்களாகவோ பார்ப்பது சரியான பார்வைதானா என்று எண்ணத்தோன்றுகிறது. சிறார் வன்கொடுமை மற்றும் சிறார் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மலேசியாவில் கடுமையான தண்டனை இருக்கிறது. இருந்தபோதும் சட்டத்திற்கு யாரும் பயப்படுவதாக தெரியவில்லை.  ஒவ்வொரு ஆண்டுமே அதிகரித்து வரும் குழந்தைகள் வன்கொடுமைகள் குற்றவாளிகளை அதிகரித்திருக்கிறதே தவிர, வரப்போகும் தண்டனைக்கு பயந்ததாக இல்லை. 

2016-ஆம் ஆண்டு தன் சொந்த மகளையே (17 வயது ) சாமுராய் வாள் முனையில்  பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகிய முன்னாள் இராணுவீரரான தந்தைக்குக் கடந்த 27-ஆம் தேதி 2018, முதல் குற்றத்திற்கு  18 வருடச்  சிறை தண்டனையும் 10 பிரம்படிகளையும், இரண்டாம் குற்றத்திற்கு 6 வருடச் சிறைத்தண்டனை மற்றும் 5 பிரம்படிகளைக்  கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது.2015 முதல் 2017  வரை மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட  சிறார் வன்கொடுமை சம்பவங்கள் மொத்தம்  23,386 ஆகும்.  இதில்  2017-ஆம் ஆண்டு  மட்டும்  5537 சம்பவங்கள் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஆண் குழந்தைகளுக்கு  2174 சம்பவங்களும் பெண் குழந்தைகளுக்கு  3363 சம்பவங்கள் நடந்திருக்கிறது  என தேசிய இலாகா (JKM) பதிவு செய்திருக்கிறது.  இதில்  1397 குழந்தைகளுக்கு எதிரான  பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதிலும் அதிகமாக பாதிக்கப்படுள்ளது பெண் குழைந்தைகள்தான் என்றும், ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளின் நிலை  அபாய கட்டத்தை நோக்கி போவதை பார்க்க முடிகிறது என்றும் JKM  கூறியிருக்கிறது.
இதில் மானம்; கௌரவம்; குழந்தைகளின் எதிர்காலம் பாழப்போகும், என இந்த பாதக செயலுக்கு புகார் அளிக்காமல் விட்ட  சம்பவங்கள் எத்தனை என்று யாருக்கும் தெரியாது.

இந்தப் பதிவு ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டும் போகிற போக்கைத்தான் காண முடிகிறதே தவிர  தண்டனைகளும் அபராதங்களும் இதற்குச் சரியான மாற்றாகவும் தீர்வாகவும்  இருந்ததே இல்லை.
குழந்தை பாலுறவிற்கும் வன்கொடுமைகளுக்குக் குற்றம் புரிந்தவரை மட்டும் கையை காட்டி ஒதுங்கிவிட முடியாது. நம் கையைக்கொண்டே நம் கண்ணை குத்திக்கொண்டு யாரையோ கையை காட்டுவது மாதிரிதான் இதுவும். பெற்றோர்கள் முதற்கொண்டு இந்த ஒட்டு மொத்த சமுதாயமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்தச் சம்பவத்திற்காக செய்தியை எழுதும் ஊடகங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒரு ருசிகர சம்பவம்போல இதை காட்சி படுத்தி விவரத்தில் அருவருப்பிலும் அருவருப்பானது.

குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கும்  கூட் டச் - பேட் டச்  தொடுகையை பல வேளைகளில் குழந்தைகள் இனம்பிரிக்க தெரியாமல் தடுமாறுகின்றனர். அல்லது மௌனமாக இருந்துவிடுகின்றன. பேசவே  தொடங்காத குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் அத்து மீறல்களை எப்படி அறிந்துகொள்வது?

ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது குழந்தைகளைக் கடித்து குதறிக்கொண்டிருக்கிறார்கள் காம குற்றவாளிகள். குழந்தைகளை வளர்க்கத்தெரியாத, குழந்தைகளைப் பாதுகாப்பாக பார்த்துகொள்ளத்தெரியாத, குழந்தைகளைக் குழந்தைகளாக மதிக்கத்தெரியாத கயவர்கள் குழந்தைகளை பெத்துகொள்ளாமலேயே இருந்துவிடுவது நல்லது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற இந்தப் பூமியில் குழந்தையும் தெய்வமும் ஒன்று எனும் அபத்த வார்த்தையை இனி யாரும் சொல்ல வேண்டாம்.    

நன்றி.
 ஊடறு
மக்கள் ஓசை (மலேசிய ஊடகம்)

 

1 கருத்து:

  1. குழந்தைகள் மீது கட்டவிழ்க்கப்படும் பாலியல் பலாத்காரமும் வன்கொடுமையும் படுகொலைகளும் குழந்தைகள் வாழ்வதற்கு இந்த உலகம் ஏற்றதாக இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு