சனி, 1 டிசம்பர், 2018

பசார் காராட் (PASAR KARAT)

கோலாலம்பூர்  எனும் நகரம் ஆடம்பரத்திற்குப் பெயர் போனதாகத்தான் பலரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதன் இருண்ட பக்கங்களை சட்டென யாரும் வெளிச்சம் போட்டு காட்டிவிடுவது இல்லை. கோலாலம்பூரில் ஆடம்பரத்தைப் பார்ப்பவர்கள் அதன் முதுகுப்பகுதியில் ஆழமாக பதிந்துவிட் ட வறுமைக்கோடுகளைக் கவனிக்க தவறித்தான் விடுகின்றனர். இம்மாதிரியான வெளிப்படையாக நடக்கும் மறைக்கப்பட்ட காட்சிகளும் விஷயங்களும் தேசிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் நிரம்ப எழுதப்பட்டிருந்தாலும்,  தமிழ் மொழியில் எழுதப்பட்டிருப்பது   குறைவுதான். பலருக்குத் தெரிந்திருக்கவும் இல்லை. தலைநகரின்  இந்த எழுதப்படாத பக்கங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் பசார் காராட் என்று சொல்லக்கூடிய பழைய சந்தை. மலாய் மொழியில் காரட் என்றால் திரு பிடித்தது என்று அர்த்தம்.  சந்தையும்  அதற்கு அர்த்தம் கற்பிக்கும் மாதிரியான ஒரு இடத்தில்தான் நடக்கிறது.
 
சாதாரணமாகக் காலை  10 மணிக்குத் தான்  தலைநகரின் பெரிய/ சிறிய  அங்காடிகளில் வியாபாரத்திற்குத் திறக்கப்படும். அதிகாலை 5.30 மணியிலிருந்து 8 மணிவரை நடக்கும் இந்த பசார் காரட் 10 மணிக்குத் தொடங்கவிருக்கும் சில  அங்காடிகளின் வாசலிலும் , குறுக்கு சந்துகளில் கடை விரிக்கிறது.கிட்டதட்ட கருப்பு சந்தை மாதிரியாகவே தோற்றம் கொடுக்கிறது இந்தச் சந்தை.
தற்போது உபயோகத்திலிருந்து விலகிப்போயிருக்கும் அலைபேசியிலிருந்து தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதிநவீன கைப்பேசி வரை இந்தச் சந்தையில் வைத்திருக்கிறார்கள். உடைகள், கைக்கடிகாரங்கள், ஆன்ட்டிக் பொருள்கள், பழைய நாணயங்கள், குறுந்தட்டுகள், போஸ்ட்டர்கள் மின்னியல் சாதனங்கள் எனப் பயன்படுத்தியதும் புதியதுமாக இருக்கிறது.

 2017-ஆம் ஆண்டு தலைநகரின் மாநகரமன்றம் இந்தச் சந்தைக்கு 'பசார் ஆன்ட்டிக்' என புதிய பெயரைக் கொடுத்தது.  பசார் காரட் என்ற பெயர் எதிர்மறை தோற்றத்தை கொடுப்பதால் இந்தப் பெயரை சூட்டியதாகக் மாநகரமன்றம் கூறியதோடு, 80 புதிய தற்காலிக  வியாபார உரிமையையும் பசார் காரட் வியாபாரிகளுக்கு  பெற்றுத்தந்தது.  6 மாத தவணையில் அவர்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். திருட்டு பொருள்களை விற்பனை செய்கிறார்கள் என்று சந்தேகிப்படும் வியாபாரிகளை எளிதில் அடையாளம் காணவும், திருட்டு பொருள்களை விற்பனை செய்வதை தவிர்க்கவும் மாநகர மன்றம் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது என்று ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்கள்.  இருந்தபோதும்,  இன்றுவரை பசார் காரட் என்ற பெயராகவே அந்தச் சந்தை விளங்கி வருகிறது.கிட்டதட்ட 30 ஆண்டுகள் பழக்கத்தை அத்தனை சீக்கிரம் மாற்றிவிட முடியுமா என்ன? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக