புதன், 26 டிசம்பர், 2018

கூகை பெண்கள் சந்திப்பு 2



 கூகை பெண்களிடம் சந்திப்பு நடத்துவதற்காக வடமாநிலம் எங்களை அன்புடன் அழைத்திருந்தது. சுங்கையில் நடத்திய பெண்கள் சந்திப்பின் வெற்றியையும் பதிவையும் பரிசீலித்தவர்கள்  இந்த வாய்ப்பு எங்களுக்குக் கொடுத்தனர் என்றும் சொல்லலாம். மேலும், பெண்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்த வடக்கு மாநில  தோழிகள் , கூகையின் இந்த முயற்சியைப் பயன்படுத்திக்கொள்ள எங்களைத் தேடி வந்தனர் என்றும் சொல்லலாம் . தேடி வந்த வாய்ப்பைக் கூகை நல்லபடியே பயன்படுத்திக்கொண்டதில் மகிழ்கிறோம்.
‘கூகை பெண்கள் சந்திப்பு 2’  விவசாயமும் தமிழரின் வரலாறும் இணைந்தே பேசக்கூடிய இடமான கெடா மாநிலத்தில் , அம்மாநில தோழிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேதி: 23/12/2018
நேரம்: 3.30 pm
இடம்: தாமான் கெளாடி, பாலவிநாயகர் ஆலய மண்டபம்.

 
குறிப்பிட்ட தேதியில் காலையில் தலைநகரிலிருந்து வடக்கை நோக்கி புறப்பட்ட கூகை குழுவினர், ஈப்போவில் சிறிய இளைப்பாறலுக்குப் பிறகு மதியத்திற்கெல்லாம் கெடாவை சென்றடைந்தோம். இன்னும் சந்திப்புக்கான நேரம் இன்னும் இருந்தபடியால், பூஜாங் பள்ளத்தாக்கைப் பார்த்துவிட்டு வந்தோம். நான் மூன்றாவது முறையாக பூஜாங் சமவெளியை காண்கிறேன். அதுகுறித்த பதிவுகள் என் அகப்பக்கத்தில் முன்னமே பதிவு செய்திருக்கிறேன். சரியாக மூன்றரை மணிக்குத் தோழிகளிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆட்கள் வந்துவிட்டார்கள். நீங்கள் எங்கே என்று? குறித்த நேரத்தில் ஒரு நிகழ்ச்சியோ அல்லது சந்திப்போ தொடங்கிவிடுவது என்பது இதுவரை எங்கும் நடக்காத ஒன்றல்லவா? இங்கே என்ன அதிசயமாக இருக்கிறதே என அடுத்த 5 -வது நிமிடத்தில் சந்திப்பு இடத்திற்கு விரைந்தோம். உண்மை. 40-க்கும் அதிகமானவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். 


சந்திப்பைத் தோழி ஜெயா எங்களை வரவேற்றுத் தொடக்கிவைத்தார். மேலும், கூகை என்பது என்ன? அமைப்பா? கட்சியா? அரசின் பிரதிநிதியா? நீங்களெல்லாம் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளதால் அதைக் கூறிய பிறகே நாங்கள் சந்திப்பை தொடங்கினோம். அதுவரை நாங்கள் ஆளுங்கட்சியின் பிரதிநிதிகள் என்று எண்ணி வந்தவர்களுக்குச்  சிறிய ஒரு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் , அவர்களில் யாருமே எழுந்து போகவில்லை. எங்களின் நோக்கம் என்ன என்று அறிய அவர்கள் காத்திருந்தனர்.


கலந்துரையாடலை ‘கற்றல்-தெளிதல்-நன்றே’ எனும் தலைப்பில் தோழர் சிவரஞ்சனி தொடங்கினார். ஏதோ  கையில் கொண்டுபோகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்தால் உங்களுக்கு நாங்கள் எதையும் கொடுக்கப்போறதில்லை; ஆனால், நாங்கள் எதையும் உங்களுக்குக் கொடுக்காமல் போகப் போறதுமில்லை. எனத்  தொடங்கி அவர் சாதாரண அடித்தட்டு மக்கள் தொடங்கி படித்தவர்கள் முதற்கொண்டு செயற்பட தயங்கும் அனைத்து வகையான அரசு அலுவல்கள் குறித்து உரையாடினார். எந்நேரமும் மூன்றாம் தர்ப்பையோ அல்லது பிறரின் உதவியோ இல்லாமல் அரசு தன் மக்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருக்கும் சலுகைகளை எவ்வாறு பெறுவது? எங்குப் போவது உள்ளிட்ட விவரங்களை அவர் வந்திருந்த மக்களிடம் கேள்வி எழுப்பியும் விவாதித்தும் கலந்துரையாடினார்.




வந்திருந்தவர்களிடையே தொடர் கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது. அனைத்திற்கும் மிகப் பொறுமையாக,தேவையான பதிலை சிவரஞ்சனி வழங்கினார். மேலும், அவர்கள் அடுத்துச் செய்ய வேண்டிய விஷயத்தையும்  விளக்கினார். இப்படியாக முதல் அங்கம் கிட்டதட்ட ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக நிகழ்ந்தது.


தொடர்ந்து, ‘திருநங்கைகள் யார் ? ’ என்ற தலைப்பில் நான் என் சந்திப்பை மேற்கொண்டேன். அண்மையில் பதின்ம வயதினரால் அடித்துக் கொல்லப்படத்திலிருந்து கழிவறையைக் கூட சங்கோஜமில்லாமல் பயன்படுத்தத் தயங்கும் திருநங்கைகளின் அவல நிலைகுறித்து கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலில் ஓர் ஆச்சரியமான உண்மையைக் கெடா மாநில பெண்கள் உணர்த்தினார். அதாவது திருநங்கைகளோடு அணுக்கமான நட்பை கொண்டிருப்பதாக அவர்கள் கூறினார். மேலும், திருநங்கைகளை அவமானப்படுத்துபவர்களை தாங்கள் ஏற்பதில்லை என்றும் அவர்கள் கூறியது உண்மையில் மகிழ்ச்சியாகவே இருந்தது.

கெடா மாநில பெண்களுக்கு வேறு எந்த வகையில் உதவ முடியும் எனக் கலந்துரையாடியதுடன் பள்ளிப்பிள்ளைகளுக்கு எவ்வாறு தன்னம்பிக்கை கொடுத்து அவர்களை ஊக்கப் படுத்த வேண்டும் என்பதையும் கலந்துரையாடினேன். கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர் ஒரு பாரம் (FORM) எழுதக்கூட அவர்களை நம்பிக் கொடுப்பதில்லை. அவர்கள் சரியாக செய்ய மாட்டார்கள் என்ற அவநம்பிக்கையைத் தூக்கி போட்டுவிட்டு பிழையாக பாரத்தைப் பூர்த்தி செய்தாலும்
அவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்துச் சரியாக செய்வதற்குப் பழகிவிட வேண்டும். அதைவிடுத்து அவர்களைத் திட்டுவதிலும் குறைவாக எண்ணுவதிலும் பலனில்லை என்று கூறினேன். பலர் அதை ஒப்புக்கொள்ளவே செய்தனர்.


தொடர்ந்து இந்தச் சந்திப்பு தொடர்பான கேள்வி-பதில் அங்கம் இடம்பெற்றது. வந்திருந்தவர்களிடத்தில் அவ்வளவாகக் கேள்விகள் இல்லையென்றாலும் பகிந்து கொள்ள அவர்களுக்கு விஷயங்கள் இருந்தன. பிரச்சனைகளும் இருந்தன.

இறுதியாகத் தோழி ஜெயா நன்றியுரையாற்றி சந்திப்பை நிறைவு செய்தார்.
கெடா மாநிலத்தில் நடந்த இந்தப் பெண்கள் சந்திப்பில் நான் முக்கியமாகப் பதிவு செய்ய வேண்டிய இரு விஷயங்கள் உள்ளன.


விஷயம் 1

1. இந்தச் சந்திப்பிற்கு பெண்கள் மட்டும் வரவில்லை. பெண்கள் என்ன பேசப்போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள சில ஆண்களும் வந்திருந்தனர். சுருக்கிய புருவத்தோடு, நாங்கள் பேசுவதை அவர்கள் பதிவு செய்யவும் செய்தனர். மிக முக்கியமாக அவர்கள் இறுதிவரை இருந்து இந்தச் சந்திப்பில் முழுமையாகப் பங்கெடுத்தனர். அதில் ஒருவரிடம் நான் இவ்வாறு கேள்வி எழுப்பினேன்.

பெண்கள்  இப்படி வந்து ஒன்று கூடி பேசுவது ஏற்புடையதாக இருக்கிறதா?
அவரிடம் பதில் இல்லை.
திருமணம் ஆன பெண்கள் இவ்வாறு வரலாமா?
வரக்கூடாது.
அப்படி வருவதால் அவர்களுக்கு என்ன?
அவரிடம் பதில் இல்லை.
உங்கள் வீட்டுப் பெண்ணை பேசுவதற்கு அனுமதிப்பீர்களா?
கொஞ்சம் தயங்கியவர்.. நான் நிச்சயமாக அனுமதிப்பேன். என் வீட்டுப் பெண்களும் விஷயம் தெரிந்தவர்களாக வர வேண்டும். பொதிவில் தைரியமாகச் செயற்பட வேண்டும், என்றார்.



விஷயம் 2

இந்தச்சந்திப்பை ஏற்பாடு செய்த தோழிகளான ஜெயா, புஷ்பா, மற்றும் விரோனிகா போன்றவர்கள் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். பெண்கள் பொதுவெளியில் தலை நிமிர வேண்டும் என்ற வேட்கை மட்டுமே அவர்களிடத்தில் என்னால் பார்க்க முடிந்தது. அரசியல் மற்றும் பண பலம் எதுவுமே இல்லாத இவர்கள் தினமும் வாழ்க்கையோடு முட்டி மோதுபவர்கள்தான். அதையும் தாண்டி அடுத்தவர்களுக்காகவும் யோசிக்கிறார்கள். அவர்கள் தானே பெண்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கூகையின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் ஆலோசனையின் பேரில்  மறுநாள் பிரச்னை உள்ளவர்களை அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று தீர்வை ஏற்படுத்திக்கொடுத்ததில் கூகை மகிழ்ச்சியடைகிறது.

(இந்தச் சந்திப்பிற்காக இடத்தைக் கொடுத்து உதவிய கோயில் நிர்வாகத்திற்கு நன்றியும் அன்பும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக