ஞாயிறு, 25 நவம்பர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 10


அன்றைய இரவில் நாங்கள் அனைவரும் பேருந்து எடுத்து கொழும்பு கிளம்பினோம். மறுநாள் அதிகாலையில் நாங்கள் கொழும்பை சென்றடைந்தோம். ரஞ்சி மாவின் உறவினர் வீட்டில்தான் நாங்கள் தங்கினோம். அந்த வீட்டு அம்மா அவ்வளவு அன்பானவர். எங்களுக்கு வேண்டிய அனைத்தையுமே நொடியில் தயார் செய்தார். நேரம் காலம் பார்க்காமல் அறிமுகமில்லாத எங்களை யாரோ என நினைக்காமல் எல்லாத்தையுமே பார்த்து பார்த்து செய்தார்.மகா லட்சுமி எனச் சினிமாவில் சொல்வார்களே , அவரை நேரில் பார்க்க விரும்பினால் நிச்சயமாக அந்த அம்மாதான் மகா லட்சுமி. நாங்கள் எங்களின் வீடுபோல அங்கே இருந்தோம். நண்பர்களை வரச்சொல்லிச் சந்தித்தோம். அவர் அனைவரையுமே அன்பாகக் கவனித்தார்.


அன்றைய நாளில் நாங்கள் கொழும்பு நகரை சுற்றிப் பார்த்தோம். கொழும்பு எனும் சிங்கள நகரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சீனா நகரமாக மாறிக் கொண்டிருப்பதை நேற்று வந்த எங்களாலேயே உணர முடிந்தது. மழைமேகம் மழையைத் தாங்கிக்கொண்டு எங்களிடம் கண்ணாமூச்சி விளையாடத் தொடங்கியிருந்தது. சில பொருள்களையும், ஒரு உணவகத்தில் மத்திய உணவையும் முடித்துக்கொண்டு கடற்கரை பக்கம் வந்து சேர்ந்தோம். தூரத்தில் மழை பெய்துகொண்டிருப்பதை மேகம் எங்களுக்குக் காட்டி கொடுத்தது. 


அது ஒரு வித்தியாசமான காட்சியாகவும் அழகாகவும்  இருந்தது. சற்று நேரத்தில் கடுமையான மழை பிடிக்க, அனைத்து தோழிகளுமே ஒரு துப்புட்டாவை குடையாக விரித்து அதன் கீழ் நின்று கொண்டோம். அது ஒரு அழகான தருணம். அந்த தருணத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கொழும்பு நகரம் மழை நீரில் நிறைந்து சில இடங்களில் குப்பை கூழங்களும் சாக்கடைகளுமாக ஸ்தம்பித்து நின்றன. வாகனங்கள் கடுமையான சாலை நெரிசலில் சிக்கிக் கொண்டிருந்தன.

மாலையில், கல்பான  மற்றும் மாலதி ஆகியோர் சென்னைக்கு புறப்பட விமானநிலையம் கிளம்பிச்சென்றனர். எங்களின் தோழியர்களை இணையும்போது ஏற்படும் மகிழ்ச்சியைவிட, அவர்களைப் பிரியும்போது ஏற்படும் கவலையும் தவிப்பும் இனம்புரியாத உணர்வாகும். அவர்கள் விடைபெற்றுச் சென்ற வெற்றிடம் நிரப்ப வழியில்லாமல் வெறித்துக் கிடந்தது.


அன்றைய நாள் எங்களுக்குக் கொழும்பு நகரில், சந்திப்பு ஒன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1.9.18 hamden lane 121 இல் நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் காத்திரமான உரையாடலாகவும் தமிழ் சிங்கள ஆர்வலர்கள் ஆர்வத்துடனும் உரையாடியது நிறைவாக இருந்தது. குறுகிய நேரத்தில் சந்திப்பை ஒழுங்படுத்திய தோழர் மயூரன் , தோழர்  நிலா ஆகியோருக்கு நன்றி.  

ஒன்றுகூடலின்போது கொழும்பைச் சேர்ந்த  இலக்கியவாதிகள் செயற்பாட்டாளர்கள் என எங்களைச் சந்திக்க வந்திருந்தனர். களப்பணியில் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிங்கள வழங்கறிஞர் தோழி ஒருவர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதுடன் நிறையே கேள்விகளை கேட்டு விவரங்கள் தெரிந்துகொண்டார். அது மட்டுமல்லாமல் நாங்கள் கேட்டா பல கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். பதிவு செய்யப்பட வேண்டிய சந்திப்பு அது.  அவர்களுடனான சந்திப்பு முடிய இரவாகியிருந்தது. ஒரு நிறைவான பெண்கள் சந்திப்பில் கலந்து முடித்திருந்த திருப்தி எனக்கு இருந்தது. அந்த நம்பிக்கையோடு இலங்கைக்கு விடைகொடுத்துக் கிளம்பினேன்.

முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக