திங்கள், 24 ஏப்ரல், 2017

'முதிர் கண்ணன்கள்'


மலேசியா, ஒரு சுதந்திர பூமியாகவும், வளர்ச்சியடைந்த ஒரு மேல்நாட்டு  பாவனைக் கொண்ட  நாடாகவும் மாயையை விரித்துவிட்டிருக்கிறது.  மலேசியர்களுக்கு பணச் சிக்கல் இருக்காது. அங்கே  எல்லாரும் வசதியானவர்கள், என்று நினைக்கும் வெளிநாட்டினர்களே, மலேசியர்கள் திருமணம் முடிக்க  எத்தனை பாடுபடுகின்றனர் தெரியுமா?
குறிப்பாக மலாய்க்காரர்கள் நிலை
மிகவும் பரிதாபமானது.   ரிங்கிட்டின் வீழ்ச்சி, வேலையில்லா பிரச்னை, விலை ஏற்றம், ஜி.எஸ்.டி வரியால் குழப்பம் இதுதான் காரணமாக இருக்குமோ என நினைக்கவேண்டாம்.
 இந்திய சமூகத்தில்  பெண்ணுக்கு வரதட்சனை கொடுக்கிறோமே, அதுபோல மலாய் சமூகத்தில் ஓர் ஆண் தன் மனதுக்கு பிடித்தவளை மணக்க  விலைபணம் கொடுக்க வேண்டும்.  எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அந்தப் பெண் முடிவுச் செய்வாள்.  அவளின் ஆளுமை குறித்து அது முடிவுச் செய்யப்படும். அவளுடைய திறமை, உத்தியோகம், சம்பளம் என அவள் ஆளுமை ஒவ்வொன்றுக்கும் விலை உண்டு. அந்தப் பணத்தைக் கொண்டுதான்  பெண் வீட்டு திருமணச் செலவு, அவர்கள் குடும்பம் நடத்த தேவையான பொருட்கள் (கட்டில் மெத்தை உட்பட) அனைத்தையும் வாங்க வேண்டும்.

இந்தப் பணத்தை கொடுக்க முடியாத பட்சத்தில் அந்த ஆண் திருமணம் செய்துக்கொள்ள முடியாது. ‘லிவிங் டுகெதர்’ என்பது எல்லாம் மலாய்க்காரர்களிடத்தில் சாத்தியமில்லை. தனி அறையில்  திருமணம் ஆகாத ஓர் ஆணும் பெண்ணும் 30 நிமிடம்கூட இருக்ககூடாது.  இருக்கவும் முடியாது.  இஸ்லாமிய மத போதகர்கள் வீட்டுக்கதவை தட்டி தனிமைக்கு என்ன காரணம் என்றெல்லாம் கேட்கமாட்டார்கள். காரணம் அவர்களுக்கு தெரியும்.  என்ன காரணம் சொன்னாலும் இருவருக்கும் அபராதம் நிச்சயம் உண்டு.  திருமணமாகாத காதலர்கள் தனி அறையில் இருப்பது ‘ஹராம்’ எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் குறைந்த சம்பளத்தில்  திருமணம் செய்யமுடியாமல் கஷ்டப்படும்  நிறைய 'முதிர் கண்ணன்கள்'  மலேசியாவில் காணலாம். இரக்கப்பட்டு விலைப்பணத்தை குறைத்து அல்லது பகிர்ந்து ஒருவாரியாக ஆணுக்கு வாழ்கை கொடுக்கும் மலாய் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  மலாய்சமூகத்தில் மாப்பிள்ளையை ‘ராஜா செஹரி’ என்று அழைப்பார்கள் அதாவது ‘ஒரு நாள் அரசன்’ என்று அதற்கு அர்த்தம். ஒரு நாள் அரசர் ஆவதற்கு வாழ்நாள் முழுதும் உழைக்கும் கொடுமை மட்டுமல்ல திருமண  ஆசையில் குறுக்கு வழியில் பணம் தேடும் அவலமும் நடக்கும்.
 

பல்கேரியாவில் ஒரு இளம் பெண்ணுக்கு துணை தேடும் படலம் சற்று வித்தியாசமானது. குறிப்பாக ‘ஜிப்சி’  இனத்தில் உள்ளவர்கள்  பெண் தேடும் அனுகுமுறை மாட்டு சந்தையில் மாடுகளை விற்பதைப் போன்றுதான்.  திருமணத்திற்கு தயார் என்ற  நிலையில் இருக்கும் பெண்களை அதாவது 15 லிருந்து 30 வரையிலான பெண்களை ‘திருமணச் சந்தையில்’  ஒன்று கூட்டுகிறார்கள்.  இந்தச் சந்தையில் பங்கு பெறவரும்  பெண்கள் ஆபாசமாக அவர்களின் உடலழகை காட்டும் விதத்தில் உடையணிந்திருக்க வேண்டும். இந்தப் பெண்களுக்கு அங்கு துணையாக அவளின் பெற்றோர் உடனிருக்கலாம். அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்கவே பெற்றோர்கள்  உடனிருக்க அனுமதிக்கப்படுகிறார்களாம்.

இந்தப் போட்டிக்கென சில விதிமுறைகளும் உண்டு. அதாவது  இந்தச்  சந்தையில் காட்சிக்கு வரும்பெண் நிச்சயம் கன்னித்தன்மை  இழக்காதவளாக இருக்க வேண்டுமாம்.  திருமணமானவள் அல்லது கன்னித்தன்மை இழந்தவள் என கண்டு பிடிக்கப்பட்டால்   அப்பெண் சந்தையிலிருந்து  நிராகரிக்கப்படுவாள்.  அதோடு அப்பெண்ணுக்காக எந்த ஆணாவது (மாப்பிள்ளை) விலைப்பணம் தந்திருந்தால் அதை திருப்பி தந்துவிட வேண்டும்.

அதன் பிறகு அந்தப் பெண் திருமணச் சந்தையிலிருந்து முழுவதுமாக  நிராகரிக்கப்படுவாள்.  பெரும்பாலும் ஏழைப் பெற்றோர்களால்தான்  தங்கள் பெண் பிள்ளைகளை இச்சந்தைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அழகான பெண்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலை அதிகமாம்.  விலை அதிகமாக கொடுத்து வாங்கும் ஆண்மகனை அப்பெண்  பெருமையாக கருதுகிறாளாம்.  பல்கேரியாவில் தனி ஒரு மனிதனுக்கு  வருட வருமானம் 8,000  வெள்ளிதானாம்.  தங்கள்  மனதிற்கு பிடித்த பெண்ணை திருமண சந்தையில் பிடிக்க  அந்த ஆண்கள் பெரிய சேமிப்பை மேற்கொள்கின்றனர்.  

இதுதொடர்பாக இணையத்தில்  வாசிக்க நேர்கையில், பல்கேரியாவின் அறிவியல் ஆய்வாளரான  வெல்கோ குருஸ்தேவ்

“இந்தத் திருமணச் சந்தையில் ஆண்கள் பெண்களை வாங்குவதாகக் கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக தனக்கான கன்னித்தன்மை மாறாத ஒரு பெண்ணை அவன் தேர்ந்தெடுக்கிறான் என்றே கொள்ள வேண்டும். இந்தப் பேரத்தில் தனக்கான கன்னித்தன்மை மாறாத பெண்ணை  அவன் தேர்ந்தெடுக்கிறான்.  இந்தப் பேரத்தில் இரு சாரரும் நன்மை அடைகின்றனர். பெண்ணை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைக்கு ஒரு நல்லவரை தேடிப்பிடிக்க முடிகிறது.  ஆணுக்கு ஒரு நல்ல ஒழுக்கமுள்ள பெண் துணையாகக் கிடைக்கிறாள் ” என்கிறார்.

பல்கேரியாவில் பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்படவில்லை. என்றாலும்  2004-ஆம் ஆண்டு அங்கு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 25 சதவிகித பெண்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் என கூறப்பட்டது. 10 சதவிகித பெண்கள் மட்டுமே இடைநிலை அளவிலான கல்வியைப் பெற்றிருக்கிறார்கள்.  இந்தத் திருமணச் சந்தை பல்கேரிய பாரம்பரியம் என்று கூறும்  வெல்கோ குருஸ்தேவ் அந்தப் பாராம்பரியம்  மெல்ல மறக்கப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

பல்கேரிய திருமணச் சந்தை சடங்குக்கும் மலேசிய மலாய் சமூக திருமணத்திற்கும் ஓர் நூல் அளவு  ஒற்றுமை இருப்பதாக பார்க்க முடிகிறது.

மலேசிய தமிழர்களிடத்தில் வரதட்சனை பிரச்னை இல்லை. இதுவரை பெருசாக வரதட்சனை கொடுமை என்ற பிரச்னை எல்லாம் எனக்கு தெரிந்து எழவில்லை. ஆனால்…. 1980-களில்  கணவன் மனைவி தாம்பத்தியத்திற்கும்  பாய்,  தலையணைகள், துணிவைக்கும் ஒரு தகரப்பெட்டி, வெங்கலத்திலான தட்டுமுட்டுப் பொருட்கள்   என அவர்கள் வசதிக்கேற்ப  சீர் வரிசை கொடுத்து அனுப்பட்டது.  1990 களுக்குப் பிறகு நவீன வகை கட்டில் மெத்தைகள், துணிவைக்கும் அலமாரி, முக ஒப்பனை மேஜையோடு  சில்வர் பாத்திரங்கள் என  பெண்ணுக்காக சீர் செய்யப்பட்டது.   தங்க நகைகள் அவரவர் வசதிக்கும் கௌரவம் பொறுத்தும் போடப்படும்.  அதில் அப்போதும் இப்போதும் பெரிய மாற்றமில்லை.

ஆனால், கட்டில்மெத்தை, தட்டுமுட்டு பொருட்கள் இல்லாமல் அந்தப் பெண் கணவன் வீடுச் சென்றால்,  
அவளுக்கு கிடைக்கும் மரியாதை
சொல்ல தெரிய வேண்டியதில்லை.
 ஜாடை பேச்சுக்களுக்கு அவள் ஆளாக நேரிடும்.  காதல் திருமணங்களில் கட்டில் மெத்தை செட் மற்றும் சில்வர் பாத்திரங்களை  காதலர்கள் இணைந்து பணத்தையும் பகிர்ந்து வாங்கிக்கொள்வதும் உண்டு.

குடும்பத்தினர் பார்த்து செய்துவைக்கும் திருமணத்தில் இந்தத் தேவை மிக அதிகமாக இருக்கிறது.  எவ்விதக் குறையும்  சொல்லாமல் இருக்க வேண்டும் என்றக் கடப்பாடு 100 சதவிகிதம்  பெண் வீட்டாரால் மேற்கொள்ளப்படுகிறது. இது பெண்ணுக்கு வழங்கப்படும் அன்பளிப்புதான்  என்று சில தோழிகள் கூறினாலும்  அது  எழுதிவைக்கப்படாத  வரதட்சணையாகத்தான் பார்க்கப்படுகிறது.  கடன் வாங்கி அல்லது மாதத்தவனையில் அதிக வட்டிக்கு தளவாடப் பொருள்களை வாங்கி பெண்ணுக்கு சீர் செய்யும் பெற்றோர்களை, “என்னப் பொருள் வாங்கிக் கொடுத்திருக்காங்க, கட்டிலுக்கு கால் சரியில்ல, குத்து விளக்கு இல்ல”  என்று குறை கண்டுபிடித்து குத்தி பேசும்  மாப்பிள்ளை வீட்டார்  இன்னும்கூட மலேசியாவில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

1 கருத்து:

  1. //மலாய் சமூகத்தில் ஓர் ஆண் தன் மனதுக்கு பிடித்தவளை மணக்க விலைபணம் கொடுக்க வேண்டும். // மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு, நீங்கள் சொல்லியிருப்பது இஸ்லாமிய சட்டம். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. பெண் தான் இஸ்லாமிலும் வரதட்சணை தர வேண்டும். காரணம் இங்கே மதம் மாறியவர்களே அதிகம்

    பதிலளிநீக்கு