மேடை நாடகக் காட்சிகளை நான் முதல் முதலில் பார்த்தது என் தாத்தாவிடம்தான். பெண் வேடமிட்டு அவர் நடித்த காட்சிகளை அவரே கூறக் கேட்டிருக்கிறேன். பெண் வேடமிட்ட தாத்தாவின் புகைப்படத்தை என் பெரியம்மா வெகு நாட்கள் வைத்திருந்தார். கருப்பு வெள்ளை படத்தில் என் தாத்தா அத்தனை நளினமாகக் காட்சியளிப்பார்.
நான் அண்மையில் பார்த்துப் பிரமித்த அதே வேளையில் அதை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றிய நாடகம் பிரசன்னா ராமசாமி அவர்கள் இயக்கிய ”காண்
மகாபாரதப் பெருங் கதையோட்டத்தில், 'காண்டவ தகா பர்வத்தில்' தட்ஷன் (தட்சகன்) எனும் நாகனை நமக்கு விரோதனாகக் காட்டி அவனது வனத்தை அழிக்கும் நாயக புருஷர்களை நியாயவான்களாகக் காட்டும் கொசுறுக்கதை ஒன்றுண்டு.
புராணங்களில், சரி என தோன்றிய பல விடயம் கேள்விக்கு உட்படுத்த படுவதும் சூழ்ச்சி என்பது அவதார புருஷர்களுக்கு கை வந்த கலை என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் இந்த நூற்றாண்டு நமக்கு பாடம் கற்பித்தபடியே உள்ளது. அதை மிக அழகாக கண்முன் கொண்டு வந்து சிந்திக்கக் கூடிய இன்னும் சொல்லப்போனால் நாடகம் முடியும்வரை வேறு எதிலும் சிந்தனை செல்லாதபடி கட்டிப் போட்டிருந்தார் .பிரசன்னா ராமசாமி.



காண்டவ வனம் எரிவதும் போன்றே சமகாலத்தில் வனங்கள் அழிக்கப்படுவதும் அதில் இருக்கும் வனவிலங்குகள் மடிவதும், மரபற்றழிவதும் நிகழும் அவ்வேதனையினூடே நாம் பூர்வகுடிகள் அழிக்கப்படுவதை பார்த்தவாறே தான் கையாலாகாமல் நிற்கிறோம். இந்நாடகத்தில் அதே போன்ற ஒரு கேள்வியை பிரசன்னா அவர்கள் எழுப்புவதை பார்க்கவேண்டும். ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றழைக்கப்படும் அதே கிருஷ்ணனின் வார்த்தைகள் அவனின் பிம்பத்தையும் உடைக்கும் எனில் அது மிகையில்லை. இவ்விடத்தில் ஒரு மேற்கோளை நான் எம்.டி.முத்துக்குமாரசாமியிடமிருந்து சொல்ல விழைகிறேன். இதுபோன்ற கூற்றை கிருஷ்ணன் பல இடங்களில் பேசுகிறான்.
குந்தியோடு அஸ்தினாபுரம் திரும்பிவிட்ட பாண்டவருக்கு வேறு வழியில்லாமல் வனாந்திரப்பகுதியையும் சில பொட்டல் வெளிகளையும் ராஜ்யத்தின் பங்காகப் பிரித்துக்கொடுக்கிறார் திருதராஷ்டிரன். வனப்பகுதியை அழித்து இந்திரபிரஸ்தம் நிறுவுவது என்று பாண்டவர்கள் முடிவு செய்கிறார்கள். காண்டவ வனம் என்று அழைக்கப்பட்ட வனத்தினை தீயிட்டு அழிக்க கிருஷ்ணனும் அர்ஜுனனும் முடிவு செய்கிறார்கள். காண்டவ வனத்தில் காலங்காலமாக வசிக்கும் காட்டுவாசிகள், பழங்குடியினர் வன அழிவினை அனுமதிக்க முடியாது என்று வாதிடுகின்றனர். போர் மூள்கிறது. போரில் வென்ற கிருஷ்ணனும் அர்ஜுனனும் ஏராளமான பழங்குடி மக்களும் பறவைகளும் விலங்குகளும் உள்ளிருக்கவே காண்டவ வனத்தினை தீயிட்டுக் கொளுத்தி சாம்பலாக்குகின்றனர்.
அப்போதும் அர்ஜுனன் கேட்கிறான் ஏராளமான மக்கள் வனத்தினுள்ளே இருக்கிறார்களே அவர்களை அழிப்பது முறையா என்று. கிருஷ்ணன் சொல்கிறான் அவர்கள்தான் நால் வர்ணத்திற்குள்ளாகவே வரமாட்டார்களே அவர்கள் மிருகத்திற்குச் சமமானவர்கள்தானே அவர்களை அழிப்பதில் என்ன தவறு என்று.( மிருகங்களுக்கு சமானமானவர்கள் அவர்கள் இறப்பதால் நமக்கு எந்த பாவமும் வராது).' எரித்து சாம்பலாக்கப்பட்ட காண்டவ வனம் இருந்த இடத்தில் எழுகிறது தேவ சிற்பி மயனால் கட்டப்பட்ட மினுக்கும் நகரம் இந்திரபிரஸ்தம்.
மராத்திய சிந்தனையாளரும் மானிடவியலாளருமான ஐராவதி கார்வே தன்னுடைய ‘யுகாந்தா’ என்ற நூலில் மகாபாரதத்தில் வரும் காண்டவ வன தகனம் இந்து உயர் சாதியினருக்கும் பழங்குடியினருக்குமான உறவு என்ன என்பதை பட்டவர்த்தனமாகச் சொல்லும் சம்பவம் என்று குறிக்கிறார்”.
வால்மீகி ராமாயணத்திலோ ராமன் வேதங்களைக் கற்றுகொண்டு தவம் புரிய முற்பட்ட சம்பூகன் என்ற காட்டுவாசியை கொன்று அழித்தான் என்று ஒரு சம்பவம் வருகிறது.
இதை நாம் இன்னும் பேச வேண்டும் என்றால்
(பிராமணர்கள் வாயிலிருந்தும் (முகம்), அரசர்கள் தோள்களிலிருந்தும் வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் கால்களில் இருந்தும் வந்தனர் என்பது புருஷ சூக்த மந்திரம் ஆகும். இந்த மந்திரம் இவர்கள் அனைவரும் கடவுளின் விராட ஸ்வரூபத்திலுந்து தோன்றினர் என்று சொல்வதிலிருந்து அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல. வாய் மூலம் வேதம் சொல்லிப் பிழைப்பு நடத்துவோர் பிராமணர், தோள்வலி மூலம் அரசாட்சி செய்வோர் க்ஷத்திரியர்கள், தொடைகள், வயிற்றுப் பகுதிக்கு வாழ்வளிப்போர் வணிகர்கள், கால் உழைப்பினால் பணி புரிவோர் சூத்திரர்கள் என்பதும் தெளிவாகும். இந்த உடல் உறுப்பில் ஒன்று இல்லாவிடிலும் ஒருவன் முழு மனிதன் இல்லை. சமுதாயத்தில் இந்த 4 வகையான தொழில் புரிவோர் இல்லாவிடில் அந்த சமுதாயம் இயங்காது என்பதையும் அறியலாம்.)
இது வேத காலத்தில் ,நால் வர்ண சாதிகளின் குல தர்மத்தை ஒழுங்கமைத்துக்கொடுத்த உபதேச நூலே மகாபாரதத்தின் பகுதியாக வரும் பகவத்கீதை என்ற கல்விப்புல பார்வை ஒன்று உண்டு. பகவத் கீதையும் நால் வர்ண சாதியினருக்கு அப்பாற்பட்ட இனக்குழுவினரை கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை; நால் வர்ணத்திற்கு அப்பாற்பட்டவர்களை இந்த உலகில் இருப்பதாகவே அது கருதவில்லை. பகவத் கீதையே பிறப்பாலான சாதியே மனிதனின் சாரம் அதை எந்த வகையிலும் மீற முடியாது என்று மனுசாத்திரத்தின் சட்டங்களை உறுதிப்படுத்துகிறது என்று பகவத் கீதையை வாசிக்கிறார் காயத்ரி ஸ்பிவக். மனுவின் சாத்திரமே ‘பகவான்’ கிருஷ்ணனின் ரகசியம். பழங்குடிகளாலான சமூகத்தில் சொந்த பந்தத்தைக் கொல்வது என்பது பெரும் பாவம். பழங்குடிகளான சமூகம் சாதி சமூகங்களாக மாறும்போது சாதியை அருவமான கருத்தியலாகக் கட்டமைக்கிறது பகவத் கீதை என்று மேலும் எழுதுகிறார் காயத்ரி ஸ்பிவக் Post colonial reason என்ற புத்தகத்தில்.
டி.டி.கோசாம்பியின் Myth and Reality புத்தகத்தில் பழங்குடி இனக்குழுக்கள் ஹெகலிய வரலாற்று முரணியக்கத்தில் சாதிகளாக உறுதிப்பட்டதை பின்பற்றியே தன் வாதத்தினை முன் வைக்கும் காயத்ரி ஸ்பிவக் இந்த முரணியக்க வாதத்தை கச்சா முரணியக்க சிந்தனை (crude dialectics) என்று கவனப்படுத்தவும் தவறவில்லை.
அதாவது ஏற்கனவே நால் வர்ண அமைப்பினால் கெட்டித்தட்டிப்போய் இறுக்கமாகிவிட்ட சாதி அமைப்பினை புதிதான வளர்ச்சி என்று பார்ப்பதை கச்சாவான அணுகுமுறை என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?
நால் வர்ண சாதி, சமூக அமைப்புக்குள் வராதவர்களை உலகில் இருப்பவர்களாகவே கருதாத போது இந்து ஸ்ருதி மூல நூல்கள் அவர்களைப் பற்றிப் பேசும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? நால் வர்ண சாதி சமூக அமைப்புக்குள் வருகின்ற சூத்திரர்களுக்கே வேதத்தைப் படிப்பதோ கேட்பதோ மறுக்கப்பட்டிருக்கும்போது -வேதம் கேட்க விரும்புகிற சூத்திரன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்கிறது மனு நீதி- நால் வர்ணத்தினருக்கு அப்பாற்பட்ட ‘பரதேசிகள்’ ‘சண்டாளர்கள்’ (பழைய அர்த்தத்தில் முறையே ‘வெளி நாட்டவர்’ ‘கலப்பு மணத்தில் பிறந்தோர்) காட்டுவாசிகள், பழங்குடியினர், இதர இனக்குழுவினர் ஆகியோரைப் பற்றி, அவர்களின் சமூக இடம் பற்றி, அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக ஆக்குவது பற்றி இந்து மதத்தின் மூல நூல்கள் எப்படிப் பேசும்?


நாடக கலைஞர்களில் ஒருவரான ரமேஷ் பாரதியின் குரல் அவர் பேசும்போதும் பாடும் போதும் இந்த சமுதாயத்தின் குரலாகவே ஒலிக்கிறது. அத்தனை பலம் அந்த குரலில். கதா பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தனர் அத்தனை கலைஞர்களும். எங்கும் சிறு பிசிறு கூட இல்லை.
வனம் எரியும் காட்சியை நமக்கு காட்சிப்படுத்திய விதம்...
அடர்காட்டின் மரங்கள் பற்றி எரிகின்றன. வன விலங்குகளும் பூர்வ குடிகளும் திக்குத் தெரியாமல் ஓடுகின்றனர். அதன் ஓலம் அரங்கம் முழுதும் மட்டுமல்லாமல் நம் இதயத்தையும் துளைத்து வலியாக பரவுகின்றது. உயிர்ப் பலியின் வேள்வி நம் முன் கேள்வியாக நிற்கின்றது.
ந.முத்துசாமி அவர்களின் ‘காண்டவ வன தகனம் ’என்ற எழுத்துக்கு உயிர் கொடுத்திருக்கும் தோழி பிரசன்னா ராமசாமியை மனம் இறைஞ்சி வாழ்த்துகிறது.
நவீன நாடகத்துறையில் ந.முத்துசாமியும், பிரசன்னா ராமசாமியும் பல சாதனைகள் செய்தவர்கள் என்று அறியும் வேளையில் இந்த நாடகமானது அவர்களுக்கு தனியொரு அடையாளத்தை நிச்சயம் அளிக்கும் என நம்புகிறேன்.
ஓவியர் குருநாதனின் ஓவியங்கள், மேடையின் ஒளிப் பயன்பாடு, பின்னணி இசை என அனைத்தும் நாடகம் தரும் காட்சியனுபவத்தை மிகுதியாக்கின.
விருகம்பாக்கம், ஐயப்பா நகரில் அமைந்துள்ள கூத்துப்பட்டறை அரங்கில் அரங்கேறிய ”காண்டவ வனம்” இன்னமும் கூட எரிந்து கொண்டிருக்கலாம்.
அடர்காட்டின் மரங்கள் பற்றி எரிகின்றன. வன விலங்குகளும் பூர்வ குடிகளும் திக்கு தெரியாமல் ஓடுகின்றனர். அதன் ஓலம் அரங்கும் முழுதும் மட்டுமல்லாமல் நம் இதயத்தையும் துளைத்து உள் சென்று கேள்வி கேட்கிறது. உயிர் பலியின் வேள்வி நம் முன் கேள்வியாக நிற்கிறது.
பதிலளிநீக்குநன்றி
நீக்குபுதிய தகவல், இப்ப தான் கேள்விபடுறேன்
பதிலளிநீக்குநன்றி
நீக்கு