வியாழன், 20 ஏப்ரல், 2017

மீனம்பாக்கம் முதல் பீச் ஸ்டேஷன் வரை


தமிழ் நாட்டின்  முதல் ரயில் பயணம்...


என் பயணத்தின் போது  அந்தப் பெண் அந்தப் பயணப் பெட்டியில் ஏறாமலே இருந்திருக்கலாம்அதுவரை எனது பயணம்  குதூகலமாகத்தான் இருந்தது. அதற்கு முன் யார் யாரோ  அந்தப் பெட்டியில் ஏறினார்கள், கையேந்தினார்கள் பின் இறங்கினார்கள். எல்லாரும் விளிம்பு நிலை அல்லது விளிம்பு நிலை போர்வையை போர்த்தியவர்களாகவும் இருக்கலாம்.

என்னை  யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் என்று பாடலை பாடி  அவர் கையேந்தியபோதுதான்  பார்த்தேன், அவர்  கண் தெரியாதவர். மீனம்பாக்க ஸ்டேஷனில் ஏறிய அந்த முதியவரை நான் பார்த்துக் கொண்டிருப்பது அவருடைய மனக்கண்  பார்த்துவிட்டதோ என்று நினைக்க தோன்றியது. அவரின் குரலை ரசித்து கேட்டேன். கண் தெரியாத  நிலையிலும் எப்படி அவர்  ரயில் ஏறுகிறார்? இறங்குகிறார்? என்ற சிந்தனைவேறு ஒரு பக்கமாக ஓடிக்கொண்டிருந்தது. மலேசியாவிலும் கண் பார்வையை இழந்தவர்கள் தினமும் பயணம் செய்கிறார்கள்.. அவர்கள் பேருந்து ரயில்வண்டி என எல்லா பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்ப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்காக அரசாங்கம் தனி வசதிகளை முறைப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் அம்மாதிரியான சலுகைகளை நான் பார்க்கவில்லை. மேலும், கூட்டிடத்தில் முண்டியடித்து ஏறிவிடும் அளவுக்கெல்லாம் மலேசியர்களுக்கு திறமை போதாது.
பாடிக்கொண்டிருந்த பார்வையிழந்தவருக்காக  எந்த கழிவிரக்கமும் படவில்லை. கவலையளிக்ககூடிய காட்சியாகவும்  நான்  அதை நினைக்கவில்லை

கையேந்துகிறார்கள் என்ற ஒருக்காரணத்திற்காக அவர்களை  பிச்சைக்காரர்கள் எனக்கூறுவது அறமா என்ற கேள்வி பலகாலமாகவே என்னுள் இருந்து வருகிறது. பிச்சை எடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் உழைப்புதானே. நலமுடன்  இருக்கும் ஓர் இளைஞன் பிச்சை எடுக்கிறார் என்றால் வேலைக்கு போய் சம்பாதிக்கலாமே என்ற கேள்வி எழுகிறது.  ஆனால் உடலில் ஊனம் உள்ளவர்களும் இயலாதவர்களும் அவர்களின் சுய முயற்சியில் ரயிலேரி வந்து பயணிகளை களிப்படையச் செய்து பணம் கேட்கிறார்கள் என்றால் அந்த உழைப்பை பிச்சை என்று சொல்வதைதான் நான்  கேவலம் என நினைக்கிறேன்.  அப்படி நினைப்பவர்களின் மனதுதான்  பிச்சை எடுக்க போயிருக்கிறது என்றுகூறவும் தோணுது.

கிண்டியை தாண்டி  நின்ற ஸ்டேஷனில் அந்த கண் தெரியாத பாடகர்  இறங்கிக்கொண்டார். இம்முறை நான் பயணம் செய்த ரயில் பெட்டியில்  திருநங்கை ஒருவள் ஏறினாள். நீல நூல் புடவை அணிந்திருந்தாள். நன்றாக படிய தலைசீவி ஜடை பிண்ணி அதில் கொஞ்சோண்டு கணகாம்பரம் சொறுகியிருந்தாள்.

கூர்முகம். குங்கும் பொட்டில்  அவளைப் பார்க்க கலையாகத்தான் இருந்ததுவண்டியில் ஏறும்போதே இரு கைகளையும் தட்டி தட்டி கையேந்திக்கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும்போது அத்தனை சுத்தமாகவும் அழகாகவும் இருந்தாள். அவள் கையேந்தும்போதுதான் பிச்சை எடுக்கவே ரயிலில் ஏறியிருப்பது தெரிந்தது. நான் பயணம் செய்துக்கொண்டிருந்த  அந்த ரயில் பெட்டியில்  30 பேருக்கு மேல் பயணம் செய்துக்கொண்டிருந்தார்கள். அவள் எல்லாரிடமும் சும்மாவே  கைகளை தட்டி தட்டி கையேந்திக்கொண்டிருந்தாள். யாரும் அவளுக்கு ஒரு பைசாவும் தரவில்லை. அதைப்பற்றிய எந்தக் கவலையும் அவளுக்கு இருப்பதாக காட்டிக்கொள்ளவில்லை. ரயிலின் கதவருகே நின்றுக்கொண்டு அவளாகவே ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தாள். என்ன முணுமுணுக்கிறாள் என்று தெளிவாக விளங்கவில்லை. ஏதாவது பாடலாக இருக்கலாம். அல்லது வேறுஏதாவதாகவும் இருக்கலாம்.  யாரும் அவளைப் பார்க்கிறார்களா என்ற அக்கரையெல்லாம் அவள் கொள்ளவில்லை. திடீரென ஆவேசம் வந்தவள் போல் வசைகளாக கத்த தொடங்கினாள். எட்டிப்பார்த்தேன். கைலியை மடித்துக் கட்டிய இரு ஆண்கள் கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தது பார்க்க முடிந்தது.  இந்த காட்சியிலிருந்து என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவுக்கு அறிய முடிந்தது.

திருநங்கைகளுக்கும் எல்லாருக்கும் கொடுப்பதைப் போல ஒரு வேலை, நியாயமான சம்பளம், அனைத்திற்கும் மேல் அவர்களின் சுயமரியாதையை தீண்டாத மரியாதை ஏன் கொடுப்பதில்லை?  அவர்களை மனிதர்களாக நடத்தின்னாலே  ஏன் பிச்சை எடுக்க வருகிறார்கள்?   ரயிலில் ஓர் ஓரத்தில்  தரையில் அமர்ந்து பத்திரிக்கை வாசித்துக்கொண்டிருந்த ஆடவர் ஒருவர் அரவாணியை நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்து கண் தாழ்த்துவதை நான் பார்த்துவிட்டேன். அவர் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என என் மனம் யோசிக்க தொடங்கியது. இந்த மனது நல்லதாக என்றுதான் யோசித்துள்ளது?  அடுத்த நிறுத்தத்தில் திருநங்கை இறங்கிக்கொள்ள, மிட்டாய் விற்பவர் வண்டியில் ஏறினார். ……

ஒன்று ஐந்து ரூபாய்;  இரண்டு பத்து ரூபாய்  கடலை மிட்டாய், கடலை மிட்டாய் அவர் தன் பாட்டுக்கு குரலை எழுப்பிக்கொண்டிருந்தார். இரண்டு கடலை மிட்டாய்களை வாங்கி சுவைக்க தொடங்கினேன். என் எதிரில்  அமர்ந்துக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் தனக்கும் மிட்டாய் வேண்டும் என கேட்டு அடம்பிடிக்க தொடங்கினார்கள். அவர்களுக்கு முன் உட்கார்ந்திருந்த தம்பதிகள் கையோடு கொண்டு வந்திருந்த இட்டிலி பொட்டலத்தை பிரித்து சாப்பிட தொடங்கினர். குழந்தைகள் அடம்பிடிப்பதை பார்க்க ரொம்ப சங்கடமாக இருந்தது எனக்கு. எனது மிட்டாய்களை கைப்பையில் மறைத்து வைத்தேன்.

அடம்பிடித்த குழந்தைகள் அழுவதை நிறுத்திவிட்டு பௌவத்தொடங்கினர். அப்போதுதான் பார்த்தேன் என் அருகில் அமர்ந்திருந்த ஓர் இளைஞன்  அவர்களை புகைப்படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 'கெனன்' வகை கேமரா அது. நல்ல ரகம்தான். இப்போதெல்லாம் கைத்தொலைப்பேசியில் புகைப்படம் எடுத்தாலே பெரிய மாடல் அளவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்; பெரிய கெமராவை பார்த்ததும் பிள்ளைகளும் தாங்கள் அழகாக படத்தில் விழவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு இந்த காலம் மாறிவிட்டது என நினைத்துக்கொண்டேன்.

நினைப்புகள்தான் எத்தனை எத்தனை கற்பனைகளை கூட்டுது. அதுவும்  எனக்கு சொல்லவே வேணாம்வனத்தில் கட்டற்று ஓடும் காற்றைப்போல. இலைகளில் மோதி கிளைகளை அசைத்து தேவைப்பட்டால் மரங்களையும் அசைத்துப்பார்ப்பதைப்போல. என் சிந்தனைகளும் நினைப்புகளும் அதுவாகவே ஓடிக்கொண்டிக்கும்உண்மையோ அல்லது புனைவோ  என்னைச் சுற்றி நடக்கும் ஏதோ ஒன்றைப்பற்றிய சிந்தனை ஏற்படுவது ஒரு வகை மன நோயா என்றும் சிந்தித்திருக்கிறேன். பிறருக்கு இப்படி தோன்றாதா? அல்லது எனக்கு  இது அதீதமாக நடக்கிறதா?

இது குறித்து முகநூலில் ஒரு பின்னூட்டம் போட்டால் என்ன? இரவுபோல இது குறித்து  எழுத வேண்டும் என்று எனக்கு நானே பேசிக்கொண்டேன் . அந்த இளைஞன் வளைத்து வளைத்து குழந்தைகளை மட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதை கவனித்தேன். தன் அப்பாவின் மேல் சாய்ந்தபடி ஒரு காலை தூக்கி சீட்டில் வைத்த நிலையில் அதுவரை  மிட்டாய் கேட்டு அழுதுக்கொண்டிருந்த சிறுவன் சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்தான்குழந்தைகள் சிரிக்கும்போது எத்தனை அழகாக இருக்கிறார்கள்அந்தக்கறுப்பு முகம் கறுப்பு வைரம்போல ஜொலிக்க தொடங்கிய மர்மம்  அந்த புகைப்படக்கருவியிலா உள்ளது?  புகைப்படம் எடுத்த இளைஞன் தான் எடுத்த படத்தை சரி பார்த்துக்கொண்டிருந்தான். இந்த இளைஞனை ஒரு மாபெரும் கலைஞனைப் போல அங்கிருந்த பயணிகள் வேடிக்கை பார்க்க தொடங்கினர். அவன் தொடர்ந்து அங்கிருந்த மற்ற குழந்தைகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

கோடம்பாக்கம்  நிறுத்தத்தில் வண்டி நின்றபோது பெரும் கூட்டம்  வண்டியில் ஏறியது. புகைப்பட இளைஞன் மீண்டும் என் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டான். நான் அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தேன். சம்பரதாயத்திற்கு  சிரித்து விட்டு மீண்டும் புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கினான். அவ்வப்போது படங்களைப் பார்த்து அவன் தானே சிரித்தும் கொண்டான்.  மனிதர்கள் எத்தனை விதமான உணர்ச்சிகளை வெளிபடுத்துகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். ஒரு அம்மா உட்கார இடமில்லாமல் கீழே சம்மணம் இட்டு உட்கார்ந்தார். வெளியிலிருந்து வந்த காற்று அவர் சேலையின் முந்தானையை பறக்கவிட, அதை இழுத்து அடக்கி மடியில் சொறுகி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார். அவளுடைய சிந்தனையில் நுழைய மூயற்சித்தேன். பின் வேண்டாம் என திரும்பிவிட்டேன்.

இந்தப் பெண்கள் ஏன்  வழுக்கட்டாயமாக சேலையையே உடுத்துகிறார்கள் என்ற கேள்வி திடீரென எழுந்தது. ஒரு டாப்ஸும் காற்சட்டையும் அணிந்துகொண்டால் அவர்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கும். பலநூற்றாண்டுகளாக உடுத்தி பழகிவிட்டார்கள். அவர்களுக்கு எந்த சிரமமும் தெரியபோறது இல்லைதான். பின்கழுத்தும் முதுகுப்பகுதியும், இடையும் அதன் வழியே பார்க்கும்போது மறைவில் இருக்கும் மார்பையும்  இந்த சேலை எத்தனை எடுப்பாக காட்டுகிறதுசேலையில் பெண்கள் எப்பவும் அழகுதான். ஆனால், இயற்கை  உபாதைகளை கழிக்க போகும்போதும், அவசரத்திற்கு கிளம்பும் போதும் இன்னும் பிற விவகாரங்களில் இந்த சேலை படுத்தும் பாடு இருக்கே.! அதுவும் என்னைப்போல ஆடிக்கும் அமாவாசைக்கும் ஒரு சம்பரதாயத்திற்காக சேலையை உடுத்தும் பெண்களிடம் கேட்க வேண்டும் இந்த சேலை படுத்தும் பாட்டைஇப்போது வண்டி  நுங்கம்பாக்கத்தில் வண்டி நின்றது. நான் பார்க் ஸ்டேஷனில்  இறங்க வேண்டும். இன்னும் இரண்டு நிறுத்தங்கள் அதற்கு இருந்தன.

அப்போதுதான் அவள் ஏறினாள். அவள் ஏறாமல் இருந்திருந்தால் அது தொடர்பாக இன்று இவ்வளவையும் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். வேண்டும் எனும் இடத்தில் எதுவும் வந்து சேர்வதில்லை. அங்கு தோல்வியே வெற்றியாக அமர்ந்துவிடுகிறது. ஆனால், போதும் என்ற இடத்தில் குவிந்துக்கொண்டே இருக்கிறது. அங்கே வெற்றி சில சமயம் தோல்வியாக வரையறுக்கப்படுகிறது.


அவள்சேலையை  இடுப்பில் இழுத்து சொறுகியிருந்தாள்முந்தானையை சும்மா கடமைக்காக மேலேபோட்டிருந்தாள்.அழுக்கேறுயிருந்த சேலை அது. அதன் அசல் நிறம் என்ன என்றே யூகிக்க முடியவில்லை. மார்பு கச்சையை அணியாமல் ரவிக்கை போட்டிருக்க வேண்டும். காம்பு முட்டிக்கொண்டு நின்றது. அவளின் அங்குளின் வியர்வை  கசிந்து நவிக்கையை நனைத்து விட்டிருந்ததுகாலில் செறுப்பு இல்லை. பரட்டையான தலையை  தூக்கி முடிந்திருந்தால். வாயில் வெற்றிலைபாக்கு போட்டிருந்தாள் போலவாய் பற்கள் எல்லாம்  சிவந்திருந்தது.

இடுப்பில் கைக்குழந்தை ஒன்றை வைத்திருந்தாள். குழந்தை அணிந்திருந்த சட்டையும்  அழுக்காக இருந்தது. ஆனால், அவளுக்கும் அந்தக் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. குழந்தைக்கு வெளுமையான  தோல். நல்ல பொசுபொசு என்று பஞ்சு போல மிக அழகான பெண் குழந்தை. இன்னும் தவழும் நிலையில்கூட இல்லாத குழந்தை. காற்சட்டை அணியாமல் இடுப்புக்கு கீழ் எந்த மறைவும்  இல்லாமல் தன் குறி வெளியில் தெரிகிறதே என்ற கவலையற்ற பால்மனம் மாறாமல்   விளையாடிக்கொண்டிருந்ததுஇவர்களுக்கு பின்னால் சிறுவன் ஒருவன் கூடவே வந்தான். ஏழு வயது இருக்கலாம் அவனுக்கு.


குழந்தையோடு தரையில் உட்கார்ந்தவள். தனது பையிலிருந்து ஒரு சின்ன வளையத்தை எடுத்து தூரப்போட்டாள். ரயிலே அதிர்ந்துவிழும் சத்தத்தோடு அந்த வளையம் போய் விழுந்ததுமீண்டும் பைக்குள் கைவிட்டு துளாவி  ஒரு பாத்திரத்தை எடுத்து கவுத்துப் போட்டுக்கொண்டால். எதையும் அவள் அமைதியாக செய்யவில்லை. எல்லாம் 'டமால்' 'டுமீல்' என சத்தத்தோடே நடந்தது. பயணிகளை அவள் வசம் திசைத்திருப்புவதற்காக அவள் மேற்கொள்ளும்  யுக்தியாகக்கூட அது இருக்கலாம். சற்றும் தாமதிக்காமல் ஒரு குச்சியை எடுத்து பாத்திரத்தை பலமாக தட்ட தொடங்கினால். அது ராகமும் மில்லாத தாளமும் இல்லாத ஒரு சத்தத்தை ஏழுப்பியது. நான் அந்தக் குழந்தையையே பார்த்தபடி இருந்தேன். குழந்தையிடம் எந்த மாற்றமும் இல்லை. குழந்தைக்கு பழகிய சத்தமாக  அது இருக்கலாம்குழந்தையின் கண்கள் சத்தத்திற்கு ஏற்றமாதிரி தாளமிடுவதை பார்த்தக்கொண்டிருந்தேன். அதன் சின்ன இமையில் எழும் ஓசை எனக்கு மட்டும் கேட்கக்கூடியதாக இருந்தது.  என்ன ரகசியம் என்று தெரியவில்லை. குழந்தையின்  சின்ன உதடு  அசைவதை பார்க்கும்போது அது ஏதோ பேசிக்கொண்டிருப்பது விளங்கியது. ஆனால், அதன் மொழி  எனக்கு புரிவதாக இல்லை.

சிறுவனைப்பார்த்து அந்த பெண் கட்டளையிட்டாள். அவன் எழுந்துவந்து தூக்கியெரிந்த  அந்தச் சின்ன வளையத்தை தலையில் மாட்டி உடம்பை குறுக்கும் நெடுக்குமாக வளைத்து குனிந்து நிமிர்ந்து கால்வழியே வலையத்தை வெளியில் எடுத்தான். அது  மெஜிக் கலைக்கு ஒப்பான ஒரு வித்தையாக இருந்தது. சிறுவன் அதை எந்த ரசனையுமில்லாமல் செய்துக்கொண்டிருந்தான். இப்போது மீண்டும் குழந்தையை பார்த்தேன் அது கைகால்களை வேகமாக அசைத்தபடி இருந்தது. சிறுவன் ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு அதில் நீளமாக தொங்கிக்கொடிருந்த  மணியை தலையை ஆட்டி சுழற்றிவிட்டுக்கொண்டிருந்தான். இதைச் செய்யும்போது அவன் முகம் சிரிக்கிறதை கவனித்தேன். அவன் தலை சுற்றும்போது இந்த உலகத்தையே அவன் சுற்றிவைப்பதாக நினைத்திருக்கலாம். தலையை சுற்றி அவன் நிற்கும்போது அவனைச் சுற்றி ஓடும் மனிதக்கூட்டத்தை அவன் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தான்.


இந்த உலகத்தையும் மனிதர்களையும் கடவுளையும் நமக்கு வேண்டியபடி சுற்றவைக்கும் கலை சிலருக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது. இப்போது அந்தக் கலை இந்த ஏழு வயது சிறுவனிடத்தில் இருக்கிறது. நான் மீண்டும் குழந்தையைப் பார்த்தேன். உன்னையும் மேஜிக் செய்ய பழகுவார்களா கண்ணே என கேட்கத் தோன்றியது. கவுத்துப் போட்டு சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த பாத்திரத்தை ஒரு கையிலும் குழந்தையை மறுகையிலும் வாங்கியச் சிறுவன் பயணிகளிடம் கையேந்த தொடங்கினான். இந்தக் காட்சியை கண் கொள்ளாக்காட்சியாக புகைப்பட இளைஞன் பலகோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான். குழந்தையை சிறுவன் தூக்க முடியாமல் தாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. எங்கே கீழே போட்டு விடுவானோ என்ற பயம் வேறு என்னை  சம்பந்தமில்லாமல் தொற்றிக்கொண்டிருந்தது.

பாத்திரத்தில் வாங்கிய சில்லரையை கீழே கொட்டிவிடக்கூடாது என்று காட்டும் அக்கரையைச் குழந்தையை  கீழே போட்டுவிடக்கூடாது என்பதில் சிறுவன் காட்டுவதாக  தெரியவில்லை.  200 ரூபாய் தருகிறேன் குட்டியை என்னிடம் கொடுத்துவிடுவியா என்ற பரிகாசம் செய்த ஒரு ஆள் எந்தப் பைசாவும் அந்தச்  சிறுவனுக்கு தராதது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இவர்கள் இப்படிப் பிச்சை எடுத்தே நாளுக்கு இரண்ராயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா என  பக்கத்தில் உள்ளவரிடம் வியாக்கியானம் பேசிக்கொண்டிருந்தார் அந்த ஆள்சிறுவன் என்னிடம் வந்தான். நான்  மலேசிய பணத்தின் 10 வெள்ளியை அவன் கையில் திணித்துவிட்டு குழந்தையை வாங்கிக்கொண்டேன். அதை உச்சி முகர்ந்தேன்.கன்னத்தில் முத்தமிட்டேன்.அழகி என்றேன்.அதற்குள் சிறுவன் மற்றவரிடம் பணம் வாங்க சென்று விட்டான்.


குழந்தையை என் மார்போடு அணைத்துக்கொண்டேன். புகைப்படக்கார இளைஞன்  அதை புகைப்படமெடுக்க வந்தான். வேணாம் என தடுத்ததும் அவன் அமைதியாக உட்கார்ந்து விட்டான்.நீ என்னோட வருகிறாயா கண்ணே?அம்மா உன்னை நல்லா பார்த்துக்கொள்கிறேன் என்றேன். குழந்தை என்னைப்பார்த்து சிரித்தது. மழலையில் ஏதோ எதையோ முணுமுணுக்கவும் செய்தது.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக