ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

உலக புத்தக தினத்தின் வாசிப்பு

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம்.  இத்தாலி அதிபர் முசோலினி கையில் குண்டுபட்டு அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மயக்க மருந்து இல்லைமுசோலினி சொன்னாராம்.. என்னிடம் ஒரு புத்தகம் உள்ளது. நான் அதை வாசிக்கிறேன். நீங்கள் அறுவை சிகிச்சையை துவங்குங்கள். வாசிக்கும்போது எனக்கு வலி தெரியாது என்றாராம்.
 வாசிப்பது ஒருவருக்கு வலி தெரியாமல் செய்யுமா என உறுதியாக தெரியவில்லை. ஆனால், என்வரையில் பல புத்தகங்கள் எனக்கு  வலியைத்தான் கொடுத்திருக்கிறது. என்னை பாதித்த பல புத்தகங்களை நான் பதிவு செய்திருந்தாலும், சில புத்தகங்களை நான் வாசித்துவிட்டு கடந்து சென்றிருக்கிறேன். அவை வலி ஏற்படுத்தாத புத்தகங்கள் என்று சொல்லிவிட முடியாது.  சில நேரம் மறுவாசிப்புக்காக காத்துகிடப்பவையாக கூட அவை இருக்கலாம்.

நான்  12 வயதில் வாசித்த அகிலனின்  'நெஞ்சில் அலைகள்' இப்போதும் அதன் சில ஞாபகங்கள்  நெஞ்சில் அலையடிப்பதுண்டு. 'நீலக் கடலலையே - உனது நெஞ்சினலைகலடி' என்ற வரி நான்   அலைகளை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் தன்னிச்சையாக  அவ்வரிகள் என்னில் பாடி செல்வதுண்டு. அந்த வயதின் வாசிப்பும் அதில் ஏற்படும் மனதடுமாற்றமும்  எந்த வயதிலும் கிடைக்காது என்றே தோன்றுகிறது.
இந்த 4 மாத இடைவெளியில் நான் வாசித்த புத்தகங்கள் குறைவுதான். இடையிடையில் சில சிற்றிதழ்களும் என் நேரத்தை எடுத்துக்கொள்கின்றன.
இந்த 4 மாத இடைவெளியில் நான் வாசித்த புத்தகங்களில் 8 புத்தகங்களை இன்றைய நாளில் பதிவு செய்ய தோன்றியதுநான் வாசித்த புத்தகங்களை என் அகப்பக்கத்தை வாசிக்கும் உங்களையும் வாசிக்க சொல்வதற்காக  அல்ல.  இது முழுக்க எனக்கானது

எனக்கு சொற்களை மிகவும் பிடிக்கும்.  பிரபஞ்சம் அனுக்களால் அல்ல. சொற்களால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறதுஎன்கிறார் பாப்லோ நேருடாஎனக்கும் சொற்களை மிகவும் பிடிக்கும். அவை வாய்வழி வருவதைவிட மௌனத்தில் வர வேண்டும். என் மௌனம் முழுவதையும் புத்தகங்களில் அடைத்து வைக்கிறேன்வாசிக்கும் போது  என்னுடன் மௌனமாக பேசும் புத்தகங்களின் சொற்கள் தன் பிரபஞ்சத்தை எனக்கு காட்டுகின்றன.  என் பிரபஞ்சம் புத்தகங்களால் ஆனதுசில சமயம் என் எழுத்துகளாகவும் ஆகிறது.
மோக முள்:  

தி.ஜானகிராமனின்  மோக முள்  குறித்து நான் புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை.  நிறைய பேசி கொண்டாடப்பட்ட  விவாதிக்கப்பட்ட சர்ச்சையில் சிக்கப்பட்ட  இந்த நாவலை குறித்து எழுதி விட்டார்கள்.  சுடலை காக்கிற சாம்பசிவன் போட்ட கணக்கா? (.380)  ல் வரும் இந்த வரியை போன்றே  விதியின் விளையாட்டை பல இடங்களில் காணலாம்பாபு  என்ற இளைஞனை,  தனித்து ஒரு பாத்திரமாக  மோக முள்ளில் காண முடியாது. மோகத்தின் முள் எத்தனை கூரானது என்றும் எத்தனை வலி நிறைந்தது என்றும் வாசிக்க தொடங்கிய சில பக்கங்களிலேயே உணரமுடியும்.  இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1956 ஆம் ஆண்டு வெளிவந்த வேளையில் காலச்சுவடு பதிப்பகம்  2012 ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்தது.
என் கதை
கமலா தாஸின் என் கதை  நேர்மையான எழுத்தா இல்லையா என்ற ஆராய்ச்சியெல்லாம் ஒதுக்கி வைத்து பார்த்தால் அந்த எழுத்தின் நேர்மையை அறிய முடியும். அந்த சொற்களின் நேர்மையை ஒரு பெண்ணாக என்னால் உணர முடிந்தது.  ஒரு வெளிப்படையான புத்தகம் என்றே எனக்கு என் கதையை சொல்ல தோணுகிறதுகமலா தாஸ் காதலையும் சில இடங்களில் ஆண்களையும் கொண்டாடுகிறார்அதே வேளையில் அவரின் ஏமாற்றம் மற்றும் விரத்தியையும் பதிவு செய்கிறார்.  நேசிக்க தெரிந்த ஆண்மகனை நான் இன்றுவரை கண்டதில்லை (.25)  என்று கூறும் கமலா,  கார்லோவின் காதலை  மேன்மையாக பல இடங்களில் பேசுகிறார்.  காலச்சுவடு  பதிப்பகம் 2016-ஆம் ஆண்டு இந்த புத்தகத்தை பதிப்பித்தது


சீனப் பெண்கள் 
சொல்லப்படாத கதை

சீனாவின் பிரபலமான வானொலி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்த
சின்ரன் என்பவர் எழுதிய இந்த புத்தகத்தை தமிழில் ஜி.விஜயபத்மா மொழிபெயர்த்திருக்கிறார்சின்ரன் சந்தித்த ஒடுக்கப்பட்ட  பெண்களின் வாக்குமூலங்கள் தொகுப்பாக இந்த புத்தகம் சாட்சியம் கூறுகிறது.
அதற்கு நல்ல உதாரணமாக இந்த வரியை சொல்லலாம். சீனாவில் ஒரு பெண்ணை அணுகி அவளை மனம்விட்டு பேச வைத்து  பேட்டி எடுப்பதென்பது பெண்களை அவர்களின் உடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்கச் சொல்லி கேட்பதை போல. இதனால் சீனாப் பெண்களை குறித்த என் ஆராய்ச்சிக்கு பலவித நுட்பமான வழிமுறைகளை கையாள வேண்டிய தேவையிருந்தது என்கிறார் சின்ரன் . 22

இந்த புத்தகத்தில் ஜிங்க்யி என்பவரின் காதல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனோ அது அத்தனை உருக்கம் நிறைந்த கதையாக எனக்கு இருக்கிறது. 45 வருட ஒரு பெண்ணின் காத்திருப்பு என்பது வனவாசத்தை விட கொடியது இல்லையா? சின்ரன் அவரை சந்திக்க செல்லும் காட்சிகளின் பதிவு மிக அழகுஎதிர் பதிப்பகம் பதிப்பித்திருக்கும்  இந்த புத்தகம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது
கறுப்பு நாய்க்குட்டி
ஜீ.முருகன் எழுதியிருக்கும் சிறுகதைகள் தொகுப்புக்கு கறுப்பு நாய்க்குட்டி என பெயர் வைத்திருக்கிறார்.
மொத்தம் 14 கதைகள் கொண்ட அந்த தொகுப்பில் துயரமும் வலியும் அர்ப்பணிப்பும் ஏமாற்றமும் வஞ்ச்கமும் காதலுமாக மனித உளவியலை பேசுகிறது. சில கதைகள் மிக நெருக்கமாக நம் மனதிற்கு தோன்றுகிறது. ஜீ.முருகன் கதைகளில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம் கதைகளுக்கு அவர் வைக்கும் தலைப்புகள்தான். இந்த தொகுப்பின் கடைசி கதையின் தலைப்பு 'பூனை ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? காலச்சுவடு  பதிப்பகம் 2002 ஆம் ஆண்டு இந்த புத்தகத்தை வெளியீடு செய்தது


அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்

 13 நாடுகளைச் சேர்ந்த கருப்பு எழுத்தாளர்களின் கவிதை, சிறுகதை , கட்டுரை, நாடகம் என ஒரு கதம்பமாக தொடுக்கப்பட்ட்துதான் இந்த புத்தகம். தமிழில் இந்திரன் மொழிபெயர்த்திருக்கிறார். 1980 களில் தமிழ் எழுத்தை திசை திரும்பிய மொழிபெயர்ப்பு என இந்த புத்தகத்திலேயே ஒரு குறிப்பு இருக்கிறது.
லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் எழுதிய இந்த கவிதை எந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையாகும்.



கறுப்பு இயேசுநாதர்

இயேசுவானவர்
ஒரு கருப்பனாக திரும்பி வருவாரானால்

அது நல்லதல்ல
.
அவர் சென்று பிரார்த்தனை செய்ய முடியாத தேவாலயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன
.
எவ்வளவு புனிதப் படுத்தப்பட்டாலும்

நீக்க்ரோக்களுக்கு

அங்கு வாயில்கள்மறுக்கப்படும்
.
அங்கே இனம்தான் பெரியதே தவிர

சமயம் அல்ல
.
ஆனால்

இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்
.
இயேசுவே
!
நீர்

நிச்சயமாக

மீண்டும்

சிலுவையில் அறையப்படுவீர்கள்.

இதன் முதல் தொகுதி 1982 ஆம் ஆண்டு வெளிவந்த வேளையில் மறுபிரதி உயிர்மை பதிப்பகத்தால் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
நெல்சன் மண்டேலா
அவனுடைய வாழ்க்கை
அவரது தாக்கம்
அவரது மரபு
இந்த புத்தகத்தை அவர் இறந்த பின்புதான் வாங்கினேன். பொதுவாக நான் ஆங்கில புத்தகங்களை வாங்குவதில்லை. எனக்கு அதில் அவ்வளவாக புரிந்துகொள்ளும் திறன் இல்லாததால் மொழிபெயர்ப்பு புத்தகங்களையே தேர்வு செய்து கொள்வேன். ஆனால், இந்த புத்தகம் மிக எளிமையான மொழி கொண்டது.
'Many years ago, when I was a boy brought up in my village in the Transkei, I listened to the elders of the tribe telling stories about the good old days, before the arrival of the white man. Then our people lived peacefully, under the democratic rule of their kings and their amapakati, and moved freely and confidently up and down the country without let or hindrance."
- 1962 நீதிமன்ற அறிக்கை
இப்படி தொடங்கும் புத்தகம் அவரின் பிறப்பின் சர்சையிலிருந்து தொடங்குகிறது. max du preez  என்ற பத்திரிகையாளர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். முன்னதாக அவர் நெல்சன் மண்டேலாவை 1990 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு 5 நாள் இருக்கும்போது சந்தித்து பின் அவரை மீண்டும் சந்திப்பதற்கான அனுமதியை பெற்று வந்ததாக குறிப்பிடுகிறார். பல அறிய புகைப்படங்கள், மண்டேலாவின் அறிக்கைகள் வாக்குமூலங்கள் வரலாறு என மிக சுவாரஸ்யமாக அவரோடு பயணிக்க வைக்கிறது இந்த புத்தகம். ROUGH GUIDES பதிப்பகம் 2011 ஆம் ஆண்டு இந்த புத்தகத்தை கொண்டு வந்தது. 
சமணமும் தமிழும்

மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய இந்த புத்தகம் வெளியீடு செய்ய அவருக்கு  பதினான்கு ஆண்டுகள் ஆயின. எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், ஊழ் இதனை வெளிவராமல் செய்துவிட்டது என அவரே குறிப்பிட்டுள்ளார். மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும்   இருக்கும் சமண சமய வரலாற்றையும், சரித்திரத்தையும் மிக எளிமையாக கொடுத்திருக்கிறார். சில இடங்களில் வரலாற்று குழப்பங்கள் இருந்தாலும் சமணத்தை அறிய விரும்புவர்களுக்கு இது முக்கியமான வரலாற்று ஆவணம்தான். 

திருடன் மணியன்பிள்ளை 
கேரள போலீஸாரின்  விழி பிதுங்கவைத்த  பலே கில்லாடி  திருடர் மணியன் பிள்ளையின் சுயசரிதைத்தான் இந்த புத்தகம். அவர் சொல்லச் சொல்ல மலையாளத்தில் ஜி.ஆர்.இந்துகோபன்  ‘தஷ்கரன் மணியம்பிள்ளையின் ஆத்ம கதைஎன்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அதை நமக்கு குளச்சல் மு.யூசுப் தமிழில் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார். முதல் திருடு செய்ததில்  தொடங்கி மிகசுவாரஸ்யமாக தன் வரலாற்றை கூறியிருக்கிறார் மணியன்பிள்ளை.

இந்தப் புத்தகத்தை உங்களால் சுவாரஸ்யமாக வாசிக்க முடியும். காரணம், நீங்கள் சட்டத்தின்கண்களில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆகவேதான் சில இடங்களில் உங்களால் சிரிக்கவும் முடிகிறது. எனுடைய கண்ணிரின் உப்பு கலந்த ஒரு கடல் இந்தப் புத்தகம். செய்துத் தீர்த்த பாவங்களின் ஆகமொத்த சாரம். ஒரு திருடனை ஊரிலோ வீட்டிலோ யாருமே வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
" என்ற வரியை வாசிக்கும் போது ஏதோ ஒரு வகை நெருடல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.இந்த புத்தகத்தை காலச்சுவடு  பதிப்பகம் வெளியீடு செய்திருக்கிறது.


ஜி வாங்கி ஜி-யின் பிரபல வரி ஒன்று உள்ளது...
நான் ஒரு மனிதன். வண்ணத்துப்பூட்சியாக உருமாறியதாக கனவு காண்கிறேன். அல்லது, நான் ஒரு வண்ணத்துப்பூட்சி  மனிதனாக உருமாறியதாக கனவு கண்டு  கொண்டிருக்கிறேனா? எனக்கு தெரியாது.

வாசிப்பு என்பது  என் வரையில் அப்படியாகத்தான் உள்ளது.
 

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக