ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

வரலாற்றை தேடி 3

பாண்டிசெரிக்கு பயணம் என்றால் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்  குதூகலம்தான். ஆண்களின் குதூகலத்திற்கு பெருவாரியாக  ஒரே காரணம்தான் இருக்க முடியும். பெண்களுக்கு அப்படி அல்ல. பெண்களுக்கு அப்படி என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பவர்கள் பதிலையும் கண்டு பிடித்து கொள்ளுங்கள்.

பாண்டிசேரிக்கு நான் இரண்டாவது முறையாக சென்றாலும் இந்த முறைதான் சில இடங்களை சுற்றி பார்ப்பதற்கான வாய்ப்பு அமைந்திருந்தது. என்   பாண்டிசேரி பயணத்திற்கு  நண்பர் பாலா பொறுப்பெடுத்திருந்தார். நண்பர் பாலா பாண்டிசேரியில் பிறந்து வளர்ந்தவர். ஓவியம், பூ பந்து விளையாட்டு,  என கலைகளோடு பயணிப்பவர். மிக பாதுகாப்பாகவும் அதே வேளையில் திருப்தியாகவும் பயணத்தை எனக்காக வடிவமைத்திருந்தார்.

காலை 8 மணியளவில்  பாண்டிசேரியில் இறங்கும்போது சூரிய உதயம் என்னை சுள்ளென சூடாகவே  வரவேற்றது. 'பாண்டிசேரி  பயணிகள் இல்லத்தில்' தங்குவதற்கு   பாலா ஏற்பாடு செய்திருந்தார். பாண்டிசேரி பயணிகள் இல்லத்திற்கு திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே சென்று விடலாம். முந்நூறு ரூபாய் தான் ஒரு நாளைக்கான விடுதி  கட்டணம். முந்நூறு ரூபாய்க்கு என்ன வசதியோ அந்த சலுகையிலேயே பயணிகள் இல்லம் பராமரிப்பும்  இருந்தது. அமானுஷ்ய திரைப்படம் எடுக்கலாம் என்றால் தாராளமாக பாண்டிசேரி  பயணிகள் இல்லத்தில் எடுக்கலாம். இப்படி கூறுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள  ஒரு முறை அங்கு தங்கி பார்க்கவும். என் ஒருத்திக்கு என்பதாலும் பட்ஜெட் முறையில் நான் பயணித்து கொண்டிருப்பதாலும் அந்த குறைந்த  விலைக்கு வேறு பாதுகாப்பான இடம் கிடைக்காது என்பதாலும் எனக்கு அதுவே சௌகரியமாக இருந்தது. என்  முகநூல் தோழர் செந்தமிழன் சக்திவேல் என்பவர்  அந்த இல்லத்தில் பணி புரிகிறார் என்பதும் அங்கு போன பிறகுதான் தெரிந்தது.
 
தொடக்கமாக பாலா என்னை பாண்டிசேரியின் முதுகெலும்பாக இருக்கும்  ஆரோவிலுக்கு அழைத்து சென்றார். ஸ்ரீ அரவிந்தர் கழகத்தினரால் 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆரோவில் நகர திட்டம், 124  நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்களின் பிரதிநிதித்துவ முயற்சியால் சாத்தியப்படட்து. மிர்ரா அல்பாஸ்ஸா என்பவர் தொடங்கிய இந்த திட்டம் உலகளவில் மக்கள் பார்வைக்கு சென்றதன் விரிவாக்கத்தின் பலன், இன்று அறுவடையாகிக்கொண்டிருக்கிறது. மிர்ரா அல்பாஸ்ஸாவை 'அன்னை' என்று குறிப்பிடுகிறார்கள். மாத்ரிமந்திர் என்று குறிப்பிடப்படும் தியான மண்டபம் பார்ப்பதற்கே அத்தனை பொலிவாகவும் எழிலாகவும் இருக்கிறது. அதை பார்த்து கெண்டே சிறிது நேரம் நானும் பாலாவும் இளைப்பாறி கொண்டிருந்தோம்.   அதனுள் சென்று தியானம் செய்ய  முதல் நாளே பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். ஆரோவிலுக்கு சென்று காலாரா நடந்து வந்தாலே மனதிற்கு பெரிய நிம்மதி கிடைக்கிறது.

ஆரோவில்லில் என் கவனத்தை ஈர்த்த ஆலமரத்தைப் பற்றி சொல்ல வேண்டும். அந்த ஆலமரத்தின்   முதிர்ச்சி பல விழுதுகளிலிருந்து வேர் விட்டு அவை பல மரங்களாகி நிழல் கொடுத்தபடி இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் இளைப்பாற இருக்கை அமைத்திருக்கிறார்கள். சடை சடையாக விழுதுகள். அவற்றிற்கு தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது என்ற கேள்வி எழுந்தது எனக்கு . பல பேர் தஞ்சம் அடைந்திருக்கும் ஆரோவில்லில் மரத்திற்கு தண்ணீர் வார்ப்பதில் கொடை இல்லாமலா போயிருக்கும்? ஆரோவில் முழுக்க அத்தனை சுத்தமாக பராமரிக்கிறார்கள் . ஒரு குப்பையையும் பார்க்க முடியவில்லை. மரங்கள், பூ செடிகள், அதன் பெயரோடும் சிறிய குறிப்போடும் அந்த வளாகம் முழுக்க  இருக்கிறது.  குடிப்பதற்கு சுகாதாரமான இலவச தண்ணீர் வசதியும், இலவச  கழிப்பறை வசதியும்  செய்து கொடுத்திருக்கிறார்கள். 
 
இன்று 35 நாடுகளை சேந்த கிட்டதட்ட 2000 பேர் அங்கு வசிக்கின்றனர். தமிழ்நாட்டுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஒரு சமுதாயம் அது. இப்படி ஆரோவில் பற்றி சொல்வதற்கு நிறையே இருக்கிறது. ஆரோவில் நினைவாக எதாவது வாங்க நினைத்தேன். தரமான  பொருள்களுக்கு எப்பவும் விலை அதிகம் என்பதால் என்னால் எதையும் வாங்க முடியவில்லை. ஆனால், சுனாமி பேரிடரின் பொது உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்படட நிதி உதவி  இன்னும் இருக்கிறது. 50 ரூபாய் உண்டியலில் போட்டு கையில் செய்யப்படட அந்த சின்ன பொம்மையை எடுத்து கொண்டேன். ஆரோவில்  விடைகொடுத்து அனுப்பிய அந்த சின்ன பொம்மை இன்று மீண்டும் மீண்டும் சில நினைவுகளை பேசியபடி என் அறையில் இருக்கிறது.
 

1 கருத்து: