செவ்வாய், 2 மே, 2017

வரலாற்றை தேடி 4

''யோகி பாண்டிசேரியில் நீங்கள் எங்கேயாவது போவதற்கான திட்டம் இருக்கிறதா?''  நண்பர் பாலா இப்படி கேட்டதும் கொஞ்சம் கூட  யோசிக்காமல் நான் சொன்ன இடம் 'பாய் சூப் கடை' தான். நான் கடந்த ஆண்டு  பாண்டிசேரிக்கு நண்பர்களோடு போயிருந்த போது, முதன் முதலாக பாலா அங்கு அழைத்து சென்றார்.

தள்ளுவண்டியில் சாலை ஓரமாக மாலையிலிருந்து இரவுவரை  கடை திறக்கிறார்கள்கோழி சூப், ஆட்டு கால் சூப் மற்றும்  சமோசா மட்டுமே அங்கு விற்பனை செய்யப்படுகிறது. சமோசாவை கண்முன்னே ஒருவர் மடித்து மடித்து வைக்க ஒருவர்  பொரித்து எடுக்கிறார். ஒருவர் டோக்கன் வாங்குகிறார். ஒருவர் சூப் ஊற்றி தருகிறார். ஒருவர் பாத்திரங்களை சேகரித்து கழுவுகிறார். இப்படி அவர் அவர் வேலையை பம்பரம்போல பொறுப்பாக  அவர் அவர் செய்கிறார்கள்.

கடைக்கு ஆட்கள்  வந்த வண்ணமே இருக்கிறார்கள். இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் காத்திருப்பது இல்லை. உணவும் வியாபாரமும் சுடச் சுட ஆவி பறக்க நடக்கிறது. தெரு விளக்கின் துணையோடு ருசியை பருகுவதை இப்பொது  நினைத்தாலும் நாவில் தித்திக்கிறது. எனக்கு அங்கு போகணும் என்றதும் பாலா புன்னகைத்தபடி சரி என்றார். ஒரு வருடத்திற்கு முன்பு சுவைத்த அதே சுவை. இன்னும் மாறவே இல்லை. இரண்டு நாட்கள் தொடர்ந்து சென்றேன். கடைக்காரர் ஒருவரிடம்கடைக்கு பெயர் என்ன என்றேன்பெயரெல்லாம் இல்லயம்மா. 'பாய் சூப் கடை' என்பது மட்டும்தான் அடையாளம். எங்கள் கடையை  ஆங்கிலத்தில் ஒருவர் இணையத்தில் எழுதியிருக்கிறார். எங்கள் கடை பிரபலம்தான் என்று சிரித்தார் அவர்விளம்பரமே இல்லாமல் அதன் தரத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமே வாடிக்கையாளர்கள் தேடி வருகிறார்கள். நானும் தோழி பல்லவி மற்றும் நண்பர் பாலாவும் ஆளுக்கு இரண்டு சமோசா, கோழி சூப்பை வாங்கி சுவைத்தோம்.
பின் ஆட்டுக்கால் சுப்பையும் சுவைத்தோம்.  பாண்டிசேரி செல்பவர்கள் ஒருமுறை 'பாய் சூப் கடையில்  சூப் மற்றும் சமோசாவை சுவை பார்த்துவிடுங்கள்.


'பாய் சூப் கடை'


தொடர்ந்து பாலா என்னை புரோமேனடே  கடற்கரைக்கு அழைத்து சென்றார். சூரிய அஸ்தமனம் ஆகும் நேரம் கடற்கரை இளநீல நிறத்தில் காட்சி கொடுத்தது. பெரிய பெரிய அலைகள் சுருண்டு வந்து போடப்பட்டிருந்த  கற்குவியலை தாண்டி கரையை தொட போராடிக்கொண்டிருந்தது. அலையின் சாரலில் முழுவதுமாக ஒப்பு கொடுத்த தருணம் அது.  
மேகம் மறைத்த நிலவின் மிச்ச வெளிச்சம் கடற்கரைக்கு மேலும் அழகு சேர்த்தது
"இன்பக் கதைகள் எல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?"

மெல்ல முணுமுணுத்தேன் இந்த வரிகளை. வீட்டையும் நாட்டையும்  விட்டு வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. இந்த நேரத்தில் அந்த கடல் அலையின் சாரல் அன்பின் நிமித்தமாக என்னை அணைத்திருப்பதாகவே உணர செய்துகொண்டேன்.

சுனாமியின் போது பாண்டிசேரி கடற்கரையில் பெரிய பேரிடர் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஆனால், கடலின் சீற்றத்தை காண முடிந்தது எனும்    தகவலை பாலா கூறினார். தொடர்ந்து சுனாமி அபாயம் குறித்து தகவல் வெளியாகியபடி இருந்ததால், பாண்டிசேரி அரசு கரும் பாறைகளை கடலின் கரையில் கொட்டி, கட்டுக்கடங்காத அலைகளின் வீரியத்தை குறைத்துள்ளதையும் காண முடிந்தது. யாரும் அங்கு குளிப்பதில்லை. கடல் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.


200 ஆண்டுகள் வரலாறு பேசும் பாண்டிசேரியின் பிரெஞ்சு ராஜியம்,  138 ஆண்டுகளுக்கு புதுச்சேரி மண்ணில்  அது நிகழ்த்திய ஆதிக்கத்தை பேசுகிறது. அதன் ஆதாரமாக பாண்டிசேரி கடற்கரையில் கம்பிரமாக நிற்கும் Joseph François Dupleix  சிலை இருக்கிறது. Rocky Beach or Gandhi beach என்றும் அழைக்கப்படும் அந்த கடற்கரையில் காந்தி நேரு போன்ற தலைவர்களின் சிலைகளும் வரலாற்றை பேசுகின்றன. 24 மணிநேரமும் செயல்படும் லு- கபே வும் குறிப்பிட வேண்டிய ஒரு இடம் இடமாகவே இருக்கிறது. பெளர்ணமி  இரவில், கடலின் தண்ணீர் பெருக்கம் மழையை போன்ற சாரலை காற்று அள்ளிக்கொண்டு வர, அந்த வேளையில் கபே-யில் டீ குடிப்பது எத்தனை இன்பம் தெரியுமா

 ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை என்பான் பாரதி. கடலும் சில வேளைகளில் மஹா காளிதான் இல்லையா

நண்பரின் மோட்டார் சைக்கிளில் பாண்டிசேரியை இரவில் பார்த்துவிட்டு, இரவு உணவுக்கு  கொய்யாப்பழம் வாங்கி கொண்டு  மீண்டும் அறைக்கு வந்து சேரும்போது 12 ஆகியிருந்தது

இந்தியாவின் பிரான்ஸ் என அழைக்கப்படும் பாண்டிசேரி இதுவரை பார்த்த
மாநிலங்களை விட மாறுபட்டது என்பதில் எனக்கு எந்த மாற்று கருதும் இல்லை. பாண்டிசேரியின் இரண்டாம் நாள் எனது இந்த எண்ணத்தை மாற்றுமா?

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக