புதன், 24 மே, 2017

வரலாற்றை தேடி 6

திருவக்கரை வக்கிர காளியம்மன்
 
 
‘வக்கரம்’ எனும் சொல்லை நல்ல அர்த்தத்தில் பயன்படுத்த மாட்டார்களே;  அம்மனுக்கு ஏன்  இப்படி ஒரு  பெயர் என்ற கேள்வியோடே அந்த கோயிலுக்கு போனேன். நண்பர் பாலாவுக்கும் என்னைப்போல  இறை வழிபாட்டு விஷயத்தில் பெரிய ஆர்வம் இல்லாதபடியால் அவரிடம் இது குறித்து நான் எதையும் கேட்கவில்லை. அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் என்பதால் அதையும் எனக்கு காட்டிவிட வேண்டும் என்பதாலேயே என்னை அந்த கோயிலுக்கு அழைத்து போயிருந்தார்.  மாலையில் நடைபெறவிருக்கும் பெளர்ணமி பூஜைக்கு அப்போதே பலர் வந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.

 அமாவாசை மற்றும் பெளர்ணமி  நாளில் வக்கிர காளியம்மன் கோயிலில் காட்டப்படும் தீப தரிசனம்  மிகவும் விசேஷம் என கூறப்பட்டது.

 கோயிலின் உள் நுழைய மூன்று வரிசையை திறந்து விட்டிருந்தனர். முதல் வரிசைக்கு எந்த கட்டணமும் இல்லை. இரண்டாம் வரிசைக்கு சிறிய அளவிலான கட்டணத்தில் விரைவாகவும் மூன்றாம் வரிசைக்கு கொஞ்சம் கூடுதல் கட்டணத்தில் அதிவிரைவாகவும் கடவுளை தரிசிக்கலாம். நாங்கள் சென்ற நேரத்தில்   பெரிய அளவில் கூட்டம் இல்லை. என்றாலும்  ஏதோ கட்டணம் கொடுத்துதான் நுழைந்தோம். வக்கரகாளியம்மன் இருந்த இடத்தில் பெரிய வரிசை இருந்தது. புகைப்படம் எடுக்ககூடாது என்று கடுமையான நிபந்தனை இருந்ததால் நான் என் அலைபேசியில்கூட புகைப்படம் எடுக்க துணியவில்லை.




வடக்கு நோக்கிய வக்கிரகாளியும், மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும், தெற்கு நோக்கிய வக்கிர சனியும்,  மத்தியில் பெரிய நந்தியும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்துக்கொண்டிருந்தனர். பிச்சை பாத்திரம் ஏந்தியவர்களும் திருநங்கைகளும் கோயிலின் பல இடங்களில் நின்று கொண்டு கொடைவல்லர்கள் வருவார்களா என காத்துக்கொண்டிருந்தனர்.

 கோயில் நுழையாயிலில் நுழைபவர்களிடம் அவர்கள் ஆசீர்வாதங்களை வழங்கியபடி பிச்சை கேட்க முயற்சித்தனர்.  திருநங்கை ஒருவர்  என்னை நோக்கிவந்தார்.
"நீ நல்லா இருப்ப" என்று நின்றார்.

பணம் இல்லை” என்றேன்.
இங்கே அப்படி சொல்லக்கூடாது” என்றார் அவர்.

அருகில் இருந்த தோழி  பல்லவி,திருநங்கைகளிடம் அப்படி சொல்லக்கூடாது. எதாவது பணம் கொடுத்து விடுங்கள்” என்றார்.
திருநங்கைகளின் சாபம் பலிக்கும் என்ற  நம்பிக்கை அதிகமாக தமிழ்நாட்டில் இருக்கிறது என இதற்கு முன்பு பாலாவும் சொன்னதாக ஞாபகம். ஏதோ சில்லறை நோட்டை எடுத்து கொடுத்தேன்.

திருநங்கைகள் இப்படி கேட்டால் இல்லைன்னு இன்னொரு முறை சொல்லாதே என கூறிய திருநங்கை, வந்த வேகத்திலேயே திரும்பி சென்றார். அழகான கோயில். பழமையின் வாசத்தை உணர முடிந்தது. நந்தியின் முன்பு  உதிர்ந்திருந்த சிவலிங்க மலர்கள் இறைவன் காலடி சேர்ந்த திருப்தியில் சிரித்துக்கொண்டிருந்தன. நந்தியின் அலங்காரமும் அழகை கொடுத்தது.

ஒரு புகைப்படம் எடுத்தால் என்ன என்று மனசில் தோன்ற கைத்தொலைபேசியை எடுத்த நேரம் பூசாரி ஒருவர் பார்த்துவிட்டார். இங்கே புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார். ஒரே ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன் என்று அனுமதி வேண்டினேன்.



முன்பு ஒருமுறை, நடிகை சரோஜா தேவி இந்த கோயிலுக்கு வந்திருந்த போது புகைப்படம் எடுக்க விரும்பினார். கோயில் நிபந்தனைபடி  மிகவும் கண்டிப்பாக மறுத்துவிட்டோம் என்றார். சரி என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டோம். ஆனால், நான் புகைப்படம் எடுக்காமல் இல்லை. அம்மன் என்னை மன்னிப்பாராக

நரிக்குறவர்கள் கோயிலின் ஒரு பகுதியில் குழுமியிருந்ததார்கள். அந்த இடம் வேண்டுதலுக்காக உள்ள இடம்.  நாகவழிபாடு செய்பவர்களுக்கான இடம்மாதிரியும் தெரிந்தது. அங்கு போனேன். திருமணம் ஆகாத பெண்கள் தாலியையும், குழந்தை இல்லாதவர்கள் சில்லரை நாணய முடிச்சுகளையும் , செய்வினை செய்பவர்கள் பூட்டையும் அங்கே பிரார்த்தனையாக சமர்பித்திருந்தனர்.  மஞ்சலும்  குங்குமமும் அகல் விளக்குகளுமாக அந்த சன்னதி ஒரு நாவல் எழுதுவதற்கான லச்சனங்கள் கூடியதாக இருந்தது.

வழும் குழந்தை சிலைகளை அந்த இடத்தில வைத்திருந்தார்கள்.
தாயாக முடியாத தாய்களுக்கு அந்த சிலை எத்தனை நம்பிக்கைகள் கொடுக்கும் என்று தோன்றியது. குழந்தை இல்லாத தோஷம் நீங்க அங்கு கட்டப்பட்டிருக்கும்  தொட்டிலும் நாணய முடிச்சுகளும்  எத்தனை பத்தர்களின்  வேண்டுதல்களை  நிறைவெற்றியிருக்கும்சிலைகள் தவழ்ந்து வந்து குழந்தைகளாக அப்படியே தாயின் மடியில் வந்து விழாதா எனும் ஏக்கத்தோடு எத்தனை தாய்கள் கண்ணீ ரோடு உருகியிருப்பர். காகித சுருள் மாலைகள்  பேசும் செய்திகள்தான் எத்தனை எத்தனை? இந்த வாழ்கை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றா இல்லை வஞ்சிக்கப்பட்டதா? என்னையும் அறியாமல் சிந்திவிட்ட கண்ணீரை மறைக்க தெரியவில்லை. வெளியேறிய கண்ணீர் எத்தனை மனபாரம் பேசுகிறது. அத்தனை பாரமும் சில நேரம் கண்ணீரோடு வெளியேறியும் விடுகிறது. மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது போல இருந்தது. நம்பிக்கை பெரிதாக இல்லை என்றாலும் இத்தனை பேரின் நம்பிக்கை நிறைவேறட்டும் என்ற வேண்டுதலுடன் ஒரு கயிறை வாங்கி நானும் கட்டிவிட்டு கிளம்பினேன்.


வக்கிர காளியம்மன் என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை இப்படித்தான் பலரும் சொன்னார்கள்.

வக்கிரா சூரன் என்ற அசுரன் தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் சிவனிடம் வரம் கேட்டான். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரம் அளித்தார். வரம் பெற்றதும் வச்கிராசூரன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் சென்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். வக்கிராசூரன் பெண்களால் அழியா வரம் பெறவில்லை. அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும் போது கொல்ல முடியாது. அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணு யோசனை கூறினார்.

அதன்படி ஈஸ்வரி 16 கைகளுடன் உருவமெடுத்து மகாவிஷ்ணு யோசனைப் படி வக்கிர துர்முகியை அழித்தாள். பின்னர் வக்கிராசூரனை அழித்தாள். பிறகு திருவக்கரை தலத்தில் வடக்கு முகமாக அமர்ந்தாள். இதனால் அவளுக்கு அருள்மிகு வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
வக்கிராசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப் பெயர் பெற்றது. இவ்வாலயத்தின் வடக்கு முகமான காளியின் எதிரில் வக்கிராசூரன் சிலை உள்ளது. அவன் கண்டத்தில் லிங்கத்தை வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்று பெயர் ஏற்பட்டது.

 கோயில் தரிசனத்தோடு நான் பாண்டிசேரி பயணத்தை முடித்துக்கொண்டு மறுநாள் ஆம்பல் இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ள கடலூருக்கு கிளம்பினேன்.

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக