வெள்ளி, 26 ஜூன், 2015

நானும் மகாகவி பாரதியும்...

மேற்கு தொடர் மலையை ஒட்டிய கடையம்

மகாகவிப் பாரதி, என் வாழ்க்கையோடு என் குழந்தைப் பருவம் தொட்டே பயணித்து வருவது என் எழுத்தைப் பின்தொடர்பவர்கள் அறிவார்கள். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான எனது தாத்தா பாரதியார் கவிதைகளைத்தான் எனக்குப் பாடலாகப் போதித்தார்.

7 வயதில் ஆரம்பக்கல்வியைக் கற்க என் அப்பா சேர்த்துவிட்ட பள்ளிக்கூடம் பாரதித் தமிழ்ப்பள்ளி. பெரிய முண்டாசுடன், மிரட்டும் மீசையும் விழியைக் கொண்ட அவரின் புகைப்படம் பள்ளியின் நுழைவாயிலேயே இருக்கும். அதைப் பார்த்தபடிதான் உள்நுழைய வேண்டும். எனக்கு விவரம் தெரியாத அந்தப் பால்யப்பருவத்திலிருந்து பாரதியைப் பார்த்தே வளர்ந்தவள் நான். ஆரம்பக் கல்வியை முடித்து இடைநிலைப்பள்ளிக்கு நான் போகும்போது அதிகம் சிலாகிக்கும் என் மானச்சீகக் காதலனாகப் பாரதி எனக்குள் வளர்ந்திருந்தான்.

பள்ளிப் பாட படைப்புகளில் நான் எழுதும் கட்டுரையோ, கதையோ எதுவாகினும் பாரதி ஒரு வரியிலாவது வந்து போவார். பள்ளியில் நடக்கும் நாடகம், பரிசளிப்பு விழா என நான் பங்கு கொள்ளும் எதிலும் பாரதியின் வரிகளோ அல்லது பிரச்சாரங்களோ உள்புகுத்த முடியுமா என யோசிப்பேன். சில சமயம் இது என் குழுவினருக்குச் சலிப்பையும் அலுப்பையும் தட்டியதுண்டு. எனக்கு மட்டுமே திகட்டாதவனாகப் பாரதி இருந்தான்.
எனக்குச் சங்கடமோ மனகுழப்பமோ ஏற்படும் எல்லாக் காலத்திலும் என் அலைப்பேசியில் இருக்கும் பாரதியார் பாடலை ஒலிக்கவிட்டுத் தனிமையில் வெகுநேரம் அமர்ந்து என் சோகமாற்றுவேன். இன்றும் அவர் மேல் ஒரு பித்துநிலைக் கொண்டவள் நான். ஏன்? எப்படி ஏற்பட்டது என்பதற்கெல்லாம் என்னிடத்தில் பதில் இல்லை. காதலுக்குக் காரணம் தெரிவதில்லை. எனக்கும் பாரதிக்குமான உறவை வலுப்பெறச் செய்யும் சம்பவங்கள் இயற்கையே அமைத்துக் கொடுக்கும்.

அப்படிதான் அமைந்துபோனது எனது முதல் இந்தியப் பயணமும். அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இயற்கை வரையும் கோலத்தில் இயற்கையே புள்ளியை வைத்து, கோட்டையும் ஒன்றிணைக்கிறது. யோகி அதன் நேர்கோட்டில் பயணம் செய்து அதிசயத்தைப்  பதிவிடுகிறாள். ஆம். என்னைப் பொறுத்தவரையில் அதிசயம் தான் அது. எனது 6 நாள் இந்தியப் பயணத்தில் 2 நாட்கள் கடையத்தில் இருந்தேன்.
கடையம், பாரதியின் கண்ணம்மா பிறந்த ஊர். அங்குதான் 7 வயது கண்ணம்மாவை, தனது 14 வயதில் கரம் பிடித்தாராம் பாரதி. இப்படியான விஷயங்களை நான் ஏட்டில் படித்துத் தெரிந்துக் கொண்டவை. தென்காசியின் பேருந்து நிறுத்துமிடத்தில் நான் இறங்கி, கடையத்திற்குச் செல்வதற்கான பேருந்து எடுத்த போது பலதரப்பட்ட மக்களைப் பார்த்தேன்; அந்தக் காலை நேரத்திலும் அவர்கள் பரபரப்பாகவே இருக்கிறார்கள், சிரிப்பை மறந்த முகங்கள் அல்லது சிரிப்பைக் கழட்டி வைத்துவிட்டு வந்த முகங்கள் அவை.

சுற்றுச்சூழல் குறித்துப் பேசினால் வீண் சங்கடமே மிஞ்சும். இன்று தலைக் கவசத்தின் முக்கியத்தைப் பற்றி இந்தியாவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆண்கள் பெண்கள் பள்ளிப் பிள்ளைகள் எனச் செருப்பு அணியாத பலதரப்பட்ட கால்களைப் பார்த்தேன். சுகாதாரமற்ற சாலையில் அவர்கள் நடப்பது எனக்கு அருவறுப்பை ஏற்படுத்தவில்லை. சங்கடத்தைத் தான் ஏற்படுத்தியது. இயற்கையோடு வாழும் வாழ்க்கைக்கு நவீனம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், செருப்பை அப்படி ஒதுக்க முடியாது அல்லவா.
பேருந்தில் டிக்கெட் வாங்குபவர்கள்  “கடையத்திற்கு”  என்றதும், எம் பாரதி வாழ்ந்த ஊர், நான் அங்கு தானே போய்க் கொண்டு இருக்கிறேன் என்று மனதோடு பேசிக் கொண்டேன். அதுவரை  இருந்த சிந்தனை மொத்தமும் பாரதியிடமே திரும்பிக் கொண்டது. எனக்கும் பாரதிக்குமான முடிச்சி, விழுந்த இடம் எதுவென நான் அறியவில்லை. ஆனால், அவன் என்னைப் பின்தொடர்வதும், யாம் அவனைத் தொடர்ந்து செல்வதும் நிறுத்த முடியவில்லை. நான் கடையத்தில் இறங்கினேன்.

பழைய பிராமணத் தெரு (பழைய கிராமம்) வழியாக நடந்துச் சென்றோம். வீட்டுக்கு வீடு சின்னதாகக் கோலம் போட்டிருந்தார்கள். சிறியது-பெரியது எனப் பலதரப்பட்ட வீடுகள். சில வீடுகள் வண்ண வண்ணச் சாயத்தோடும் இருந்தன. ஆனால், பிராமணர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. பெயருக்கு ஏற்றமாதிரி ஆட்கள் இல்லையே என்றேன்.
ஆம், இப்போது பிராமணர்கள் யாரும் இங்கு வசிக்கவில்லை. அவர்கள் எல்லாம் இடம்பெயர்ந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. ஆனால், தெருவின் பெயர் மட்டும் அப்படியே நின்று விட்டது என்றார்  நண்பர். புதிதாகச் சாயம் பூசப்பட்ட ஒரு வீட்டைக் காட்டி, இந்த வீட்டில்தான் பாரதியாரும் கண்ணம்மாவும் வாழ்ந்தார்கள். இப்போது இந்த வீட்டைப் புதுப்பித்து யாரோ வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நண்பர் சொன்னதும் எனக்குப் பகீர் என்றது. எப்படி முடியும்? இது ஆவணப்படுத்த வேண்டிய வீடு அல்லவா?
பாரதியைப் பற்றி ஆய்வுச் செய்பவர்களுக்கு இந்த வீடும் ஓர் ஆவணம் அல்லவா? அதோடு இதை ஆவணம் செய்வதின் வழி, சுற்றுப்பயணிகள் இந்த ஊருக்கு வருவதற்கும் ஒரு வாய்ப்பு அமையுமே? என்றேன்.  உங்களுக்குத் தெரிந்தது இந்த நாட்டு அரசுக்குத் தெரியாமலா இருக்கும்?  விஷயம் தெரிந்தப் பலருக்கும் இது ஆதங்கமாக இருக்கும்தான். ஆனால், என்ன செய்ய முடியும் என்றார் மிகச் சாதாரணமாக. நான் அந்த வீட்டைப் பார்த்தபடியே தாண்டிப் போய்க் கொண்டிருந்தேன்.

அழகான கிராமமாகக் கடையம் இருந்தது. அதைச்சுற்றி இன்னும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறதாம். போகும் வழியில் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியைப் பார்த்தேன். அவரின் நினைவாக இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி என்று நண்பர் சொன்னார். சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும் பொலிவிழந்த கட்டிடம்போல் அது காட்சிக்கொடுத்தது. அங்கு இயங்கிக்கொண்டிருக்கும் பலகல்விக் கூடங்கள் பாரதியின் நினைவாக அவரின் பெயரில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் பார்க்க முடிந்தது.
ஒரு தேடலோடு தொடர்ந்து செல்கையில் ஜன்னல் வழியே ஒரு காட்சித் தட்டுப்பட்டது. குழந்தைகள் தரையில் அமர்ந்தவாறுப் படித்துக்கொண்டிருந்தனர். சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். நான் ஒரு வெளிப் பார்வையாளினியாக அனைத்தையும் தாண்டிப் போய்க் கொண்டிருந்தேன்…
(தொடரும்)

குறிப்பு:
இராமநதி அணையிலிருந்து கல்யாணியம்மன் கோயில் வரை, நான் பார்த்ததும் பெற்றதும் அடுத்த தொடரில். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக