செவ்வாய், 30 ஜூன், 2015

நானும் மகாகவி பாரதியும்...


பாரதி என்ற அந்தச் சாமானியனின் அடையாளம் இல்லை என்றால் இந்தக் கடையத்திற்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன பெருமை சேர்ந்திருக்கும்? இத்தனைக்கும் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பெற்றதும் பட்டதும் கொஞ்ச நஞ்சமல்லவே? இப்படியான கேள்விகளோடு நான் விடைபெற்றேன். அப்போது நான் அறியவில்லை, சென்னையில் என் பாரதி வாழ்ந்த இறுதிகால வீட்டில் என் பயணத்தை முடிப்பேன் என்று.

ஆம். கடையத்தில் நான் நினைத்ததுபோல என் பாரதிக்குப் பெரிதாக எந்த ஆவணப்பதிவும் இல்லை. என் நண்பர் சொன்னார். இங்கே ஊறுகாய் அளவுதான் பாரதியைத் தொட்டுக்கொள்கிறார்கள் என்று. அது ஒரு வகையில் உண்மை என்றுதான் நினைக்கிறேன். பெயரளவுக்கு மட்டுமே அவரின் பெயர் அங்கு இருக்கிறது. மேலும் கடையத்தின் பெருமையைப் பேசவும் அவரின் பெயர் பயன்படுத்தப்படுகிறது.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. காலச்சுவடு பத்திரிக்கையில் 2010-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். சுப்ரமணிய பாரதியின் ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில், அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த யாரவது ஒருவர் கிடைக்கமாட்டார்களா என அதன் படப்பிடிப்பு குழுவினர் தேடிப்போக, 90 வயதைத்தாண்டிய ஒருவரை சந்தித்தது ஆவணக்குழு. அதைப்பற்றிய நீண்ட கட்டுரையை அந்த சிற்றிதழ் வெளியிட்டிருந்தது. என் பதிவுக்காக நான் இணையத்தில் மீண்டும் தேடியபோது அந்தப் பதிவு கிடைத்தது. அதில் கடையத்தில் பாரதியின் காலத்தில் அவரோடு சுற்றித்திருந்த 12 வயது சிறுவனான க.பி.கல்யாணசுந்தரம் என்பவர், தான் நேரடியாக கடையத்தில் பாரதியுடன் அனுபவித்த பல சம்பவங்களை நினைவுகூர்ந்து சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன பலவிடயங்களைப் படிக்கும்போது வேறு எங்குவிடவும் அதிக புரட்சி செய்தது கடையத்தில்தானோ என்று தோன்றுகிறது. ஊராரும் தன்னை சார்ந்தவர்களும் முற்றாக அவரை ஒதுக்கிவிட, மிக பிடிவாதமாக தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாதவன் என் பாரதி. அந்த கடையத்து மண்ணின் கழுதைகளுடனும் பறவைகளுடனும் நட்பு பாராட்டியவன் அவன் என்பதை க.பி.கல்யாணசுந்தரம் தனது பதிவில் கூறியிருக்கிறார்.  அந்த ஆவணப்படம் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது.

ஆனால், கடையம் என்ன செய்திருக்கிறது? செல்லம்மா அங்கு பிறந்தவள்தானே?  ஒரு வகையில் வரலாறு செல்லமாவையும் பேசத்தானே செய்கிறது? பாரதி கடையம் வருவதற்கு ஒரு வகையில் செல்லம்மாதான் மூலக்காரணமாக இருக்கிறார். செல்லம்மாவின் தாய்மண் அவளுக்காக என்ன செய்து கொடுத்துள்ளது?   கடையத்தின் வரலாற்றைச் செல்லம்மாவையும் பாரதியையும் தவிர்த்துவிட்டு எழுத முடியுமா? இப்போது க.பி.கல்யாணசுந்தரம் இயற்கையை எய்துவிட்டார். க.பி.கல்யாணசுந்தரத்தின் பதிவை படிக்க  http://www.kalachuvadu.com/issue-108/page27.asp  இணையதளத்தைப் பாருங்கள்.

நான் மனதில் எழுந்த கேள்விகளுடனும், ஏமாற்றத்துடனும் சென்னைக்குக் கிளம்பினேன். சென்னையில் என் நண்பரும், சகோதருமான விளம்பர பட இயக்குனர் மகுடபதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னார் உங்கள் பாரதியின் நினைவு இல்லம் இங்குதானே இருக்கிறது.. போகவில்லையா என்று. அவர் சொல்லும்வரை அந்த நினைவு இல்லம் அவ்வளவு அருகில் இருப்பது எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாதே என்றேன். நானும் அந்த இல்லத்தைப் பார்த்து வெகுநாள்
ஆகிவிட்டது, உங்களுக்கு விருப்பம் என்றால் நான் உங்களை அழைத்து போகிறேன் என்றார். யோகி மறுப்பாளா அந்த வாய்ப்பை. தயாராக இருக்கிறேன் என்றேன். அவர் அழைத்துக்கொண்டு போனார். சாலையில் வாகன நெரிசல் சொல்லி மாளவில்லை. குறிப்பிட்ட ஒரு சாலையில் எங்களின் வாகனம் நுழைந்த போது நிறைய முஸ்லிம் மக்களையும்-பார்ப்பனர்களையும் காண முடிந்தது. சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி இதோ நினைவு இல்லம் என்றார். சென்னை, திருவல்லிக்கேணியில் பாரதியார் இறுதிகாலத்தில் வாழ்ந்த வீட்டைதான் நினைவு இல்லமாக புதுப்பித்திருக்கிறது தமிழக அரசு.

முதல் பார்வையில் எனக்குள் ஒரு பூரிப்பு இருந்தது. பெரிய வீடு அது. அதை புதுப்பித்து நினைவு இல்லம் ஆக்கியிருக்கிறார்கள். வெளியில் சிலர் நாளேடு படித்துக்கொண்டிருந்தார்கள். வாசலில் பாரதியின் நினைவுச்சிலை இருந்தது. பக்கவாட்டில் பார்வையாளர்களின் பதிவு புத்தகம் இருந்தது. பாரதி இறுதிகாலத்தில் வாழ்ந்த அந்த இல்லம், முதலில் தனியாரிடம்தான் இருந்திருக்கிறது. அதை தமிழக அரசு ரூ.3 லட்சத்துக்கு வாங்கி பின் 5 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்ததாம். அந்த இல்லத்தை 1993-ஆம் ஆண்டு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்தாராம். இன்றும் அரசு ஆதரவோடுதான் அந்த இல்லம் இயங்கிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது.

ஆனால், பராமரிப்பு என்ற சொல்லிற்க்கு ஏற்ற எந்த பராமரிப்பும் அங்கு இல்லை. தூசி மண்டிய புகைப்படங்களோடு கட்டடமும் பராமரிப்பும்கூட தூசியாகத்தான் இருக்கிறது. ஒரு பக்கத்தில் மூட்டை மூட்டையாக தூசி மண்டிய நிலையில் புத்தக மூட்டைகள். எடைக்கு போடபோகிறார்களா என்ற சந்தேகம் எழவே, விற்பனைக்கு என்றால் நான் சில புத்தகங்களை வாங்கி கொள்கிறேனே என்று பொறுப்பாளரிடம் கேட்டேன், அது விற்பனைக்கு அல்ல, நூல்நிலையம் அமைக்க பெற்ற புத்தகங்கள் என்றார். எப்போது நூலகம் அமைக்க போகிறீர்கள் என்று கேட்டேன்.. "அந்தக் கேள்வி உனக்கு எதற்கு" என்பதைப்போல ‘அமைக்கனும்’ என்று மட்டும் சுருக்கமாக சொன்னார் பொறுப்பாளர். அதற்குப்பிறகு என்னிடத்தில் அவரிடம் கேட்பதற்கு கேள்விகள் இல்லை.

அந்த வீட்டின் ஒரு மூலையில் தலைசாய்க்க ஆசை இருந்தது. அதற்கான எந்த வசதியும் அங்கில்லை. நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அந்த சூழலில் அங்கு கொஞ்சம் அமர்ந்து போகலாம் என்று மனம் அலைக்கழித்தது. அமர்ந்தேன். மறுவினாடியே நீங்கள் இங்கு எல்லாம் அமரமுடியாது. வெளியில் போய் அமருங்கள் என்றார். நான் எதையும் பேசவில்லை. வெளியில் அமர்ந்துக்கொண்டேன். பாரதி வாழ்ந்த வீடு, அதன்பிறகு தனியாரிடமிருந்தபோது இருந்த தோற்றம், அதன்பிறகு புதுப்பித்து இப்போது இருக்கும் வீடு என புகைப்பட வரிசை அங்கு மாட்டப்பட்டிருந்தது. புகைப்படம் எடுக்கக்கூடாது என நினைவு இல்ல பொறுப்பாளர் முன்பே கூறியிருந்ததால் அனைவரின் முன்னணியிலும் நான் படமெடுக்கவில்லை.

மகுடபதி சார் என்னை வீட்டின் முன்புறம் வைத்து படமெடுத்தார். அவருக்கு நான் அப்போது நன்றி சொல்லவில்லை. இப்போது அவருக்கு எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன். எனது பாரதிக்கும் எனக்குமான உறவுக்கு எது காரணமாக இருக்கிறது என்று நானே அடையாளம் காண முடியாத மர்மமாக இருக்கும்போது 1910-ஆம் ஆண்டு ‘கர்மயோகி’ என்ற பத்திரிகையை பாரதி நடத்தி வைந்திருக்கிறார் என்ற செய்தி எனக்குள் பேரானந்தத்தை கொடுத்தது. அன்புக்கு எப்போதும் காரணம் தெரிவதில்லை என்று நான் பொதுவாகவே கூறுவது உண்டு. அதை உறுதிபடுத்தும் உதாரணம் நானும்-பாரதியும்தான்.

முற்றும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக