திங்கள், 1 டிசம்பர், 2014

பிறிதொரு நாள்

பிறிதொரு நாளில்
பிறிதொரு நாளையைப் பற்றிய
கவிதை எழுத
மனம் எத்தனித்திருந்தது
அதற்கு பிறிதொரு காலமும்
பிறிதொரு நேரமும் தேவைப்பட்டது
தருணம் தோய்ந்த பிறிதொரு நாளில்
அக்கவிதையை எழுதத் தொடங்கினேன்
கவிதை நீண்டு
பல பிறிதொரு நாட்களை
விழுங்கியது
கவிதையை முடித்து
அடியில் என் பெயரை எழுதிட
அந்தப்
பிறிதொரு நாள்
இன்னுமும் வாய்க்காமலே உள்ளது


புதன், 26 நவம்பர், 2014

என்ன செய்வதென்றுதான்

அம்மா விட்டுச் சென்ற புடவையில்
எப்போதாவது ரோஜாக்கள் பூக்கும்
வண்ணத்துப்பூட்சிகள் முண்டியடிக்கும்
மகரந்தச் சேகரிப்புக்கு
புடவையின் வர்ணம் மாறி மாறி
மாயாஜால வித்தை காட்டும்
பரதேசி ஒருவருக்கு அம்மா உணவளித்ததை
ஒருநாள் அவரின் முந்தானையில் தெரிந்தது

அம்மாவின் புடவையைப்
பற்றிய பயம்
 மனத்தில் வந்து வந்து போனது
சூத்திரக்காரி நெய்த புடவையாக
இருக்கக்கூடும்
என நினைத்துப் புடவையை
எரித்துவிட்டேன                                                                                                                                ஆனால்
பயத்தை என்ன செய்வதென்றுதான்
 இப்போது புரியவில்லை

ஏன் எனக்கு ஆண்களை பிடிக்காது



எனது inbox-க்கு வரும் சிலர் கேட்கும் கேள்வி, ஏன் உங்களுக்கு ஆண்களை பிடிக்கவில்லை என்பதுதான்.  நான் ஆண்களை பிடிக்காது என்று சொன்னதே இல்லையே. மேலும், ஆண்கள் இல்லாத வாழ்கையை எப்படி வாழ்வது? எனது அப்பா, சகோதரன், நண்பன், காதலன், துணைவன், தெரிந்தவன் என நீள்கிறது நான் விரும்பும்  ஆணின் பட்டியல்.

 10 ஆண்களிடம் வேலை செய்து விடலாம், 10 பெண்கள் இருக்கும் இடத்தில் வேலை செய்ய முடியாது என்று பொதுவாக சொல்வார்கள். அது உண்மைதான் என்று நானும் ஒப்புக்கொள்வேன். பெண்களுக்கே அவர்களின் பலமும் பலவீனமும் தெரியாத போது இது போன்ற விமர்சனங்களை ஏற்றுகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

எனது இந்த 34 வயதுக்குள் பலதரப்பட்ட ஆண்களை சந்தித்திருக்கிறேன். முதலாளித்துவ ஆண்கள், காமுகன்கள், நட்புக்கு இலக்கனமான நண்பர்கள், காதலன்கள், காதலிப்பது போல் ஏமாற்றிய ஆண்கள், கொஞ்ச நாள் காதலாக, பின் காரணமே சொல்லாமல் முகத்தை திருப்பிய ஆண்கள், காதலையும்-காமத்தையும் அடக்கி வைத்துக்கொண்டு ஒன்றுமே இல்லாதது போல் நடித்த ஆண்கள், கூட பிறக்காத சகோதரர்கள், ஆலோசகர்கள், நலன் விரும்பிகள் என நூற்றுக்கும் அதிகமான ஆண்களிடம் நான் அறிமுகமாகி இருக்கிறேன். எனக்கும் அவர்கள் தங்கள் உண்மை அடையாளத்தை சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும்   காட்டியுள்ளனர்.

 ஒரே ஒரு காதல் தோல்வியைத் தவிர நான் எந்த ஆணிடமும் மனவருத்தம் அடைந்ததில்லை. அதே வேளையில் எந்த ஆண்களும் என்னை காயம் படுத்தும் அளவுக்கு இடத்தையும் நான் கொடுத்ததில்லை. நான் ஆண்களிடத்தில் கேட்கும் அல்லது வைக்கும் கோரிக்கை ஒன்றுதான்.

பெண்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்களை மரியாதையாக நடத்துங்கள். அவர்களின் சுதந்திரத்தை தட்டி பறிக்காதீர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்களே முடிவெடுப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்? உங்களுக்கு ஒரு நியாயத்தையும், பெண்களுக்கு ஒரு நியாயத்தையும் கற்பிக்காதீர்கள்.  பெண்களுக்கான முடிவெடுக்கும் அதிகாரத்தையும் நலிந்தவர்களிடத்தில் காட்டும் வீரத்தையும் உங்களுக்கு யாரும் கொடுக்கவில்லை. அவளின் அனுமதியின்றி அவளை நெறுங்க வேண்டாம். அவ்வளவே.

உண்மையில் நான் இந்தக் கோரிக்கைகளை வைக்கவில்லை. காலகாலமாக பெண் போராளிகளின் முன்வைப்பது இதுதான். கொடுமை என்னவென்றால் இன்னும் அதையே கேட்டுகொண்டிருப்பதுதான். தொடர்ந்து குரல் எழுப்புவதால்தான் பெண்கள் தங்களுக்கான குரல் வரும் திசையைப் பார்த்து கையை நீட்டுகிறார்கள்.  பெண்களுக்கு ரௌத்திரம் தெரிய வேண்டும். எல்லா நேரத்திலும் அவர்களுக்கு தைரியம் வேண்டும். முக அழகு ஒரு பெண்ணுக்கு அழகல்ல. ஒரு பெண்ணின் அழகு அவளது பேச்சில் இருக்கிறது. அவளது தைரியத்தில் உள்ளது. அவளது தன்னம்பிக்கையில் உள்ளது.

ஓர்  ஆண் அவளது காப்பாளன் அல்ல.
ஆண் அவளது தோழன்.
பெண் அவனது தோழி.

செவ்வாய், 25 நவம்பர், 2014

தீப்பொறியும் அவரின் புகைப்படமும்



புகைப்படங்கள் நமது வாழ்வின் அல்லது நிகழ்வின் அல்லது வரலாற்றின் பதிவுகளாகவும் சாட்சிகளாகவும் உள்ளன. என்னை இதுபோன்ற சில புகைப்படங்களில் சிலர் மிகவும் தொந்தரவு செய்வதுண்டு. கடந்த சில நாள்களில் என்னை மிகவும் பாதித்த புகைப்படமாக, நான் எடுத்த  கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியின் புகைப்படம் அமைந்துவிட்டது.
‘தீப்பொறி பொன்னுசாமி' இது நான் மலேசிய இலக்கிய உலகுக்கு வந்த காலம்தொட்டே கேட்கத்தொடங்கிய பெயர். மரபுக்கவிதைகளில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லாததால், பெரிய எதிர்பார்ப்புகளோடு நான் மரபுக்கவிதையை வாசித்தது இல்லை. அதே வேளை, மரபுக்கவிதை கவிஞர்களுடனான நட்பும் எனக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்ததில்லை. அண்மையில் இறையடிச் சேர்ந்த இறையருள் கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் இரங்கல் கூட்டம் சோமா அரங்கில் நடந்தது. செய்தி சேகரிப்புக்காக நான் சென்றிருந்தேன். அப்போதுதான் தீப்பொறி அவர்களை முதன் முதலாகச் சந்தித்தேன். நிகழ்வை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த என்னை அழைத்து தன்னை புகைப்படம் எடுக்கும்படி கூறினார். நானும் எடுத்தேன். எனது டிஜிட்டல் கேமராவில் ஃபிளாஷ் வரவில்லை. ஆனால், அவரின் படம் மிகத் தெளிவாகப் பதிவாகியது. இருந்த போதிலும் நான் அவரை புகைப்படம் எடுத்ததில் அவருக்கு நம்பிக்கை இல்லை.
நீ ஏமாற்றுகிறாய், ஃபிளாஷ் வரவில்லை, புகைப்படம் எடுக்கவில்லை என்று அவர் கூறியவேளையில், நான் திரும்ப திரும்ப 3-4 படங்களை எடுத்து அவரிடம் காண்பித்தேன். ஆனால், ஒரு நம்பிக்கையின்மையே அவரிடம் இருந்தது. எனக்கு எனது முன்கோபம் எட்டி பார்க்க ஆரம்பித்த வேளையில், பொன் கோகிலம் வந்து, நிலைமையைச் சரி செய்தார். பிறகு தனது அப்பாவுடன் ஒரு படம் எடுக்கச்சொல்லி கேட்டார். நானும் எடுத்தேன். அதை தனது முக நூலுக்கு அனுப்பி வைக்கும்படி பொன் கோகிலம் கேட்டுக்கொண்டார். ஆனால், நான் அனுப்பி வைக்கவே இல்லை.  அன்று கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் இரங்கல் கூட்டத்தில் எடுத்த தீப்பொறி அவர்களின் புகைப்படம், கடந்த புதன்கிழமை அவரின் இறப்புச் செய்திக்காக ‘நம் நாடு' நாளிதழில் பயன்படுத்தப்பட்டது. ஒரு புகைப்படம் எம்மாதிரியான வரலாற்றையும் பெற்றிருக்கலாம். ஆனால், இது போன்ற ஒரு பதிவு, ஒரு படைப்பாளனை மிகவும் துன்புறுத்தக்கூடியது. என்னுடன் அலுவலகத்தில்  வேலை செய்த ராமக்கிருஷ்ணன் என்பவரிடமும் தீப்பொறி அந்தப் படத்தை பலமுறை வாங்கித் தரும்படி கேட்டிருந்தார். நான் கொடுக்கிறேன் என்று கூறினேனே தவிர, வேலைப் பளு காரணமாக அக்கறையோடு அதை செய்துகொடுக்கவில்லை. இன்று அதைக் கொடுப்பதற்கு அவர் இல்லை.
இறுதியாக  தீபொறியின் பூத உடல் கடந்த வெள்ளிகிழமை (21.11.2014),  செலாயாங்கில் உள்ள அவரது வீட்டில் வைத்து மரியாதை செய்யப்பட்டு, செராஸ் மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது. நானும் எனது நண்பரும் தீப்பொறி அவர்களின் வீட்டுக்கு செல்லமுடியாத காரணத்தினால், செராஸ் மின்சுடலைக்குச் சென்றோம். அவரின் உடலை பார்ப்பதற்கு எனக்கு இறுதி வாய்ப்பு கிடைத்தது. அமைதியாக, அவரிடம் கொடுக்க தவறிய அந்த புகைப்படத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தேன்.


நான் நடிக்க போகிறேன் (டத்தோ லீ சோங் வேய்)

டத்தோ லீ ஆட்டக்களத்தில்
நாட்டின் நற்பெயருக்கு பாடுபட, போட்டி விளையாட்டுகளும்  சிறந்தத் தளமாக அமைந்திருக்கிறது. அப்படியான விளையாட்டுப் போராளிகளான டத்தோ நிக்கோல் டேவிட், கராத்தே வீரார்கள்,  நீச்சல் வீராங்கனை பண்டேலேலா ரினோங் உட்பட தங்களது விளையாட்டுத் திறமையால் நம் நாட்டின் வாசத்தை உலகம் மணக்கச் செய்தவர்கள் பலர். அதில் நாட்டில் குறிப்பாக  முதல் நிலை ஆட்டக்காரர்  டத்தோ லீ சோங் வேய். அவரின் உழைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. உலக அரங்கிலும் மிகவும் புகழ் பெற்றவர் டத்தோ லீ.
பூப்பந்து அரங்கின் வழி நமது நாட்டிற்கு  வெற்றிமாலை சூட்டி அழகு பார்த்தவர். தனது அபார விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி  லீ சோங் வேய்  உலக நாடுகளின் கண்களுக்கு மங்கலாக தெரிந்த மலேசியாவை இன்னும் தெளிவாக  வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
டத்தோ லீ தனது விளையாட்டு எதிரியான
லின் டான்னுடன்
பினாங்கு மாநிலத்தில் 1982-ஆம் ஆண்டு பிறந்தவர் லீ சோங் வேய். 1996-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டி லீ சோங் வேய்க்கு  மட்டுமல்ல, மலேசியாவுக்கே மிக முக்கியமானதாகவும் மேலும் சோதனையாகவும் அமைந்தது. காரணம் மலேசியாவுக்கு எந்த ஒரு பதக்கமும் கிடைக்காத நிலையில், பூப்பந்து ஆண்கள் ஒற்றையர் விளையாட்டின் வழி இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்ற முதல் மலேசியராகவும் லீ சோங் வேய் இருந்தார். அந்த கணமே மலேசியா ஓர் நம்பிக்கை நட்சத்திரத்தை பார்க்கத் துவங்கிய நாளாகும்.  2008-ஆம் ஆண்டு நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
உண்மையில் அவர் குறிவைத்து விளையாடிய தங்கப் பதக்கத்திற்கான அந்தப் போட்டி, அரங்கம் தீ பற்றி எரியாத ஒரே குறைதான். அந்த அளவுக்கு சூடு பிடித்த விளையாட்டு அது. இறுதியில் சீனாவின் முதல் நிலை ஆட்டக்காரரான லின் டான் தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொள்ள லீ-க்கு வெள்ளிப் பதக்கம்தான் கிடைத்தது. அன்று முதலே பூப்பந்து விளையாட்டின் எதிரிகளாக லின் டானும், லீயும் ஆனார்கள் எனலாம். நாட்டிற்கு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுதந்ததைப் பாராட்டி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், லீ-க்கு டத்தோ விருது வழங்கிச் சிறப்பித்தார்.
தொடர்ந்து, டத்தோ லீ பல போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிமாலைகளை சூடினார். அவருக்கு மற்றுமொரு எதிரியாக ஜப்பான் விளையாட்டாளர்கள் வந்தார்கள். டத்தோ லீக்கு சீனாவும், ஜப்பானும்தான் போட்டி விளையாட்டாளர்களாக அமைந்தார்கள்.
டத்தோ லீயின் வெற்றி வாய்ப்புக் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்ட ஆண்டாக 2011-ஆம் ஆண்டைச் சொல்லலாம். காரணம் தோமஸ் கிண்ணப் பூப்பந்தாட்டம் அது. நமது சொந்த நாட்டில் நடந்த அந்த பூப்பந்தாட்டத்தில் டத்தோ லீ தங்கத்தை பெற்றுத் தருவார் என்று மலேசிய வாழ் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், மிகப் பெரிய தோல்வியை டத்தோ லீ சொங் வேய் சந்தித்ததை அந்த விளையாட்டைப் பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே வேளையில், தேசிய பூப்பந்தாட்ட ஆணையத்தின் மீதும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பூப்பந்தாட்டத்திற்காக பல்வேறு வசதி வாய்ப்புகளையும் ஊக்குவிப்புத் தொகைகளையும்  அரசாங்கம் மானியமாக வழங்கும்போது ஏன் இந்த நிலை ஏற்பட்டது? என்று கேட்கப்பட்டதோடு, டத்தோ லீயைக் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கியது. அவரின் செல்வாக்கும், அவரின் மீதான நம்பிக்கையும் குறையத் தொடங்கிய நாளென்றுகூட சொல்லலாம்.
அதன் பிறகு டத்தோ லீக்கு அமைந்தது அனைத்தும் சோதனைக் களமாகவே அமைந்தது. அவர் வெற்றி பெறுவார் என்றும் தோல்வியடைவார் என்றும் விளையாட்டில் ஈடுபடும் முன்பே விமர்சிக்கப்படத் தொடங்கினார்.
இவ்வருடம் முழுதுமே டத்தோ லீ பல விமர்சனங்களைச் சந்தித்தார். அதன் உச்சக் கட்டம்தான் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியது.  கடந்த ஆகஸ்டு மாதம் டென்மார்க்கில் நடைபெற்ற உலகப் பூப்பந்து கூட்டமைப்பின் அனைத்துலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது, டத்தோ லீ சோங் வேய் உடலில் ‘dexamethose' என்ற ஊக்கமருந்து  கலந்திருப்பது இரு வாரங்களுக்கு முன்பு, நார்வே, ஆஸ்லோவில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து  அவருக்கு எதிரான முடிவு கிடைத்ததையடுத்து உலகப் பூப்பந்து கூட்டமைப்பு அவரை இடைநீக்கம் செய்தது யாரும் எதிர்பார்க்க்காத ஒன்றாகும்.
இதனையடுத்து இவ்விவகாரத்தை உலகப் பூப்பந்து கூட்டமைப்பு ஊக்கமருந்து விளக்கமளிப்பு குழுவிடம்  கொண்டு சென்றது.  ஆனால், டத்தோ லீ, தாம் போட்டியில் வெல்ல எந்தப் போதை மருந்தையும் எடுத்துக்கொள்ளவில்லை என கருத்து வெளியிட்டார்.
இளைஞர் விளையாட்டுத் துறையமைச்சர்
கைரி ஜமாலுடின்
இந்த விவகாரத்தில் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுடின்  முதன்மையாளராக விளக்கம் கொடுத்தார். இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அதற்கான கடப்பாடும் அவருக்கு இருக்கிறது. இருந்த போதிலும் லீக்கு ஆதரவான பதிலை கைரி கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.   தமது பத்திரிகை செய்தியில் கைரி, ஊக்க மருந்தை செலுத்தியது தேசிய விளையாட்டு மையத்தின் மருத்துவர்கள் அல்ல என்றும், கோலாலம்பூரில் உள்ள விளையாட்டாளர்களுக்கான தனியார் நிபுணத்துவ மருத்துவமையம் (கிளினிக்) ஒன்றிலேயே காயங்களுக்கான மரபணு சிகிச்சை ஒன்றின்போது அவருக்கு அம்மருந்து செலுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்தார். அதோடு, ‘dexamethose' மருந்தை காயங்களுக்காக அளிக்கப்படும் சிகிச்சைகளில் பயன்படுத்த அனுமதியுண்டு. இம்மருந்து 10 நாள்கள் மட்டுமே உடலில் நீடித்திருக்கும். ஆனால் சொங் வேயின் உடலில் அதற்கும் மேற்பட்ட காலம் அம்மருந்து நிலைத்திருந்ததற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியிருந்தது, லீயின் அபிமானிகளுக்கும் கேள்விக்குறியாக அமைந்தது.
டத்தோ லீ தனது பயிற்றுனரான
ரசிட் சிடேக்வுடன்
அதனைத்தொடர்ந்து டத்தோ லீக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான முன்னாள் தேசியப் பூப்பந்து வீரர் ரசிட் சிடேக் அதிர்ச்சிதரும் தரும் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதாவது  தடை செய்யப்பட்டிருந்த குறிப்பிடப்பட்டிருக்கும் ஊக்க மருந்தை உலகின் முதல் நிலை வீரரான டத்தோ லீ சோங் வேய் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததாகவும், மலேசிய, பூப்பந்து சங்கத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கு லீ சோங் வேய் அம்மருந்தைப் பயன்படுத்துவது தெரியும் எனவும்  இது நீண்ட காலமாக நடந்து வரும் விஷயம் என்றும் பகிரங்கடுப்பத்தினார்.
டத்தோ லீ தனது பயிற்றுனரான
மிஸ்புன் சிடேக்வுடன்
நாட்டின் மூத்த வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும் இளம் வீரர்களுக்கும்கூட இவ்விஷயம் லேசாக தெரியும் என்றாலும், முதல் நிலை ஆட்டக்காரர் என்ற காரணத்திற்காக வாய் மூடி இருந்தனர் என்று ரசிப் சிடேக்கூறியிருந்தது மலேசியப் பூப்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், இது குறித்து டத்தோ லீயின் தரப்பிலிருந்து சரியான பதில் வரவில்லை என்பதையும் நாம் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டிதான் உள்ளது.
இதற்கிடையில், டத்தோ லீ மீது  இருமுறை மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனைகளில், சோங் வேய் அம்மருந்து பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் காணப்பட்டது உறுதிப் படுத்தப்பட்டது என பூந்துபந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டது. மேலும், டத்தோ லீ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளார், என உலகப் பூப்பந்து கூட்டமைப்பு (பிடபள்யஃஎப்) தெரிவித்தது.  தன்மேல், விழுந்த பழியைத் துடைப்பதற்குத் தவறிய டத்தோ லீ நிலைகுலைந்துதான் போனார். இந்நிலையில்தான் கடந்த வாரம் தனது நிலைப்பாட்டை வெளிபடுத்தினார் டத்தோ லீ சொங் வேய்.
“நான் மருத்துவர்களை முழுமையாக நம்பினேன். தற்போது காலம் கடந்து யோசிப்பதில் எந்தப் பயனும் இல்லை. நம் உடலில் செலுத்தப்படும் மருந்து குறித்து விளையாட்டாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நம் உடலில் செலுத்தப்படும் மருந்து குறித்து எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு நானே ஓர் உதாரணம். நான் மருத்துவம் அறியாதவன்; பூப்பந்தில் எத்தனை இறகுகள் இருக்கும் என்பதும், களத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே அறிந்தவன் நான்” என்று டத்தோ லீ தெரிவித்துள்ளார்.
தேசிய அணியில் டத்தோ லீ சோங் வேய்க்கு அடுத்து சிறந்த இளம் ஒற்றயர் ஆட்டக்காரர்களை மலேசியப் பூப்பந்து சங்கம் கண்டறிய வேண்டிய கடப்பாட்டினை தற்போது கொண்டுள்ளது.  உண்மையில், இந்தத் தேடலை பல ஆண்டுகளுக்கு முன்பே  பூப்பந்து சங்கம் மேற்கொண்டிருக்க வேண்டும் . இதுகுறித்து பல தடவை வலியுறுத்தப்பட்டுவிட்டது என்பதும் மறுப்பதற்கில்லை. பூப்பந்து என்றால், ஒற்றையர் பிரிவில் டத்தோ லீயையும், இரட்டையர் பிரிவில் கூ கின் கீட்- தான் புன் ஹியோங்    ஆகியோர் நாட்டிற்கு பதக்கத்தை வென்று தருவார்கள்ன் என்பது மலேசியாவின் எதிர்பார்ப்பாக அவர்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளது.  இந்த எதிர்பார்ப்பும்  நம்பிக்கையும் அவர்களை எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கும்,  தர்ம சங்கடத்திற்கும் ஆளாக்கும் என்பது நமக்குச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
கூ கின் கீட்- தான் புன் ஹியோங்
தற்போது டத்தோ லீயின் மீதான தடை நீடித்தால், அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. அதற்கும் அவரே பதிலளித்துள்ளார். அதாவது, தொடர்ந்து தனக்கு விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டால், கவர்ச்சியான தோற்றம் கொண்டதால் நடிப்பு துறைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். டத்தோ லீ எத்தனை மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தால் இப்படி கூறியிருப்பார்? உண்மையில் நடிக்கத் தெரியாத மனிதர் டத்தோ லீ.












சனி, 22 நவம்பர், 2014

கட்டங்களில் அமைந்த உலகு ...5

முகங்கள்

அன்றாட வாழ்க்கையில் வந்து போகும் மனிதர்கள் அனைவரையும் பட்டியலிட முடியாது. சிலர் பட்டியலிடாமலேயே பதிந்துவிடுவார்கள். பதிந்துவிடுபவர்கள் எல்லோருமே நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், அழகானவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு எதிரானவர்களும் அதைவிடவும் ஆழமாக பதிந்து விடுவது உண்டு.

என் புத்தியில் அத்தனை சுலபமாக யாரும் பதிந்துவிட முடியாது. அப்படியே நான் யாரையாவது ஞாபகம் வைத்திருந்தாலும் எவ்வளவு நாளைக்கு அவர் என் பதிவில் இருப்பார் என்பது தெரியாது. நேற்று புதிதாக பார்த்த முகத்தை இன்று மறுபடியும் எங்கேயாவது பார்க்க நேர்ந்தாலும் இவரை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே எங்கே என்று அவர் முகம் வந்த திசையை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவேன். இது ஏதாவது நோயா? இல்லை நோய் முற்றிவிட்டதா என்ற குழப்பம் சமீபகாலமாக வந்து போகிறது. ஆனால் 10 வருடத்துக்கு மேலாகியும் என்னால் மறக்க இயலாத சில முகங்களில் இரு முகங்கள் முக்கியமானவை. அவை நான் பெரிய மருத்துவமனையில் பாதுகாவலர் வேலை பார்த்த போது அறிமுகமான முகங்கள்.

24 மணிநேரமும் அமளியுடன் இருக்கும் பெரிய மருத்துவமனையில் பல தரப்பட்ட முகங்களுக்கிடையில் மறக்க முடியாத அந்த இருமுகங்களும் தன்னை எனக்கு எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

பயில்வான்

என்னுடைய பாதுகாவலர் அலுவலக எதிர்ப்புறம் சிறிய அறை ஒன்று இளநீல தடித்த திரையால் மூடி இருக்கும். உள்ளே என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள எப்பவுமே நான் ஆர்வம் கொண்டதில்லை. நோயாளிகளும் மருத்துவர்களும் பிரவேசிக்கும் அறைக்குள்ளே பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது என்ற அலட்சிய எண்ணமே பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது.

திரையின் வர்ணத்தை போன்ற உடையணிந்த ஒரு உருவம் 'வணக்கம் யோகி' என்று ஒரு நாள் போகிற போக்கில் நின்று பேசியது. என் பெயர் சொல்லி அழைத்த உருவத்தை ஆச்சரியமாகப் பார்த்தேன். பயில்வானைப்போன்ற உருவம். கண்கள் மட்டுமே தெரிந்தது. மற்ற அனைத்துமே மூடி இருந்தது. அவர் என்னைப் பார்த்து புன்னகைப்பதை கண்கள் வழி தெரிந்துகொண்டேன். அவர் பெரிய உடல்வாகுடன் இருந்ததால் பயில்வான் என்றே நான் அவருக்கு பெயர் சூட்டி இருந்தேன். எப்படி என் பெயர் உங்களுக்கு தெரியும் என்றேன். அது கஷ்டம் இல்லை என்றார். ஏன் இப்படி ஓர் உடை என்றேன். என் வேலைக்கு இதுதான் சீருடை என்றார். அப்படி என்ன வேலை என்றேன். திரைமூடி இருந்த அறையைக்காட்டி அதுக்குள்ளே வடை சுடுகிறோம் என்று நினைத்தீர்களா என்றார். உள்ளே நடப்பதை தெரிந்துக்கொள்ள அப்போதுதான் ஆசை துளிர்விட்டது. திரும்பவும் கேட்டேன். பழுதடைந்த உடல் பாகங்களான விரல், கை, கால் போன்றவற்றை அறுக்கும் இடம் அது என்றார். உடலை கூறு போடும் அவரை பார்க்க கசப்பாக இருந்தது. ஐய்யோ என்று பார்த்தேன். எப்படி அறுப்பீர்கள் என்றேன். அனைத்துக்கும் மிசின் இருப்பதாக சொன்னார். வெட்டிய பாகங்களை என்ன செய்வீர்கள் என்றேன். இந்தியர்களும் சீனர்களும் வெட்டிய பாகங்களை மீட்டுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மலாய்க்காரர்கள் சிறிய துண்டாக இருந்தாலும் அதை பெற்றுக்கொள்கிறார்கள். அதை என்ன செய்வார்கள் என்றேன். ஒரு உடலை அடக்கம் செய்யும்போது செய்யக்கூடிய சடங்குகளை செய்து புதைப்பார்கள் என்றார். இவை இது வரையிலும் எனக்கு தெரியாத புது விசயங்கள். அவர் பதிலைச் சொல்ல சொல்ல நான் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். உரியவர்கள் பெற்றுக் கொள்ளாதப் பாகங்களை என்ன செய்வீர்கள் என்றேன். அவற்றை ஒரே புதைக்குழியில் கொட்டி புதைத்து விடுவோம் என்றார். உருப்புகளை அறுக்கும் போது அச்சமாகவோ அருவருப்பாகவோ இருக்காதா என்றேன். உயிர்களை காப்பாற்ற அச்சம் தவிர்க்க வேண்டும் என்றார். அவரின் பதிலில் இருந்த நேர்மையும் பொறுப்பறிந்து செய்யும் தொழில் பத்தியும் என்னைத் தூண்டி  விட்டு ஏதோ செய்தது.

அன்று முழுக்க ஊனம் அடைபவர்களைப்பற்றியும் துண்டிக்கப்பட்ட பாகங்களைப்பற்றியுமே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட யாரைப்பார்த்தாலும் இவர்கள் வாழ்ந்திட சிலர் அச்சம் தவிர்ப்பதை நினைத்துக் கொள்கிறேன். கூடவே பயில்வானும் நினைவில் வந்துவிடுவார்.


அப்துல் கனி

இரண்டாவது நபரின் பெயர் அப்துல் கனி. சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த மலாய்க்காரர். 23 அல்லது 24 வயது இருக்கும். Orthopedic என்று சொல்லக்கூடிய சிகிச்சை அறையில் நரம்பு சம்பந்தப்பட்ட நோயினால் சிகிச்சை பெற்றுவந்தான். எனக்கு தெரிந்தவரையில் அவனின் உறவினர்களோ நண்பர்களோ பெற்றோர்களோ யாருமே அவனை வந்து பார்த்ததில்லை. தினமும் மணிக்கு ஒரு தடவை ரோந்து பணிக்கு போவதால் அவனை தினசரி சந்திக்கும் ஒரே ஆள் நானாக இருந்தேன். ஆரம்பத்தில் மெல்லிய புன்னகையோடு ஆரம்பித்து 'ஹைய்' என்று முன்னேறி அரட்டை அடிக்கும் அளவுக்கு எங்களின் தினசரி சந்திப்பு நட்பாக மாறியிருந்தது. ஆனால் அவன் அளந்துதான் சிரிப்பான். எப்போதும் ஒரு சோகம் இருக்கும் அவன் முகத்தில். அவனை சார்ந்தவர்கள் யாருமே வராததால் ஏற்பட்ட ஏக்கம் என நினைத்துக்கொண்டேன். நான் ரோந்துக்கு போகாத நாட்களில் என்னை தேடிக்கொண்டு அலுவலகம் வந்து விடுவான். ஓர் இந்திய பெண்ணிடம் இந்தளவுக்கு நட்பு பாராட்டுவது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இன்மையும் குழப்பத்தையும் கொடுத்தது. விடுமுறையில் நான் கம்பத்துக்கு போய் திரும்பும் வேளையில் அவன் வெறுமையை உணர்வதாகச் சொல்வான்.

அவனுக்கும் மருத்துவமனையில் விடுமுறை கிடைக்கும். நோயாளிகளின் சீருடையான பச்சை சட்டையும் லுங்கியும் விடுமுறைகளில் அணிந்துக்கொள்ள மாட்டான். அதே தருணத்தில் மருத்துவமனை வளாகத்தை விட்டும் எங்கும் போக மாட்டான். 2 லிருந்து 4 நாட்கள் வரை நீடிக்கும் விடுமுறையில் எங்காவது ஒரு மூலையில் இருப்பான். உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு போக வேண்டியதுதானே என்றால் எல்லோருமே சரவாக்கில் இருப்பதாக சொன்னான். போய் வரும் விமானச் சேவையை சேமித்தால் மருத்துவச் செலவுக்கு உபயோகப்படும் என்பான். தலையை வடபுரமும் இடபுரமும் ஆட்டிவிட்டு சளித்துக் கொண்டு போவேன். இவன் இப்படி இருக்கிறானே என்று யாராவது விசாரித்தால், எல்லா கேள்விகளுக்கும் சிரிப்பையே பதிலாக அளித்தான். அந்தச் சிரிப்பே சொல்லிவிடும், அவன் எதையோ மறைக்கிறான் என்று.

குறிப்பிட்ட நாளில் அவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படும். அந்த நாட்களில் அவனால் சரியாகவே பேசவே முடியாது. துவண்டு போய் இருப்பான். கை ஜாடையில் ஏதாவது பேச முயற்சி செய்வான். எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். அவனின் சிரிப்பை போலவே நான் சின்னதாக சிரித்துவிட்டு போவேன்.
ஒருமுறை வீட்டின் விஷேசத்துக்கு 4 நாள் விடுப்பு வாங்கிக்கொண்டு கம்பத்துக்கு கிழம்பினேன். கனி என்னை எதிர்பார்ப்பான் என்ற படியால் அவனிடம் சொல்லிவிட்டு விடைபெற அவனை பார்க்க போனேன். நான்கு நாட்கள் விடுமுறை என்றதும் சிறிது நேரம் பேசிவிட்டு போ என்றான். விடுமுறையின் காரணத்தை கேட்டான். பேச்சின் இடையில் உன் கையை பிடித்துக்கொள்ளட்டுமா என்றான். சட்டென்று என்ன சொல்வதென தெரியவில்லை. கையை பிடிப்பதால் என்ன வந்து விடப்போகிறது. பிடித்துக்கொள் என்றேன். கையை இருக்கமாக பிடித்துக் கொண்டான். என் அப்பா இறந்தபோது எனக்கு ஆறுதல் கூறியவர்களின் கையை அப்படித்தான் பற்றிக்கொண்டேன். அந்த நிமிடம் அந்த சம்பவம் நினைவுக்கு வந்து போனது. சில நிமிடங்கள் வரை என் கையை விடாமலே பேசிக்கொண்டிருந்தான். ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான்? அதிசயமாக; என்னை காதலிக்கிறானோ? மதம் மாறச் சொல்வானோ, சூனியம் ஏதாவது வைத்துவிட்டால். ஐய்யோ கடவுளே ஏன் என் புத்தி இப்படியெல்லாம் யோசிக்கனும். இவன் இப்படி கையை பிடித்திருப்பதை யாராவது பார்த்து விட்டால், வீண் பழி சுமக்க நேரிடும். இதை நீட்டிக்க கூடாது” என்றெல்லாம் எண்ணியபடி ஒரு உறுதியோடு அங்கிருந்து கிழம்பினேன்.

விடுமுறைக்கு போயிருதேன் என்பதைத் தவிர கனியின் நியாபகம் என்னை பிந்தொடர்ந்துக்கொண்டே இருந்தது. விடுமுறை  முடிந்து வருகையில் அவனுக்கு ஒரு பரிசு வாங்கி வந்தேன். ஒற்றை புறா பறப்பதை போன்ற கண்ணாடிச் சிலை அது. பக்கத்தில் பேனா வைப்பதற்கு ஒரு இடம் இருக்கும். உள்ளங்கை அளவிலான சிறியச் சிலை. அதை கொடுப்பதற்காக Orthopedic போனேன். அவன் இருந்த அறை காலியாக இருந்தது. அறையை மாற்றி இருப்பார்களா என்ற குழப்பத்தோடு பெயர் பலகையை பார்த்தேன். அவன் பெயர் இல்லை. தாதியைக் கேட்டேன். தாதி வேறொரு நோயாளியின் அறிக்கையை தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தாள். நான் கனி எங்கே என்றேன்? என்னை பார்த்து விட்டு மீண்டும் கண்களை அறிக்கையில் பதித்து விட்டு அவன் இறந்துவிட்டான் என்றாள். ஒரு கணம் எனக்கு தொண்டையில் இருந்து பேச்சே வரவில்லை. தலையில் ஆணி அடித்ததைப்போல ஒரு வலியை உணர்ந்தேன். உணர்ச்சிவசப்படுவது நன்றாக தெரிந்தது. வேலையில் கவனம் செல்லவில்லை. கடைசியாக அவனைப் பார்த்ததும் பேசியதும் மீண்டும் மீண்டும் கண்முன் ஓடிக் கொண்டிருந்தது.
அவனுக்கு நான் ஆசையாக வாங்கி வந்திருந்த பரிசை எங்கேயோ தவறவும் விட்டிருந்தேன்.





செவ்வாய், 18 நவம்பர், 2014

எனக்கு நான்



அத்தியாயங்கள் என்னைப்
பலவாறாக கிழித்துப்போட்டிருந்தன
குழந்தையில்,
சிறுமியில்,
குமரியில்,
திருமதியில்- என
அத்தியாயங்கள் கிறுக்கப்பட்டு
மிகவும்
விகாரமாகப்
பயமுறுத்தியிருந்தன

கொஞ்சம் பாசம்
அதிகமான கண்டிப்பு
அர்த்தமில்லாத அர்த்தங்கள்
கொஞ்சம் ஆசிர்வா(வ)தம்
மற்றும் ஏகப்பட்ட முரண்களுடன்
எழுதிவிட்டிருந்த அத்தியாயங்களில்
ஒரு பைத்திய நிலைக்குப் போயிருந்தேன்

நிறைவு அத்தியாயத்தை
நல்ல வேளையாக எழுதிவைக்கவில்லை
நானே அவ்வத்தியாயத்தை எழுதிவிட்டு
முன் அத்தியாங்களை மௌனமாக
கிழிக்க துவங்கினேன்