திங்கள், 22 அக்டோபர், 2018

ME TOO என்ற நானும்...

ME TOO குறித்து உன் பார்வை என்ன?


எதைக்குறித்துப் பேசாமல் நான் மௌனமாக இருந்தேனோ, அதுகுறித்து என்னைப் பேசச் சொல்லும்போது, கொடூர மீசைக்கொண்ட முகங்களும் முகமறியாத வறட்டு விரல்களும் ஒரு வகை முடை நாற்றத்தோடு என் பழைய நினைவுகளைக் கொண்டு வருகின்றன. 

அவளை முயற்சிக்கலாம்  என்ற மனோபாவம் ஒருவனுக்குத் தோன்றுவது  இயற்கை என இந்தச் சமுதாயம் பேசுகிறது; என்றால் இந்தச் சமுதாயத்தை எதைக்கொண்டு கழுவுவது? பிறந்த குழந்தையிலிருந்து மாதவிலக்கு நின்ற மூதாட்டிவரை பாலியல் அத்து மீறலுக்கு ஆளாகி வரும் சூழலில், அப்போது  சொல்ல திராணியற்ற அந்த வலியை, இப்போது அவள்   எழுதத் தொடங்கியிருப்பது, பல ஆண்களின்  டப்பா ஆட்டங்கண்டுதான் போயிருக்கிறது.
முன்னதாக ME TOO விஷயத்தைப்  எவ்வாறு புரிந்துவைத்திருக்கின்றனர் என்ற  கலந்துரையாடலை, பொதுவெளியில் செய்வது  முக்கியம் எனத் தோன்றுகிறது.

தன் கவனத்தை ஒரு பெண் கவரும்போது, அவள் பால் அவன் ஈர்க்கப்படும்போது, தன் ஆசையை அவளிடம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, அவன் குறிப்பால் உணர்த்த முயற்சி செய்வான்.

அதை அந்தப் பெண் எப்படி எடுத்துக்கொள்கிறாள்? ஏற்கிறாளா ? அல்லது நிராகரிக்கிறாளா என்ற மனநிலை அவரவர் உரிமையைச் சார்ந்ததாக இருக்கிறது. அவள், அவனின் காதலையோ அல்லது காமத்தையோ ஏற்கிறாள் என்றால் பிரச்னை இல்லை. அவளுக்கு அது பிடிக்காத போது, தொடக்கத்திலேயே அதை நிராகரிக்கிறாள் என்றால் அத்தோடு அவளைத் தொல்லை செய்யாமல்,  சாதாரண மனநிலையோடு அவளோடு பழகுகிறவன்தான் சரியான ஆண்.  அதை விட்டுவிட்டு தொடந்து அவளிடம் வக்கிரத்தை வெளிப்படுத்துகிறவனை MEE TOO-வில் போட்டு தோலுரிக்கலாம்

முதல் நிராகரிப்பிலேயே, அவளுக்குப் பிடிக்கவில்லை என்று உணர்ந்து ஜென்டில்மேனாக நடந்துகொள்ளும் ஒருவனை, அந்தப் பெண், என்னை அவன் முயற்சித்தவன் என்று காரணம் சொல்லி சொல்லி தொடர்ந்து பலரிடம் புகார் கூறுகிறாள் என்றால் அவளிடம் ஒரு தெளிவில்லாத தன்மையிருக்கிறது என்றுதான் நான் கூறுவேன். ஒரு ஆண் தன் விருப்பத்தை  வெளிப்படுத்தத் தொடங்கும் நொடியே அந்த எண்ணத்தை விருப்பமில்லாத ஒரு பெண்ணால் உடைக்க முடியும். பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நெருங்குவது நிச்சயமாகத் தப்புதான். அதேதான் ஆணுக்கும். ஒரேயடியாக யாரையும் பொறுக்கின்னு சொல்லிட முடியாது. அப்படி சொல்லவும்கூடாது.

பாலியல் அத்து மீறல்களுக்குப் பலியாகியிருப்பவள்தான் நானும். வெளியில் சொல்ல பயந்துகொண்டு என்னை அத்துமீறி தொட்டவனை பார்க்க நேரும்போதெல்லாம் மரவட்டை போலச் சுருங்கி ஓடி ஒளிந்துகொள்வேன். எந்தக் குற்ற உணர்வும் இல்லாத அவனெல்லாம் தைரியமாக மீண்டும் மீண்டும் பார்வையாலேயே என்மீது வக்கிரத்தைக் காட்டியபோது ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையை  கண்ணீராகத்தான்  வெளியேற்றிருக்கிறேன்

.
நான் ஒருவாராகப் பேச துணிந்தபோதுதான் இந்தப் பாலியல் அத்து மீறலிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை mee too, நிச்சயமாகப் பெண்களுக்கு ஒரு மனதைரியத்தை கொடுத்திருக்கிறது. ஆண்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் தனக்கான உரிமையைப் பெற்றிருக்கின்றனர். இந்த ME TOO,  ஓர் அமைப்பாக உருமாறும் பட்சத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும்  பாலியல் வன்கொடுமைகளும் அத்து மீறல்களும் குறையும் என்றே எனக்குத் தோன்றுகிறது. 

நன்றி ஊடறு

http://www.oodaru.com/


19.10.2018

யோகி

 

வியாழன், 18 அக்டோபர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 4



கிட்டதட்ட மூன்று நாட்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்தாலும், எங்கும் போய் சுற்றிபார்க்கூடிய சூழல் எனக்கு அமையவே இல்லை. அதனால் எல்லாரும் சொல்லும்  மட்டகளப்பின் அழகியலை என்னால் விவரிக்கமுடியாதது வருத்தம்தான். ஆனாலும், நான் எதையுமே மட்டகளப்பில் பார்க்கவில்லை என்று சொல்லிட முடியாது. ஊரணியில் தங்கியிருந்த நாட்களில்  தினமும் காலையில் காப்பி டம்ளரோடு எதிரிலிருக்கும் வாவியைப் பார்த்துக்கொண்டே அருந்தி முடித்துவிட்டு ஒரு நடைப்பயணம் போய் வருவேன். மனதிற்கு இதமான பொழுது அது. ஊரைவிட்டு வந்து 3 நாட்கள் ஆகியிருந்தது. என்னைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு தகவலும் சொல்லவில்லை என்பது மட்டும் அந்த நேரத்தில் என் சிந்தனைக்கு வந்துபோனது.


15-ஆம் தேதி இரவு கடற்கரைக்கு போனோம். சுனாமியின்போது பாதிக்கப்பட்ட கடற்கரையென்று தோழியர்கள் சொன்னார்கள். அதன் ஞாபகமாக அங்கே விழுந்துகிடக்கும் தேவாலய கட்டிடத்தின் ஒரு பாகம் சுனாமியின்  அடையாளத்தைப் பேசுகிறது. கடற்கரையின் வேகம் இரவில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அசந்தால் ஆளைச் சுருட்டிக்கொண்டு போய் தனகுள்ளே மறைத்துவைக்கும் கள்ளத்தனம் கொண்ட கடற்கரை அது. கவனமாக இருக்கும்படியான அறிவிப்புகளைப் பல இடங்களில் காணமுடிந்தது. உல்லாச  கடற்கரைக்கே இருக்கும் இலக்கணம் எதுவும் இந்தக் கடற்கரைக்கு இல்லை. அதாவது கடற்கரையை சுற்றி நடத்தும் சிறு தொழில் வியாபாரிகளின் எந்தக் கடைகளும் அங்கு இல்லாதது ஆச்சரியமாக இருந்தது எனக்கு. குறைந்த பட்சம் ஒரு டீ கடைகூட இல்லை. ஆனால் ஐஸ் கிரீம் வியாபாரம் மட்டும் இருந்தது. இரண்டு ஐஸ் கிரீம் லாரிகள் குறைந்த அளவிலான வகையில் மட்டும் ஐஸ் கிரீம் வைத்திருந்தனர். சோளம், சுண்டல், மிக்ஸர், பழங்கள் எனக் கடற்கரையை கலைக் கட்டும் எந்த வியாபாரமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கடற்கரையைச் சுற்றி மின் விளக்குகள்கூட இல்லை. இருட்டில் அலைகள் துள்ளல் ஆட்டம் போடுகின்றன. அதைப் பார்த்து ரசிக்கலாம், ஆனால் அதில் இறங்கி விளையாடுவது மரணத்தோடு விளையாடுவதற்குச் சமமானதுதான்.  அலையின் சாரல் படும் தூரத்தில் நாங்கள் கரையில் அமர்ந்தோம். நன்றாகப் பாடக்கூடிய கவின்மலரை பாடச்சொல்லிக் கேட்டுக்கொண்டோம். தோழியர்களின் விருப்பத்தைக் கவின் நிராகரிக்கவே இல்லை.. "போன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்' அவர் பாடலை தொடங்கி முடிக்க, மனது உருகி வழிந்து அலையோடு கலந்தபடி போய்க்கொண்டிருந்தது.



அந்த மனநிலையோடு கடற்கரையில் கால் நனைக்கப் போனேன். எனக்குக் கடற்கரைகளில் குளிப்பது என்பது கொஞ்சம் பயம்தரும் விஷயமாகும். ஆனால் எந்தக் கடற்கரையிலும் கால் நனைக்காமல் வந்ததே இல்லை. எங்கிருந்தோ வரும் அலை என் காலை பற்றிக்கொள்ளும்போது உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா என மனதில் கேட்டுக்கொள்வேன். எப்போதிலிருந்து இப்படிக் கேட்க தொடங்கினேன்  எனத் தெரியவில்லை.  பூலோகத்தின் எந்தக் கடற்கரைக்கு போனாலும் நான் இதை கேட்காமல் இருக்கப்போவதில்லை என்று மட்டும் தெரியும்.  
எங்களோடு சில இலங்கை தோழியரும் இருந்தனர். அவர்கள் சுனாமியின்போது ஏற்பட்ட இடர்களை விவரித்த படி வந்தனர். இலங்கை போர் ஒரு வரலாற்றுச் சோகம் என்றால் சுனாமி மற்றோரு சோகம். இந்த நூறாண்டில் பிறந்தவர்களால் இந்தக் காயங்கள் ஏற்படுத்தியிக்கும் வலியைச் சாகும் வரை சுமந்துகொண்டுதானே இருக்க முடியும்?


தொடர்ந்து நாங்கள் தோழி பிரொபி வீட்டுக்குச் சென்றோம். அவித்து சுட்ட மரவள்ளிக்கிழங்கையும் மாட்டிறைச்சி சாம்பலையும் பரிமாறினார். அது ஒரு வித்தியாசமான சாப்பாடு. இதுவரை நான் எந்த நாட்டிலும் அதைச் சாப்பிடவில்லை. காரப்பொடி தூவிய வெறும் கிழங்கை சாப்பிட்டாலே அவ்வளவு சுவையாக இருந்தது. மட்டகளப்பு உணவு என்றார்கள்.

இரண்டாம் உலகப் போரின்போது உணவு தட்டுப்பாடு இருந்த காலத்தில்  பலர் உயிர்வாழக் காரணமாக இருந்தது மரவள்ளிக்கிழங்குதான்  என்றேன் அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவில்லை.

17-ஆம் தேதி காலையில் நாங்கள் விஜி சேகர் அம்மா வீட்டில் கண்விழித்தோம். விஜிமா, கல்பனா மா, மாலதி மைத்திரி, கவின் மலர்  மற்றும் நான் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கடற்கரைக்கு நடந்தே சென்றோம். அது மீனவர்கள் பகுதி. தோணியும் வலையுமாகக் கடற்கரைக்கு போகும் மற்றும் திரும்பும் மீனவர்களைப் பார்க்க முடிந்தது. இஸ்லாமிய மீனவர்களாக அவர்கள் இருந்தனர். வெளியூரிலிருந்து வந்திருந்த எங்களைப் பார்த்தும் அவர்கள் உரையாட வந்தனர். மணற்கரையில் அமர்ந்து அறிமுக உரையாடல் தொடங்கியது. மலேசிய மீனவர்கள் தொடங்கி சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் வரை பேசினோம்.

அவர்கள் மீன் பிடிக்க  பயன்படுத்தும் தோணி நிறைய வித்தியாசமாக இருந்தது. மலேசியாவில் அந்த மாதிரியான தோணியே இல்லை. பெரிய பெரிய வால்பாறை மீன்களைக் கரைக்கு கொண்டு வந்து அங்கேயே, மணலை அள்ளிப்போட்டு  ஆய்ந்து விற்பனைக்கு ஏற்றுகிறார்கள். மீனின் கழிவை காக்கைகள் சண்டையிட்டு தின்று தீர்கின்றன. சூரியன் மெல்ல மேலெழும்ப, நாங்கள் மீனவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம். வவுனியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன... 

   தொடரும்..  ஐந்தாம்  பாகம்  வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/10/5.html 

திங்கள், 15 அக்டோபர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 3


பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள், பல முக்கியமான தலைப்புகளில் பெண்கள் கலந்துரையாடலில் நடத்துவதற்கு முன்கூட்டியே ஒழுங்கு அமைத்திருந்த படியால், எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே இருந்தன. அன்றைய நிகழ்வை ஓவியைக் கமலா வாசுகியும்  அவர்தம் தோழியரும் கொண்டுவந்திருந்த மேள முழக்கத்துடன் தொடங்கியது. கமலா வாசுகி ஒரு பன்முக திறமைகொண்டவர் என்பதைப் பலர் அப்போதுதான் தெரிந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சூரியா பெண்கள் அமைப்பின் கலாச்சார நிகழ்வாக ஒரு  நாடகத்தை அரங்கேற்றினர். வாழ்க்கையையே புரட்டி போட்ட போரும் பெண்ணின் வாழ்க்கையையும் அந்த நாடகம் பேசியது. அதிக இரைச்சல் இல்லாத கை இசையும் வாய்ப்பாட்டும் மட்டக்களப்பு மற்றும் போரை சந்தித்த பெண்களின்  இறுக்கமான சூழலை அங்குக் கொண்டு வந்ததுடன்,  வந்திருந்த அனைவரையுமே அது இறுக்கத்தில் தள்ளியது. உண்மையில் பாதிக்கப்பட்ட பலர் அங்கிருந்ததால் இந்தச் சூழலிருந்து வெளியில் வருவதற்கு அதிக நேரமெடுத்தது. கடந்த காலத்திற்கு போய்விட்ட பலரை அவர்களின் கண்ணீரிலிருந்து மீட்டுக் கொண்டு வரத்தெரியாத எங்களுக்குச் சங்கடத்தையே ஏற்படுத்தின. வடியும் கண்ணீரை அடக்குவதற்கு  ஆறுதல் வார்த்தைகள்தான் ஏது?


கலந்துரையாடல் தொடங்கியது.

ஆண்மொழியின் கட்டுடைப்பு, சடங்குகளும் சட்டமும், வர்க்கமும் சாதியும் மற்றும் கலைகளின் ஊடாக ஆகிய நான்கு பிரிவுகளில் சந்திப்புகள் 10 கட்டுரைகள் அன்றைய தினம் சமர்ப்பிக்கப் பட்டன.

 முதல் அமர்வில்

பழமொழிகளும் பெண்களும் - ஞானவள்ளி
அவர் சந்திப்புக்கு வரமுடியாத காரணத்தினால் இளைய தலைமுறையை சேர்ந்த தோழியினால் வாசிக்கப்பட்டது.
பாலிழிவு- செவ்வியல் வழக்கும் வாய்மொழி வழக்கும் - மாலதிமைத்ரி

இரண்டாவது அமர்வில்..

பாலியல் தொழிலும் ஆண் மேலாதிக்கமும் - வழக்கறிஞர் ரஜனி
முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்தமும் பெண்களும் - லறீனா அப்துல் ஹக்
மலேசிய இஸ்லாமியப் பெண்களுக்கு கந்துமுனை அகற்றும் சடங்கு - யோகி

மூன்றாவது பிரிவில்

பெண்ணிய நோக்கில் சாதி,மதம்,வர்க்கம் - சுகிர்தராணி
சாதியும் பெண்களும் - கவின்மலர்

நான்காவது பிரிவில்

ஓவியங்களின் ஊடான பெண்ணியப் பார்வை - கமலா வாசுகி
கவிதைப்பெண்களும் என் கவிதை அனுபவமும் - விஜயலக்சுமி
ஓவியங்களும் எனது அனுபவங்களும் - ஜெனனி

இந்த இருநாள் அமர்வுகளில் ஓவியை கமலா வாசுகி, வாணிசைமன், ஔவை, காயத்ரீ, ஹஷானா, சந்திரலேகா, வெற்றிச்செல்வி, யோகி, ஆகியோர் தலைமைதாங்கினோம்.

மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் வெவ்வேறு காலக்கடத்தில்  போரின் சுவடுகள் பதிவாகியிருக்கின்றன. ஆனாலும் அதன் ரணங்களும் வலிகளும் தீர்ந்தபாடில்லாமல் பெண்களையும் சிறுவர்களையும் பெரிய அளவில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. குறிப்பாகப் போரில் ஈடுபட்ட பெண்களுக்கு கிடைக்கும் உதவித்தொகை சிலக் காரணங்களைக் காட்டி நிராகரித்ததும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் கசப்பான உண்மையையும் கண்கூடே காண முடிந்தது. 

இப்படியான கலந்துரையாடலும் முரண்பாடுகளும் அதைப் பேசி தீர்ப்பதும் என அன்றைய பொழுது எங்கள் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் எங்கள் நாளாகவே நகர்ந்தது.
இறுதியாகக் கமலா கொண்டுவந்திருந்த மேளத்தைக் கொட்டி தோழிகள் கவிதை வாசிக்க, ஆனந்த நடனத்துடன் பெண்கள் சந்திப்பை நிறைவு செய்து தோழிகளுக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தோம்.

தொடரும்..
நான்காம் பாகம்  வாசிக்க  https://yogiperiyasamy.blogspot.com/2018/10/4.html







 

சனி, 13 அக்டோபர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 2

ஊடறு பெண்கள் முதல்நாள்  சந்திப்பு..


பெண்கள் என்றாலே அவர்களுக்கு நேரத்தோடு எதையும் செய்யத் தெரியாது, அவர்கள் அலங்கரிக்க நேரத்தை எடுத்துக்கொள்வார்கள் உள்ளிட்ட புளித்துப்போன குற்றச்சாட்டுகளுக்கு இனி வேலையே இல்லை என்பதைப் பெண்கள் நிரூபித்துக்கொண்டே வருகிறோம். எங்காவது சிலர் இன்னும் பழையபடியே  இருக்கலாம்? அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அது ஒரு நோய்மை; அவ்வளவுதான்.

சூரியா பெண்கள் அமைப்பினரின் பெண்களின் எழுச்சிப்பாடலோடு  சரியாகக்  காலை 10 மணிக்கு எங்கள் சந்திப்பு தொடங்கியது. ( இதன் காணொளியைக்  காண சொடுக்கவும் https://www.youtube.com/watch?v=wOdAj_OoxPY&feature=youtu.be ) நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள்,  இலங்கையின் பல பாகங்களிலிருந்து வந்திருந்தனர். ஊடறுக்கே இதுவே பெரிய வெற்றி எனக் கருதுகிறேன்.  தொடர்ந்து கொட்டகலை ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களின் தப்பிசை நடனம் வந்திருந்தவர்களை மேலும் உற்சாகம் மூட்டியது. பெண்கள் சந்திப்புக்காக  ஆசிரியைகள் ஓரிரு நாட்களிலேயே தங்கள் பயிற்சியை மேற்கொண்டு அதை நிறைவாக மேடையேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காணொளியைக்  காண சொடுக்கவும் https://www.youtube.com/watch?v=omgnwlqEQ7M&feature=share.
 
அதனைத் தொடர்ந்து அரசியல் சமூகவியல், கலந்துரையாடல், வன்முறைகளின் முகங்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் 12 தோழிகள் தங்களின் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அவர்களது கலாசாரம் பேணப்படுகின்ற ஒரு சூழலில் பெண்கள் தமது கருத்துக்களை கூறுவதற்கு பொதுவாக முன்வருவதில்லை. இவ்வாறான சூழல்களில் தைரியமாக முன்வருகின்ற பெண்களை வரவேற்கவேண்டும். ஊக்குவிக்க வேண்டும். அதைத்தான் ஊடறு பெண்நிலைச்சந்திப்பின் முக்கிய கருப்பொருளாகும் என றஞ்சி பதிவு செய்தார்.

 "அரசியல்"

இந்நிகழ்வு ஓவியை கமலா வாசுகியின் தலைமையில், அரசியலில் பெண்களின் பங்கேற்பு என்ற கருத்தில் கல்பனாவும், அரசியலும் பெண்களும் என்ற தலையங்கத்தில் செல்வியும் கலைவாணியும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஓரு நாட்டின் சனத்தொகையில் அரைப்பங்கிற்கும் அதிகமாக உள்ளவர்கள் பெண்கள். அவர்கள் அரசியலில் முடிவெடுக்கும் இடங்களிலும் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லையாயின் அது ஜனநாயக நாடாகாது.  பெண்கள் ஆண்களில் இருந்து வேறுபட்டவர்கள். அந்த வகையில் முடிவெடுக்கும் இடங்களில், கொள்கைகளை உருவாக்கும் நிலைகளில் பெண்களின் தேவையும் நோக்கமும் வேறுபட்டே அமையும். இது பெண்-ஆண் இணைந்த சமூகத்தை அரசியலினூடாக பிரதிபலிப்பதாக அமையும். போன்ற கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

சிறைக்கைதிகளாக இருக்கும் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி பிரியதர்சினி சிவராஜா, பெண் தடுப்பு கைதிகள் மீது குரூரமாக சிறை அதிகாரிகள் மேட்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தீர்மானித்துள்ளது என்ற தகவலை கூறினார்.
இணைய வீடியோ ; https://www.youtube.com/watch?v=aTNwNF2_AM4

முதலாம் தலைமுறையினர் ,இரண்டாம் தலைமுறையினர், மூன்றாம் தலைமுறையினர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் பெண்கள் பங்கெடுத்தது இன்னுமொரு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
அமர்வதற்கு நாற்காலிகள் அதிகமாக இருந்தும் எங்கே அரங்கை விட்டு நழுவி விடுவோமா என்ற எண்ணத்தில் அதை எடுத்துப்போட்டுக்கொள்ளாமல் பாயை விரித்து அமர்ந்து முழு கவனத்தையும் சந்திப்பிலேயே வைத்திருந்த தோழிகளுக்கு எப்படி அன்பைச் சொல்லாமல் இருப்பது? ஒவ்வொரு அங்கமாக முடிய, சிறு தோய்வும் ஏற்படாத அளவுக்கு அவ்வப்போது தேநீர் பலகாரங்கள் என வழங்கி எப்போதும் புத்துணச்சியோடே தோழிகளை  வைத்திருந்து ஏற்பாட்டுக் குழுவினர் அசத்தி விட்டனர். இதற்காகவே விஜி சேகர்(மாவுக்கும்) சூரிய அமைப்பு தோழிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஒரு அமர்வு முடிய நடக்கும் கலந்துரையாடலில் தோழிகள் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் கருத்துகளையும் வெளிப்படைத் தன்மையோடு பகிர்ந்துகொண்டனர். இதனால் மற்ற நாடுகளிலிருந்தும் மாகாணங்களிலிருந்தும் வந்திருந்தவர்களுக்கு நிறைவான ஒரு சந்திக்கவும் கலந்துரையாடலாகவும்  அது இருந்தது.

சௌமி முதல்நாள் சந்திப்பின் நெறியாளராக இருந்தால். அவளை நம்பிக் கொடுத்திருந்த பொறுப்பைக் கொஞ்சமும் பிசுராமல் செய்து முடித்திருந்தாள். மேலும், இந்தச் சந்திப்பை முழுமையாகக் காணொளி பதிவு செய்யும் பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். நான் கோகில தர்சினி, அனுதர்ஷி லிங்கநாதன் ஆகியோர் புகைப்படம் எடுக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தோம்.
இதுவரை நான் கலந்துகொண்ட பெண்கள் சந்திப்பில் முதல்நாள் அங்கத்தில் நடைபெறும் மனம் திறத்தல் என்ற அங்கம் இந்த முறை நடைபெறவில்லை. அதற்கான நேர அவகாசமும் இல்லாமல் போனது.  

அன்றைய எங்களை வரலாறு இவ்வாறு  எழுதத் தொடங்கியிருந்தது...

(தொடரும்)

மூன்றாம் பகுதி வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/10/3.html

வியாழன், 11 அக்டோபர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 1

'மீன் பாடும் தேன் நாடு'



13 செம்படம்பர்  இரவு தொடங்கும் நேரத்தில் நான் ஏறிய விமானம் கொழும்பில் தரையிறங்கியது. எந்தத் தடையும் இல்லாமல் 10 நிமிடத்தில் எல்லாச் சடங்குகளையும் முடித்துக்கொண்டு, விமான நிலையத்திலிருந்து  வெளியில் வந்தேன். ரஞ்சி(மா)வும் ஔவை(மாவும்)எனக்காகக் காத்திருந்தனர்.

ரஞ்சி மா-வை  நான் என் தாயைப்போல உணர்பவள்.  ஒவ்வொரு பெண்கள் சந்திப்பும் தாயை காணத்துடிக்கும் தவிப்புடனையே தொடங்கும்.  ஔவை-யை நான் இப்போதுதான் முதல்முறையாகச் சந்திக்கிறேன். அவர் முக்கியமான ஆளுமை என எனக்கு முன்பே தெரியும். கவிதை வாயிலாக அவர் எனக்கு எழுத்தால் அறிமுகம் ஆனவர். நேரில் இன்னும் இலகுவாகப் பழக இனியவராகவும் இருந்தார். இலங்கை பயணத்தின் தொடக்கம் சிறப்பாகவே இருந்தது.


எனக்கு  முன்பே இந்தியாவிலிருந்து வந்திருந்த மாலதி மைத்திரி , கல்பனா (மா), யாழினி ஆகியோர் மட்டக்களப்புக்கு கிளம்பிவிட்டிருந்தனர்.  மறுநாள் விடிய (செப்டம்பர் 14) சென்னையிலிருந்து வந்திறங்கிய தோழியர் சுகிர்தராணி, கவின்மலர், ஸ்னேகா , விஜய (மா) ஆகியோரை அங்கிருந்தே அழைத்துக்கொண்டு, நாங்கள் ( ரஞ்சி, யோகி, ஔவை, கோகில)  மட்டக்களப்பிற்கு கிளம்பினோம். இந்தப் பயணத்திற்காக வேன் ஏற்பாடு செய்திருந்தார் ரஞ்சி மா. கிட்டதட்ட ஆறிலிருந்து 7 மணிநேரப் பயணம் அது. விளாம்பழம் வாசனை வண்டியில் கமகமக்க, வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்திருந்த புட்டு வாழைப்பழம் முதலிய உணவு வகைகளை பகிந்து சாப்பிட்டபடியே நாங்கள் மட்டகளப்பை அடைந்தோம். இருள் சூழ தொடங்கியிருந்தது.




2018-ஆம் ஆண்டுக்கான ஊடறு பெண்கள் சந்திப்பை மட்டக்களப்பைச்  சேர்ந்தவரும் சூரிய பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான விஜி (மா) பொறுப்பெடுத்து ஒழுங்கு படுத்தியிருந்தார்.
மிக அழகான ஊர். 'மீன் பாடும் தேன் நாடு' என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு  கிழக்கு மாகாணத்தின்  மிகப் பெரிய நகரம். சென்ட் ஜோசப் தேவாலயம் திருமலை, ஊறணி வீதியில் எங்கள் சந்திப்புக்காக தேர்ந்தெடுத்திருந்த இடமாகும். இரு புறங்களிலும் வாவி சூழ இயற்கை வளங்கள் செழித்திருக்க பார்த்த மாத்திரத்திலையே மட்டக்களப்பு எங்களுப்பு பிடித்துப் போனது. மேலும், சந்தித்த வரையில் அன்பாகப் பழக்கக்கூடிய ஜனங்களும் அவர்களின் புன்னகை முகமும் எங்களை அந்நிய நிலம் என்று  உணராமல் மறுநாள் பெண்கள் சந்திப்புக்குத் தயாரானோம்.. 

தொடரும்.. .

இரண்டாம் பகுதி வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/10/2.html


 

புதன், 10 அக்டோபர், 2018

ஊடறு பெண்கள் சந்திப்பு 2018



ஊடறு பெண்கள் சந்திப்புக்கான எனது பயணம் 2015-ஆம் ஆண்டு இலங்கையிலிருந்துதான் தொடங்கியது. இலக்கிய குழுவோடு இணைந்து எழுத்தில் ஆர்வம் செலுத்திக்கொண்டிருந்த நான் இந்தப் பெண்கள் சந்திப்புக்குப் பிறகுதான் பொது செயற்பாடுகளில் என் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன். மேலும், ஆளுமை நிறைந்த பெண்களை  குறிப்பாக இலங்கை தமிழ்நாட்டு பெண்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு மிக எளிதில் கிடைத்தது. என்றாலும் அந்த வாய்ப்பு அமைய நான் என்னை அதற்கு  தகுதியுடைவளாக  உழைப்பைச் செலுத்தியிருந்தேன் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் பல அனுபவங்கள் இந்தப் பெண்கள் சந்திப்பு எனக்குக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு சந்திப்பு முடிய நான் அதைப் பதிவும் செய்திருக்கிறேன். அண்மையில் நடந்து முடிந்த ஊடறு பெண்கள் சந்திப்பு எனக்கு நான்காவது ஆண்டாகும். ரஞ்சி (மா) மற்றும் ஆழியால்(மா) இவர்களோடு புதியமாதவி (மா), யாழினி ஆகியோரின் கலந்துரையாடலில் முன்னெடுக்கப்படும் இந்தச் சந்திப்பு நினைப்பது போல சுலபமானதல்ல.  வெளியிலிருந்து பார்க்கும்போது எளிதாகத் தெரியும். ஆனால் பார்வைக்கும் செயலுக்கும் நிறைய நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதன் சவால்களும் கொடுக்கும் மனஉளைச்சல்களும் கொஞ்சம் நஞ்சமில்லை.  ஒரு பங்கேற்பாளராக வெளியிலிருந்து பார்க்கும் நான்  ஊடறுவிடமிருந்து நிறையவே அனுபவப் பாடங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

எனது பார்வையில், இந்த ஆண்டுக்கான  ஊடறு பெண்கள் சந்திப்பை எழுதுவது  சவாலான ஒன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதற்கு மூன்றுக் காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக இலங்கையில் பெண்கள் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பே, முதல் நாள் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்ற விடயத்தைச் சர்ச்சையாகிய விஷயம். ஊடறு பெண்கள் சந்திப்பு நடத்தத் தொடங்கியதிலிருந்து இந்த அஜெண்டா இப்படித்தான் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் , இது அஜெண்டா மட்டுமல்ல; இதற்காக ஊடறு தனக்கான  வலுவான  நியாயத்தையும் வைத்திருக்கிறது.

இரண்டாவதாகக் கொழும்பு விமான நிலையத்தில் நாங்கள் (பங்கேற்பாளர்கள்)  வந்திறங்கியதிலிருந்து கிளம்பும் வரைக்கும் எங்களின் இருப்புகளைத் தொடர்ந்து புகைப்படங்கள் மூலமாக தோழியர்  பதிவு செய்ததில் சிலருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை. அதன்  காரணமாக,  பதிவிட்டிருந்த கருத்துக்கள். "அந்த மண்ணில் நின்று எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது? "அங்கே என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது" உள்ளிட்ட முகநூல் நண்பர்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை. அவர்கள் இழவு நடந்த வீட்டில் தினம் தினம் ஒப்பாரியை எதிர்பார்க்கிறவர்கள். எம்மினம் எப்பவும் துக்கத்திலேயே இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு பேசுபவர்கள். உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், இலங்கையில் நடந்த இனஅழிப்பு அவர்கள் மனங்களைப் புண்ணாகி தழும்பாகி வைத்திருக்கிறது என்பதை நினைக்காமல், தன் பங்குக்கு ஏதாவது பேசிப் பேசி புண்ணை நோண்டிக் காயப்படுத்திக்கொண்டே இருக்கும் ரத்தப்பிரியர்கள்.

 மூன்றாவதாக மாலதி மைத்திரி நேர்காணலில் ஏற்படுத்திய சர்ச்சை. அது ஒரு தனி மனித தாக்குதல்போல் கையாளப்படுகிறது. கருத்து ரீதியாக விவாதம் செய்யாமல் விதண்டாவாதம் செய்யப்பட்டதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு பெண்கள் சந்திப்பை இத்தனை சர்ச்சைகளையும் தாண்டி பயணத்தையும் முடித்து நாடு திரும்பியிருக்கிறோம். எங்கள் சந்திப்பும் பயணமும் வெற்றிகரமாக முடிந்தது என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. குறைகள் இல்லாத செயற்பாடுகள் ஏது? குறைகளும், தோல்விகளும், முரண்பாடுகளும்தான் தேடலுக்கான கதவினை திறந்து நிறைவுக்கான பாதையை காட்டித் தருகிறது. சிறு குழந்தையைப்போல தவழ்ந்து, நின்று, நடைபழகி பின்புதான் பந்தயத்தில் ஓட வேண்டும். ஊடறு பெண்கள் சந்திப்பு எந்த நிலையில் நிற்கிறது என்று ரஞ்சி மா தான் சொல்லவேண்டும்.

கொழும்பில் தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகு கொழும்பிலேயே முடிவடைந்த என் இலங்கைப் பயணத்தை இரண்டாவது முறையாக வேறொரு பார்வையில் நாளையிலிருந்து எழுதப் போகிறேன்.   இந்தப் பெண்கள் சந்திப்பு தொடருக்கு 'பெண் எப்பொழுதும் பெண்ணாகதான் இருக்கிறாள்' என்று தலைப்பு வைத்திருக்கிறேன்...



 

வியாழன், 6 செப்டம்பர், 2018

சக்திவாய்ந்த பெண்கள் என்னை வியப்படையச் செய்ததில்லை….

நேர்காணல் : தோழர் சிவரஞ்சனி மாணிக்கம்
நேர்கண்டவர்: யோகி 



பல இன மக்கள் வாழும் மலேசியாவில் எல்லா மக்களும் தனதுரிமைக்காகப் போராடுகிறார்கள். மலாய்காரர்கள், தங்களுடைய நாடு எனக் கூறிக்கொண்டாலும் தன் இனத்தோடு பிறர் இனித்தவர்கள் சலுகைகளை பங்குபோட்டுக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. பிற இனத்தவர்களாகிய நாங்களோ (இந்தியர்கள்-சீனர்கள்)  மலேசியாவில் பிறந்த எங்களுக்கும் சம உரிமை கொடுப்பதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்புகிறோம். இதில் பூர்வகுடிகளின் நசுக்கப்படும் குரல்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. இந்நிலையில் பெண்களின் உரிமைக் குரல் எவ்வாறு மலேசியாவில் எடுத்துக்கொள்ளப் படுகிறது. அதிலும் 7 சதவிகிதம் மட்டுமே வசிக்கும்  இந்தியச் சமூகத்தில், அப்பெண்களின் குரல் அந்தச் சமூகத்தின் உள்ளேயே கேட்கப்படுகிறதா என்றால் அப்படியான பெண்கள் இருக்கிறார்களா என்ற எதிர்க் கேள்விகள்தான் வரும்.

மூவின மக்கள் இணைந்து மக்களுக்காகக் குரல்கொடுக்கும் மலேசிய சோசியலிச கட்சியின் தொழிலாளர் பிரிவைச் சேர்ந்த தோழர் சிவரஞ்சனி மாணிக்கம் என்பவரை மலேசிய தமிழ் சமூகம் அறிந்திருக்குமா என்றால் “இல்லை என்றுதான் பதில் வரும். மலேசியாவில் மேல்தட்டு வர்க்கத்தினராலும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் இலக்கியவாதிகள் மத்தியிலும் பெரிதாக அறியப்படாதவராகத்தான் இருக்கிறார் இவர். எளிய மக்களுக்கும் ஒடுக்கப்படும் சமூகத்திற்கும் குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் நிலை எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.  அதிலும் அவர்கள் பெண்ணாக இருந்துவிட்டால் முழு செவிடர்களாகவும் குருடர்களாகவும் மாறிவிடும் அபாயம் நிறையே இருக்கிறது மலேசிய  இந்தியச் சமூகத்தில். தன் வாழ்நாளின் முக்கால் பாதியை மக்களுக்கான போராட்டத்திலேயே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும்  தோழர் சிவரஞ்சனி மாணிக்கத்தை நேர்காணல் செய்வது எனது கடமையாகவே கருதுகிறேன். 

1.சிவரஞ்சனி என்பவர் யார்? மலேசிய இந்தியச் சமூகம் சிவரஞ்சினியை எப்படி அடையாளம் காண்கிறது?

ஓர் சராசரி பாட்டாளிவர்க குடும்பத்தில் ஆறு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தவள் நான். குடும்ப வறுமையையும் தாண்டி அடிப்படைக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம்வரை சென்று  இளங்கலை முடித்தேன். எனக்குச் சமுதாயத்தில், தற்போது  இருக்கும் அடையாளத்திற்கு வித்திட்ட இடம் பல்கலைக்கழகம்தான். அங்குதான் என் பிறப்பின் அர்த்தம் அறிந்தேன். அங்குதான் சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு பிரச்சனைகளைக்கண்டு கண் விழித்தேன். ‘என் வாழ்க்கை, என் தலைஎழுத்து என்று வாழ்ந்த நான், அது தலையெழுத்தல்ல, முதலாளித்துவத்தின் சூழ்ச்சி என்ற வர்க்க சிந்தனை உதிர்த்த இடம் பல்கலைக்கழகம். அவற்றை நான் ஏட்டுக்கல்வியில் கற்கவில்லை. ‘மாணவர் சமூக நல அணி என்ற குழுவில் உறுப்பினர் ஆனதில், என் பொதுவாழ்க்கை உலகின் கதவு திறக்கப்பட்டது. முதலாளித்துவத்தை எதிர்த்துத் தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. மலேசிய சோசியலிச கட்சியில் என்ன இணைத்துக் கொண்டு சமுதாயத்தில் நிகழும் அநியாயங்களுக்கும் ஏற்றத்தாழ்வுகளையும்  குரல் கொடுத்து வருகிறேன். “தொழிலாளர் பிரச்சனையாக  இருந்தால் சிவரஞ்சனியை போய் பாருங்கள் என்கின்ற அடையாளம் எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். அதுவே எனக்கு போதுமானதும் கூட.   

2.உங்கள் அனுபவத்தில் மலேசியாவில் நடந்த போராட்டங்களில் மிகத் தீவிரமாக நீங்கள் கருதுவது எதை?

மலேசியாவில் போராட்டங்கள் இன்னும்  ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. 10 ஆண்டுக்கு முன்பு நடந்த இசா சட்டத்தை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டம், 4 ஆண்டுக்கும் முன்பு நடந்த ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து நடந்த மே தின பேரணி, மற்றும் அனைவராலும் மறக்க முடியாத பெர்சே போராட்டங்கள் முதலியவற்றைச் சொல்வேன்.  அதிலும் பெர்சே போராட்டம், மூவின மக்களையும் ஒன்றிணைத்து ஒரே குரலாக  தேர்தல் ஊழலைக் கேள்வி கேட்டது. அந்தப் போராட்டம் மலேசிய வரலாற்றில் மிக முக்கிய வரலாற்றுப் பக்கங்களை கொண்டது என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை.   இதற்கு மத்தியில் ஆங்காங்கே நாட்டில் இன்னும் நடந்துகொண்டிருக்கும்  தொழிலாளர்கள் பிரச்சனை சம்பந்த போராட்டங்கள், பூர்வக்குடி மக்களின் போராட்டம், வீட்டுறிமை போராட்டங்கள் , விவசாயிகளின் போராட்டம் இன்னும் எத்தனையோ போராட்டங்கள்  தீவிரமானவையாகத்தான் பார்க்கிறேன்.

3.மலேசியா சூழலில் பெண்கள் பங்களிப்புகள் அல்லது ஈடுபாடுகள் குறிப்பாக அரசியல் மற்றும் சமூகவியல் உள்ளிட்ட விவகாரங்களில் எவ்வாறு உள்ளது. எவ்வாறு அது இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
பொதுவாழ்க்கையில், மலேசியாவில் பெண்களின் பங்களிப்பு பெருமளவு பின்தங்கித்தான் இருக்கிறது. தற்போது ஆண்களைக் காட்டிலும் அதிகமான பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு நுழைவதாக ஆய்வு காட்டுகிறது (http://www.astroawani.com/berita-malaysia/wanita-jauh-lebih-cemerlang-dalam-pendidikan-berbanding-lelaki-tetapi-157124), ஆனால் இந்தக் கல்வி அறிவு பெண்களின் பொது வாழ்க்கை ஈடுபாட்டை அதிகரிக்கிறதா என்பது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஈடுபடும் சிறு பகுதி பெண்களும் தலைமைத்துவத்தில் பங்கெடுப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன? என்னைப் பொறுத்தவரை இந்த நிலைக்குக் காரணம் ஆணாதிக்க அமைப்பு முறைதான் என்பேன். ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்பதை ஓர் ஆண் தீர்மானிக்கும் நிலை மாற வேண்டும்.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது எனப் பலர் கூறுவதை நான் கேட்டுள்ளேன். இதை எதற்குச் சம்பந்தப்படுத்துவார்கள் தெரியுமா? ஒரு பெண் எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்திருந்தாலும், பெரிய பதவியில் இருந்தாலும் ஆணுக்கு நிகராக வர முடியாது என்று கூறும் சமுதாயத்தில்தான் நாம் இன்னமும் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அப்படியே தப்பித்தவறி அதிலும் சில பெண்கள் பொது வாழ்க்கைக்கு வந்தால், அங்கிருக்கும் ஆண்கள் அவர்களை முன்னுக்கு வர விடாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்கி விடுவார்கள்.

ஆயினும் பலர் நினைக்கின்றனர்,  இப்போதெல்லாம் தெருப் போராட்டங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளதே, அது ஒரு நல்ல அறிகுறிதானே என்று. ஆம், நான் அதை மறுக்கவில்லை, ஆனால், அதை மட்டுமே வைத்து, பெண் முற்றிலும் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் கூற முடியாது.
பி.எஸ்.எம் அதிகமான அடிமட்ட மக்களுக்கான பிரச்சனைகளின் குரலாக இயங்குகிறது. இதுதொடர்பான கலந்துரையாடல் கூட்டத்திற்கு அழைக்கும் போது, பெண்கள் பல காரணங்கள் கூறுவர், கணவன் அனுமதிக்கவில்லை, பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும், வீட்டு வேலைகள் இருக்கிறது எனச் சொல்வதற்கு கை நிறையக் காரணங்கள் அவர்களுக்கு இருக்கிறது. பங்கேற்கும் பெண்களோ வாயைத் திறந்து ஆலோசனை கொடுப்பது அரிது. நடவடிக்கை குழு அமைத்தால் அதில் பங்கேற்க அவர்களைக் கெஞ்ச வேண்டியுள்ளது. இப்படியான சூழ்நிலைகள் பெண்களை பொதுவாழ்க்கையிலிருந்து தள்ளி வைக்கிறது.

பெண்களைப் பலப்படுத்தும் பணிகள் மிக முக்கியம். குடும்பத்தில் பெண் சரி பாதி எனும் சிந்தனையை உருவாக்க வேண்டும், அவள்தான் குடும்பத்தின் தூண் என்ற பழைய பஞ்சாங்கத்தைத் தூக்கி எரியச் செய்ய வேண்டும். குடும்பத்தில் கணவனும் மனைவியும் சமபங்கு வகிக்க வேண்டும். வீட்டு வேலைகளிலிருந்து, பிள்ளைகள், கவனிப்புவரை பங்கிட்டு செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தங்களுக்காக வாழ்க்கை இலட்சியம், விருப்பு வெறுப்பு இருப்பதை உணர வேண்டும். ஒருத்தரை ஒருத்தர் ஆதிக்கம் செய்யாமல், ஆதரவாக இருக்க வேண்டும். ஆணுக்கொரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம் எனும் ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டும்.

பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடும்போது அவர்களின் கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும். திறமைகள் பாராட்டப்பட வேண்டும். பெண் என்பதால் அவள் ஒடுக்கப்படக்கூடாது. இது நடப்பது அத்துனை சுலபமல்ல. இன்றைய சமுதாயத்தில் ஆண் பெண் இருவருமே ஆணாதிக்க சிந்தனையில் இருக்கின்றனர். பல நேரங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருக்கின்றனர்.
ஆணாதிக்கம் முதலாளித்துவ ஆட்சி முறையின் அம்சமாக உள்ளது. இந்தச் சிந்தனை மாற வேண்டுமாயின், முதலாளித்துவ ஆட்சியையே நாம் மாற்றினால்தான் முழுமைபெறும். இதைப்பற்றிப் பேசும் போது, பல வருடத்திற்கு முன் நான் புரட்சியாளர் லெனினின் ஒரு உரையைப் படித்த ஞாபகம் வருகிறது – என் நாட்டில் என்று பெண்கள் சமையலறையிலிருந்து விடுதலைப் பெறுகிறார்களோ, அன்றுதான் என் மக்கள் முழுமையாக முதலாளித்துவத்திலிருந்து விடுபட முடியுமெனக் கூறியிருந்தார். இன்னும் எவ்வளவோ செய்யவேண்டியுள்ளது  பெண்கள் விடுதலைப் பெற.

4.14-வது பொதுத் தேர்தலில் பி எஸ்எம் கட்சி அடைந்த தோல்வியை எவ்வாறு வரையறுக்கலாம்?
நாட்டில் மொத்தம் 222 நாடாளுமன்ற தொகுதி. அதில் பி.எஸ்.எம் போட்டியிட்டது 3 நாடாளுமன்ற தொகுதியிலும் , 12 சட்டமன்ற தொகுதியிலும் மட்டுமே. இது மொத்த தொகுதியில் வெறும் 3% ஆகும்.  போட்டியிடும் முன்பே தெரியும் நாம் ஒரு மாநிலத்தையோ அல்லது நாட்டையோ பிடிக்க முடியாது என்ற உண்மை. பி.எஸ்.எம் ஒரு சிறிய கட்சி, ஆனாலும் குறிப்பிடத்தக்க ஒரு கொள்கையான கட்சியாகும். பொதுத்தேர்தலின் பி.எஸ்.எம் போட்டியிட்ட 15 தொகுதியிலும் தோல்வி கண் டது. இதற்கு முன் வெற்றி பெற்ற தொகுதியான சுங்கை சிப்புட்டிலும் அது தோல்வியை தழுவியது.

கட்சி, ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்ற தாக்கத்தைவிட, தேசிய அளவில் மக்கள்  துணிச்சலாக 60 வருடமாக ஆட்சியில் இருந்து வந்த கட்சியை ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்துள்ளனர் என்ற ஆனந்தம்தான் அதிகமாக இருந்தது. எந்த ஆரவாரமும் இல்லாமல், அமைதியாக நடந்தேறியது இந்த ஆட்சி மாற்றம் ஓர் அரசியல் மௌன சுனாமிதான். ஆனாலும், என்னைப் போன்ற இடது சாரிகள் இந்த ஆட்சி மாற்றத்தைக் கொண்டாட ஒன்றுமில்லை எனலாம். முதலாளித்துவ ஆட்சியிலிருந்து இன்னொரு முதலாளித்துவ ஆட்சிக்கு நாடு மாறியிருக்கிறது. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், நடந்த மாற்றத்திற்கும் இனி நடக்கப்போகும் மாற்றத்திற்கும் மக்களாகிய அவர்கள்தான் காரணம் என நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்குமே அதற்குத்தான் இந்த ஆனந்தம்.  60 வருட ஆட்சியைத் தூங்கி எரிந்தவர்கள், நாளடைவில் தாங்கள் செய்த மாற்றம் ஏமாற்றத்தைத் தரும் தருணத்தில் அடுத்த கட்ட மாற்றத்திற்குத் தயங்க மாட்டார்கள். ஆக, நமக்கு எதிர்காலம் பிரகாசமாகத்தான் இருக்கிறது என்பதில் எனக்குப் பேரின்பம்.
இந்தத் தேர்தலில் நாங்கள் தோல்வியுற்றதிற்கு மக்கள் வர்க்க சிந்தனையை நிராகரித்து விட்டனர் எனக்கூறுவது அர்த்தமற்றது. பாரிசான் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, இன்னொரு பெரிய கட்சிக்கு ஓட்டுப் போட்டால் மட்டுமே அது சாத்தியம் என்ற அடிப்படையில் மக்கள் செய்த முடிவு இது. மக்கள் முடிவுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். மலேசியாவில் வர்க சிந்தனையை மேலோங்கச் செய்ய எங்களுக்கு அதிக வேலைகள் காத்திருப்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. எங்கள் மக்கள் பணி தொடரும்.  

 5.மலேசியாவில் சக்தி வாய்ந்த பெண்கள் என நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால் யாரைக் குறிப்பிடுவீர்கள்?

சக்தி வாய்ந்த பெண்களும் அவர்களின் குரல்களும் நம் நாட்டுக்குத் தேவையான ஒன்றுதான். நிச்சயமாக அவர்களின் குரல்களுக்கு உலகளவில் பிரச்சனைகளை கொண்டு செல்லக்கூடிய பார்வை இருக்கிறது. நான் மதிக்கும் அந்தப் பெண்கள் சக்திவாய்ந்த பெண்களாக இருந்தாலும் என்னை வியப்படையச் செய்ததில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும், எந்த முகவரியும் பெரிய அளவில் கவனக்கூடிய இல்லாத பெண்கள் பலர் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள். அடிமட்டத்தில் இருக்கும் அவர்களின் துணிச்சலும் போராட்ட குணமும் செயல்களும் யாரும் பதிவு பண்ணாமல் இருக்கலாம். அதற்காக அவர் சக்தியில்லாத பெண்கள் என ஆகிவிடாது. நான் இவரைப்போல வாழவேண்டும் என்றும் இவர்தான் என் முன்னுதாரணம் என்றும் நான் விரும்பும் சக்தி வாய்ந்த பெண் பி எஸ் எம் கட்சியில் செயலாளராக இருக்கும் சரஸ்தான். மக்கள் பிரச்னை வரும்போது தனது குரலை உரத்துப் பதிவு செய்வதுடன் , தொடர் போராட்டங்களை சோர்வின்றி முன்னெடுப்பார். நேர்மையான அறம் உள்ள மனுஷி அவர்.
6. மலேசிய தொழிலார்களுக்கு நாட்டில் கிடைக்கும் சலுகைகள் குறித்தும் அடிப்படை உரிமை மற்றும் மாத வருமானம் குறித்தும் தொடர் கேள்விகளை பிஎஸ்எம் முன்வைக்கிறது. இத்தகவல்கள்   மக்களுக்கு எவ்வாறு சென்று சேர்க்கிறது?

உண்மை. மலேசிய சோசியலிஸ்ட் கட்சி தொழிலாளர் கட்சி என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால், நம்முடைய போராட்டம் எத்தனைப் பேரை சென்றடைந்துள்ளது என்பதும் ஒரு கேள்விக்குறிதான். இன்று நாட்டில் அடிப்படை சம்பள சட்டம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அதற்கு ஆரம்பக் காலத்திலிருந்து குரல் கொடுத்து வந்தவர்கள் பி.எஸ்.எம் கட்சியினர்தான். ஆனால், கட்சி சிறியதாக இருப்பதாலும், முன்னணி ஊடகங்களால் கவனம் பேறாதலாலும் எங்களின் போராட்டங்கள் முழுமையாக அனைவருக்கும் சென்றடைவதில்லை. ஆனால், எங்களுடன் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அடிமட்ட மக்களுக்கு,  போராட்டங்களில் முழுமூச்சாக இருக்கின்றனர் யார் என்பது தெரியும். 10 வருடத்திற்கு முன்பும் இப்போதும் ஒப்பிட்டுப் பார்த்தால் பிஎஸ்எம் கட்சி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது எனக் கூறலாம்.
நாட்டிலிருந்து எல்லா மூலை முடுக்கிலிருந்தும்  பிரச்சனைகளுக்கு மக்கள் எங்களை அழைக்கின்றனர். ஆனாலும், இந்த அறிமுகம் போதாது என்பதை நான் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். சமூக ஊடகங்கள் அபார வளர்ச்சி அடைந்து வரும் இந்தக் காலத்திலும், செய்கிற வேலையை விளம்பரப்படுத்த வேண்டாமே என்று கூறும் கட்சி உறுப்பினர்கள் எங்களிடையே இருக்கின்றனர். இதுகூட எங்களின் பலவீனமாக இருக்கலாம். ஆனால், இந்தச் சூழ்நிலையிலும், ஒவ்வொரு மாதமும் கட்சி உறுப்பியம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. கொள்கை உள்ள எங்கள்  கட்சியை நாடி பலர் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். மக்களின் அடிப்படை பிரச்சனையில் அக்கரைக் காட்டும் பி.எஸ்.எம் கட்சிக்கு கண்டிப்பாக ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  

 7. பிஎஸ்எம் கட்சி ஓர் ஏழைகட்சி என்றும் அதனால் மக்களுக்கு என்ன நன்மையைச் செய்துவிட முடியும் போன்ற  கேலி பேச்சிற்கு, கட்சியின் ஓர் அங்கத்தினராக என்ன பதில் சொல்வீர்கள்? 

நாங்கள் ஏழைக்கட்சிதான். அதனால்தான் எங்களுக்கு ஏழைகளின் பிரச்சனை சரிவரப் புரிகிறது, அதற்கான போராட்டங்களில் முன்னெடுக்க முடிகிறது. இதில் கேலி செய்ய என்ன இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குபவர்களைத்தான் நாம் கைக்கொட்டி சிரிக்க வேண்டும். அதை எதிர்த்துப் போராட வேண்டும். ஒருவனுக்குப் பிரச்சனை வரும்போது, அப்போதைய தேவைக்கு பணம் கொடுத்து, அன்றைய பிரச்சனையை தீர்ப்பதில் ஈடுபடுபவர்களின் கண்ணோட்டம்தாம் இது. ஒரு நாள் ஒருவருடைய பிரச்சனையை தீர்க்க ஆர்வம் காட்டாமல் அவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்ன என்று தெளிவடைய செய்து அதைத் தீர்ப்பதற்கு தீவிரம் காட்டுவதுதான் நேர்த்தியான செயல் என நாங்கள் கருதுகிறோம். நன்றி