புதன், 10 மே, 2017

ஒரு காது கேட்காமல் போனால் என்ன ?

நீண்ட நாள் கடும் காய்ச்சலின் தீவிரத்தினால்,  என் வலது காது கேட்கும் செயல் இழந்து சில  மாயாஜால வித்தைகளை காட்டிக்கொண்டிருக்கிறது. காது என்பது எத்தனை முக்கியம் என்று நான் உணர்ந்ததே இல்லை. மூன்று துளைகள் இட்டு அதில் தோடுகளை மாட்டி  
அலங்காரம் செய்திருக்கிறேன்.

 சின்ன சின்ன மூக்குத்திகளை தோடுகளாகவும் சில காலம் அணிந்திருந்தேன். பித்தளை, வெள்ளி, தங்கம் உள்ளிட்ட உலோகங்களில் செய்த ஜிமிக்கிகள் , தொங்கட்டான்  தோடுகள் என பலவகை தோடுகளை என் காதின் மடல் பார்த்துவிட்டது. புதிதாக எந்த டிசைன் வந்தாலும் அது காதின் மடலை ஒட்டினாற் போல் இருந்தால் வாங்கி அணிந்து பார்த்துவிடுவேன். 
 
கனமான எந்த தோடுகளையும் என் காதுகள் ஏற்காது. வலி உயிரை எடுத்துவிடும்.  ஒவ்வொரு நாளும் குளியலுக்குப் பிறகு காது குடைவது ப(வ)ழக்கம்.  இவைதான் காதுக்கு நான் செய்திருக்கும் மரியாதை.

காது  வலி என்று  இதுவரை எந்த சிகிசைக்கும் நான் சென்றதில்லை. கட்டி மாதிரியான விஷயங்களை கொடுத்து, என் காதுகள் என்னை இம்சித்ததில்லை.  இதுவரை அடுத்தவர் விஷயத்தை
ஒட்டு கேட்டதில்லை. ஊடகத்தில் இருக்கும்போது என் காதுகள் செய்திகளை சேகரிக்க தீட்டி வைத்திருப்பேன். பதில் உரைப்பவர் திணறிப்போகும் அளவுக்கு செய்திகளை என் காதுகள் உள்வாங்கி கொடுக்கும். அதன்  தொடர்ச்சியாக என்னால் எழுப்பப்படும் கேள்விகள் சில நேரம் எதிரில் நிற்பவரை திணரடிக்கும்

 தற்சமயம் இந்த காது என்னை எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் இம்சித்து கொண்டிருக்கிறது. நான் பேசுவது என் காதின் உள், பேரிச்சலாக கேட்கும்போது, கைகளால் காதை பொத்தி கொள்கிறேன். இருமுறை என்னை நானே காதுகளில் படும்படி  அறைந்துகொள்ளும் சுழலும் ஏற்பட்டுவிட்டது. பேரிரைச்சல் நின்று விடாதா என்றுதான்.  மீண்டும் காதுகள் கேட்க வேண்டும் என்ற அற்ப ஆசை என்று நினைத்து கொள்ள வேண்டாம்.

எனக்கு மட்டுமே கேட்கும் காதின் உள் இரைசல்  தலைவரை ஏறும் போது வான்கோவை போல சனியன் பிடித்த காதை வெட்டி எரிந்துவிட்டால் என்ன என்றுதான் தோன்றுகிறது. அதை தவிர்த்து விட்டு பார்த்தால்   இந்த காதுகேளாத காலங்கள் கைபேசி இல்லாத சுதந்திர காலங்கள் போலவும் இருக்கிறது. எப்போதுமே புறம் பேசுதலிலும், அதை கேட்பதிலும் ஆர்வம் இருந்ததில்லை எனக்கு . புத்தகம் ஏதேனும் வாசித்து கொண்டிருந்தால் என் அருகிலோ அல்லது என்னிடமோ யாராவது  பேசுகிறார்கள் என்றால் நிச்சயம் விளங்காது. என்னை உலுக்கினால்தான் திரும்பி பார்ப்பேன். அந்த அளவுக்கு என் காதுகள் ஒத்துழைப்பு வழங்கியிருப்பதையும் நன்றியுடன் நினைத்து பார்க்க வேண்டியிருக்கு.

என் காதை மருத்தவரிடம் காட்டுவதற்கான எண்ணம்  இந்த நிமிடம் வரை வரவே இல்லை. ஏன் ஒரு காது, வாழ்வதற்கு போதாதா? இன்னும் சில வருடங்களில் 40 வயதை நெருங்கி கொண்டிருக்கும் நான் இன்னும் எத்தனை ஆண்டுகள்  இந்த பூமியில் வாழ்ந்து தாக்கு பிடிக்க போகிறேன் என்று தெரியாது. இப்போதுவரை சொல்லிகொள்ளும்வரை எதையும் செய்துவிடவுமில்லை.

இந்த லட்ஷணத்தில் ஒரு காதுக்கு ஓய்வு கொடுத்தால்தான் என்ன?  இந்த 36 வயதுக்குள் என்னென்னவோ வார்த்தைகளையும் எண்ணிலடங்கா குற்றசாட்டுக்களையும் என் காதுகள் கேட்டுவிட்டன.  இன்னும் என்னென்ன கேட்க வேண்டியிருக்கோ. அதையெல்லாம் கேட்டு கிரகிப்பதற்கு இந்த ஒத்தக்காது  போதாதா என்ன?

 செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

வள்ளுவர் சொன்னதில் நான் கொஞ்சம் முரண்பட்டு  போகிறேனே..
அதில் என்ன தப்பு?
கண்கள் மாதிரியும் கிட்னி மாதிரியும் இரண்டு உறுப்புகள் இருப்பது மாதிரிதான் காதும் இரண்டு இருக்கிறது. ஆனால், அதில் ஒன்று தானம் செய்ய முடியவில்லையே? ஒரு காதை தானம் செய்ய முடிந்தால் எத்தனை பேர் தலையாய அச்செல்வதில் இன்பம் அடைவர் ? என் மொத்த உறுப்புகளையும் நான் சில ஆண்டுகளுக்கு முன்பே தானம் செய்து விட்டேன். ஆனால், நான் உயிரோடு இருக்கும் போது, என் உறுப்புகள் தானம் செய்ய நேர்ந்தால் அதை பெற்றவருக்கு எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம் இல்லையா? குறிப்பாக என் காது என்னிடம் பழக்கப்பட்டிருந்த மாதிரியே பிறரிடமும் இருக்கிறதா? என்று சோதிக்கலாம். 

அவ்வப்போது எழுந்து அடங்கும் இந்த ஆசையை வெளியில் சொன்னால் மனநோய் என்கிறார்கள். ஒரு காது கேளாத இந்த நாட்களில் எனக்கு வான்கோவின் காதுதான் அவ்வப்போது நினைவில் வந்து செல்கிறது. ஒரு கண்ணையோ அல்லது  காலையோ வெட்டியெறிந்திருக்கலாம். அல்லது அவனின் ஆணுறுப்பை அறுத்து காதலிக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் , எதற்கு காதை அறுத்து கொண்டான்?   பேரிரைச்சல் தான் காரணமா? அல்லது மனநோயின் தீவிரமா? வெட்டிய காதில் கட்டுப்போட்டு தன்னை தானே வரைந்துகொண்டானே... என்ன மாதிரியான  மனநிலை கொண்டவன் அவன்.

எத்தனையோ கேள்விகளை எழுப்புவது மனமா அல்லது மூளையா என்ற சந்தேகம் தொடர்ந்துகொண்டிருக்க மிக அமைதியாக இருக்கும்  காது கேள்வி குறியின் வடிவத்திலேயே எப்போதும் நம்மை கேள்வி கேட்டு கொண்டிருக்கிறது.  குழந்தை பிராயத்திலிருந்து காதின் மடலை மடித்து விட்டு விளையாடும் பழக்கம் உள்ள எனக்கு திடீரென காது கேட்காத இந்த புது பிரச்சனை என்னைவிடவும் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. பல கேள்விகளுக்கு பதில் கிடைப்பதே இல்லை. காதும் காதும் வைத்த மாதிரி என்பார்கள். அப்படியாவது இந்த காதை ஒரு மருத்தவரிடம் காட்டிவிடலாம் என்று சிலர் அறிவுரை கூறினாலும் இந்த அனுபவத்தை வைத்து ஒரு கதையோ கவிதையோ தேறாதா என்றுதான் இந்த வீணாய் போன மனது நினைக்கிறது.   


சனி, 6 மே, 2017

என் கால்கள் ஓய்ந்தபோது என் பயணம் தொடங்கியது...


                              ஜீ.முருகனுடன் ஒரு உரையாடல்: யோகி


எனக்கு மிகவும் சமீபத்தில் அறிமுகமான எழுத்தாளர் ஜீ.முருகன். 'சாம்பல் நிற தேவதை' 'மரம்'  ஆகிய அவரது நூல்களின் வழியாகதான் அவரை அடையாளம் கண்டுகொண்டு அவரின் அறிமுகத்தை தேடிப் போனேன். எனது கடைசி தமிழ் நாட்டு பயணத்தில் சில ஆளுமைகளின் சந்திப்புகளில் ஜீ.முருகன் முக்கியமானவர். சில நிமிடங்களில் விடை பெறலாம் என்று தொடங்கி அரை நாள் வரை தொடர்ந்தது எங்கள் உரையாடல்.

அந்த உரையாடலை  நேர்காணலாக தொகுத்திருக்கிறேன். ஜவ்வாது மலையின் மண்  வாசமும் கிராம சூழலும் விவசாயக் காட்சிகளும் எங்கள் உரையாடலுக்கு பிடில் வாசித்து கொண்டிருந்தன . இனி பல்லவியும்  சரணமும்..

எனது முதல் கேள்வி அவரிடம் இப்படித்தான் தொடங்கியது...

ஜீ.முருகனை சந்திக்க போகிறேன் என்றதும் சில நண்பர்கள் “அவரையா”  என்று எச்சரிக்கை தொனியை வெளிப்படுத்தினார்களே, அது ஏன் தோழர்? 

அப்படியா என சிரித்தவர், 
 
“தெரியலையே யோகி. என் சில கதைகளை படித்துவிட்டு ஏதோ ஒரு முடிவுக்கு அவுங்களாகவே வந்திடுறாங்க. ஆனால், ‘கறுப்பு நாய்க்குட்டி’ என்ற சிறுகதை தொகுப்பில் அம்மாதிரியான கதைகள் இல்லை." 
(சிரிக்கிறார்).  
 
ஆண் பெண் சந்திப்பு என்றாலே குதர்க்கமாக சிந்திப்பதுதான் தமிழர் இயல்பு போல. சரி.  வாசிப்பு என்பது என்னவென்று எடுத்துக் கொள்ளலாம், அது ஒருவனுக்கு என்ன தரவியலும் என நீங்க நினைக்கிறீங்க?

பேசுதல் கேட்டல் என்பது போலத்தான் எழுத்தும் வாசிப்பும். தகவல்களை, கருத்துகளை,  உணர்வுகளை எழுத்து மூலம் கடத்துதல் வாசிப்பில் நிகழ்கிறது. புனைவை வாசிப்பதற்கும் அ-புனைவை வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வாழ்க்கையுடன், வரலாற்றுடன் ஒரு படைப்பாளியின் எதிர்கொள்ளல்தான் படைப்பு எனும்போது வாசகனும் அந்த நிழலான எதிர்கொள்ளலை படைப்பில் சந்தித்து ஒரு புதிய அனுபவத்தை, புரிதலை கண்டடைகிறான்.  அது ஒரு நகைச்சுவையோ, துணுக்குச் செய்தியோ, துப்பறியும் கதையோ, அம்புலி மாமா கதையோ அல்ல.  வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளல், தொடர்ந்த தேடலின் ஒரு நிலை.  அதனால்தான் மேலும் மேலும் நாம் வாசிக்கிறோம். வாசிப்பில் அர்த்தம் கூடுதலும் அர்த்தம் அழிதலும் நடந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் சிக்கலான விவரிப்பு மூலம் ஒரு எளிய உண்மையை வந்தடைகிறோம். சில நேரங்களில் ஒரு வார்த்தை ஒரு பேருண்மையை உணர்த்திவிட்டுச் செல்கிறது.

எழுதுவதற்கு அடிப்படை உந்துதல் என்னவாக இருக்க முடியும்? உங்களுக்கு ஒரு படைப்பு ஆரம்பிக்கும் போது எது உந்துதலாக இருக்கிறது?

வாழ்வின் பல்வேறு கூறுகள் எனக்குள் வந்து சேகரமாகிக்கொண்டிருக்கையில் ஏதோ சில கூறுகள் சட்டென்று ஒரு இணைப்பை உருவாக்கி வாழ்வின் மீது  ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது. அது கருத்தாக இல்லாமல் ஒரு ஆன்மிக அனுபவம் போல நமக்குள் தோன்றும். அது ஒரு இலக்கிய அந்தஸ்தை கொண்டிருக்கும். தெளிவான காட்சியாக இல்லாமல் ஒரு படிமம் போல உருக்கொண்டு நிற்கும். பின்னர் எனது வேலை அதற்கான நிலவெளியையும் பாத்திரங்களையும் உருவாக்கி ஒரு நாடகம் போல அதை மாற்றுவதுதான். அந்த படிமத்திற்கு கொடுக்கும் உருவம்தான் கதை. கதை என்பது வெறுமனே ஒரு கதையல்ல, அது ஒரு பாவனை, உணர்த்துதல்.

நிறைய வாசிப்பவர்களுக்கு பிற எழுத்தாளர்களின் தாக்கம் வந்துவிடாதா? அது உங்களின் தனித்தன்மையை பாதிக்காதா?

பெரும்பாலும் இருக்காது. அப்படியான தாக்கம் வந்தாலும் அது சாதகமான விளைவுகளை தோற்றுவிக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றே சொல்வேன். காரணம் காஃப்காவையோ, போர்ஹேவையோ வாசிக்கும் போது நமக்குள் அது போன்ற படைப்பு ஒன்று உருக்கொண்டால் நிச்சயம் அது தரமான படைப்பாகவும் தமிழுக்கு புதிதான ஒன்றாகவே இருக்கும் எனும் போது அதற்கொரு முக்கிய இடம் இருக்கும்தானே. தனித்தன்மை என்ற பதத்துக்கு நான் அதிகம் முக்கியத்துவம் தருவதில்லை. நம் மீது மற்றவர்கள் உருவாக்கும் ஒரு சுமை அது. உங்கள் பாணிக் கதை இதுதான் முருகன் எனும் போது எனக்கு கூச்சமாக இருக்கும். அப்படியான ஒரு ஒருமையை இது வரை நான் எனக்குள் கண்டதில்லை. என்ன எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை அதற்குரிய வடிவத்தில் எழுதி நிறைவு செய்வது மட்டுமே என் வேலை.  தனித்துவமான ஒரு படைப்பாளியாக பரிமளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.  முக்கிய படைப்பாளிகளை படிக்கும் போதுதான் புனைவின் சாத்தியங்கள் எதுவென்று புரியும். எதை எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.

நல்ல நாவல்,  நல்ல சிறுகதை என்பதை யார் அல்லது எது நிர்ணயிக்கிறது? நல்ல எழுத்து என்ற ஒன்று உண்டா ?

நல்ல என்பதை நேர்மை, உண்மை என மாற்றிக்கொள்ளலாம். உண்மையான படைப்பு என்பது ஒரு உயர்ந்த நோக்கத்துடன்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்ன எழுதினால் வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள், நம் புத்தகம் விற்கும் என்ற நோக்கத்துடன் எழுதும் எழுத்து நல்ல படைப்பாக இருக்க முடியாது. அது ஒரு உற்பத்தி, வியாபாரம் சார்ந்த ஒரு நிகழ்வு.  படைப்பாளி, தான் உ ணர்ந்த வாழ்வை படைப்பாக்கம் செய்யும் போது, வாழ்வின் கீழ்மைகளை தாட்சண்யமின்றி கேள்விக்குள்ளாக்கும் போது அது சிறந்த படைப்பாகிறது. அது வாசகனைப் புதிய தரிசனத்தை நோக்கி அழைத்துச் செல்லுகிறது. முதல் பத்தியோ சில கதைகளில் முதல் வரியோ கூட அக்கதை எதை நோக்கி எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்திவிடும்.

படைப்பாளி எனப்படுபவன் சமுகத்தின் தேவையா, விளைவா அல்லது அறிவு முதிர்ச்சியின் ஆடம்பரமா? (Sophistication of high level thinking)

விளைவும், தேவையும்தான். ஆடம்பரம் அல்ல. படைப்பாளி ஒரு போராட்டக்காரனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவன் கலக்காரனாக இருந்தே தீரவேண்டும். வாழ்க்கை உருவாக்கும் உணர்த்தும் முரண்பாடுகளை, சிக்கல்களை உணர்ந்து அதை படைப்பாக்கம் செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. அதனால் அவன் இருப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நம் வாழ்வை ஒரு ஆன்மா பார்த்துக்கொண்டிருக்கிறது என ரஷ்ய மக்கள் டால்ஸ்டாயை உணர்ந்திருந்தார்கள். அது போலத்தான் படைப்பாளியின் ஆன்மா இருக்க வேண்டும். அது பக்குவப்பட்ட ஒரு மனம், ஒரு ஊடகம். இதை எழுதினால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள். அடையாள முத்திரை அல்லவா நம் மீது விழும் எனத் தயங்கி நீங்கள் முக்கியம் என உணர்ந்த ஒரு விஷயத்தை தாண்டிச் செல்வது பொறுப்பற்ற செயல். அப்படியானால் எழுத்தாளன் என்ற அடையாளத்தை ஆதாயம் தேடும் ஒரு கருவியாக நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள்  சந்தித்தவர்களில் உங்களின் அகத்தூண்டலுக்கு  (inspirational) காரணமாக இருந்தவர்கள் யார், அடுத்து நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள், என்ன காரணத்தினால் அவரை சந்திக்க விரும்புகிறீர்கள்?

என் அகத்தூண்டுதலுக்குக் காரணமாக இருந்தவர் கோவை ஞானி. அவர் என்னைக் குறித்த ஒரு நம்பிக்கையை, எதிர்பார்ப்பை உருவாக்கினார்.  என்  படைப்பு மனத்தை உருவாக்கியதில் எண்ணற்ற எழுத்தாளர்களுக்கு பங்கிருக்கிறது. ஆரம்ப காலத்தில், படைப்பாளிகளை சந்திக்கும், உரையாடும் ஆர்வம் இருந்தது. அவர்கள் அருகிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். அவர்களை சந்திக்கும் போது அவர்கள் படைப்புகளைப் பற்றிப் பேசுவதை முடிந்த அளவு தவிர்ப்பேன். அது முகஸ்துதியாக மாறிவிட வாய்ப்புள்ளது. அதேநேரம் பெரிய எழுத்தாளர்களையோ அவர்களுடைய எழுத்துகளையோப் பற்றிய அவர்களுடைய அபிப்பிராயங்கள் எனக்கு பயனுள்ளதாக இருந்தன. படைப்புகளை எப்படி வாசிப்பது, அணுகுவது என்பதில் அச்சந்திப்பு புதிய வழிகளை எனக்குக் காட்டியிருக்கின்றன. தற்போது யாரை சந்திக்க விருப்பம் என்று யோசித்தால், யாரும் இல்லை. அப்படிப்பட்ட ஆளுமைகள் உயிருடன் இல்லை.

நீங்கள் ஒரு எழுத்தாளர் என எப்போது உணர்ந்தீர்கள்?

என் முதல் எழுத்து (நாவல்) 1993-ல் வந்தது. இந்த 25 ஆண்டுகள் கழித்து சமீபத்தில்தான் நாமும் ஒரு எழுத்தாளன் என்ற உணர்வு வந்துள்ளது. நம் எழுத்து ஆர்வத்துடன் படிக்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது என்பதை கண்டு கொண்டது இப்போதுதான். அதற்கு முன் அந்த கவனிப்பு என்னிடம் இருந்ததில்லை. தோன்றும் போது எழுதுகிறோம், புத்தகம் வருகிறது. யாரோ படிக்கிறார்கள், இதெல்லாம் பெரிதான நிகழ்வு ஒன்றுமில்லை என்பது போன்ற மனப்போக்குதான் என்னிடம் இருந்தது. தற்போது அது மாறி இருக்கிறது. மிகப்பெரியப் பொறுப்பை நான் உணர்கிறேன். இன்னும் நேர்மையாகவும் தரமாகவும் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. மேலும் சக படைப்பாளிகளுடனும் வாசகர்ளுடனும் ஒரு அர்த்தபூர்மான உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. ஒரு படைப்பாளன் தன் படைப்பாளுமையை மட்டுமல்ல சூழலையும் வளமாக்குகிறான். புதிய படைப்பு வெளிகளை அவன் உருவாக்கியபடி செல்கிறான்.

ஒரு படைப்பை எழுதிய பிறகு எவ்வளவு திருப்தியாக உணர்கிறீர்கள் ? அதை இன்னும் சிறப்பாக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபடுவது உண்டா?

நான் ஒரு தாட்சண்யமற்ற எடிட்டர். ஒரு கதையின் முதல் வரைவை வேகமாக எழுதி முடித்த உடன் அதை ஆறப்போட்டுவிடுவேன். சில நாட்கள், சில வாரங்கள் கழித்துத்தான் அதை சீரமைக்கும் வேலையை தொடங்குவேன். பல்வேறு மனநிலைகளில் அதைப்படித்துத் திருத்துவேன். இசை போல அது எனக்குள் உருவானப் பின்பு பிசிறு இல்லாமல் அது இருக்க வேண்டும் என மெனக்கிடுவேன். வார்த்தைகளை, வரிகளை தாட்சண்யம் இல்லாமல் வெட்டி எறிவேன். பெரும்பாலும் பத்திரிகையில் வெளி வந்த பின்புதான் அது புத்தகத்தில் இடம் பிடிக்கும். அப்போதும் திருத்துவேன். தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வந்த போதும் திருத்தம் செய்திருக்கிறேன். முக்கியமாக படைப்பாக்கம் நிகழும்போது நம்பிக்கையான நண்பர்களிடம் படிக்கக் கொடுத்து அபிப்பிராயம் கேட்டு திருத்தம் செய்வதும் நடக்கும்.

படைப்பு மேலும் நேர்த்தியாக வெளிப்படணும் என்கிற இந்த மெனக்கெடல் படைப்பிலிருந்துதான் படைப்பாளியை தொற்றுகிறதா அல்லது அது படைப்பாளியாக கருதிக்கொள்ளும் மாயையா?

முருகன் என்ற சாமான்யனை விட படைப்பாளி முருகன் உயர்ந்தவன்தான். படைப்பில் ஈடுபட்டிருக்கும் வேளைகளில் நான் பூமியில் நடப்பதில்லை. அது ஒரு அற்புத பிரதேசம். அதில் வாழும் ஒரு உயிரினம் நான் என்ற உணர்வு இருக்கும். ஒரு படைப்பு என்னைவிட மேலானாதுதான். சில கதைகளை வாசிக்கும் போது இவ்வளவு நல்ல விஷயங்களை எழுதிய நாம் ஏன் இவ்வளவு தாழ்ந்த மனிதனாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். இதிலிருந்து உங்களுக்கான பதிலை திரட்டிக்கொள்ளுங்கள் யோகி.

‘சாம்பல் நிற தேவதை’ தொகுப்பில் எல்லா கதைகளுமே துயர் மண்டியவை. அவை ஏமாற்றம்,துரோகம், வஞ்சகம் இதையும் மீறிய நியாயங்களை தேடும் முயற்சியா அல்லது அந்த மனப்போராட்டங்களின் களத்தில் அனைத்தையும் மீறி பீறிட்டு வரும் மனித வாஞ்சையா?

இத் தொகுப்பு வந்த போது மன அழுத்தம் மிக்க நெருக்கடியான ஒரு காலத்தைக் கடந்துகொண்டிருந்தேன். அதன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல இக்கதைகள் சிகிச்சையாக எனக்குப் பயன்பட்டிருக்கின்றன. சில விஷயங்களை படைப்பில் வெளிப்படுத்திவிட்ட பிறகு மனம் விடுதலை கொண்டுவிட்டது போலத் தோன்றும். படைப்பாளி தனக்கான நியாயத்தை படைப்பில் எழுதிவிட முடியாது. படைப்பு பிரபஞ்சத் தன்மை கொண்டது. அதில் நமது ஆசாபாசங்களுக்கு இடமில்லை. இடம், கிழத்தி கதைகள் ஒரு ஆணாக நான் தோற்றுப் போயிருந்ததைத்தான் எனக்கு கண்டு பிடித்துக்கொடுத்தன. பெண் பற்றிய ஒரு புதிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தின. சக மனிதர்கள், விலங்குகள், இயற்கை ஆகியவற்றின் மீதுள்ள வாஞ்சையால் கருணையால்தான் படைப்புகள் உருவாகின்றன என நான் நம்புகிறேன்.

சமகால தமிழ் இலக்கிய சூழல் குறித்த உங்க அபிப்ராயம் என்ன?

இன்று புதிதாக எழுத வந்துள்ளவர்களுக்கும் முந்தைய படைப்புப் பாரம்பர்யத்துக்கும் இடையே ஒரு இடைவெளி விழுந்துவிட்டது போல தோன்றுகிறது. ஆனால், உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  சிறுகதையைப் பொறுத்தவரை அது பற்றிய புரிதல் குறைவாக இருப்பதாக உணர்கிறேன். இதற்கு முந்தையப் படைப்பாளிகள், என்னைப் போன்றவர்கள் கூட காரணமாக இருக்கலாம். எதையோ ஒன்றை நாம் கடத்தத் தவறி விட்டோமோ,  சுயநலமாக நடந்துகொண்டு விட்டோமோ என்ற குற்ற உணர்வும் ஏற்படுகிறது. அதனால் புதியவர்களோடு நான் தொடர்ந்து உரையாட விரும்புகிறேன். வலைப்பூ, முகநூல் உள்ளிட்டவை எழுத்தின் தரத்தை குறைத்துள்ளதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். காரணம் எதை எழுதினாலும் எப்படி எழுதினாலும் அதைப் பாராட்ட பலர் காத்திருகிறார்கள். இதில் தன்னை மறுதளித்துக்கொள்வது சாத்தியமில்லை. தன்னை மறுதளித்துக்கொள்பவன், மறுஉருவாக்கம் செய்து கொள்பவனால் மட்டுமே தரமானப் படைப்புகளை உருவாக்க முடியும். தன் எழுத்து புறக்கணிக்கப்படுவது இவர்களுக்கு ஆத்திரம் ஊட்டுவதாக மாறிப்போய்விட்டது. நியாயமானப் புறக்கணிப்பை, விமர்சனத்தை ஒருவன் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அதை விடுத்து தனது ஆதரவாளர்களிடம் போய் தஞ்சமடைபவன் நல்ல படைப்பாளியாக என்றும் உருவாக முடியாது.

பெண்களின் மீது அகம் மற்றும் புறம் சார்ந்து பிரயோகிக்கப்படும் பாலியல்  வன்முறைகள்... உங்களின் கதைகளில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன.

ஆதிக்க மனோபாவமும், பாலியல் விஷயத்தில் நேர்மையின்மையும் ஆண்களிடம் இருக்கிறது. பெண் என்பது தனக்குரிய ஒன்று என்ற மனோபாவத்தில் இருக்கும் அவன் அது விலகிச் செல்லும் போதோ கிடைக்காமல் போகும் போதோ ஆத்திரம் கொள்கிறான், வன்முறையை, சிதைத்தலை பிரயோகிக்கத் துணிகிறான். இதற்கு எதிர் திசையில் பெண்கள் தங்களை காத்துக்கொள்ள தந்திரங்களையும், பொய்களையும், துரோகங்களையும் நிகழ்த்துபவர்களாக மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் நம்பிக்கை இன்மையும் இணக்கமற்ற சூழலும் ஆண் பெண் உறவில் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதிக அளவிலான பொய்களும், போலியான அன்பும்தான் பெரும்பாலான காதலை நிர்ணயிப்பவைகளாக உள்ளன. சடங்கான, வன்மம் மிக்க கலவிகள்தான் பெரும்பாலும் நிகழ்கிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இதன் பிரதிபளிப்புகள்தான் சாம்பல் நிற தேவைத் தொகுப்பில் உள்ள சில கதைகள். ஆணாக எனக்குள் எழும் நியாயமற்ற கோபத்தை, வன்முறை வடிவங்களை நேர்மையாக ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதுதான் கேள்வியாக உள்ளது. காரணம் பெண்களால் ஏற்படும் பித்த நிலை இந்த நியாய தர்மங்களுக்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது. காதலை யாசிக்கும் போது ஒரு பெண்ணிடம் மண்டியிடவும், நம்பிக்கை இன்மையும் சந்தேகமும் வரும் போது வன்முறையை நிகழ்த்தவும் அவமானப்படுத்தவும் செய்கிறது.

நீங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் . பத்திரிக்கையாளரின் அனுபவங்கள் எழுத்தாளரையும், எழுத்தாளரின் அனுபவங்கள் பத்திரிகையாளரையும் பாதித்ததுண்டா அல்லது தாக்கம் நிகழ்த்தியதுண்டா?

பத்திரிகை அலுவலகத்தில் ஒரு மூத்த உதவி ஆசிரியராக பணி செய்திருந்தாலும் அது ஒரு குமாஸ்தா வேலை என்றே சொல்வேன். நான் பணியாற்றிய பத்திரிகையின் கொள்கை முடிவு, சார்புத் தன்மை என் மனப்போக்குக்கு எதிரான திசையில் அமைந்ததால் நான் என் கருத்துகளை அதில் எழுதியதே இல்லை. எழுதினாலும் அதை அவர்கள் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது தெரியும். அது ஒரு அலுவலகம், அங்கும் சராசரி மனிதர்களே இருந்தார்கள் என்பதைத் தாண்டி படைப்பாளியாக எனக்குள் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. அது புத்தகம், வாசிப்பு, எழுத்து என்பவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இடமாகவே இருந்தது. ஒரு படைப்பாளனாக செயல்படுவதற்கான ஆற்றலை எல்லாம் என்னிடம் உறிஞ்சிக்கொண்டு பதிலாக சம்பளத்தைக் கொடுத்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பணியில் இல்லை. இப்போதுதான் என்னால் விரும்பிய புத்தகங்களை வாசிக்க முடிகிறது, கதைகளை எழுத முடிகிறது, எழுத்தாளனாக என்னை உணர முடிகிறது.

வனம் என்ற சிறுபத்திரிக்கை நடத்தியபோது சமரசமற்ற ஒரு நிலைப்பாட்டிலேயே இருந்தீங்க, இப்போது ஆனந்த விகடன் - தடம் போன்ற பத்திரிக்கைகளுக்கு சிறுகதை வழங்கும் போது இதை ஒரு சமரசம் என எடுத்துக்கொள்ளலாமா?

நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால் இது சமரசம்தான். ஏழு ஆண்டுகள் கழித்து கண்ணாடி கதையை எழுதினேன். யாருக்குக் கொடுக்கலாம் என யோசித்த போது முதலில் நின்றது தடம்தான். இக்கதை உடனே பிரசுரமானால் மீண்டும் நம்மை நமக்குள் ஒரு படைப்பாளியாக உறுதிப்படுத்திக் கொண்டுவிடலாம் என்று தோன்றியது. அதனால் கொடுத்தேன். அது பரவலாக வாசிக்கப்பட்டது. மேலும் தடத்தில் பங்கேற்றிருப்பவர்கள் என் நண்பர்கள். ஆனந்த விகடனுக்கும் ஒரு கதை கொடுத்திருக்கிறேன். சமீபத்தில் எழுதிய மற்ற கதைகள் எல்லாமே அடவி, இடைவெளி போன்ற சிறுபத்திரிகைகளில்தான் வந்துள்ளன. வார்த்தை என்ற கதையை மலைகள் என்ற இணைய இதழுக்காகக் கொடுத்தேன். இன்னும் நான் சிறுபத்திரிகை எழுத்தாளன்தான். குமுதம் நடத்தும் தீராநதியில் எனது இரண்டு கதைகள், கவிதைகள் வந்துள்ளன. காலச்சுவடு, உயிர்மை போல தீராநதியும், தடமும் ஒரு இடைநிலை இலக்கியப் பத்திரிக்கை என்ற எண்ணமே எனக்கு உள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை போல இலக்கிய அரசியலுக்குள் இவை இரண்டும் சிக்கவில்லை என்றே கருதுகிறேன்.

சினிமாவில் எழுத்தாளர்களின் பங்கு என்னவாக இருக்க முடியும் என நீங்க நினைக்கிறீங்க?

சினிமாக்காரர்கள்தான் எழுத்தாளர்களை நோக்கி வரவேண்டும். ஒரு சிறுகதையையோ நாவலையோதான் சினிமாவாக்க வாய்ப்புள்ளது. ஒரு சினிமாவைப் பார்த்து யாரும் கதை எழுதுவதில்லை. ஆனால் சல்மான் ருஷ்டி போல எழுத வேண்டும் என்ற உந்துதலை வேண்டுமானால் பெறலாம். அது கூட அபூர்வம்தான். அதே போல ஒரு நல்ல எழுத்தாளர் சினிமாவில் நல்ல பங்களிப்பை தர முடியும் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அது வேறு கதை சொல் மொழி.

வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

மேலே சொன்ன பெரும்பாலானவை இன்று புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர்களுக்கு பயன்படும் என்றே நம்புகிறேன். மேலும் இலக்கிய செயல்பாடு என்பது படிப்பதும் எழுதுவதும்தான். மற்றவை எல்லாம் அதைக் கொண்டு ஆதாயம் தேடும் செயல்கள்.

இடம் பெயர்தல், சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஒரு படைப்பாளியின் படைப்பை எந்த விதத்தில் மாற்றும்,, நீங்கள் அதை உங்கள் படைப்புகளில் உணர்ந்தது உண்டா?

ஜே.ஜே.சில குறிப்புகள்’ நாவலில் ஒரு வரி இருக்கும். சில வற்றைப் புரிந்துகொள்ள கால இடைவெளியும் சில வற்றைப் புரிந்துகொள்ள தூர இடைவெளியும் தேவை என. சிலவற்றை எழுத சில ஆண்டுகள் தேவை. ‘இடம்’ கதையை எழுத முடிவு செய்துவிட்டு மூன்றாண்டுகள் காத்திருந்தேன். மனச்சாய்வு, உணர்வெழுச்சி இல்லாமல் விலகி நின்று பார்த்தல் புனைகதைப் படைப்பாளிக்கு அவசியம்.  லாசரா போல அதில் ஆழ்ந்தும் தோய்ந்தும் உருகியும் எழுதலாம், அது வேறு வகை. பயணம் எனக்கு பிடிக்கும் என்றாலும் அதிகம் பயணம் செய்ததில்லை. அதற்கான சூழல் வாய்க்கவில்லை. அபத்தம் என்னவென்றால் நடப்பதற்கு கால்கள் ஒத்துழைக்காத இந்த நிலையில்தான் கர்நாடகம், கேரளம் என பயணம் செய்துகொண்டிருக்கிறேன். இதை வைத்து ஒரு நாவல் எழுதும் யோசனை இருக்கிறது. அதன் முதல்வரி இப்படி இருக்கும் ‘என் கால்கள் ஓய்ந்த போது எனது பயணம் தொடங்கியது’.

நன்றி: அம்ருதா








செவ்வாய், 2 மே, 2017

வரலாற்றை தேடி 4

''யோகி பாண்டிசேரியில் நீங்கள் எங்கேயாவது போவதற்கான திட்டம் இருக்கிறதா?''  நண்பர் பாலா இப்படி கேட்டதும் கொஞ்சம் கூட  யோசிக்காமல் நான் சொன்ன இடம் 'பாய் சூப் கடை' தான். நான் கடந்த ஆண்டு  பாண்டிசேரிக்கு நண்பர்களோடு போயிருந்த போது, முதன் முதலாக பாலா அங்கு அழைத்து சென்றார்.

தள்ளுவண்டியில் சாலை ஓரமாக மாலையிலிருந்து இரவுவரை  கடை திறக்கிறார்கள்.  கோழி சூப், ஆட்டு கால் சூப் மற்றும்  சமோசா மட்டுமே அங்கு விற்பனை செய்யப்படுகிறது. சமோசாவை கண்முன்னே ஒருவர் மடித்து மடித்து வைக்க ஒருவர்  பொரித்து எடுக்கிறார். ஒருவர் டோக்கன் வாங்குகிறார். ஒருவர் சூப் ஊற்றி தருகிறார். ஒருவர் பாத்திரங்களை சேகரித்து கழுவுகிறார். இப்படி அவர் அவர் வேலையை பம்பரம்போல பொறுப்பாக  அவர் அவர் செய்கிறார்கள்.

கடைக்கு ஆட்கள்  வந்த வண்ணமே இருக்கிறார்கள். இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் காத்திருப்பது இல்லை. உணவும் வியாபாரமும் சுடச் சுட ஆவி பறக்க நடக்கிறது. தெரு விளக்கின் துணையோடு ருசியை பருகுவதை இப்பொது  நினைத்தாலும் நாவில் தித்திக்கிறது. எனக்கு அங்கு போகணும் என்றதும் பாலா புன்னகைத்தபடி சரி என்றார். ஒரு வருடத்திற்கு முன்பு சுவைத்த அதே சுவை. இன்னும் மாறவே இல்லை. இரண்டு நாட்கள் தொடர்ந்து சென்றேன். கடைக்காரர் ஒருவரிடம்,  கடைக்கு பெயர் என்ன என்றேன்?  பெயரெல்லாம் இல்லயம்மா. 'பாய் சூப் கடை' என்பது மட்டும்தான் அடையாளம். எங்கள் கடையை  ஆங்கிலத்தில் ஒருவர் இணையத்தில் எழுதியிருக்கிறார். எங்கள் கடை பிரபலம்தான் என்று சிரித்தார் அவர்.  விளம்பரமே இல்லாமல் அதன் தரத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமே வாடிக்கையாளர்கள் தேடி வருகிறார்கள். நானும் தோழி பல்லவி மற்றும் நண்பர் பாலாவும் ஆளுக்கு இரண்டு சமோசா, கோழி சூப்பை வாங்கி சுவைத்தோம்.
பின் ஆட்டுக்கால் சுப்பையும் சுவைத்தோம்.  பாண்டிசேரி செல்பவர்கள் ஒருமுறை 'பாய் சூப் கடையில்  சூப் மற்றும் சமோசாவை சுவை பார்த்துவிடுங்கள்.


'பாய் சூப் கடை'


தொடர்ந்து பாலா என்னை புரோமேனடே  கடற்கரைக்கு அழைத்து சென்றார். சூரிய அஸ்தமனம் ஆகும் நேரம் கடற்கரை இளநீல நிறத்தில் காட்சி கொடுத்தது. பெரிய பெரிய அலைகள் சுருண்டு வந்து போடப்பட்டிருந்த  கற்குவியலை தாண்டி கரையை தொட போராடிக்கொண்டிருந்தது. அலையின் சாரலில் முழுவதுமாக ஒப்பு கொடுத்த தருணம் அது.  
மேகம் மறைத்த நிலவின் மிச்ச வெளிச்சம் கடற்கரைக்கு மேலும் அழகு சேர்த்தது. 
"இன்பக் கதைகள் எல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?"

மெல்ல முணுமுணுத்தேன் இந்த வரிகளை. வீட்டையும் நாட்டையும்  விட்டு வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. இந்த நேரத்தில் அந்த கடல் அலையின் சாரல் அன்பின் நிமித்தமாக என்னை அணைத்திருப்பதாகவே உணர செய்துகொண்டேன்.

சுனாமியின் போது பாண்டிசேரி கடற்கரையில் பெரிய பேரிடர் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஆனால், கடலின் சீற்றத்தை காண முடிந்தது எனும்    தகவலை பாலா கூறினார். தொடர்ந்து சுனாமி அபாயம் குறித்து தகவல் வெளியாகியபடி இருந்ததால், பாண்டிசேரி அரசு கரும் பாறைகளை கடலின் கரையில் கொட்டி, கட்டுக்கடங்காத அலைகளின் வீரியத்தை குறைத்துள்ளதையும் காண முடிந்தது. யாரும் அங்கு குளிப்பதில்லை. கடல் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.


200 ஆண்டுகள் வரலாறு பேசும் பாண்டிசேரியின் பிரெஞ்சு ராஜியம்,  138 ஆண்டுகளுக்கு புதுச்சேரி மண்ணில்  அது நிகழ்த்திய ஆதிக்கத்தை பேசுகிறது. அதன் ஆதாரமாக பாண்டிசேரி கடற்கரையில் கம்பிரமாக நிற்கும் Joseph François Dupleix  சிலை இருக்கிறது. Rocky Beach or Gandhi beach என்றும் அழைக்கப்படும் அந்த கடற்கரையில் காந்தி நேரு போன்ற தலைவர்களின் சிலைகளும் வரலாற்றை பேசுகின்றன. 24 மணிநேரமும் செயல்படும் லு- கபே வும் குறிப்பிட வேண்டிய ஒரு இடம் இடமாகவே இருக்கிறது. பெளர்ணமி  இரவில், கடலின் தண்ணீர் பெருக்கம் மழையை போன்ற சாரலை காற்று அள்ளிக்கொண்டு வர, அந்த வேளையில் கபே-யில் டீ குடிப்பது எத்தனை இன்பம் தெரியுமா? 

 ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை என்பான் பாரதி. கடலும் சில வேளைகளில் மஹா காளிதான் இல்லையா ? 

நண்பரின் மோட்டார் சைக்கிளில் பாண்டிசேரியை இரவில் பார்த்துவிட்டு, இரவு உணவுக்கு  கொய்யாப்பழம் வாங்கி கொண்டு  மீண்டும் அறைக்கு வந்து சேரும்போது 12 ஆகியிருந்தது. 

இந்தியாவின் பிரான்ஸ் என அழைக்கப்படும் பாண்டிசேரி இதுவரை பார்த்த
மாநிலங்களை விட மாறுபட்டது என்பதில் எனக்கு எந்த மாற்று கருதும் இல்லை. பாண்டிசேரியின் இரண்டாம் நாள் எனது இந்த எண்ணத்தை மாற்றுமா?