தோழர் வரதராஜு குறித்த சிறு வாழ்க்கைக்குறிப்பும்
தோழர்களின் நினைவு அஞ்சலியும்
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.”
ஒரு மனிதன் இந்தப் பூவுலகை விட்டு மறைவது என்பது அவரது உடல் மறைவாக மட்டுமே இருக்கலாம். ஆனால், அவர் வாழ்ந்த கொள்கையும், அவர் கொண்டிருந்த நம்பிக்கையும், அவர் நடந்து சென்ற பாதையும், அவர் விதைத்த சிந்தனைகளும் மறைந்துவிடுவதில்லை. குறிப்பாக, அதிகாரத்திற்கும் அநீதிக்கும் எதிராகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த ஒரு காம்ரெட்டின் வாழ்க்கை என்பது, அவரது காலத்தோடு முடிந்துவிடும் ஒன்றல்ல; அது அடுத்த தலைமுறையினரிடம் கேள்விகளையும், சிந்தனைகளையும் விட்டுச் செல்கிறது.
தோழர் வரதராஜூ அவர்கள் மலேசிய வரலாற்றில் இடம்பிடித்திருக்க வேண்டியவர், வெளிநாட்டில் வசிக்கும் இடதுசாரிச் தோழர்கள் அறிந்த அளவிற்குகூட உள்ளூர் வாசிகள் அறியவில்லையே என்பது ஒரு வருத்தம்தான்.
“அதிகார வர்க்கத்தை எதிர்த்தால் காணாமல் போய்விடுவீர்கள்” என்று முதலாளித்துவச் சக்திகள் எழுப்பும் அச்சுறுத்தல்கள் உண்மையாகிவிடுகின்றனவா? அல்லது, அவரைப் போன்றவர்களின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் பதிவு செய்து பாதுகாப்பதில் நாம்தான் தவறிவிட்டோமா? எங்கே இந்தப் பிழை ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் அலசி ஆராய வேண்டியது அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரை நன்கு அறிந்தவர்களும், அவரைப் பற்றி பேசக்கூடிய இடத்தில் இருந்தவர்களும், அவரைப் பேசாமல் விட்டுவிட்டார்களோ என்ற கேள்வியும் என் மனதில் எழுகிறது.
தோழர் வரதராஜூ அவர்கள், தனக்கென ஒரு சித்தாந்தத்தை வகுத்துக்கொண்டு, அந்தச் சித்தாந்தத்திலிருந்து இறுதிவரை விலகாமல் வாழ்ந்து காட்டியவர். அவர் நம்பியதைப் பேசினார்; பேசியதை வாழ்வில் கடைப்பிடித்தார். அதனால்தான் அவரது வாழ்க்கை வெறும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையாக அல்லாமல், ஒரு தலைமுறையின் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட வேண்டியதாகிறது.
இன்று
அவர் இந்தப் பூவுலகை விட்டுப் பிரிந்துவிட்டார். ஆனால், நாளை யாரேனும் அவரைப்
பற்றி அறிந்துகொள்ளத் தேடினாலும், அல்லது அவரது வாழ்க்கையையும் போராட்டங்களையும்
ஆய்வு செய்ய நினைத்தாலும், இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தத் தகவல்கள்
அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
(அவர் இருக்கும்போதே தேடாதவர்கள், இனியும் தேடுவார்களா என்பது உங்களில் யாரோ
ஒருவர் முணுமுணுப்பதும் எனக்கு கேட்கவே செய்கிறது)
எனினும்,
ஒரு காம்ரெட்டின் வாழ்க்கை காலத்தால் மறக்கப்படக்கூடாது. அவர் போராடிய காரணங்கள்,
அவர் நம்பிய கொள்கைகள், அவர் சந்தித்த மனிதர்கள், அவர் விட்டுச் சென்ற தடங்கள் இவை
அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டியவை.
என் மதிப்புமிகு தோழர் வரதராஜூ அவர்களுக்கு, அவருக்கு மதிப்புமிகு தோழராக இருந்த இந்த யோகியின் சின்னஞ்சிறிய சமர்ப்பணம்தான் இந்தப் பதிவு.
போய் வாருங்கள், காம்ரேட்...
உங்கள் போராட்டப் பாதை எங்களின் நினைவில் தொடரும்.
செவ்வணக்கம், தோழரே.
தோழர் வரதராஜுவின் வாழ்க்கைக்குறிப்பு
தோழர் மு.வரதராஜூ 08/06/1947-ஆம் ஆண்டு, சிலாங்கூர் மாநிலத்தில், சுங்கை புலோ பூஜ்ஜோங் தோட்டத்தில் பிறந்தார். உடன்பிறப்புகள் ஐவர். அவர் குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை. தகப்பனார் பெயர் முருகன். தாயார் பெயர் பழனியம்மாள். தோழர் வரதராஜூ RRI தோட்ட தமிழ் பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றார். குடும்ப வறுமை காரணமாக அவர் 13 வயதிலேயே வேலைக்கு சென்றார். பின் 1967-ஆம் ஆண்டு தனது 20-வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். அவரது மனைவியின் பெயர் ராஜமணி. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவர் மகள் உமாதேவி. இரண்டாவது மகன் ஜெயக்குமார். மூன்றாவது மகன் மணிமாறன். நான்காவது மகள் தமிழரசி. தனது அரசியல் வாரசு என தோழர் ஜெயக்குமாரை அவர் என்னிடம் கூறியிருக்கிறார்.
ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். அவர் குறித்த ஆவணப் படம் ஒன்றை இலங்கை மலையகத்தைச் சேர்ந்த தோழர் கிங்ஸ்லி என்பவர் எடுத்திருக்கிறார். சுமார் ஒரு மணிநேரம் கொண்ட ஆவணம் படம் அது. இலங்கை மற்றும் மலேசியாவில் அது வெளியிடப்பட்டது.
தோழர் வரதராஜூ பயணித்த சில அமைப்புகளின் தகவல்
1.
மலேசியா திராவிட கழகம் பத்து தீகா கிளை
2.
தொழிற்சங்கம் கெமிக்கல் யூனியன்
3.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
4.
மண்ணின் தோழர்கள் கழகம்
5.
கிள்ளான் பயனீட்டாளர் சங்கம்
6.
உலகத் தமிழர் நிவாரண நிதி
7.
செம்பருத்தி மாத இதழ்
8.
சிலாங்கூர் சுற்றுச்சூழல் சங்கம்
9. மலேசியா பயனீட்டாளர் ஆலோசகர் சங்கம்
(சில
தகவல்களை கொடுத்து விவரங்களை சரிபார்த்து உதவிய தோழர் ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி)
மாபெரும் போராட்டவாதியை (திரு.வருதராஜூ) இழந்து விட்டோம்
அன்னாரின் அயராத சேவை மக்கள் மதில் என்றும் நிலைத்திருக்கும். தோட்டத்தில் பிறந்து வளர்ந்த திரு.வருதராஜு ஆரம்ப காலக் கட்டத்தில் தொழிற்சங்க வாதியாக, அறிவு இயக்கவாதியாக தொடங்கினார். கிள்ளான் சா ஆலம் வட்டாரத்தில் இவரை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சா ஆலம் வட்டார தோட்டத்தின் மூத்த குடிகளில் ஒருவர் அண்ணன் என்றால் அது மிகையாகாது.
பயனிட்டாளர்
சங்கம், கிள்ளான் பயனிட்டாளர் சங்கம், மண்ணின் தோழர் கழகம் ஆகியவற்றில் இணைந்து தீவிர
தொண்டாற்றினார்.
தோட்டத் தொழிலாளர் வீட்டுடமை பிரச்சனை, தொழிலாளர் நலன் என்று போராடினார். தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னையை மையமாக கொண்டு 3 நூல்கள் வெளியிட்டுளார்.
பி.பி.நாராயணன் அவர்களை எதிர்த்து போராடிய சபாக் பெர்ணம் வட்டாரத்தை சேர்ந்த திரு.அர்சுணன் அவர்களோடும் இணைந்து பல்வேறு சேவைகளை செய்து வந்தார். பினாங்கு பயனிட்டாளர் சங்க தலை ஹாஜி இட்ரிஸ் அவர்களுடன் இணைந்து நற்சேவையாற்றினார்.
ஸ்டார் நாளிதழின் மூத்த நிருபர் திரு.பரதன் அவர்களுடனும் நல்லுறவு கொண்டு பல்வேறு செய்திகளை முன்னிலை படுத்தியுள்ளார். பல தொழிற்சாலைகள் மூடும் தருவாயில் தொழிலாளர்கள் நலன் காக்க போராடினார். அவரது இச்சேவையில் ஒரு பத்திரிகையாளனாக நானும் அவரோடு இணைந்து பணியாற்றினேன் என்பதில் பெரும் மகிழ்வு அடைகின்றேன். 1969 முதல் ஜ.செ.க.வின் தீவிர தொண்டனாக இருந்து வந்தார். தனது மாற்றுக் கருத்தை எத்தருணத்திலும் முன்னிலை படுத்துவதில் துணிகரமாக செயல் படுவதில் வல்லவர் அமரர் வருதராஜூ என்றால் அது மிகையாகாது.
அன்னாரின் மறைவில் அவரது நற்சேவை நாம் நினைவு கூறுவதே சிறந்த சேவை. உண்மையான தொண்டனனுக்கு என்றும் மறைவில்லை.
சுப்பையா
டாமான்சாரா
மதிப்புமிகு தோழர் வரதராஜூ அவர்களின் மறைவு செய்தி எங்களுக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர் நலன், சமூகநீதி, மனித உரிமை, நுகர்வோர் உரிமை மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் உரிமை என சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் தனது குரலை உயர்த்தி, முன்நின்று போராடியவர் தோழர் வரதராஜூ.
ஒரு சமூகப் போராளியை இன்று நாம் இழந்துவிட்டோம். அவரது மறைவு ஒரு தனிமனித இழப்பு மட்டுமல்ல, சமூகநீதிக்காகத் தொடர்ந்து போராடிய ஒரு தலைமுறையின் முக்கியமான குரலுமாகும். அவர் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவர் எழுப்பிய கேள்விகளும், உரிமை போராட்டங்களும், பாமர மக்களுக்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
கனத்த இதயத்துடன் தோழர் வரதராஜூ அவர்களுக்கு எங்களது மரியாதை அஞ்சலியை செலுத்துகிறோம். அவர் மறைந்தாலும், மக்களுக்காக அவர் போராடிய வரலாறும், விட்டுச் சென்ற போராட்டச் சுவடுகளும் என்றும் நினைவுகூரப்படும்.
ஆழ்ந்த இரங்கலுடன், செம்பருத்தி தோழர்கள்
29.8.2026
...................................
சிலரால் ராஜூ
என்றும், அல்லது வெறுமனே “தாடிக்காரர்” என்றும் அழைக்கப்பட்ட M. வரதராஜூ,
நான் எனது அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் ஆரம்பகாலத்தில் சந்தித்த
அடிமட்டச் செயற்பாட்டாளர்களில் ஒருவராவார்.
அவரை Child
அமைப்பைச் சேர்ந்த தோழர் ஆறுமுகம் மற்றும் ஸ்டார் பத்திரிகையின் செய்தியாளரான பரதன்
ஆகியோர் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவரை நான் முதன்முதலில் மிட்லண்ட்
எஸ்டேட்டில் சந்தித்தேன். அவர் எப்போதும் ஒரு தோள்பை மற்றும் குறிப்புப்
புத்தகத்தை எடுத்துச் செல்வார். அவரது பேச்சு கரடுமுரடாகவும் நேரடியாகவும்
இருக்கும். தாடி சீரற்றதாக இருக்கும்; பழைய பாணியிலான மூக்குக் கண்ணாடியை
அணிந்திருப்பார். ஆனால் அவரை எப்படிப் பார்த்தாலும், அவரிடம் ஒரு தனித்துவமான
கம்பீரம் இருந்தது.
அவர் மலேசிய
இயற்கை நண்பர்கள் அமைப்பு (Sahabat Alam Malaysia – SAM) மூலம் தீவிரமான
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக இருந்தார். நம்பிக்கையில் அவர் ஒரு நாத்திகர்.
அவரது ஆரம்பகால சமூக ஈடுபாடு மலேசிய திராவிடர் கழகத்துடன் தொடர்புடையதாக
இருந்தது.
தோட்டத்
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவர் போராடினார். தமிழ் சமூகத்தைப் பாதிக்கும்
பல்வேறு பிரச்சினைகளிலும், குறிப்பாக தமிழ்ப் பள்ளிகள் தொடர்பான
விவகாரங்களிலும், அவர் தீவிரமாகக் குரல் கொடுத்தார்.
மேலும், NUPW
தொழிற்சங்கத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். அந்தத் தொழிற்சங்கம் தோட்டத்
தொழிலாளர்களைச் சுரண்டுவதன் மூலம் இயங்கி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். அவரது
வெளிப்படையான மற்றும் துணிச்சலான பேச்சின் காரணமாக, அந்தத் தொழிற்சங்கம் அவருக்கு
எதிராக அவதூறு வழக்கொன்றையும் தொடர்ந்தது.
பின்னர்,
தனது மகனையும் சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடுத்திய அவர், கிள்ளான் நுகர்வோர்
குழுவின் முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்தார்.
எல்லாவற்றிற்கும்
மேலாக, அவர் மலேசியத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு முன்னோடியாக
இருந்தார். அதற்காகவே அவர் என்றும் நினைவுகூரப்படுவார்.
ராஜூ பல
தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களின் சரியான எண்ணிக்கை
தெளிவாகத் தெரியவில்லை. அவரது பெரும்பாலான எழுத்துக்கள் இந்தியாவில்
அச்சிடப்பட்டதால், அவற்றில் சில சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும்
சிலர் கூறுகின்றனர்.
நேற்று
இரவு அவர் மறைந்த செய்தியைக் கேட்டவுடன், நான் அவரது வீட்டிற்குச் சென்றேன்.
அவருக்கு 80 வயது. கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக் குறைவால்
பாதிக்கப்பட்டிருந்தார். இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சிலர், அவருக்கு இதைவிட
அதிக வயது இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
அவரது
உடல்நிலை குறித்து அறிந்தபோது அவரை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று நான்
எப்போதும் நினைத்திருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை என்பது
எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவரது
இறுதிச் சடங்கில் அதிகமானோர் கலந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது. இத்தனை
பேருக்கு உதவிய ஒரு செயற்பாட்டாளரின் இறுதி நிகழ்வில் இவ்வளவு குறைவானவர்கள்
இருப்பது வருத்தமளித்தது. ஒருவேளை நீண்ட மெர்டேகா விடுமுறை காரணமாக
இருக்கலாம். இருந்தபோதிலும், சிங்கப்பூர் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளிலிருந்தும்
தோழர்களும் நண்பர்களும் வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
என்னை
மிகவும் பாதித்த ஒரு விஷயம் என்னவென்றால், ராஜூ ஷா ஆலம் நகரில் உள்ள குறைந்த
விலை அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். அவர் ஒருபோதும்
செல்வந்தராக மாறவில்லை. அவரது இறுதிச் சடங்கும் மிகவும் எளிமையாகவே இருந்தது; அது
அவருடைய விருப்பத்திற்கேற்றதாக இருந்திருக்கலாம்.
அவரது
வாழ்க்கையையும் பங்களிப்புகளையும் பாராட்டி பலர் அவருக்கு அஞ்சலி உரைகளை
நிகழ்த்தினர். ஒரு சோசலிசக் கட்சியின் துணைத்தலைவராக, நானும் சில வார்த்தைகள் பேச
அழைக்கப்பட்டேன். இறுதியில், “அவரது வாழ்க்கையை நாம் கொண்டாடிய அதே நேரத்தில்,
அவரிடம் இருந்து விடைபெற வேண்டியிருக்கிறது” என்று கூறி எனது உரையை நிறைவு
செய்தேன்.
ராஜூ –
அந்தத் தாடிக்காரர் – இன்று நம்மிடையே இல்லை.
அவர்
சர்ச்சைக்குரியவராக இருந்தார். அவர் கரடுமுரடானவராகவும் இருந்தார். ஆனால்
உலகத்தின் ஆடம்பரங்களுக்காக ஒருபோதும் தனது கொள்கைகளில் சமரசம் செய்யாமல், இறுதி
வரை தானாகவே, தனக்குரிய விதத்தில் வாழ்ந்த மனிதராக அவர் நினைவுகூரப்படுவார்.
S.
அருட்செல்வன்
30 ஆகஸ்ட் 2026
தோழர் வரதராஜூவுடன் முதல் சந்திப்பு
தோழர்
வரதராஜூ அவர்களை நான் 2013-ஆம் ஆண்டு ஒரு நீதிமன்ற வழக்கின்போதுதான் சந்தித்தேன்.
அப்போது நான் நம்நாடு பத்திரிகையில் நிருபராக பணியில் இருந்தேன். என்னை
தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தோழர் வரதராஜுதான் அழைத்திருந்தார். நிலநிதி
கூட்டரவு சங்கம் மீதான வழக்கு அது. பாகான் டத்தோவைச் சேர்ந்த ஒரு தோட்டத்து மக்கள்
நில முறைக்கேடு தொடர்பான வழக்கு. பல வருடங்கள் இழுப்பறியில் இருந்த வழக்கு.
பத்திரிகையாளர் செய்தி சேகரிப்புக்கு நான் ஒரு நிருபர் மட்டுமே போய் இருந்தேன்.
அப்போது சுமார் 7 தமிழ்ப்பத்திரிகைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஏன் அவர்கள்
அவரவில்லை என்பது கேள்வியை ஏற்படுத்தினாலும், அதற்கான விடை எனக்கு எனது பத்திரிகை
அலுவகத்திலேயே கிடைத்தது.
அன்றைய
தினம் மாலைவரை நான் வரதராஜு தோழருடன் உடன் இருந்தேன். அந்த வழக்கு தொடர்பான
பலவிவரங்களை என்னோடு பகிர்ந்துக்கொண்டார். தோட்ட மக்கள் மீது அவர் கொண்டிருந்த
ஈடுபாடும், கடமையும் எனக்கு அவர்மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தின.
அதன்
பிறகு தோழருடனான நட்பு இத்தனை ஆண்டுகள் நீண்டு வந்திருக்கிறது. எனது புத்தக
வெளியீட்டுக்கு அவரை தலைநகருக்கு அழைத்திருந்தேன். வந்து கலந்துக்கொண்டு ஆதரவு
தெரிவித்தார். அவருக்கு அங்கு மரியாதை செய்யப்பட்டது. நான் பத்திரிகையில் என்ன
எழுதினாலும் அது அவர் பார்வைக்கு போய்விட்டால் அழைத்து பேச தவறியதில்லை. இந்த
ஆண்டு ‘சயாம்-பர்மா மரண ரயில்’ தொடர்பான தொடர் கட்டுரையை பத்திரிகையில் எழுதிவந்த
போது தோழர் வரதராஜூ தொலைபேசியில் அழைத்து அது தொடர்பாக பேசினார். எனக்கு
வாழ்த்தினை தெரிவித்தார். தோழர் வரதராஜுவுடன் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவர்
அவருக்கு உண்மையாக இருந்த ஒரு காரணத்தினாலேயே அவர் மீதான மதிப்பு எனக்கு அதிகம்
இருந்தது.
அவரின்
இறுதி மரியாதையின் போது சுமார் 30 பேர் மட்டுமே வந்திருந்தனர் என்பது எனக்கு
மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. தனக்காக அவர்
வாழ்ந்ததைவிட பாட்டாளி மக்கள் பிரச்னைகளுக்குதான் அவரின் வாழ்வின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது.
அதற்கான மதிப்பை இந்த சமூகம் கொடுக்க வேண்டாமா?
-யோகி
........................................
தோழர்
வரதராஜின் மரணச் செய்தி எனக்கும் என் துணைவியாருக்கும் மிகுந்த சோகத்தையும்
வருத்தத்தையும் தருகிறது. மலேசியத்
தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டுருந்தவர் அவர்.
தோழர் SVR

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக