ஹரித்வார்: நம்பிக்கைக்கும் நினைவுகளுக்கும் இடையில்
இந்தியாவின் புனித நகரங்களாகக் கருதப்படும் சப்தபுரிகளில் அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகை—‘மாயா’ என்று அழைக்கப்பட்ட நகரமே இன்றைய ஹரித்வார்.
‘ஹரி’யின் வாசல் என்றும், ‘ஹர’னின் வாசல் என்றும் பொருள் கொள்ளப்படும் ஹரித்வார், பெயரிலேயே ஒரு தெய்வீக இருமையைத் தாங்கி நிற்கிறது. தொன்மையான குறிப்புகளில் இது மாயாபுரி, கங்காத்வாரம், கபிலஸ்தானம் போன்ற பெயர்களாலும் அறியப்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருந்து சமவெளிக்குள் கங்கை இறங்கும் இடங்களில் ஒன்றாக இருப்பதால், பல நூற்றாண்டுகளாக இது யாத்திரையின் வாசலாகவும், நம்பிக்கையின் நகரமாகவும் இருந்து வருகிறது.
ஒரு நகரம் எப்படி வரலாறாகிறது என்பதை என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? என்னைப் பொறுத்தவரை கல்லால் கட்டப்பட்ட கோட்டைகளாலும், மன்னர்களின் அரண்மனைகளாலும் மட்டுமே வரலாறு உருவாவது அல்ல. சில நகரங்கள் மனிதர்களின் நம்பிக்கைகளால் வரலாறாகின்றன. சார்தாம் யாத்திரையின் நுழைவாயில் என்று கொண்டாடப்படும் ஹரித்வார் அப்படிப்பட்ட ஒரு நகரம்.
இங்கே கங்கை வெறும் நதியல்ல. அவள் நினைவுகளையும், பாவங்களையும், வேண்டுதல்களையும், தலைமுறைகளின் கண்ணீரையும் தன்னோடு எடுத்துக்கொண்டு ஓடும் ஒரு நீண்ட உயிர்நதி.
ஹர் கி பௌரியில், கங்கை தன் மலைப்பயணத்தின் வேகத்தைத் தணித்துக்கொண்டு மனிதர்களின் கைகளுக்கு மிக அருகில் வந்து செல்கிறாள். ‘ஹர் கி பௌரி’ என்பது இறைவனின் பாதச்சுவடு பதிந்த இடம் என்ற நம்பிக்கையுடன் போற்றப்படும் ஒரு படித்துறை. இது ஹரித்வாரின் ஆன்மீக இதயமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள பிரம்மகுண்டில்தான் அமிர்தத் துளிகள் விழுந்ததாகப் புராண நம்பிக்கை கூறுகிறது.
அதனால்தான், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கும் ஒரு பழைய அழைப்பைப் போல, இன்றும் மனிதர்கள் கங்கையை நோக்கி வருகிறார்கள். சிலர் பாவங்களை விட்டுவிடவும். சிலர் வேண்டுதல்களைச் சொல்லவும். சிலர் முன்னோர்களுக்காகவும், இன்னும் சிலர் தங்களையே தேடிக்கொண்டும்.
நான் ஹரித்வாரை அடைந்தபோது அதிகாலை நான்கு மணி. நாங்கள் தங்குவதற்காக ஓர் ஆசிரமத்தில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளியில் இன்னும் இருள் முழுமையாக விலகவில்லை. நகரம் உறங்குவது போலத் தோன்றினாலும், ஹரித்வார் ஒருபோதும் முழுமையாக உறங்குவதில்லை என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.
கங்கை ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்காக மனிதர்களின் பிரார்த்தனைகள் மட்டும் விழித்திருந்தன. காலை ஐந்தரை மணியளவில் கங்கையில் நீராடி, மூதாதையர்களுக்காக நதியில் விளக்கை விடுவது விசேஷம் என்று எங்கள் வழிகாட்டி கூறியிருந்தார். அன்றைய நாள்...
என் அப்பாவின் நினைவு நாள். அந்த ஒரு தகவல் மட்டும் போதுமானதாக இருந்தது. ஹரித்வாரின் ஆயிரம் ஆண்டுக் கதைகளுக்குள் திடீரென்று என் தனிப்பட்ட வரலாறும் வந்து சேர்ந்துகொள்ள.
குறிப்பிட்ட நேரத்தில் நான் கங்கையின் படித்துறையில் நின்றிருந்தேன். மிகக் குளிர்ந்த நீர் என் கால்களைத் தொட்டுத் தொட்டு விலகியது. அந்தத் தொடுதல் ஓர் ஏக்கத்தின் தொடுதலா? அல்லது அரவணைப்பின் தொடுதலா? என்னால் அனுமானிக்க முடியவில்லை. சொல்லத் தெரியாத ஒரு உணர்ச்சிப்பூர்வமான தருணம் அது. தனிமையில் நின்றிருந்தேன். அழுதால் ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது. கங்கை என் முன்னால் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தாள்.
ஆனால் அந்த நேரத்தில் கங்கையைவிட வேகமாக ஓடிக்கொண்டிருந்தது என் நினைவு. அப்பா. அப்பாவை எனக்குப் பிடிக்குமா, பிடிக்காதா என்ற முடிவுக்கே வரமுடியாத அவருடைய மூத்த மகள் நான். அன்புக்கும் கோபத்துக்கும் நடுவில், பாசத்துக்கும் பழைய காயங்களுக்கும் நடுவில், சில உறவுகள் வாழ்நாள் முழுவதும் தீர்க்கப்படாத கேள்விகளாகவே இருந்து விடுகின்றன. அப்பாவுடனான என் உறவும் அப்படித்தான். ஆனாலும், நான் அப்பாவை ஓர் இடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை.
இருள் விலகியிருந்தது. ஆனால் சூரியன் இன்னும் வெளிவரவில்லை. பலர் மிகுந்த பக்தியுடன் கங்கையை வணங்கிக்கொண்டிருந்தார்கள். சிலரின் கைகளில் சிறிய விளக்குகள். சிலரது உதடுகள் ஏதோ ஒன்றை முனுமுனுத்துக் கொண்டிருந்தன. ஒருவர் கண்களை மூடியிருந்தார். இன்னொருவர் கைகளை கூப்பியிருந்தார். ஒரு பெண் தன் குழந்தையின் கையைப் பிடித்தபடி கங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு முதியவர் நீரில் இறங்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரிடமும் ஒரு கதை. ஒவ்வொருவரிடமும் ஒரு வேண்டுதல். ஒவ்வொருவரிடமும் சொல்லப்படாத ஒரு ரகசியம்.
நான் மட்டும் புகைப்படம் எடுப்பதற்கான சரியான ஒரு காட்சிக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். ஹரித்வாரில் நான் இன்னும் ஒரு புகைப்படத்தைக்கூட எடுக்கவில்லை. என்னைப் பாதிக்கும் அந்தக் காட்சி கிடைக்குமா? கிடைக்காதா?
கங்கையிடம் தீபத்துடன் கையேந்தியிருக்கும் அந்த மனிதர்களைப் பார்த்தபோது, அவர்களுடைய கைகளில் எத்தனை ஆயிரம் பிரார்த்தனைகள் மிதந்துகொண்டிருக்கின்றன என்று தோன்றியது. ஆண்களின் பிரார்த்தனைகளும் பெண்களின் பிரார்த்தனைகளும் ஒன்றுபோல இருக்குமா?ஒரு தாயின் வேண்டுதலும், ஒரு தந்தையின் வேண்டுதலும் ஒன்றுபோல இருக்குமா? ஒரு மகன் தன் தந்தைக்காக விடும் தீபமும், ஒரு மகள் தன் தந்தைக்காக விடும் தீபமும் ஒரே வெளிச்சத்தைக் கொடுக்குமா? அல்லது ஒவ்வொரு விளக்குக்கும் அதன் பின்னால் தனித்தனி இருள் இருக்கிறதா?
கங்கையில் முங்கி எழுந்தேன். ஈரமான புடவையின் முந்தானையை உதறியபோது கண் விழித்தேன். மணி காலை 9.30. அத்தனையும் கனவு. இப்படி நீண்ட நேரம் தூங்குபவள் இல்லை நான். ஹரித்வாரின் அந்த மகத்தான காலை உதயத்தை நான் காணவே இல்லை.
கனவுதான் என்றாலும் அது கனவுபோல இல்லை. அப்பாவுக்காக விளக்கை விட்டேனா? அந்த ஆயிரம் மனிதர்களின் பிரார்த்தனைகளுக்குள் நான் உண்மையில் ஒருத்தியாக நின்றேனா? எதுவுமே தெரியவில்லை.
கங்கையில் பிரம்ம நேரத்தில் தீபத்தை விடவில்லை என்றாலும், இரவு கங்கா ஆராத்திக்குப் பிறகு நான் அப்பாவுக்கான மோட்ச விளக்கை கங்கையில் விட்டேன். கடவுள் இல்லை என கூறும் என்னை கடவுளும் லேசில் விடுவதாக இல்லை…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக