ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

யசோதாபுரம் கண்ட யட்சி (பயணக்கட்டுரை) 1




அங்கோர் வாட்

சியாம் ரீப்-பின் அங்கோர் வாட் சூரியவர்மன் - ஜெயவர்மன் எனும் மாபெரும் பேரரசர்களின் பெயர்களை தாங்கியிருக்கிறது. சியாம்  என்பது தாய்லாந்தின் பெயர் என குறிப்பு இருக்கிறது. கம்போடியா - தாய்லாந்து எல்லையில் உரிமைபோராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்  Preah Vihear சிவன் கோயிலை குறித்து நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. கெமர் மக்களைக் குறித்த தெளிவில்லாத பிரச்சாரங்களும் பதிவுகளும் வைத்துக்கொண்டு கம்போடிய மன்னன் தமிழ் மன்னன் என்று பேசுவதெல்லாம் எனக்கு தெரிந்த வரை வரலாற்றுச் சோகம்தான்.யசோதாபுரம் - இந்தோச்சீனா எனும் கம்பூச்சியா இன்று கம்போடியாவாக மாறி நமக்கு அதிசயத்தையும் ஆச்சரியத்தை மூட்டுகிறது.    

அங்கோர் வாட் பயணம் குறித்து நான்

என் வாழ்நாளில் நான் காண வேண்டும் என்று கனவுக்கண்ட இரண்டு தேசங்களை கண்ணார கண்டு விட்டேன்.  ஆசைப்பட்டது நிறைவேறாமல் மரணம் சம்பவித்தது என்று சொல்வதற்கு இனி வாய்ப்பே இல்லை. கம்போடியா குறித்தான எனது கனவை நிறைவேற்ற கிட்டதட்ட 10 ஆண்டுகள்  காத்திருந்தேன். உயிர்மை இதழில் ஒரு முறை வாசிக்க நேர்ந்த பயணக்கட்டுரையின் தாக்கத்தால்,இவ்விரு தேசங்கள் குறித்தான கனவுகள் மெல்ல துளிர்விட தொடங்கி,  என்னையும் அறியாது அதன் மீதான ஆர்வம் தீவிரமடைந்திருந்தது.

முதலாவதாக இந்தோனேசியாவின் புகழ்பெற்ற தீவான ஜோக் ஜகார்த்தாவின் ‘போரோபுடூர்’ போன அனுபவம்,  கொம்போடிய பயணத்திற்கான ஆவலை மேலும் மேலும் எனக்குள் துரிதப் படுத்தியிருந்தது.  ஜோக் ஜா போய் வந்து, 6 ஆண்டுகள் கழித்து நான் இதே நாளில் அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கோயிலான அங்கோர் வாட்டில் ஒரு யட்சியைப் போல திரிந்துக்கொண்டிருந்தேன். 

வெறிக் கொண்டேனா? அல்லது ஆர்வம் கொண்டேனா என்று சொல்லத் தெரியவில்லை. காண்பதற்கு ஒரு நாள் காணாத (போதாத) சூரியவர்மனின்  அந்த மாபெரும் அதிசயத்தை அங்குளம் அங்குளமாக ரசித்தேன். 
என்னைப்போல யாருமே அன்று அந்தக் கோயிலைப் பார்த்து அதிசயித்திருக்கமுடியாது. காண்பதெல்லாம் காதலாக மாறிக்கொண்டிருந்ததை நான் மட்டுமே உணர்ந்தேன். சுவர்களில் பல கோணங்களில் நளினம் காட்டும் கேமர் பெண்களையும் , சுவர் சிற்பங்களையும் , தலை கொய்யப்பட்ட புத்தர் சிலைகளையும், தன் உடலுக்காக காத்திருக்கும் பாதங்களையும் நான் புகைப்படங்களாக பதிவு செய்துக்கொண்டிருந்தேன். 




இனி பயணம் போகலாம்

சியாம் ரீப் ஏர்போர்ட்

மலேசிய மாஸ் விமானம் கிட்டதட்ட இரண்டரை மணி நேரத்தில் கம்போடியாவின் இரண்டாவது பெரிய நகரமான சியாம் ரீப் நகரின் ஏர்போட்டில் எங்களை தரை இறங்கியது.  திருவானந்தபுரம், அல்லது தாய்லாந்து விமான நிலையம் மாதிரியான பெரிய ஆடம்பரம் - ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனால் அந்நாட்டில் கலையோடு கட்டப்பட்ட விமான நிலையம் அது. மலேசியர்களுக்கு விசா இல்லாதபடியால் சுங்கதுறையைக் கடந்து நாங்கள் விரைவாகவே வெளிவந்தோம்.  மலேசியாவுக்கும் கம்போடியாவுக்கும் ஒருமணிநேர வித்தியாசம் இருக்கிறது. மலேசியா ஒரு மணி நேரம் முன்னோக்கி பயணிக்கிறது.  நான் முன்கூட்டியே தங்கு இடம், சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் இணையம் மூலமாகவே செய்திருந்தேன்.  நான் தேர்ந்தெடுத்திருந்த அங்கோர் தங்கும் விடுதி, நைட் மார்கெட்டுக்கு பெயர் போன சியாம் ரீப் தங்க முக்கோண பகுதியில் அமைந்திருந்தது. தங்கும் விடுதி சலுகைகளில் ஒன்று விமான நிலையத்திலிருந்து எங்களை அழைத்துக்கொள்வதும் பின் பயணங்கள் முடிந்து இறுதி நாளில் மீண்டும் எங்களை  விமான நிலையத்திலேயே இறக்கி விடுவதுமாகும்.

மூன்று நாட்களுக்கு இரண்டு பேர் தங்கக்கூடிய விடுதி, காலை உணவு, விமான நிலையத்திலிருந்து அழைத்துசெல்லுதல்-இறுதி நாளில் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லுதல், ஒரு நாள் பயணத்திற்கான முழு போக்குவரத்து மற்றும் 10 புராதன கோயில்களுக்கு ஒரே நாளில் அழைத்துச் செல்லுதல் என இவை அனைத்திற்கும் ஓர் ஆளுக்கு மலேசிய ரிங்கிட்  350.00 வெள்ளிமட்டும்தான்.  எனக்கு தெரிந்து மலேசியாவில்கூட இத்தனை மலிவான ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியாது. நான் 5 நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ( அதை பிறகு சொல்கிறேன்)

எங்கள் சாரதி
எங்களின் பெயர் எழுதிய பதாகையை சுமந்தபடி காத்துக்கொண்டிருந்தார் எங்களின் 'டுட் டுட்' ஓட்டுநர். 'டுட் டுட்' என்றால் மலிவு வகை பொது போக்குவரத்து வண்டியாகும். ஆட்டோ மாதிரியா? என்றால் அது ஆட்டோ இல்லை. டாக்சி என்றால்? அது டாக்சியும் இல்லை.  கம்போடியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்பதால் அதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ‘டுட் டுட்’. மோட்டார் சைக்கிளில் கூரை வைத்த ஒரு கூண்டை பொறுத்தினால் அதுதான் ‘டுட் டுட்’. கிட்டதட்ட 4 பேர் தாராளமாக, மோட்டார் சைக்கிளுக்குப் பின் பூட்டப்பட்டிருக்கும் அந்தக் கூண்டில் உட்காரலாம். தாய்லாந்திலும் இந்தோனேசியாவிலும்கூட  'டுட் டுட்' என்றுதான் அழைக்கிறார்கள்.  அண்டை நாடுகள் என்பதால் இந்த பெயர் ஒரே மாதிரி நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம்.  ஆனால்,  பின் குறிப்பிட்ட இரண்டு நாடுகளில் இருக்கும் ‘டுட் டுட்’-களில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.  

அன்று வெயில் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. எங்களின் ஓட்டுநர் இரு கைகளை கூப்பி வணக்கம் கூறினார். எங்களின் பெயர் பதாகையை டுட் டுட் கூட்டின் மேற்கூரையில் வைத்துவிட்டு விடுதியை நோக்கி பயணமானார். திறந்த வெளி வாகனம். மழை வந்தால் நினையாமல் இருக்க தடுப்புகள் செய்யப்பட்டிருந்தது. மனது பயணத்திற்கு தயாராக இருந்ததால் குதூகலமாக ஏறி அமர்ந்தோம். காரில் செல்வதைப்போன்றுதான் இருந்தது. ஒரு புதிய நாட்டில் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றவில்லை. எங்களின் சொந்த கிராமத்தில் இருப்பதைப் போலதான் இருந்தது. காரணம் அவ்வளவு பெரிய ஒரு நகரம்  என்றாலும் நவீனம் நோக்கிய வடிவம் அதனிடம் இல்லை. சுற்றுப்பயணிகளை மட்டுமே நம்பி செயல்படுவதால் அந்நகர் மட்டுமே கொஞ்சம் புதுபித்து வைத்திருக்கிறார்கள். 20 கிலோ மீட்டர் அங்கிருந்து கடந்தால் வறுமையும் ஏழ்மையை மட்டும்தான் காண முடியும். அதை எங்கள் வண்டி ஓட்டுநரும் உறுதி செய்தார். 



நாங்கள் தங்கும் விடுதியை அடைந்தோம். அழகான விடுதி. நான் இன்றே அங்கோர் வாட் போகனும் என்றேன். நாளை போகப்போகும் கோயில்களில் அங்கோர் வாட் இருக்கிறது என்று எங்களின் விடுதி ஆலோசகர் சொன்னார். இல்லை! எனக்கு இன்று முழுவதும் ஈஸ்வரபுரத்திலேயே இருக்க வேண்டும் என்றேன்.  அவர் சிரித்தார். என் கனவு தேசத்தில் கால் வைக்கப் போகிறேன். ஒரு கடமைக்காக நான் வரவில்லை. என் கனவை நனவாக்க வந்திருக்கிறேன். எனவே நான் கம்போடியாவில் இருக்கும் நாட்கள் முழுவதும் அங்கோர் வாட் போவேன் என்றேன். 

பயணம் தொடரும்...



6 கருத்துகள்:

  1. தொடக்கமே சிறப்பு. அடுத்த பாகம் எப்பொழுது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை வரை காத்திருங்கள்.. நன்றி வாசித்து கருத்திட்டமைக்கு

      நீக்கு
  2. முன்பு நானும் அவரோடு பார்க்க ஆவல் கொண்ட இடம். இனி மெல்ல சோகமும் கொரோனாவும் கடந்த பின்
    அந்த ஈஸ்வரப் புரத்தில்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக போயிட்டு வாங்க மா. அண்ணா உங்களோடுதான் இருக்கிறார்.

      நீக்கு
  3. போக வேண்டும் என்ற என் ஆவலை அதிகரிக்கிறது.

    பதிலளிநீக்கு