புதன், 18 மார்ச், 2020

ஜீ.வி காத்தையா நேர்மையான தொழிற்சங்கவாதி




செம்பருத்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியிதான் நான் தோழர் காத்தையாவை முதன்முதலில் பார்த்தேன்.  அதற்குமுன் செம்பருத்தி இணைய செய்தியில் அவரின் பெயரை பார்த்ததுண்டு. சுமார் 15 ஆண்டுகள் அவர் செம்பருத்தியின் செய்திப் பிரிவு ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.


அந்த நிகழ்ச்சியில் அவர் உரை நிகழ்த்தினார்.  ரொம்பவும் கோபமாகவும் கத்தியும் அவர் பேசினார். ஆனால், அவரின் அத்தனை கோபமும் ரொம்பவும் ஞாயமானதாக இருந்தது.  சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையும் கோபமும்  கண்ணுற்றபோது  தோழர் காத்தையாவின் மீது நல்லதொரு அபிப்ராயம் எழுந்தது. ஆனால், அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடக்கூடிய முயற்சியினை பலமுறை மேற்கொண்டிருந்தாலும் இறுதிவரை அது நடக்காமலே போய்விட்டது.  என் வரையில் அது பெரிய இழப்புதான். 17/3/2020 அன்று 82-வது வயதில் காத்தையா எனும் ஜி.வி காத்தையா  தனது  ஆய்வு பொக்கிஷங்களை விட்டுவிட்டு நிரந்தரமாக துயில் கொண்டுவிட்டார்.  


தோழர் காத்தையா 27 ஜூன் 1938-ஆம் ஆண்டு பத்து அராங்கில் பிறந்தார். பத்து அராங் என்ற நிலக்கரிச் சுரங்க நகரமே போராட்டத்திற்கும் , தொழிலாளர் வர்கத்திற்கும் பேர்போன நகரமாகும். அந்த மண்ணில் பிறந்தக்காரணமோ என்னவோ இயற்கையாகவே போராட்ட குணம் அவர் ரத்ததிலேயே இருந்தது எனலாம்.  மிகவும் சாதூர்யமாக பதில் அளிக்ககூடிய காத்தையா. இலண்டன் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்,   சட்டம், தொழிலாளர் சமூகவியல்,  பிரிட்டிஷ் காலனித்துவத் தொழிலாளர் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் செய்திருக்கிறார்.

உழைக்கும் பாட்டாளி வர்கத்தை, முதலாளி வர்கத்தை வைத்து பிரிட்டிஷ் காலனித்துவம் நசுக்கிய வரலாற்றை தான் செய்த ஆய்வுகளில் ஆதாரத்துடன் இருப்பதை கண்டார் காத்தையா.  அதன்பிறகு அவர் தனது செயற்பாடுகளிலும் பங்கு கொள்ளும் மேடைகளிலும் தொழிற்சங்க சித்தாந்தத்தை பேசுவது மட்டுமல்லாமல் பிரிட்டிஷாரை மிகக் கடுமையாக சாடவும் தொடங்கினார்


தனது இளம் வயதிலேயே  தொழிற்சங்கத்தில் இணைந்து மலேசிய தோட்டத் தொழிலாளர் சங்க வரலாற்றை தீவிரமாக அறிந்துக்கொண்டார். 1964-ஆம் ஆண்டு அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கம் (AMESU) தோன்றியதற்கு பின்னனியில் இவர் இருக்கிறார். 

மூன்று முறை நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்விக்கண்டாலும், தனது கொள்கைகளிலிருந்தும் நிலைப்பாடுகளிலுருந்தும் பின்வாங்கவே இல்லை.  இறுதிவரை ஒரு தொழிற்சங்கவாதியாகவே வாழ்ந்தவர் தோழர் ஜீவி காத்தையா.  

தொழிலாளர் வர்கப் போராட்டம் என்றால் என்னவென்றே  இளைஞர்களுக்கு தெரிவதில்லை என்றும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்த தோழர் ஜிவி காத்தையாவின் கனவு நிறைவேறியதா என்பதற்கான  கேள்விக்கு   பதில் தேடினால் அது  வருத்தம் நிறைந்ததாக 
இருக்கும்.  ஆனால்,  நேர்மையான ஒரு மனிதனை தமிழ்ச்சமூகம் மட்டுமல்ல பாட்டாளி வர்கம் இழந்திருக்கிறது என்பதும் அந்த இடத்தை இனி யார் வந்தாலும் ஈடு செய்ய முடியாது என்பதும் அவரை அறிந்தவர்களுக்கு தெரியும்.

18/3/2020 தோழர் காத்தையாவின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரின் சகோதரர் எங்களை அழைத்துச் சென்று காத்தையாவை காண்பித்தார். என்னேரமும் கர்ஜிக்கும் சிங்கம், மிக அமைதியாக துயில் கொண்டிருந்தது. நாங்கள் அதன் துயிலை கலைக்கவில்லை. அவரின் சகோதரரிடம் பேசினேன். அவரின் ஆய்வுகள் குறித்துக் கேட்டேன். ஆமாம், அவர் நிறைய ஆய்வு செய்திருக்கிறார். அதுதான் அவருக்கு பிடித்த விஷயம்.  நாங்கள் அதற்கு தடையாக இருந்ததில்லை என்றார். மீண்டும் உறங்கும் சிங்கத்தை திரும்பிப் பார்த்தேன். இமைப்பொழுதில் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று  சன்னமாக சிவப்புராணம் ஒலித்துக்கொண்டிருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக