வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

சேரியாக அறியப்படும் மும்பையின் நாடித்துடிப்பு


'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் வரும்வரை எனக்கு தாராவி குறித்து பெரிய அறிமுகமில்லை. சிற்றிதழ்களில் வெளிவந்த அத்திரைப்பட  விமர்சனங்களில் நிச்சயமாக எங்காவது ஓர் இடத்தில் தாராவியின் பெயர் இடம் பெற்றுவிடும். ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி அதுயென அறிந்துகொண்டதும் அப்போதுதான். நாயகன் திரைப்படமும் தாராவியின் சூழலை அழகாக படம்பிடித்து காட்டியபடம்தான் என்றாலும் 'ஸ்லம்டாக் மில்லியனர்' தற்கால எளிய மனிதர்களின் வாழ்க்கை சூழலையும் ஏழ்மையையும் தாராவியையும் காட்டியது. அதுவரை தாராவி குறித்து அறியாதவர்களையும் வெளிநாட்டவர்களையும் திரும்பி பார்க்கவைத்தது மஹாராஷ்ட்ரா மாநில தலைநகரமான மும்பையில் இருக்கும் தாராவி.

ஊர் கூடி இழுத்தும் 
சேரிக்குள் வரவில்லை 
தேர் 
என்ற வரிகளில் “சேரி” (slum) என்கிற வார்த்தை கொடுக்கும் அழுத்தத்தை குடிசைப்பகுதிகளோ, அழுக்கான தெருக்கள் நிறைந்த பகுதியோ கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.   

ஊடறு பெண்கள் சந்திப்புக்குப்பிறகு தோழிகள் அனைவரும் எங்காவது சுற்றுலா போவது வழக்கம்தானே. எங்கே போகலாம் என எண்ணிக்கொண்டிருக்கையில் எல்லார் மனதிலும் ஏக மனதாக தோன்றியது தாரவிதான். 'தாராவி என் தொட்டில்' என புதிய மாதவி, அவரது  முகநூல் info-வில் கூறியிருப்பார். எதையும் பொத்தாம் பொதுவாக கூறுபவர் இல்லை அவர்.   தாராவி அவர் வாழ்வியலோடு பின்னி பிணைந்தது என இந்த சுற்றுலா மேற்கொள்ளும்வரை எனக்கு தெரியாது.

மும்பையில் நடந்த பெண்கள் சந்திப்புக்குப்பிறகு மறுநாள் தோழிகள் அனைவரும் வாடகை பேருந்தை  எடுத்துக்கொண்டு  குதூகலத்திற்கு எந்த குறைச்சலும் வைக்காமல் கிளம்பினோம். நேரம் மதியத்தை நெறுங்கிக் கொண்டிருந்தது. பாண்டுட்டிலிருந்து தாராவி சற்று தொலைவுதான். நேர்த்தியான தார் சாலைகள், இளசுகளும் பெரியவர்களும் இளைப்பாறும் அழகிய  ஏரி, சாலை நெரிசல் சாலையோரத்து மரங்கள், சமிக்ஞை விளக்குகள், கட்டிடங்கள்  மனிதர்கள் என  காட்சி  படுத்தியபடி விரைந்து நகர்ந்து பேருந்து  தாராவியை நெருங்கிக்கொண்டிருந்தது.
பட்டணத்திற்கு சம்பந்தமில்லாத மாறுதல் தென்பட்டவுடன் என் கேமரா கண்கள் கவனத்தை குவிக்க ஆரம்பித்தன. பேருந்து ஓட்டுனரை வாகனத்தை மெல்ல செலுத்துமாறு கூறிவிட்டு சாலையின் இரு புறத்திலும் நோட்டமிட தொடங்கினோம். மொட்டை மாடிகளில் இடைவிடாது துணிகள் காய்ந்துகொண்டிருந்தன. பல மொட்டை மாடிகளில்   அடைசலாக
இந்த காட்சியை  காண முடிந்ததால் சலவை தொழில் செய்யும் இடமென அனுமானிக்க முடிந்தது.  தாராவியின் தொடக்கம்  அதிலிருந்தே உணர முடிந்தது. தாராவி வந்துவிட்டதென புதிய மாதவி சொன்னார். வண்டியை ஓர் இடமாக நிறுத்த இடம் தேடியத்தில்  அது ஒரு குறுக்கு சந்தில் நுழைந்தது. கூட்டம் கூட்டமாக ஆட்கள்,   எறும்பின் சுறுசுறுப்பில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய பொதியை  தலையில் சுமந்தவாறு இரு ஆடவர்கள் வந்துகொண்டிருந்தனர். குறுக்கு சந்தில் எங்கள் வாகனம் நகர முடியாமல் சிக்கிக்கொண்டதால் அவர்களால் மேற்கொண்டு நகர முடியவில்லை. வேறுஇடம் நோக்கி திரும்பி நடந்தனர். சிக்கிக்கொண்ட வாகனத்தை கவனிக்க கூட யாருக்கும் நேரமில்லை. பணம் ஈட்டுவது மட்டுமே அங்கு பிரதான ஒன்றாக இருந்தது. எல்லா மொழியும் மதமும் இனமும் கலந்த கலவையாக தாராவி இருந்தது. வாகன ஓட்டியின் முயற்சியில் சிக்கியிருந்த பேருந்து உரிய இடத்தில் நிறுத்தப்பட்டது.

பேருந்து நிறுத்தப்பட்ட இடம் ஒரு கோயில். கோயிலின் பக்கத்தில் ஆங்கில தமிழ்ப்பள்ளி.  அண்ணல் அம்பேத்கர்  ஓவியமும் புத்தனின் ஓவியமும் சாயம் மங்கிய சுவரில் வரையப்பட்டிருந்தது. கோயிலுக்குள் நுழைந்தோம். அது சாதாரண கோயிலில்லை.  தாராவிக்கும் அந்த கோயிலுக்கும் தொப்புள் கோடி உறவு உண்டென புதிய மாதவி விளக்க தொடங்கினார். கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது. எங்களுக்காக சிறப்பு அனுமதி வாங்கி கோயிலின் உள்ளே காண்பதற்கு அழைத்து சென்றார் புதிய மாதவி. பழைய கோயிலாக இருந்தாலும் அதை புதுப்பித்திருந்தனர். சிறிய கோயில்தான். நிகழ்ச்சிகள் செய்யவும் ஒன்று கூடவும் கோயிலுக்கு முன்பு சிறிய மண்டபம் போல ஒதுக்கியிருந்தனர்.

சிவன், விநாயகர், நவகிரகங்கள் என தமிழர்களின் முக்கிய கடவுள்களுக்கு விக்கிரகங்கள் இருந்தன. இந்த தாராவிதான் எங்களின் பலருக்கு  தாய்வீடு என புதிய மாதவி சொன்னார். தாராவி அவரை பரவசப்படுத்திக்கொண்டிருந்ததை அவரின் குரலில் உணர முடிந்தது. கிடைத்திருக்கும் கொஞ்ச நேரத்தில் தாராவிக்குறித்து என்னெல்லாம் எங்களுக்கு சொல்ல முடியுமோ அதையெல்லாம் சொல்வதற்கு முயற்சித்தார். எங்களின் ஐவரை தவிர மற்றவர்களை தாராவி பெரிதாக கவரவில்லை என்றே தோன்றிகியது.தாராவியில் ஷாப்பிங் செய்வதற்கு இலங்கை தோழியர் சிலர் சென்றுவிட்டனர். 

கோயிலுக்கு அருகில் இயங்கிக்கொண்டிருந்த பி.எஸ்.ஐ .ஏ.எஸ் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் எங்களை கவனித்தபடி இருந்தனர். குடிசை வீடுகள் என கூறப்படும் வீடுகளை காட்டுவதற்கு புதிய மாதவி அழைத்து சென்றார். தமிழர்கள் வாழும் பகுதியாக இருந்தாலும் வேறுமொழி பேசுபவர்களும் அங்கு  வசித்தனர். ஆடவர் ஒருவர் எங்கோ ஒரு மூலையில் வாளியில்  தண்ணீரை நிரப்பி எடுத்துபோய்க்கொண்டிருந்தார். நைட் டீ அணிந்திருந்த சில பெண்கள் அங்கிருக்கவும் மெல்ல பேச்சு கொடுத்தோம். கோழி கூண்டைவிட கொஞ்சம் பெரியதாக இருக்கும் கூண்டுதான் அவர்களின் வீடாக இருந்தது. கழிப்பறை இல்லாத வீடுகள். இரண்டடிக்கு குளிப்பதற்கு மட்டும் இடத்தை ஒதுக்கிவிட்டு உறங்குவதற்கு மட்டும் கட்டியது போல இருந்தது. உங்களின் ஒருவரின் வீடடை நாங்கள் காண முடியுமா என்று கேட்டோம்.  

சற்று யோசித்த பெண்களில் ஒருவர் என்  வீட்டுக்கு வாங்க என அழைத்துச் சென்றார். சராரியாக ஒருவர் வீட்டில் இருக்கும் தனியறையை விட சிறியதாக இருந்தது அவர்களின் வீடு. எப்படி இதில் தங்குவதற்கு சாத்தியம் என கேட்க தோன்றினாலும் கேட்கவில்லை. காரணம் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அப்படித்தானே வாழ்ந்து முடிந்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறையும் இந்த வரலாற்றை தொடர்வதற்கு வளர்ந்து நிற்கும்போது சாத்தியமா என்ற கேள்வி அபத்தம் தானே. இது எனது சொந்த வீடு. சமீபத்தில்தான் வாங்கினேன். என ஒரு தொகையை சொன்னார். ஆனாலும் அந்த வீட்டிற்கான நிலம் அவர்களுக்கு இல்லையாம். வீடு மட்டும்தான் சொந்தம். நிலம் வேறொருவரின் பெயரில் இருக்கிறது. அவருக்கு நிலத்திற்கான பணத்தை ஒவ்வொருமாதமும் வாடகையாக வழங்க வேண்டும். இதுபோக மேல்மாடியில் இதேபோலவொரு வீட்டை அமைத்து வோறொரு குடும்பம் வாழ்கிறார்கள்.
அவர்களின் சொந்த வீடு என்று கூறப்படும் வீட்டை தன் விருப்பம்போல கொஞ்சம் மாறுதல் செய்தலோ அல்லது மறு சீரமைப்பு செய்தலோ அதற்கான அனுமதியை நிலத்து உரிமைக்காரரிடம் பெற வேண்டும். இல்லையென்றால் அது அவர்களுக்கு வேறொரு சிக்கலை ஏற்படுத்தும். இப்படியான  ஒப்பந்தம் எந்த விதத்தில் சரியென தெரியவில்லை. இம்மாதியான ஒப்பந்தங்களை தாராவி வாசிகளே ஏற்படுத்திக்கொண்டு அதை காலகாலமாக பின்பற்றி வருகிறார்கள் என அவர்களோடு உரையாடுகளியில் ஏறக்குறைய புரிய முடிந்தது. தாராவி என்பது அரசுக்களால் கட்டமைக்கப்பட்டு, வளர்த்தப்பட்ட இடம் அல்ல. முழுக்க முழுக்க மக்கள் சக்தியாலும், அவர்களின் உழைப்பாலும் கட்டமைக்கப்பட்ட இடம் என இணையத்தில் வாசிக்க நேர்ந்ததை இங்கு பதிவு செய்ய நினைக்கிறேன்.

2.1 சதுர கிலோமீட்டர்   பரப்பளவில் தன வாழ்க்கையையும்  வாழ்வாதாரத்தையும் நிர்ணயம் செய்திருக்கும் கிட்டதட்ட ஆறு லட்சம் குடிசை வாசிகளில் அதிகானோர் தமிழர்கள் தான். அதிலும் குறிப்பாக மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி முதலிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம் என கூறப்படுகிறது. 
சிறு சிறு அழுக்கு கால்வாய்கள் அல்லது அவை சாக்கடைகளாக கூட இருக்கலாம்,  மணத்தை பரப்பிக்கொண்டு புதிதாக அங்கு வந்திருக்கும் எங்களின் சிலரை கவனத்தை ஈர்த்தது. இம்மாதிரியான சாக்கடைகளை நான் மும்பாயின் பல இடங்களில் கண்டேன். இஸ்லாமியர்களையும் அங்கு அதிகமாக காணமுடிந்தது. பர்தா அணிந்த பெண்கள் மிக இயல்பாகவே நாங்கள் காணச்சென்ற சாலையில் நடமாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், முகத்தில் ஒருவகை கலவரம் இருக்கவே செய்தது. அல்லது எனக்குத்தான் அப்படி தோன்றியதா தெரியவில்லை. மும்பை கலவரம் ஏனோ என் சிந்தனைக்கு வந்துகொண்டே இருந்தது. புதியவர்களான எங்களை பல கேள்விகளோடு பார்க்கும் அந்த பார்வைகளை எதிர்கொள்ள மிகவும் சிரமாக எனக்கு இருந்தது. அச்சம், புகைப்படம் எடுக்கக்கூட தடைபோட்டது. தள்ளுவண்டியில்  புளியம் பழம், கரும்பு, சர்பத்,  விற்கும் சிறுவணிகர்கள் அடுத்தப்படுத்து எங்களை கடந்துச் செல்லும்போது புளியம் பழம் மீது  எழுந்த ஆவலில் அனைவருமே புளியம்பழம் வாங்கினோம். பச்சை காய். துவர்ப்பாக இருந்தது. 

கைரேகை பார்க்கும் குறிசொல்லும் தமிழ் மாதர்கள்கள் எங்களை பார்த்ததும் நெருங்கி வந்தனர். முகத்தை பார்த்தே குறிசொல்ல தொடங்கிவிட்டிருந்தனர். பெரிய நெற்றிபோட்டோடு இருந்த அவர்களை புகைப்படம் எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. ஐஸ்வரியம் போய்விடும் என்கிறார்கள். அதற்குள் நான் அவர்களில் ஒருவரை புகைப்படம் எடுத்திருந்தேன். அவர்கள் எதிர்பார்த்து வந்த வருமானம் கிடைக்காமல் போகவே அவர்களுக்கு அது ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். யாருமே கைஜோசியம் பார்க்க மாட்டார்கள் என அனுமானித்ததும் அங்கிருந்து அவர்கள்  கிளம்பி விட்டார்கள். இம்மாதிரியாக தமிழர்களின் நாகரிங்களிலும் கலாச்சாரங்களிலும் இடம்பெறும் சின்ன சின்ன விஷயங்கள் கூட வேர்விட்டு வளர்ந்திருப்பதை தாராவியில்  பார்க்க முடிந்தது.
பெருநகரம் வர்த்தகத்தில் முக்கிய நகரம் என்று பெருமையாக கூறப்படும் இந்த பெருநகரத்தில் சரிசமமாக வறுமையும் சேரி மக்களையும் காணமுடிந்தது.  அழகிய  அரபிக்கடலில் மௌனமாக கலந்து ஓடும் சாக்கடைகள் போல மும்பாய் மக்களின் ஏழ்மையும் எளிமையும் மறைமுகமாக வெளிநாடுகளுக்கு காட்டப்படுகிறது. தாராவியில் துயர்மிகு கதைகளை கேட்க வேண்டாம். பார்த்தாலே அது நமக்கு உணர்த்திவிடும். உங்கள் கதைகளை சொல்லுங்கள் என கேட்பதும் வன்முறை என்றே எனக்கு தோன்றுகிறது. எங்கள்
கதை உங்களுக்கு தெரியும் வேண்டும் என்றால் அதை வாழ்ந்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்று ஒரு குரல் எழுந்து வந்தாலும் அதை ஏந்தி கொண்டுவந்து எங்கு இறக்கிவைத்து.  வாழ்விடம் பத்தி பேசிய அப்பெண்களை, அவர்களின் உணர்வுகளை மேலும் கிளறிப்பார்க்க எனக்கு துணிவில்லை. ஆனாலும் எனக்கு அது வேறு ஒன்றை நினைவூட்டியது. 



1990-ல் பிரபல இயக்குநர் சாய் பரஞ்சபேயின் (Sai Paranjpye) இயக்கத்தில் வெளியான திஷா” (Disha) என்ற திரைப்படத்தில், மும்பைக்கு சற்று தொலைவில் உள்ளபக்குரி” (Bakuri) எனும் கிராமத்தில் இருந்து  வசந்த் (நானா படேகர்) என்பவன் திருமணம் செய்து மனைவியை கிராமத்தில் விட்டுவிட்டு, மும்பையில் சம்பாதிக்க வந்திருப்பார். அங்கு அவர் தங்குவதற்கு அவருடைய ஊர்க்காரர் இருக்கும் ஓர் அறையை சென்று சேர்வார். அந்தப்பகுதி தாராவி  என நம்மால் பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடியும். அந்த ஓர் அறையில் 40 பேர் ஆண்கள் இருப்பார்கள், அனைவருமே அவரது ஊரைச் சேர்ந்தவர்கள். ஒரு நூற்பாலையில் வேலைக்கு சேர்ந்தவுடன் வசந்த்க்கு ஓர் ஆசை வரும், தனது புதுமனைவியை  அழைத்து வந்து மும்பையை சுற்றிக் காட்ட வேண்டும், அவளோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என. அழைத்தும் வருவார். வசந்த்தின் வேறொரு நண்பன் அவனது உறவினர் குடும்பம் எங்கோ சுற்றுலா போயிருப்பதாகவும், வசந்த் மற்றும் அவன் மனைவி அவர்கள் வீட்டில் ஒருவாரம் தங்கிக்கொள்ளலாம் என அந்த வீட்டுச் சாவியை கொடுத்துவிட்டு போவான். ஒரு நாள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஊர் சுற்றுவார்கள்….மறுநாள் இரவு தூங்கப்போகும்போது அந்த குடும்பத்தினர் எதிர்பாராதவிதமாக வந்து இறங்குவார்கள். இப்போது வசந்த் அவனுடைய பழைய அறையான 40 ஆண்கள் தங்கியிருக்கும் தாராவி அறைக்குச் சென்று மனைவியோடு அந்த இரவை அங்கே கழிக்கும்நிலைக்குத் தள்ளப்படுவார். அவ்விரவில் வசந்த்தின் மனைவிக்கு நிகழும் மன உளைச்சல்கள், மறுநாளே  மும்பையை விட்டு கிளம்பி அவள் கிராமத்துக்கு செல்ல வைத்துவிடும். அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு வந்து அங்கே ஓரமாக இருக்கும் கழிவறைக்குள் நுழைந்து தனது இயலாமை, அவமானம், மன அழுத்தம் ஆகியவற்றால் அழத் துவங்குவான் வசந்த்.

நன்றி அம்ருதா ஜனவரி 2018 மாத இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக