ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

வாரணாசி 4 (காசி விஸ்வநாத் மந்தீர்)


தங்கும்விடுதியிலிருந்து கங்கை படித்துறைக்கு செல்வதற்கு போக்குவரத்துக்கு சிரமமே இல்லை. சைக்கிள் ரிக்ஷா போதும். குறைந்த பணத்தில் நிறைந்த சேவை. மேலும் இரண்டு புறங்களிலும் சாவகாசமாக காட்சிகளை காண அதுவே சரியான தேர்வு.
எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் சொற்படி முதலில் நாங்கள் கங்கை படித்துறைக்குச் சென்றோம். ஆனாலும் கங்கை ஆர்த்தி இரவில்தான் காட்டப்படும் என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தபடியால் மற்ற மற்ற இடங்களை காட்டும்படி கேட்டுக்கொண்டோம்.
காசி விஸ்வநாத் மந்தீர் போகலாம் என ஒரு குறுகிய சந்திற்குள் அழைத்துச்சென்றார் வழிகாட்டி. மாட்டுச்சாணங்களும் மனித நெருக்கடிகளும் , சுவர்களை துளைத்து செய்யப்பட்டதோ என சந்தேகிக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டிருந்த சிறு வியாபாரங்களும் மிக பரபரப்பாகவே அந்த குறுகிய பாதை இருந்தது. பூஜை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கடைக்குள் அழைத்துச் செல்லப்பட்டோம். செருப்பு, தோள்பை, கேமரா எல்லாம் வாங்கி லாக்கரில் வைக்கப்பட்டது. பிறகுதான் டீலே பேசினார்கள்.

உங்களோடு ஒரு பிராமணன் உடன் வருவார். நீங்களாக போனால் இன்று முழுக்க வரிசையில் நிற்கனும் என அந்தக் கடையையும் தாண்டி நீண்டுகொண்டிருந்த வரிசையை காட்டினார்கள். பிராமணனுக்கு 500 ரூபாய், பூஜைப்பொருள்களுக்கு 200 ரூபாய், லாக்கருக்கு அப்படி இப்படி என 1000 ரூபாய் என பேரம்பேசப்பட்டது.
வரிசையில் நிற்காமல் செல்ல அவர்கள் முதலில் கேட்டது 2500 ரூபாய். பிறகு அது பேரத்தில் 1000 என்று முடிந்தது. நான் 500 ரூபாயும் சாகுல் 500 ரூபாயும் கொடுத்தோம். பிறகு இன்னொரு பூஜாரி 200 ரூபாய் பிடிங்கி கொண்டது தனி கதை.  நான் சொன்னேன், நாங்கள் சாமிகூம்பிட வரவில்லை, பூஜை பொருள்கள் எனக்கு வேணாம். கோயிலுக்கு சென்று கோயில் அமைப்பையும் அந்த லிங்கதையும் பார்த்துவிட்டு வந்தாலே போதும். அப்படியெல்லாம் முடியாது என அவர்கள் ஏற இறங்க பார்க்க, பின் அவர்களுக்குள்ளாகவே ஏதேதோ பேச வெறும் 500 ரூபாயில் பேரம்பேசி முடிக்கப்பட்டது. அத்தனை கூட்டத்தையும் தாண்டி காசி விஸ்வநாத்தை தரிசிக்க நாங்கள் கூட்டத்தை தாண்டி மின்னல் வேகத்தில் போய்கொண்டிருந்தோம். இனி சாமிக்கெல்லாம் என்னால் பணத்தை இழக்கமுடியாது என வழிகாட்டியிடம் உறுதியாக சொல்லிவிட்டேன். பணமில்லாம் சாமியை காண முடிந்த மந்தீர் எது என தேடிவைக்கும்படி யோகியின் கட்டளையாகிபோனதில் அவர் சங்கடமாகிபோனார்.
  நான் வெளிநாட்டு பிரஜை என்கிற கோட்டாவில் சாமி தரிசனம் பார்க்க அழைத்து செல்லப்பட்டேன். என் கரிசனத்தில் சாகுலும் உடன்வந்தார்.  கொடுத்த 1000 ரூபாய் தண்டம்தான். எல்லாம் கூட்டு தரகர்கள்.
1785-ல் மகாராணி அகல்யா பாயினால் கட்டப்பட்டிருக்கும் அந்தக்கோயிலின் தள வரலாறுக்கு பல கதைகள் சொல்கிறார்கள். கோயிலை ஒட்டியபடி ஒரு பெரிய பள்ளிவாசலையும் காண முடிந்தது. அப்படி இப்படியென இதோ தலைவாசலுக்கு வந்துவிட்டோம். தரையோடு தரையாக இருக்கும் லிங்கத்தை இலைகள் மறைத்திருந்தன. நின்று பார்க்கமுடியாது. பார்த்துக்கொண்டே நகர்ந்திட வேண்டும். அவ்வளவுதான் லிங்க தரிசனம்.


 
 
 
 

 

2 கருத்துகள்: