புதன், 21 பிப்ரவரி, 2018

வாரணாசி 2



வருணை மற்றும் அஸ்ஸி என்னும் இரு நதிகளும் கங்கையோடு கலக்கின்றன. அதனால் அதற்குவாரணாசிஎன்ற பெயர். பனாரஸ் என்றும் காசியை அழைக்கின்றனர். தழிழர்கள் மத்தியில் காசி என்று சொல்வதுதான் பொதுவாக உள்ளது.


யோகி என பெயர்கொண்டிருக்கும் நான் புண்ணியம் நாடியோ, அல்லது முன்னோர்களுக்கான மோச்சத்தை நாடியோ அல்லது சந்யாசம் தேடியோ காசிக்கு செல்லவில்லை. என் பலநாள் விருப்பம் காசியை பலகோணங்களில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது மட்டுமே. மேலும் கங்கை ஆர்த்தியை குறித்து பலர் சிலாகிப்பதால் அதன் மேலிருந்த ஆவல் நாளுக்கு நாள் வளந்துகொண்டே வந்தது. நிஜமான யோகிகளையும், பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும் 'மணிகர்ணிகா காட்' மற்றும் 'அரிசந்திரா காட்' முதலியவற்றை என் கேமரா கண்கள் காண வேண்டும் என்று ஒரு சங்கல்ப்பம்போல காத்துக்கொண்டிருந்தேன். மேலும், அப்புகைப்படங்களை தேர்ந்தெடுத்து கண்காட்சி வைக்கவேண்டும் என்றும் ஆசையும் இருந்தது.


தனியாகவே காசிக்கு சென்று வருவதென்று எடுத்த முடிவில் பாதுகாப்பு கருதி நண்பர் சாகுல் உடன்வருவதாக சொல்லியதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. காசிக்கு செல்வதென்பது ஒரு சொகுசான பயணமாக இல்லை என்றும் அதற்காக மனம் -உடல் இரண்டையும் தயார் செய்துகொள்ளுங்கள் யோகி என சாகுல் என்னை முன்கூட்டியே எச்சரித்திருந்தார். மலேசியாவில் கஷ்டமே படாமல் சொகுசு போக்குவரத்துகளில் பழகியிருந்த எனக்கு முன்கூட்டியே தமிழ்நாட்டு அரசு பேருந்துகளில் பயணித்த அனுபவம் இருப்பதால் அது ஒரு பெரிய கஷ்டமாக இருக்காது என நினைத்திருந்தேன்.


ஆனாலும் நாள் கணக்கில் ரயிலில்பயணம் செய்த அனுபவம் எனக்கு வாய்த்ததில்லை. சாகுல் அப்படி சொன்னதற்காக காரணம் ஏன் என்று பிறகுதான் தெரிந்தது. உண்மையில் எனக்கு அந்த ரயில் பயணம் பிடித்துதான் இருந்தது. சராசரி மக்களின் வாழ்க்கையை வாழ்ந்ததற்கான வாய்ப்பாக அதை நான் பார்க்கிறேன். ரயில் சென்ற இடங்களும், நின்ற இடங்களும் வடநாட்டின் ஏழ்மையை மட்டுமே புழுதிவாரி அடித்துக்கொண்டிருந்தன. குடிசை வீ டுகளுமாக சாக்கடைகளுமாக நிலம் வெடித்த மண்ணுமாக சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் நான் பார்த்துக்கொண்டிந்தேன். 36 மணிநேர ரயில்பயணம் 56 மணிநேரமாக நீண்டுகொண்டிருந்தது.


 

 
 
(தொடரும் )

 
 
 

1 கருத்து: