ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

வாரணாசி 3

 குறிப்பிட்ட நேரம்தாண்டிதான் நாங்கள் கோரக்பூரை அடைந்திருந்தோம். எங்கள் திட்டபடி ஒருநாள் தள்ளியே அங்கு சேர்ந்திருந்தோம். அன்றைய நாளுக்கு பதிவு செய்திருந்த ஹோட்டல் அறைகள் எல்லாம் வீணாகியிருந்தன. நள்ளிரவில் சைக்கிள் ரிக்க்ஷாகாரர்களும் ஆட்டோக்காரர்களும் சந்தையின் பரபரப்பில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். தமிழ்வாடையே இல்லாத வேறொரு பூமி.
உடை, உணவு, கலாச்சாரம் என தொலைக்காட்சியில் பார்த்த விஷயங்கள் நேரில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன எனக்கு. மறுநாள்தான் காசிக்கு போகமுடியும் என முடிவானது. நல்லவேளையாக சாகுலுக்கு ஹிந்திமொழி தெரிந்திருந்தது. இந்தப்பயணத்தின் பெரிய பிளஸ் பாயிண்டே அதுதான். பல விஷயங்கள் எளிமையாக அமைந்தது ஹிந்திமொழி பிரச்சனையை கடந்ததால்தான்.
மறுநாள் கோரக்பூரின் ஒரு பிரசித்திப்பெற்ற கோயிலை சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பினோம். (அதுகுறித்து வேறொருக்கட்டுரையில் சொல்கிறேன்) காசிநகரை அடையும்போது நள்ளிரவு ஆகியிருந்தது. தங்குவதற்கான இடத்தை சாகுல் முன்கூட்டியே பதிவு செய்திருந்தார். தென்னிந்தியர்களுக்கென்றே செயல்படும் ஒரு தங்கும் விடுதி. 70 சதவிகிதம் தமிழர்களே அங்கு தங்கியிருந்தனர்.
மனோஜ் என்பவர் (தமிழ் நன்கு பேசத்தெரிந்த வடநாட்டவர்) இந்த ஏற்பாடுகளை நம்மவர்களுக்காக செய்துகொடுக்கிறார். எங்கும் தமிழ் உரையாடல்களை கேட்க முடிந்தது. மேலும் இட்லி- சாம்பார் மணம் காற்றில் கலந்து வந்தது பசியை தூண்டி விட்டது. 'ஜஸ்லோக்' எனும் அந்த தங்கும்விடுதி ஒரு சொகுசான விடுதி இல்லையென்றாலும் தமிழர்களின் தேவையை அறிந்து செயல்படும் ஒரே விடுதி அதுதான் என தோன்றுகிறது.
மேலும் , 'ராம் கிருஷ்ணா மிஷன்' அதன் எதிர்ப்புறத்திலேயே இருக்கிறது. தங்கும் விடுதியின் வாசலில் கையேந்திபவன் உணவுவியாபாரமும், என்னேரமும் சைக்கிள் ரிக்க்ஷாவும் ஆட்டோவும் போக்குவரத்திற்கு இங்கு எந்த பிரச்னையும் இல்லையென்பதை நமக்கு நினைவு படுத்தியபடி இருந்தன. காலை காசி விஸ்வநாதரை சந்திக்க அழைத்து போவதற்கு மனோஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக