செவ்வாய், 23 மார்ச், 2021

நேர்காணல் : ஷாக் கோயோக்

 ஆயிரம் குற்ற  உணர்வுகள் தாங்கிய நிலம்!

நேர்கண்டவர் : யோகி


"ஆயிரம் குற்ற உணர்வுகள் தாங்கிய நிலம்" என்ற இந்தத் தலைப்பு எதைப்பற்றி பேசவருகிறது என்று வாசகர்களால் அனுமானிக்க முடிந்தால், மனிதாபிமானம் என்ற ஈரப்பசை அவர்களிடத்தில் இருக்கிறது என்று என் மனம் நம்புகிறது. மலேசியாவின் 18 ஆதிக்குடிகளில் தெமுவான் இனக்குழுவைச் சேர்ந்த ஓவியரான ஷாக் கோயோக்-கை சந்தித்து பேசியதிலிருந்து என் மனம் இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறது.

 கோறனி நச்சில் ஏற்படுத்திய தாக்கத்தோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை தலைநகரில் மெல்ல திரும்பிக்கொண்டிருக்கும்  வேளையில், உரிமையும் உடமையும் நசுக்கப்படும் பூர்வகுடி மக்களுக்கான குரலாக தன் ஓவியங்கள் வழி பேசிகொண்டிருக்கிறார் ஷாக் கோயோக்.

 

உலகம் முழுக்கவே பூர்வக்குடிகளின் காணி நிலமானது கார்பரெட் முதலாளிகளின் கோரப்பசிக்கு அவர்களின் தங்கத்தட்டுகளில் விதத்தாளான உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. நமது நாட்டிற்கும் இது விதிவிலக்கல்ல. மலேசிய பூர்வக்குடி மக்களின் காணி நிலங்களும் பறிபோகும் அவலம் தொடர்ந்து நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்கூட எங்கோ ஓர் பூர்வகுடியின் வனம் அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறது என்பதை நாம் நம்பிதான் ஆகவேண்டும். இவ்விவகாரங்களை நேரடியாக பேசினாலும், சட்ட ரீதியாக கொண்டுச் சென்றாலும்கூட அவை ஒரு அனுபவமாக மாறுகிறதே தவிர பூர்வக்குடிகளின் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் வழுசேர்ப்பதாக இல்லை. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் கடந்த மாதம்செமெலாய்இன பூர்வக்குடிகளின் ஒரு நூற்றாண்டுக்கும் மேலா பாரம்பரிய வனத்தை சட்டப்பூர்வமாக வென்றெடுத்து அதை செம்பனை காடாக ஒரு தனியார் நிறுவனம் மாற்றிக்கொண்டிருக்கிறதை சொல்லலாம். 

 யோகி: வணக்கம். நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்னும் இருக்கும் வேளையில்இந்தக் கண்காட்சி இப்போது நடத்தப்படுவதற்கான நோக்கம் என்ன?

ஷாக் கோயோக் : சொல்வதற்கு விஷேச காரணங்கள் ஒன்றுமில்லை. ஆனால், இந்த கட்டுப்பாடு காலத்திலும் பூர்வக்குடிகள் போராட்டங்களையும், சவால்களையும் சந்திக்காமல் இல்லை. பாரம்பரியம், வரலாறு, பூர்வீகம் என பூர்வக்குடிகள் தொடர்ந்து இழந்துக்கொண்டிருக்கும் அவலங்களையும் சுயத்தை சொல்லில் கொண்டுவருவது மிக சிரமமானது. அந்த வலியை ஓவியத்தில் வரைந்திருக்கிறேன். இது தற்கால சூழலின் ஒரு பதிவு மட்டும்தான்.

 

யோகி: ஒரு பூர்வக்குடியான நீங்கள் நவீன பாணியிலான ஓவியங்களை எப்போதிலிருந்து வரைகிறீர்கள்?

ஷாக் கோயோக்: 2008-ஆம் ஆண்டு நான் வரைய தொடங்கினேன். இதுவரை 4 கண்காட்சிகளை நடத்தியுள்ளேன். கூட்டாக இணைந்து செய்யும் கண்காட்சிகளிலும் பங்கெடுத்திருக்கிறேன். இந்த ஓவியக்கண்காட்சியிலும் மிக வித்தியாசமான யுக்தியை பயன்படுத்தி ஓவியங்களை வரைந்திருக்கிறேன். காட்டில் கிடைக்கும் pandanus எனும் ஒருவகையான தாழையில் வெய்த பாயில் சில ஓவியங்களை வரைந்து காட்சிபடுத்தியிருக்கிறேன். இதுவும் எங்கள் வாழ்கையை பதிவு செய்யும் ஒரு முயற்சிதான்.   

 


யோகி: பூர்வக்குடிகள் வேயும் பாய் குறித்து மலேசியர்களே அதிகம் அறிய மாட்டார்கள். அதைக்குறித்து இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

ஷாக் கோயோக்: பூர்வக்குடிகளின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒரு தளவாடப் பொருள் என்றால் அது காட்டின் உருப்படிகளைக் கொண்டு எங்களாலேயே செய்யப்படும் பாய்தான். அதில் நாங்கள், அமர்வோம், உறங்குவோம். எங்களின் ஒவ்வொரு வாழ்கையிலும் இந்தப் பாயின் ஸ்பரிசம் இருக்கிறது. அதை பூர்வக்குடிகளாலேயே புரிந்துக்கொள்ள முடியும். ஆனால், இன்று பறிபோகும் வனங்களோடு எங்களின் கைவினைப் பொருள்களும் அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என்ற ஐயப்பாட்டுக்கு நாங்கள் வந்துவிட்டோம். என்றென்றும் நினைவுக்கூறும் விதமாக பண்டனுஸ் தாழையைக் கொண்டு என் அம்மாவையும் அக்காவையும் எங்கள் பாரம்பரிய பாயை பின்னச்செய்து அதில் பூர்வக்குடிகள் சம்பந்தப்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறேன். பூர்வக்குடிகளின் வலியாகவும், குரலாகவும் அந்த ஓவியங்கள் இருக்கின்றன. என்றும் இருக்கும்.

 


யோகி: ஒரு பூர்வக்குடியிடம் நான் இப்படி கேட்கக்கூடாது. மன்னிக்க. உங்கள் காடு உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?   

ஷாக் கோயோக்: நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த என் வனம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. என் வனம் என் கண்முன்பே மாறிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். சில மேம்பாட்டாளர்கள் னது இருப்பிடத்தை சுற்றியுள்ள காட்டில், மரம் வெட்டும் இயந்திரங்களைக்கொண்டு மரங்களை அறுத்து அடுக்குப்பட்டு லாரிகள் சுமந்து செல்லும் அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. மரம் வெட்டும் ஓசை எங்களை துரத்தியடித்தது. இன்னும் அது எங்களை துரத்திக்கொண்டே இருக்கிறது.  எனது கலை, எனது மக்கள், மற்றும் நாங்கள் வளர்ந்த மழைக்காடுகள் இயற்கையின் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாகும். எங்களிடமிருந்து அவை மேம்பாட்டுக்காக பறிக்கப்படுகிறது. நினைவில் வாழும் எங்களின் காடுகளை  என்னால் ஓவியத்தில்தான் கட்டமைக்க முடிகிறது.  

 


யோகி: ஆயிரம் குற்ற  உணர்வுகள் தாங்கிய நிலம் என்று இந்தக் கண்காட்சிக்கு பெயர் வைத்திருக்கிறீர்கள். ஓவியங்கள் எதைப்பற்றியெல்லாம் பேசுகிறது.

ஷாக் கோயோக்: அந்நியர்களின் ஊடுருவலால் கிராம சாலைகள் எவ்வாறு சேதமடைந்தன என்பதும், அவர்களால் கிராமவாசிகள் வெளியே வருவது மிகவும் கடினமாக இருந்ததும் எனக்கு நினைவிருக்கிறது. அதை பேசியிருக்கிறேன்.

 இளம் பூர்வக்குடியை வனத்தின் பாதுகாவலர்களாக நான் பார்க்கிறேன். அந்நிய சக்திகளால் மலேயா புலிகள் வேட்டையாடப்பட்டு இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. ஆனால், நான் பூர்வக்குடியை வனத்தின் பாதுகாவலர்களாக, ஒரு புலியாக பார்க்கிறேன். இந்த கூற்றை அறியப்படுத்த எனது 'மெண்ட்ராக்எனும் ஓவியத்தில் ரு பூர்வக்குடியின் குழந்தை முகத்தில் புலியை வரைந்திருக்கிறேன்.  

 "விரைவாக நவீனமயமாக்கப்பட்ட மலேசியாவில், நான் எப்போதும் என் மக்கள் எதிர்கொள்ளும் பதற்றத்தையும் அழுத்தத்தையும் என் படைப்புகளின் மூலமாக பேச முயற்சிக்கிறேன், எங்களின் வாழ்க்கை இயற்கை சூழலுடன் தொடர்புகொண்டு இருக்கிறது. நவீன நுகர்வோர் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளுக்கு இடையில் உள்ள பூர்வக்குடிகளின் ஏற்றத்தாழ்வுகளை காட்சிபடுத்தியிருக்கிறேன்.

 

யோகி: ஓர் ஓவியத்தில் நீங்கள் உங்களையே வரைந்திருக்கிறீர்கள். எனக்கு அதன் அர்த்தம் எனக்கு சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை. இதை வாசிப்பவர்களுக்கு அதைக் குறித்து சொல்லுங்கள்.

ஷாக் கோயோக் : அந்த ஓவியத்திற்கு நான் வாயை வரையவில்லை. குரல்கள் அற்றவர்களின் வலியை வேறு எப்படி தெரியப்படுத்துவது. நான் ஒரு பூர்வக்குடி. எனக்கு இயற்கையோடு வலுவான தொடர்பு உள்ளது. நான் மழைக்காலத்திலும் காட்டில் மீன்பிடிக்கச் சென்றிருக்கிறேன். காடு எனக்கும் என் நண்பர்களுக்கும் விளையாட்டு மைதானமாக இருந்தது. இந்தப் பழைய நினைவுகள் என்னை தொந்தரவு செய்தபடி இருக்கிறது. எங்களின் வனங்களோடு எங்களை நாங்கள் தொலைக்கிறோம். இதை பேச முயற்சிக்கும்போது எங்கள் குரல்வலை நெரிக்கப்படுகிறது. குரலற்றவர்கள்தானே பூர்வக்குடி.

 

இப்படி கூறி என்னிடமிருந்து விடைபெற்றார் ஷாக் கோயோக்.
           

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக