புதன், 7 ஏப்ரல், 2021

இருளில் புதைந்த இசை முகம் – அன்னபூர்ணா தேவி


 எனக்கு ரசிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகளை, கைதட்டல்களை கண்டு பண்டிட் ரவி சங்கர் மகிழ்வின்றியே காணப்பட்டார். அஃது ஓர் எதிர் விளைவை எங்கள் திருமண வாழ்வில் ஏற்படுத்தியது. நான் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அவர் தடுக்கவில்லை. ஆனால், பலமுறை என்னிடம் அவர் கூறியதுண்டு எனக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள் அவரை மட்டற்ற துயரில் ஆழ்த்துவதாக

–(அன்னபூர்ணா தேவி, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, செப்டம்பர்-1, 2014)

ரோஷனாரா கான் என்ற  இயற்பெயர் கொண்ட அன்னபூர்ணா தேவி தேர்ந்த இசை உத்தியை கையாளத் தெரிந்தவர்.   

தான் வாசிக்கும் ''சுர்பாஹர்” இசைக்கருவியின் மேல் அவரின் விரல்கள் செலுத்தும் விதமும், அவரின்  ஆளுமை மற்றும் வியக்கத்தக்க கட்டுப்பாடும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.   சுர்பாஹர்” இசை நுட்பமானது, தியானம் வாய்ந்தது, சென்ற காலத்தையும் அளாவியது, பாடலின் உணர்வுகளை நம்முள் சுலபமாக கடத்துவது, அதனாலேயே நாம் அந்த இசைக் கருவியை எளிதில் அணுக ஏதுவாயிருக்கிறது. அவரது இசையின் ஈர்ப்பு விசை, அர்ப்பணிப்பு மற்றும் அதன் வெளிப்பாடு அனைத்துமே ஏனைய இசைஞர்கள் நினைத்துப் பார்க்கவியலாத ஆழம் கொண்டது. அவரின் இசை அவரை ஆன்மபோதத்துக்கு இட்டுச்செல்லும் பாதை, ஆன்ம வழிபாடாய் நிறைவேற்றப்படுவது. வாசிக்கும்போது முற்றிலும் ராகத்துள் மூழ்கி, ராகத்தின் இசைச்சுரங்களுக்கு தன்னை ஒப்படைக்கிறார். பரிசுத்தமான உணர்வுகளால் அதை உளமார தழுவிக் கொள்கிறார்.

நான் அன்னபூர்ணா தேவியிடமும் சிதார் பயின்றேன். எனது குருவான அல்லாவுதீன் கான் அவர்களின் புதல்வி. தந்தையைப் போலவே மிகவும் கண்டிப்பானவர். மும்பை செல்லும் போதெல்லாம் அவரை சந்திப்பேன். இசை சார்ந்த எனது சந்தேகங்களை நான் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. அவரிடம் பயின்ற மாணவர்கள் பலரும் அவரின் பெயரை குறிப்பிட்டதில்லை. ஹரிபிரசாத் செளரஸியா அவரிடம் பயின்றவர் தான். அன்னபூர்ணா,  ரவி சங்கருக்கும் கற்றுக் கொடுத்தார். அன்னபூர்ணா இசை மேதைகளுக்கெல்லாம் மேதை. (நிகில் பானர்ஜி, சிதார் இசைக்கலைஞர், தனது அமெரிக்க நேர்காணல்களில், செப்டம்பர்-11, 1985)

 

1944ம் ஆண்டில் ரவி சங்கர் கொடிய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் அதனால் அடைந்த மோசமான பக்கவிளைவுகளில் ஒன்று நினைவாற்றல் இழப்பு. இதனால் அல்லாவுதீன் கான் அவர்களிடம் கற்ற இசையின் பெரும் பகுதியை இழந்து விட்டார். இந்த காய்ச்சலில் இருந்து ஓரளவு தேறியதும் அவரின் மனைவியான அன்னபூர்ணா தேவி அவருக்கு இசை கற்றுக் கொடுக்கவும் பயிற்சியளிக்கவும் செய்தார். சோம்பியும், முனைப்பற்றும் இருந்த ரவி சங்கருக்கு துணையாகவும், ஆதரவாகவும் இருந்தார். அதே காலகட்டத்தில் அவர்களின் புதல்வனான சுபோஎனப்படும் சுபேந்திர சங்கர் சிறுகுழந்தை. குடலிறுக்கப்பிரச்சனையால் சதா அழுது கொண்டேயிருப்பார்.

ரவி சங்கர் சபல புத்தியுடையவர், உல்லாச பேர்வழியும் தான். மலர் விட்டு மலர் தாவும் வண்ணத்துப்பூச்சி தான் அவரின் குணம். (Annapurna Devi: An unheard Melody என்ற புத்தகத்தில் இந்த விவரங்கள் இருக்கிறது, எழுதியவர் Swapan Kumar Bondyopadhyay)

1992-ம் ஆண்டு நிமோனியாவால் பாதிக்கப்பட்டசுபோஅமெரிக்காவில் மரணமடைந்தார். அவரது தந்தையோ தனது குடும்பம்(சுகன்யா,அனுஷ்கா) இருந்ததால் சுபோவை கவனிக்க சாத்தியமின்றிப் போனது என்றார். அன்னப்பூர்ணாவோசுபோ, உங்கள் பிள்ளைதானே ஏன் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அவனை சேர்த்துக்கொள்ள இயலவில்லைஎன்ற கேள்வியை எழுப்பினார்.

எனது வாழ்நாளில் நான் இப்படி எந்த ஒரு இசைக்கலைஞரையும் கடந்து வந்ததில்லை. அத்தனை துல்லியம், இனிமை மற்றும் ஈடுபாடு. அவரின் இன்னிசை உள்ளத்தை ஊடுறுவிச்செல்கிறது (அன்னபூர்ணா தேவி குறித்து புல்லாங்குழல் இசைக்கலைஞர் நித்யானந்த் ஹல்திபூர் கூறியது)

1970-களில் புகழ்பெற்ற மேற்கத்திய இசைக்கலைஞரான யஹிதி மெனுஹின் இந்தியா வந்திருந்தபோது, பிரதமர் இந்திராகாந்தியிடம் தனது சுயவிண்ணப்பமாக நடக்கவியலாத ஒரு விஷயத்தைக் கேட்பதாகக் கூறி அன்னப்பூர்ணா தேவியை தனக்காக வாசிக்கச்சொல்ல இந்திராவால் இயலுமா? எனக்கேட்க, பிரதமரின் தொடர் வற்புறுத்தலுக்கு இணங்கி, தினசரி தான் மேற்கொள்ளும் இசைப்பயிற்சியை கேட்க அனுமதியளித்தார் அன்னப்பூர்ணா. அந்த குறிப்பிட்ட நாளில் மெனுஹின் தனது குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என அவசரமாக அமெரிக்கா போக, பீட்டில் ஜார்ஜ் ஹாரிசனுக்கு தேவியின் இசை கேட்கும் அந்த அதிர்ஷ்டம் போய் சேர்ந்தது.

ஒரு தராசில் ரவி சங்கர், பன்னாலால் கோஷ், மற்றும் நான் ஒரு புறமும், மறுபுறம் அன்னபூர்ணா தேவியை வைத்தோமேயானால் அப்போதும் தேவியின் பக்கமே எடை மிகுந்ததாக இருக்கும். அத்தகைய இசை மேதை அவர். (அலி அக்பர் கான், சரோட் இசைக்கலைஞர் , அன்னபூர்ணாவின் அண்ணன் கூறியது)

மத்தியபிரதேச மாநிலத்தின் அரசரான மகாராஜா பிரிஜ்நாத் சிங்கின் அரசவை இசைக்கலைஞராக இருந்தவர் அல்லாவுதீன் கான்.அவர் தான் மைஹர் (Maihar Gharana)இசைகுடும்பத்தை உருவாக்கியவர். அவரிடம் இசை பயின்றவர்கள் அலி அக்பர் கான், ரோஷனாரா கான், ரவி சங்கர், நிகில் பானர்ஜி, பன்னாலால் கோஷ் போன்றோர். மிகவும் செழுமை வாய்ந்த இசை வடிவங்களான துருபத், தும்ரி, தமர், தப்பா, கஜ்ரி போன்றவற்றை உள்ளடக்கியது இந்தக்குடும்பம்.

ரவி சங்கரின் அண்ணன் நடனக்கலைஞரான உதயசங்கரின் வற்புறுத்தலின் பேரில் 1941-ம் ஆண்டு காலையில் ரோஷனாரா கான் மதம் மாறி அன்னப்பூர்ணா தேவி என பெயர் சூட்டப்பெற்று, அதே நாளின் மாலையில் இந்து சடங்கு சம்பிரதாயங்களின்படி திருமணம் நிகழ்ந்தேறியது. 14 வயதான அன்னப்பூர்ணா தனது வீட்டில் உள்ளவர்களைத்தவிர வெளி உலகம் அறியாதவர். ரவிசங்கர் ஒருவரே தனது உலகம் என நம்பி வந்தார். அவரின் எழுச்சிமிக்க இளமையில் நிறைந்திருந்தது நடுக்கமும் கூச்சமும். 1950-களில் தனது கணவரோடு பல மேடைகளில் ஒன்றாக பல இசைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

1955-களில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிடுகையில்சில ரகசியங்களை என்னோடு நான் கல்லறைக்கு எடுத்து செல்வேன்என்கிறார். வேறு சிலரோ அவரின் தகப்பனார், சாரதாம்பாளின் படத்தின் முன் அவர் ரவி சங்கரால் ஒரு சத்தியம் செய்ய பணிக்கப்பட்டார், அதன்பின் எந்த மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. எந்த ஊடகங்களிலும் அவர் தோன்றவில்லை எனவும் கூறுகின்றனர். இத்தனை வருட தனிமைக்குப்பின்னும் ரவிசங்கருடனான விவாகரத்து நிகழ்ந்தது1982-களின் இறுதியில். தனது மாணவரான ருஷிகுமார் என்பவரை விவாகம் செய்து கொண்டார். ருஷிகுமாரின் மறைவுக்குப் பின், பார்கின்சன் வியாதியால் பாதிக்கப்பட்ட அவரை அவரின் மாணவர்கள் கவனித்து வருகிறார்கள். ”சூபோவின் குழந்தைகள் சோம்நாத் மற்றும் காவேரி அமெரிக்காவாசிகள். ஒரு வகையில் நோரா ஜோன்ஸ், அனுஷ்கா சங்கர் ஆகியோரின் பெரியம்மா என்ற உறவுமுறையில் அல்லாது சக இசைக் கலைஞர்களாக அவர்களைப் பற்றி பேசுகிறார்,விமர்சிக்கிறார். பத்மபூசண், சங்கீத நாடக அகாடமி விருது எத்தனையோ விருதுகள் எதனையும் பெற அவர் செல்லவில்லை.

சுர்பாஹர்என்றாலே அன்னப்பூர்ணா தேவியின் நினைவு.

 அன்னப்பூர்ணா தேவி எனக்கு இசையின் வெவ்வேறு வடிவங்களை கற்றுத்தந்தார். எனது குரு எனது மாதா துர்க்கையும் சரஸ்வதியும் ஆவார். அவரின் இசையறிவிற்கு பஞ்சமே இல்லை. அதில் கைப்பிடியளவே நான் கற்றது. இன்னும் அவரிடம் கற்றவண்ணமிருக்கிறேன். தன்னலமற்று அதை அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்வார். நான் தவறு செய்யும் போதெல்லாம், அவர் துர்க்கையாக. ஆனால் அம்மா என்பவள் அம்மாதான் கோபத்திலும், அன்பிருக்கும். (பண்டிட்.ஹரிபிரசாத் செளரஸியா, புல்லாங்குழல் இசைக்கலைஞர், டைம்ஸ் ஆப் இந்தியா அக்டோபர் 11, 2013)

 (Surbahar- என்றால் சிதார் போன்ற வாத்தியம்ஆனால் சிதாரை விட கனமானது,வாசிக்க கடினமானது. “Bass sitar” என்று அறியப்படுவது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக