ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

லந்தனைடு சுரங்க திட்டத்தை அனுமதிக்க கூடாது!

 

 நம்முடைய அழகிய மலேசியா, அதன் இயற்கை வளம் இன்னும் சில ஆண்டுகளில் அதன் உயிரை விட்டுவிடுமோ என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம் குழந்தைகள் கூட்டாஞ்சோறு செய்து விளையாடுவதற்கு கூட புல் பூண்டு முளைகாமல் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. இந்த பயமானது சாதாரணமாக கலைந்துபோகும் மேகம் போல அல்ல. இது உயிர் பயமாகவும் அழிவின் பயமாகவும் வளர்ந்து வருகிறது

பஹாங் போஸ் லானாய், பழங்குடிகள் கிராமத்தை ஒட்டி இருக்ககூடிய ஜெலாய் நதி மற்றும் அதை சுற்றியிருக்ககூடிய கிளை நதிகளும் தற்போது  அந்த மாதிரியான அபாயத்தைதான் எதிர்நோக்கியிருக்கிறன. போஸ் லானாய் எனும் இடத்தில் செமாய் இன பூர்வக்குடிகள் வசிக்கும் வனமானது அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளுக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் மிக முக்கியமான வனமாக திகழ்கிறது. தீபகற்பத்தின் 'மத்திய வன முதுகெலும்பு' என்று அதை வன ஆர்வளர்கள் வர்ணிக்கிறார்கள். தற்போது அந்த வனத்தில் லந்தனைடு கனிமத்தை தோண்டி எடுக்கும் சுரங்கவேலை செய்வதற்கான அனுமதியை மாநில அரசாங்கம் கொடுத்திருப்பதற்கு எதிராக இயற்கை ஆர்வலர் இயக்கங்களும், அங்கு வசிக்கும் பழங்குடி மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றினை மலேசிய சோசலிசக் கட்சி நடத்தியது.



அந்தச்
சந்திப்பில் மீனா ராமன் (Sahabat Alam Malaysia), காளிதாசன் (global environment centre), பூர்வக்குடியான ஃஜெப்ரி ஆகியோர் இணையம் வழியாகவும், மலேசிய சோசலிசக் கட்சியின் தேசிய பொது செயலாளர் .சிவராஜன், மலேசிய சோசலிசக் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவைச் சேர்ந்த சியோங் ஆகியோர் நேரடியாகவும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

லந்தனைடு (Lanthanide) சுரங்கவேலையை முன்னெடுக்கும் தொடர்புகொண்ட 3 சுரங்க குத்தகை நிறுவனங்கள் இணைந்து இந்த வேலையை தொடங்கவுள்ளன. லந்தனைடு என்பது அருங்கனிமமாகும். Nadir bumi என்று மலாய் மொழியிலும் rare earth என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள்.  லந்தனைடு  உலோக வேதியியல் கூறு 57 முதல் 71 வரையிலான அணு எண்களுடன் பூமியிலிருந்து எடுக்கப்படவுள்ளது. இந்த லந்தனைடு, கிட்டத்தட்ட மோனாசிட்டி இரசாயன பண்புகளைக்  கொண்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது. சுறுக்கமாக சொன்னால் அரிதாகக் கிடைக்கக் கூடிய கனிம பொருளாகும்.  



இந்த சுரங்க வேலை, சுமார் 2 ஆண்டுகளுக்கு ஏறக்குறைய 660 ஹெக்டேர் நிலபரப்பில் நடைபெறவிருக்கிறது. தவிர இதுவரை மலேசிய நாட்டில் மேற்கொள்ளாத ஒன்றாகவும் இது காணப்படுகிறது. இதற்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்ட நிலக்கரி மற்றும் தங்கம் மாதிரியான சுரங்க வேலையில்லை இது. முழுக்க ரசாயனம், நச்சு சம்பந்தப்படதாகும். அவர்கள் தோண்டி எடுக்கப்பொகும் லந்தனைட் உடன் வெறெந்த  கனிமங்கள் வெளியேற்றப்படும் என்று முழுமையாக அறிய முடியவில்லை. நிரந்தரமாக பாதுகாப்பட வேண்டிய வனத்தின் நிலத்தில் ஆழ்துளையிட்டு, அதன் வழி ரசாயனத்தை உள்செலுத்தி, கனிமங்களை வெளியெடுப்பார்கள். பின் அவை அடுக்குமுறையில் சுத்திரிகரிப்பு செய்யப்பட்டு, கிடைப்பெறும் கனிமப்பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதிசெய்வார்கள். ஊசி செலுத்தும் முறையில், பூமியின் ஆழத்தில் செலுத்தும் ரசாயனமானது 100 சதவிகிதம் வெளியேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தவிர இம்மாதிரியான ஒரு சுரங்கவேலை தொடங்கினால், ஜெலாய் நதி மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதோடு, அதையே நம்பியிருக்கும் செமாய் பூர்வக்குடிகளுக்கு வாழ்வாதார சிக்கல் ஏற்படும். அதோடு இந்த சுரங்கவேலை நாட்டிற்கும் பூமிக்கும் கூட நல்லதில்லை. தீபகற்ப  மலேசியாவை சுற்றியிருக்கும் தித்திவாங்சா மலைதொடர், தாமான் நெகாரா உள்ளிட்ட இயற்கை வளங்கள் மிக மோசமாக பாதிக்கப்படும் என இயற்கை ஆர்வளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




லந்தனைடு தோண்டி எடுக்கும், சுரங்க வேலை இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடைபெறுவதாக இருந்தாலும், பல ஆண்டுகள் அல்லது தீரவே முடியாத அளவுக்கு பாதிப்பாக அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இம்மாதிரியான பாதுகாக்கப்பட வேண்டிய வனத்திற்கு எப்படி மாநில அரசாங்கள் சுரங்கவேலையில் ஈடுபட அனுமதி அளித்தது என்பது கற்பனைக்கு  எட்டாத ஒன்றாக இருக்கிறது?

குறிப்பிட்ட போஸ் லானாய் பூர்வக்குடி நிலத்தில் 80 லிருந்து 90 குடும்பங்கள் வசிக்கிறனர். அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதரமும் ஜெலாய் நதியை அடிப்படையாக கொண்டதாகும். அவர்கள் வனத்திலிருந்து வெளிவந்து பொருள்களை வாங்குவதற்கு ஒரு போக்குவரத்து, நதி மார்கம்தான். தவிர விவசாயம் செய்யவும் மீன் பிடிக்கவும் குளிக்கவும்கூட அவர்கள் அந்த நதியையே நம்பியிருக்கின்றனர். தற்போதுகூட ஜெலாய் நதி மிகவும் மோசமான தூய்மைக்கேட்டை எதிர்நோக்கியிருக்கிறது. கேமரன் மலைதொடரிலிருந்து, வெளியேற்றப்படும் விவசாயக் கழிவுகள், ரசாயன எச்சங்கள், குப்பைகள் அனைத்தும் இந்த நதியில் கலந்து வருகிறது. இதனால், மீன் வளம் கணிசமாக குறைந்துவிட்ட வேளையில், பயன்படுத்துவதற்கு சுகாதரமற்ற நிலையை அந்த நதிகொண்டிருக்கிறது.


   
 

தோல்வியாதி மற்றும் காரணமே இல்லாமல் மீன்கள் மடிவது தொடர்பாக கூட பூர்வக்குடி மக்கள் அரசாங்கத்திடம் புகார் அளித்திருக்கிறார்கள். தற்போது இந்தப் புதிய பிரச்னை அவர்களை மேலும், பதற்றத்திற்கு உள்ளாக்கியிருப்பதுடன், ஒட்டுமொத்த கிராமமே இந்த சுரங்கவேலையை எதிர்ப்பதாக கூறியிருக்கின்றனர்.   

நடந்த இந்த பத்திரிக்கை சந்திப்புக்கு சில நாட்களுக்கு முன்பாக, பூர்வகுடிகளை நேரில் சந்தித்து அவர்களின் மனநிலையையும் நிலைபாட்டையும் கேட்டறிந்து பதிவு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடதக்கது.


இந்த சுரங்க வேலை நடைபெறுவது தொடர்பான சம்பந்தப்பட்ட நிறுவனம், இயற்கை ஆர்வலர்கள், மனித உரிமை சார்ந்த அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளிடம் ஒரு கலந்துரையாடலை கடந்த மார்ச் மாதம் மேற்கொண்டது. அந்தக் கலந்துரையாடலில் பலவாரான கேள்விகள் அந்நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்டது. பலகேள்விகளுக்கான பதிலை கொடுக்கமுடியாத அந்நிறுவனம், அவற்றுக்கான பதிலை அளிக்க இரண்டாங்கட்ட பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் நடத்தவுள்ளது.


ஆனால், எந்த வகையான நிபந்தனையுமின்றி இந்த லந்தனைடு சுரங்க திட்டம் நிறுத்தப்பட வேண்டும். அரசு ஒருபோதும் இதற்கு அனுமதிக்ககூடாது என பத்திரிகையாளர் சந்திப்பில் நம் நாட்டின் மீதும் இந்தப் பூவுலகின் மீதும் விசுவாசமுள்ள இயற்கை ஆர்வளர்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.   

-யோகி

-நன்றி தமிழ் மலர் 11/4/2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக