திங்கள், 26 ஏப்ரல், 2021

வீடு என்பது வியாபார பண்டமா அல்லது அடிப்படை உரிமையா?

சஞ்சிக்கூலிகளாக  அப்போது மலாயா என்று அடையாளைப்படுத்தப்பட்ட மலேசியாவுக்கு  அழைத்துவரப்பட்ட தமிழர்களின் வரலாறு இருநூறு ஆண்டுகளுக்கும்  மேலாக ஆகிவிட்ட நிலையில் இன்னும்  தனக்கென ஒரு சொந்த வீட்டை வாங்க முடியாத ஏழைகளின் பட்டியல் அதிகம்.

 அதற்கு பல்வேறு காரணங்களை பட்டியலிட முடியும். பொதுவாகச் சொன்னால், தோட்டத்தில் கூலி வேலை செய்தவர்களுக்கு அவர்கள் தோட்டத்தில் வேலை செய்யும் காலம் காலம் வரைக்கும் தோட்ட வீட்டில் தங்கிக்கொள்ள முடியும். அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் வாரிசு யாரும் தோட்டத்தில் வேலை செய்தால் அந்த வீட்டில் அவர்கள் தொடர்ந்து தங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படி யாரும் தொடர்ந்து தோட்டத்தில் வேலை செய்ய முடியாத வேலையில் அவர்கள் நிச்சயமாக தோட்டத்தை விட்டு வெளியேறியே ஆக வேண்டும்.  தோட்டத்து ஊதியத்தை சேமித்து சொந்த வீடு வாங்குவதெல்லாம் முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டக் கதைதான்.

 ஓய்வு ஊதியப்பணம், சேமநிதிப்பணம் இவைகளைக் கொண்டு சொந்த வீடு வாங்குவதற்கு ஒரு சிலர் முயற்சி செய்வர். குழந்தைகள் மேற்கல்வி, பிள்ளைகளுக்கு  திருமணச் செலவு, மருத்துவ செலவு என்று அந்தப் பணத்திற்கு வேறு பல கூடுதல் பொறுப்புகள் இருக்கும்.  பலரின் சொந்த வீட்டுக் கனவு கனவாகவே போய்விட்ட கதைகள் மலேசியாவில் ஏராளம் ஏராளம்.  

இந்த மாதிரியான சூழலிலும் 1990-களிலும் அதற்கு முந்திய ஆண்டுகளிலும்  மலேசிய அரசு  ஏற்படுத்தியிருந்த  மலிவு விலை வீடு வாங்கும் திட்டத்தில் சிலர் வீடுகளை வாங்கினர்.  FELDA போன்ற வீடமைப்பு  திட்டத்தில் சிலர் நிலமும் வீடும் சேர்ந்து வாங்குவதற்கு முதலீடு செய்தனர்.   சொந்த வீட்டை வாங்கும் கனவின் முதல் படியை எடுத்து வைப்பது என்பது மலேசிய தமிழர்களுக்கு  சுலபமான விஷயமல்ல. முன்பணம் கட்டுவதற்கு நகைகளை அடகுவைப்பது-விற்பது, கடனை வாங்குவது, பிள்ளைகளின் மேற்படிப்பை காவு கொடுத்து வேலைக்கு அனுப்புவது உள்ளிட்ட எல்லா சோகங்களும் நடக்கும்.

இப்படி வாங்கப்படும் வீடு சில அல்லது பல ஆண்டுகள் கழித்து  உரிமையாளருக்கு இல்லை என்று ஆனால், அந்த ஏழையின் மனநிலை எப்படி இருக்கும்? அந்த மனநிலையை பணம் படைத்தவர்களாலும், வங்கி முதலைகளாலும் புரிந்துக்கொள்ள முடியுமா?  பணம் இல்லாத  அவர்களால் ஒரு வழக்கறிஞரை நியமித்து வழக்காடதான் முடியுமா?  இந்நிலையில்தான் சில ஏழைகள் தாம் வாக்களித்த அரசியல்வாதிகளை நாடி போவார்கள். எல்லா அரசியல்வாதியும் ஏழையின் கூட்டாளி இல்லையே.  அதிகமானவர்கள் காப்ரெட் கைக்கூலிகளாகத்தானே இருக்கிறார்கள்?  விளம்பரத்திற்காக சில அரசியல்வாதிகள் இந்த பாட்டாளி மக்களை பயன்படுத்திக்கொள்ளும் கதையெல்லாம் மலேசியாவில் எக்க சக்கம் நடந்திருக்கிறது.  அதைப்பற்றி பேசுவதாக இருந்தால் ஒரு புத்தகத்தையே எழுதலாம்.

 

ஏப்ரல் மாதத்தில் மட்டும்  வெவ்வேறு வீட்டுப் பிரச்னைகள் மலேசிய மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதில் இரண்டு பிரச்னைகள் தனியார் வங்கி சம்பந்தப்பட்டதுதாகும். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்திய மக்கள் எதிர்கொண்ட சில வீட்டு பிரச்னைகளை இங்கு பார்க்கலாம்.  


சம்பவம் 1 (7/4/2021)

2001-ஆம் ஆண்டில் லட்சுமி என்பவர்  ஒரு வீட்டை வாங்கினார்.  தனியார் வங்கியில் வீட்டுக்காக பெற்ற வங்கிக் கடனை மாதந்தோறும் RM268-ஆக, 20 ஆண்டுகளில் RM31,500  ஆட்டோ டெபிட் மூலம் செலுத்தியிருக்கிறார்.  நிலுவைத் தொகை எதுவும் அவர் வைக்கவில்லை.  இந்நிலையில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல்  வங்கிக்கடனை செலுத்தும் தொகையை உயர்த்தியிருக்கிறது சம்பந்தப்பட்ட தனியார் வங்கி.   வீட்டு உரிமையாளர்களுக்கு இவ்விவரம் தெரிய வரும்போது  நிலுவைத்தொகை RM 975 ரிங்கிட் ஆகியிருந்தது. இது கட்டவே முடியாத ஒரு பெரிய தொகை என்று சொல்லிவிட முடியாது.  ஆனால், வெறும் RM 975 நிலுவை தொகைக்காக அந்த தனியார் வங்கி கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் அந்த வீட்டை ஏலம் விட்டது.  அந்த வீட்டிற்கு உரிமை கொண்டாடிக்கொண்டு புது உரிமையாளர் வரும்வரை, தனது வீடு ஏலம் போனது  அசல் உரிமையாளர்களுக்கு  தெரியாது. இன்னும் மூன்றே ஆண்டுகளில் அந்த வீட்டின் கடன் முடியப்போகும் நிலையில் வீடே இல்லை என்று சொல்வது மிகப் பெரிய மோசடி, என் பரம்பரையின் ஒரே சொத்தை மீட்டுக் கொடுங்கள் என தனியார் வங்கிக்கு எதிராக தேசிய வங்கியிடம் முறையிட்டு கதறி நிற்கிறார் லட்சுமி.

 


சம்பவம் 2 (8/4/2021)

 புக்கிட் பெருந்தோங்  எனும் தோட்டத்தில் ரப்பர் செம்பனை தோட்ட தொழிலாளர்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்தனர். அந்தத்  தோட்டத்தை மேம்பாடு செய்வதற்கு மேம்பாட்டு நிறுவனம் ஒன்று வாங்கியது. அப்போது மேம்பாட்டு நிறுவனத்துடன் தேசிய தொழிலாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில் 54 தோட்டப்பாட்டாளிகளுக்கு  25,000 வெள்ளி மதிப்புள்ள தரைவீடுகளை கட்டிகொடுக்கும் ஒப்பந்தத்தில் மேம்பாட்டு நிறுவனத்துடன் தோட்டப்பாட்டாளிகள் ஒப்பந்தம் செய்தனர். இது நடந்தது 1999-ஆம் ஆண்டு ஆகும்சொந்த வீடுகளை வாங்கும் மகிழ்ச்சியில் தோட்டப்பாட்டாளிகளும் தனியார் வங்கியில் கடன் பெற்று பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால், 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த 54 தோட்டப்பாட்டாளிகளுக்கு வீடுகள் உறுதியிள்ளாமல் இருக்கிறது. பலர் வங்கியில் பெற்ற கடனைக்கூட கட்டி முடித்துவிட்டனர்தரைவீடுகள் கட்டிக்கொடுப்பதாக  கூறிய மேம்பாட்டு நிறுவனம் இவர்களுக்கு மாபெறும் துரோகத்தை இழைத்துவிட்டு இன்னும் அந்த தோட்டத்திலேயே, தொழிலாளர்கள் வீட்டுமனைமீது செம்பனை நடவு செய்து  லாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக மாநில அரசுக்கும், நில அலுவலகத்திற்கும் பல ஆண்டுகளாக புகார் அளித்து நடையாக நடந்துக்கொண்டிருக்கிறார்கள்  அந்த மூத்த பாட்டாளி மக்கள்.



சம்பவம் 3

குப்பம்மா என்பவர்  1982-ஆம் ஆண்டு நிலம் வாங்கி, தரைவீடு கட்டிக்கொண்டு 1983-ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வருகிறார். முதுமைக் காரணமாக அந்த வீட்டை தன் மகனுக்கு பெயர் மாற்றியிருக்கிறார். மகன் வங்கியில் கொஞ்சம் கடன் பெற்று வீட்டை புணரமைத்திருக்கிறார். இதற்கிடையில் மகன் கடந்த ஆகஸ்ட் மாதம் 2020ல் மரணமடைத்துவிட்டார். அவருக்கு மூன்று குழந்தைகள். மருமகள் சிங்கப்பூரில் கூலி வேலை செய்து இவர்கள் நான்கு பேருக்கும் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கோவிட்  பெறுந்தொன்று பொன்ற பல்வேறு காரணங்களாலும்மகனின் இறப்புக்கு பிறகு வங்கியிலிருந்து அதிகாரப்பூர்வ கடிதத்திற்காக காத்திருந்ததாலும் மாத தவணையை சரியாக  கட்டமுடியாமல் போனது. இதற்கு வங்கி செய்த உபகாரம் என்னவென்றால் வீட்டை அடுத்த வாரம் ஏலத்தில் விடுவதற்கு நோட்டிஸ் அனுப்பியது. குப்பம்மா குடும்பத்தினர் வங்கியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டும், மாதம் 500 ரிங்கிட் வீதம் செலுத்தி கடனை சமன் செய்வதாக கூறியும் வங்கி அதை மறுத்ததுஇனி பேசுவதால் எந்த பலனும் இல்லை என்று புரிந்தக்கொண்ட அந்த 73 வயது பாட்டி தனது பேரக்குழந்தைகளோடு தலைநகரில் இருக்கும் தனியார் வங்கியின் தலைமையகத்தின் வாசலில் மகஜரைப் பிடித்து ஞாயம் கேட்டார்சுமார் மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு வீடு ஏலம் விடப்படாது என்ற உத்தராவதத்தை அந்த தனியார் வங்கி அளித்ததப் பிறகு அந்தப் பாட்டி தன் பேரக்குழந்தைகளோடு   தன் கிராமத்திற்கு புறப்பட்டார்.



சம்பவம் 4 (15/4/2021)

2016-ஆம் ஆண்டு, சுங்கை சிப்பூட்டில் 200 குடும்பங்களைச் சேர்ந்த பி40 மக்கள் வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்களை பேராக் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியத்திடம்  (LPHP) சமர்ப்பித்தனர். இருப்பினும், இன்று வரை, அந்த குடியிருப்பாளர்களுக்கு எந்தவொரு வீட்டுத் திட்டத்தையும் செயல்படுத்த பேராக் மாநில அரசு முடிவு செய்யவில்லை. வீடு கட்டுவதற்கு அங்கு பொருத்தமான அரசு நிலம் இல்லை என்று கோல கங்சர் மாவட்டமும் நில அலுவலகமும் கூறுகிறது. 

இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் சுங்கை சிபுட் பகுதியில் பத்து 1, ஜலான் லிண்டாங் போன்ற இடங்களில் டஜன் கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தின் ஒரு பகுதி 33 முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் Dovenby தோட்டத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிபிஆர் திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய அரசு நிலங்கள் மிச்சம் இன்னும் உள்ளன, என்று முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தங்களுக்கான மலிவு வீடு தொடர்பான கடிதத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி, பேராக் மாநில அரசிடம் சமர்பித்து காத்திருக்கின்றனர் ஏழை மக்கள். 

 

சம்பவம் 5 (23/4/2021)

நெகிரி செம்பிலான், கிர்பி தோட்ட குடியிருப்பாளர்கள் நெகிரி செம்பிலான் அலுவலகத்தின் முன்பு அமைதியான ஆர்ப்பாட்டத்தை நடத்தி, வீடு தொடர்பான  தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  முன்னாள் கிர்பி தோட்டத் தொழிலாளர்களான 20 குடும்பங்களைச் சேர்தவர்களுக்கு சொந்த வீடு தொடர்பான எந்த ஒரு உத்தரவாதத்தையும் தராமல், அவர்களை வெளியேற்றி தற்காலிகமாக தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்ட குடியிருப்பாளர்களின் எந்தவொரு ஆலோசனையும் அனுமதியும் பெறாமலே இந்த தற்காலிக குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாநில அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மக்கள் ஒன்று கூடினர். முன்னதாக அவர்கள் கடந்த டிசம்பர் 10 மற்றும் ஜனவரி 20-ஆம் தேதி 2021 ஆகிய தேதிகளில் நெகிரி செம்பிலான்  மந்திரி பெசாருக்கு கடிதங்களை அனுப்பியிருந்தனர், அதில் அவர்கள் மந்திரி பெசாருடன் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.  அவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதோடு,நெகிரி செம்பிலான் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் பெறாத நிலையில் இடத்தைக் காலி செய்வதற்கான கட்டளை மட்டுமே வந்துள்ளது. 

 இந்தச் சம்பவங்களுக்கு ஆதரவாக பொது மக்களும், சோசலிச இடது சாரி கட்சியும், மனித உரிமை சார்ந்த அமைப்புகளும் துணை நிற்கிறார்கள், என்றாலும் சில சம்பவங்கள் தொடங்கிய இடத்திலேயே இன்னும் நகராமல் நிற்பது மிகுந்த  மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.  குருவிக்கும் ஒரு கூடு இருக்கு; நமக்கு ஒரு வீடு இருக்கா? என்பது வெறும் வார்த்தையில்லை. வீடு  ஒரு வியாபார பண்டமாக பார்க்கும் காப்ரெட் நிறுவனங்களுக்கு ,  பல ஆண்டுகளாக தொடரும் ஏழைகளின் இந்த  வலியும் ஏமாற்றமும் புரியபோவதில்லை.

 

-யோகி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக