ஞாயிறு, 30 மே, 2021

‘தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சடங்குகள்’ - புத்தக விமர்சனம்


முனைவர் க.அ.ஜோதிராணி என்பவர் ஆய்வு செய்து புத்தகமாக வெளியிட்டிருந்த  ‘தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சடங்குகள்’  என்ற நூலினை வாசித்து முடித்தேன்.  தலைப்பை பார்த்ததும் அது ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் இருக்கும் சடங்குகளின் ஆய்வாக இருக்குமோ என்றுதான் நினைத்தேன். புத்தகத்தை வாசிக்கும்போதுதான் அது பறையர்களின் பண்பாட்டு கூறுகளை மட்டும் பேசுகிற ஆய்வு என்பது தெளிவாக புரிந்தது.  அதுவும் சிவகங்கை வட்டார மக்களிடமிருந்து செய்யப்பட்டதாக இந்த ஆய்வு இருக்கிறது.

ஏழு தலைப்புகளில் பேசப்பட்டிருக்கும் விடயங்கள் அனைத்தும் பிறப்பிலிருந்து இறப்புவரை மனிதர்களோடு நிழல்போல உடன்வந்துகொண்டிருக்கும் சடங்களையும் தீட்டுகளையும் பேசுகிறது. கூடவே இந்தச் சடங்குகளில்  தாய்மாமனுக்கான முறையை மிகத் தெளிவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  புத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்தபோது சடங்குகள் அனைத்தும் பெண் அடிமைப்படுத்தும் முறையிலேயே இருப்பதை உணர முடிந்தது.

இந்தத் தொகுப்பில் நாட்டுப்புற மருத்துவமும் மலடு பற்றிய நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை, குழந்தையில்லாத பெண்களுக்கு  சாமியாடிகள் செய்யும் நாட்டுபுற மருத்துவம் குறித்தும், சித்த மருத்துவம் குறித்தும் மிக தெளிவாகப் பேசப்பட்டிருக்கிறது.  இதில் நாட்டுப்புற மருத்துவம் குறித்த வைத்திய முறைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல மலேசியாவிலும்கூட சில காலம் முன்புவரை இருந்திருக்கிறது  என்பது குறிப்பிட தக்கது.   பெண்களை முன்னிலைப்படுத்தும் இம்மாதிரியான வைத்திய முறைகள் இன்னும்  இருக்கிறதா என்பது என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், சாமியாடுவது, குறி கேட்பது, சாமியாடிகள் சொல்லும் பரிகாரத்தை செய்வது, இரண்டாம் ஜாமத்தில் சாமியழைப்பது  உள்ளிட்ட விஷயங்கள் இன்னும் இருக்கிறது என்பது உறுதியாக தெரியும்.

புத்தகத்தில் பேசப்பட்டபடி பெண்களின்  மலடுக்கு சொல்லப்பட்டிருக்கும் காரணங்கள் இப்படி பட்டியலிடப்பட்டிருக்கிறது.  மலட்டு நோய் உண்டாவதற்கு பெரும்பாலும் தெய்வத்தின் சினம், தீய ஆவிகளின் செயல், மந்திரவாதிகளின் செயல், தீய பார்வைகள் ஆகியவையே காரணங்களாக நம்பப்படுகின்றன. இவற்றை சடங்குகளின் மூலம் நீக்கிவிடலாம்.  குறிப்பாக, சிவகங்கை வட்டார மக்கள் குழந்தைப் பாக்கியத்தை தரும் அருள் வாக்குச் சொல்லும் சாமியாடியையும், கோடங்கி பார்ப்பவரையும், திருநீறு போடுபவரையும், பார்வை பார்ப்பவரையும் , தாயத்து மந்திரிப்பவரையும் மருத்துவராக எண்ணிக் கொள்ளுகின்றனர்.

பெண் கர்பம் ஆகாவிட்டால் அவளுக்கு சாமியாடிகளிடம் கொண்டு செல்வதும், கர்பமாகிவிட்டால் குழந்தை பிறக்கும் வரையும் குழந்தை பிறந்த

பின்பு சில நாட்களுக்கு தீட்டு என்றும் ஒதுக்கி வைக்கிறார்கள். வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்தும் பிறப்பு மற்றும் இறப்பை மையமாக கொண்டு அமைகிறது என்றாலும் மனித உற்பத்தியின் தேவை அறிந்த மரபில் வந்தவர்களுக்கு குழந்தை முக்கியமானது என்று இந்தப் புத்தகத்தின் ஆய்வாளர் சொல்கிறார். பெண்களின் மலடு குறித்து குறி சொல்லும் சாமியாடிகள், பெண்ணுக்கு மலடு இல்லை என்று சொல்வதில்லை. அதோடு ஆண்களுக்கும் உடல் ரீதியான பிரச்னையை சொல்வதில்லை.  மலடுக்கு மருத்துவம் செய்வதில்  இடுமருந்து  கொடுப்பது முக்கிய அம்சமாக இருக்கிறது. அப்போதும் மலடு நீங்க வில்லை என்றால் சாமியாடியே பெண்ணின் மலடு தன்மையை தீர்க்க பிள்ளையை கொடுத்து விடுகிறார். அதெல்லாம் ரகசிய ஒப்பந்தமாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக