ஞாயிறு, 7 மார்ச், 2021

நாடு கடத்தப்பட்ட மியன்மார் அகதிகளுக்காக காலணி அறப்போராட்டம்


நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த 1,200 மியன்மார் அகதிகளில் 1,086 அகதிகளை திரும்ப மியன்மார் நாட்டிற்கே நாடு கடத்திய விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர் மனித உரிமை சார்ந்த சில தன்னார்வ அமைப்புகள்.

மியன்மார் உள்நாட்டு அரசியலின் உட்பூசல் காரணமாக அங்கு போராட்டம் வெடித்திருக்கும் வேளையில், மக்கள் பாதுகாப்பில்லாத சூழலில் இருக்கிறார்கள். இந்நிலையில் மலேசியாவில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 1,086 அகதிகளை மியன்மார் ராணுவத்திடம் ஒப்படிக்கும் பொருட்டு மலேசிய குடிநுழைவுத்துறை திருப்பி அனுப்பியது. பேராக் லுமூட்டில் உள்ள ராயல் மலேசிய கடற்படை தளத்திலிருந்து மியான்மார் கடற்படையின் மூன்று கப்பல்களில் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.   


முன்னதாக கடந்த ஆண்டு முதல் அகதிகள் முகாமில் இருக்கும் மியான்மார் அகதிகள் 1200 பேரை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப் போவதாக மலேசிய குடிநுழைவு இலாகா அறிவித்திருந்த வேளையில், அதனை எதிர்த்து எம்னஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா (Amnesty International Malaysia) மற்றும் அசைலம் அக்சஸ் மலேசியா (Asylum Access Malaysia) எனும் இரு மனித உரிமை குழுக்கள் வழக்கு தொடுத்தனர். மியான்மார் அகதிகளை நாடு கடத்தும் குடிநுழைவு துறையின் எண்ணத்திற்கு உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்தது. ஆனால், அன்றைய தினமே (பிப்ரவரி 23-ம் தேதி) அகதிகளின் 1,086 பேரை நாடு கடத்தியது மலேசிய அரசு.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு ஆட்சேபத்தினை தெரிவிக்கவும் நாடு கடத்தப்பட்ட 1.086 அகதிகளுக்கு ஆதரவாகவும், வித்தியாசமான முறையில் அறப்போராட்டத்தை மென்னெடுத்தன மனித உரிமை குழுக்கள். முகம் தெரியாத அகதிகளுக்காக 1,086 காலணிகளை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு ஜோடி காலணியும் ஒவ்வொரு அகதிகளுக்கானது என்ற அடைப்படையில் 1,086 காலணிகள் கொண்ட போராட்டம் அமைதியான முறையில் செய்யப்பட்டது.

பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி.) அரசாங்கத்திடமிருந்து, மியன்மார் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனால் அங்கு கிளர்ச்சி வெடித்து மக்கள் போராடத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50க்கும் அதிகமான உயிர்கள் பலியாகியிருக்கின்றன.


சரியான அரசியல் சூழல் இல்லாத இந்நிலையில் அகதியாக தஞ்சமடைந்திருக்கும் மக்களை நாடு கடத்தியது எந்த வகையில் ஞாயம் என்றும் இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றும் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் விசாரணை மார்ச் 9 ஆம் தேதி நடைபெறப்போகும் நிலையில், குடிநுழைவுத்துறை அதிகாரி கைருல் டிசைமி டாவுட்அகதிகள் யாரையும் கட்டாயப்படுத்தி  

அனுப்பவில்லை, இந்த நடவடிக்கைக்கு ஒப்புக் கொண்டதின் அடைப்படையில் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக கூறியிருக்கிறார். அதோடு ரோஹிங்கியா அகதிகள், யு.என்.எச்.சி.ஆர் அட்டைதாரர்கள் அரசியல் புகலிடம் கோரியவர்கள் ஆகியோரை அனுப்பவில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனாலும், திரும்ப அனுப்பபட்டவர்களில் அரசியல் புகலிடம் வேண்டியவர்கள் இருக்ககூடும் என நம்பப்படுகிறது



இதற்கிடையில், கொரானா அச்சம் காரணத்தினால் மலேசியா இன்னும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையில் இருப்பதால், வரையறுத்திருக்கும் நடைமுறை சட்டத்தை பயன்படுத்தி இந்தக் காலணி அறப்போராட்டம் செய்யப்பட்டிருக்கிறது. Challenger Malaysia, MISI Solidariti, மலேசிய சோசலிச கட்சி இளைஞர் அணி, மலேசிய சோசலிசக் கட்சி, சுவாராம் ஆகிய அமைப்புகள் இந்தப் அறப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டன.  


-யோகி மலேசியா

5/3/2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக