ஞாயிறு, 7 மார்ச், 2021

பெண் சுதந்திரம் என்பது வார்த்தை ஜாலம் அல்ல ?

 

வடிவமைப்பாளர் ஒருவர் ஆண் பிரபலம் ஒருவருக்கு பெண் வேடம் வரைந்து தன் ஆதங்கத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். நான் அவருடைய முகநூல் உள்பெட்டிக்குச் சென்று, பெண்கள் மீது உங்களுக்கு ஏன் அத்தனை வெறுப்பு என்றேன். இல்லையே, நான் பெண்களை மதிக்கிறவன் என்றார். ஆணுக்கு பெண் வேடம் வரைந்திருக்கிறீர்கள், அதன் அர்த்தம் என்ன?  உங்கள் எண்ணத்தில் பெண் என்பவளுக்கு என்ன மரியாதை என்றேன்.   எனக்கு அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.  ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவர் பதிவேற்றிய புகைப்படத்தை நீக்கியிருந்தார்.

ஆணை  பகடி செய்கிறோம் என்று பெண்ணை கேவலமாக சித்தரிப்பதுதான்  பெருவாரியாக எங்கும் நடக்கிறது. இந்த அநீதியை பெண்கள்கூட செய்கிறார்கள்  என்பதுதான் வேதனை.  ஓர் ஆணை பெட்டை என்றும், பொம்பள மாதிரி அழறான் என்றும் போய் சேலையை கட்டிக்கோ என்றும் இன்னும் பெண்ணை  முதன்மையாக கொண்டு மிக எளிதாக அந்த ஆணை கூன் குறுகி விட வசைப்பாடும் பெண்கள்   சிந்திப்பதில்லை. அந்த இடத்தில் நாம் நம்மையே அசிங்கப்படுத்திக்கொள்கிறோம் என. 

இதில் இன்னும் சங்கடமான விஷயம், இப்படி சொல்வது நம்மை நாமே சிறுமை படுத்தும் செயல் இல்லையா என்று அந்தப் பெண்களுக்கு பெண்களே அறியப்படுத்துவதுதான்.  அதிலும், அதிகாரத்தில் உள்ள பெண்களுக்கு, தன்னைவிட குறைந்த அந்தஸ்தில் இருக்கும்  ஒரு பெண் இதை வழியுறுத்தி சொல்வது மிக கௌரவக்குறைவாக தெரிவதும்,  அது அவர்களுக்கு பெரிய வலியை ஏற்படுத்திவிடுவதும் ஒரு பிரச்னை.  கண்ணீர் வருமே என்பதற்காக வெங்காயத்தை  வெட்டாமல் யாரும் சமைப்பதில்லை. சிறந்த நட்பு என்பது பிழையை சரி செய்வதும்தானே. அதனால் நட்பு முறியுமானால் முறிந்துபோகட்டுமே.  நான் இப்படிதான்.  

மாமியார் மருமகள் சண்டை தொடங்கி  நாத்தனார் சண்டை வரை ஒரு காலத்தில் எங்கும் கேட்ககூடிய எந்த நாட்டிலும் நடக்ககூடிய  விஷயமாகவே இது இருந்தது. ரொம்பவும் கடுமையான சித்திரவதைகளை பெண்களே பெண்களுக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தனர். உடல் ரீதியான, உளவியல் ரீதியான இந்தப் பிரச்னை இந்த நூற்றாண்டில் நடப்பது குறைந்திருக்கிறது கொஞ்சம் ஆறுதல்தான் என்றாலும் பெண்களே பெண்களை  கொடுமைப் படுத்தும் விவகாரம் நடக்காமலா இருக்கிறது?

வீட்டுப் பணிபெண்ணாக தன் குடும்பத்தை நம்பி வரும் எளிய மனுஷியை, கனவுகளை சுமந்து வரும், ஏழை பெண்ணை,  உடல் ரீதியாக அடித்து காயப்படுத்தி, பட்டினிப் போட்டு,  மரணத்தை விளைவிக்ககூடிய அளவில் கொடூர  குணம் நம்  பெண்கள் கொண்டிருக்கின்றனரே.  பெண்ணிய  சிந்தனைகள் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்  காலகட்டத்தில், பெண்ணில் வெளிப்படும் கொடூரமான  ஆதிக்க குணத்தை எப்படி கட்டுப்படுத்துவது? வீட்டுப் பணிப்பெண்களிடம்  காட்டும் கடுமையானது  எதனால் அவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வன்முறையாக மாறுகிறது?  இதற்கு பின்னாள் இருக்கும் உளவியல் சிக்கல் அனைத்தையும் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியது மிக அவசியமாகும்.

கடந்த மாதம் சிங்கப்பூரில் மியன்மார் பணிப்பெண்ணுக்கு நோக்கமில்லா மரணம் விளைவித்த  முதலாளி தொடர்பான வழக்கிற்கு தீர்ப்பு வழங்கியது சிங்கப்பூர் நீதிமன்றம்.  முதலாளி இந்தியப் பெண்ணாவார். உடல் மெலிந்து சிறுத்துப்போன பணிபெண்ணை ஒரு பொம்மையைப் போல தலை முடியைப் பிடித்து தூக்கி குலுக்கியதைக் காட்டும் காணொளி ஒன்று  வழக்கு விசாரணையின்போது  நீதிமன்றத்தில் காட்டப்பட்டதாக  கூறப்படுகிறது.  இதை வாசிக்கும்போதே அந்தக் காட்சியை கற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை. அத்தனை கொடூரமாக இருக்கிறது.  ஆனால், இரக்கமே இல்லாமல் ஒரு பெண் இன்னொரு பெண்ணை அடிமையைப்போல நடத்தியிருப்பது  பதைபதைக்க வைக்கிறது. இத்தனைக்கும்  சட்டதிட்டங்களை மிக தீவிரமாக கடைபிடிப்பதோடு, அதை மீறுபவர்கள் மீது மிக கடுமையான நடவடிகையை  முன்னெடுக்கும் சிங்காப்பூரில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. 

24 வயதான பியாங் இங்கை டொன் எனும் அந்த பணிப்பெண் ஏறக்குறைய 10 மாதங்களாக  இந்த சித்திரவதையை அனுபவித்திருக்கிறார். இன்னும் கொடுமையாக  குளிக்கும்போதும், கழிவறையைப் பயன்படுத்தும்போதும் குளியலறை மற்றும் கழிவறைக் கதவுகளைத் திறந்துவைத்திருக்க வேண்டும் என உத்தரவிடுவதெல்லாம் எந்த மாதிரியான மனநிலை என்று யோசிக்கவே முடியவில்லை. 2015ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி பணிப்பெண்ணாக அந்தக் குடும்பத்திற்குள் வந்தவர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி இறந்தே போனார். இதில் வேடிக்கையான விஷயம் அந்தப் பெண்ணின் கணவர் ஒரு போலீஸ்காரர் என்பதுதான்.

மலேசியாவிலும் பணிப்பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பான வழக்குகள் அதிகமாகவே நடந்திருக்கிறது. அந்த வன்முறைக்கு உண்டான வழக்குகளுக்கு ஞாயம் கிடைத்திருக்கிறதா, நிகழ்த்தியவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்.  கடந்த 2018-ஆம் ஆண்டு பரிதாபமாக மாண்டுபோன இந்தோனேசிய பணிப்பெண்ணான அடெலினா ஆலிசாவோ- வின் மரண  வழக்கிற்கு  கடந்த வருடம் தீர்ப்பு வந்தது.

நாடு முழுவதிலும் கவனத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில், பணிப்பெண்ணுக்கு மரணம் விளைவித்தவர் என்று குற்றம்சாட்டப்பட்டவர் ஓர் இந்தியப்பெண்ணாவார். உடல் உறுப்புகள் செயல் இழந்து அதை கவனிக்காத காரணத்தினால் பணிப்பெண் மரணமடைந்ததாக மருத்துவ சான்றிதழ் கூறுகிறது. அடெலினா பினாங்கில் உள்ள தனது முதலாளியின் வீட்டிற்கு வெளியே இறந்து கிடந்தார். அவரது தலையும் முகமும் வீங்கி இருந்ததோடு காயங்களும் இருந்தன.  அவரது கைகளிலும் கால்களிலும் தீக்காயங்களின் விளைவாக சீழ் படித்திருந்திருக்கிறது.

சிகிச்சையளிக்கப்படாத அவரது காயங்களை காரணம் காட்டி,  வீடு அழுக்குப் படும் என்று சொல்லி  நாயுடன் காம்பவுண்டில் வெளியே தூங்கும்படி அம்பிகா கட்டாயப்படுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு இந்த வழக்கு நீதிமன்றம் வந்த போது குற்றம் நிரூபிக்க படாததால் அம்பிகா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், சில அமைப்புகள் உயிரிழந்த பணிப்பெண்ணுக்கு நீதிவேண்டும் என்ற கண்டனக்குரலை பதிவு செய்தன. அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் ஆளாகக்கூடிய ஆயிரக்கணக்கான வீட்டு வேலைக்கு வரும்தொழிலாளர்களின் சோகமான கதையின் யதார்த்தம்தான்  அடெலினாவின் வாழ்க்கை என  அவை பதிவு செய்தன.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று  பெண்கள் அமைப்புகள் குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. பெண்களின் வன்முறையிலிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று அதே பெண்கள் குரல் எழுப்ப வேண்டியிருப்பது என்ன ஒரு துரதுஷ்டம். பணிப்பெண்ணை அடிமைப்பெண்ணாக பார்க்கும் மாறினாலே ஒழிய இம்மாதிரியான வன்முறைகளிலிருந்து மீள முடியாது. குறிப்பாக ஏழை நாடுகளிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு வரும் பெண்களுக்காக சில ஞாயமான சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் சட்டத்தைப் பின்பற்றிதான் முதலாளிகள் நடந்துக்கொள்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது.

தன் கையைக் கொண்டே தன் கண்ணை குரூடாக்குவது போலதான் பெண்களே பெண்கள்மீது வன்முறையை கட்டவிழ்ப்பது. கடந்த 100 ஆண்டுகளாக பயன்படுத்தாத பெண்களின் தூக்கு மேடை அறையை புணரமைக்கிறது  இந்தியா.  100 ஆண்டுகளாக எந்தப் பெண்ணும் அங்கு தூக்கிலிடபடவில்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மதுரா சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தன் குடும்பத்தையே கொடூரமாக  கொலை செய்த காரணத்திற்காக,  குற்றம் நிரூப்பிக்கப்பட்ட பெண்ணுக்கு தூக்கு கயிறு தயாராகிக்கொண்டிருக்கிறது.  உயிரை குடிக்கும் மனிதாபிமானமற்ற குணம்  ஆணுக்கு இருந்தாலும் பெண்ணுக்கு இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகள்தான்.  தண்டிக்க பட வேண்டியவர்கள்தான்.  பெண், பெண்மீது செலுத்தும் வன்முறைக்கு  சேர்த்தே தான் பெண் அமைப்புகள் நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக