செவ்வாய், 1 நவம்பர், 2016

எங்கெங்கு காணினும்...

மலேசியா என்றொரு நாடு உள்ளது
தனியே அதற்கொரு குணம் உள்ளது..

இப்படி சொல்வதற்கு என்ன காரணம் இருக்கும் என யோசிக்கிறீர்களா? “மலேசியா எனும் சொர்க்க புரியில் எல்லாரும் ரிங்கிட்டில் சம்பாதிக்கிறார்கள்; இந்திய ரூபாயைவிட அதற்கு மதிப்பு அதிகம்; அங்கிருக்கும் தமிழர்கள் எல்லாம் பணக்காரர்கள்; பெண்கள் எல்லாம் ரொம்ப சோஷியலாக இருப்பார்கள்; இஷ்டம்போல ஆடையணிந்து பாருக்குப் போய் மது அருந்திவிட்டு கேளிக்கையில் ஈடுபடுவார்கள். இரவு, பகல் என அங்கு கொண்டாட்டம்தான்.  கருத்து சுதந்திரம் உள்ள நாடு. இந்தியாவிலிருந்து வேலைக்காக அங்குப் போனால் சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம். நமது வாழ்க்கையும் பளிச்சென்று பிரகாசமாகிவிடும்.”

உங்களுக்குள் பதிந்திருக்கும் மலேசியாவின் பிம்பம் இதுதான் என்றால் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து மூன்றாம் தலைமுறையை சேர்ந்த நான் இன்னும் என் தாய் நாட்டை அப்படிப் பார்க்கவில்லை என்ற உண்மையை நீங்கள் நிச்சயமாக அறிய வேண்டும்.  மாயையிலிருந்து கண்களைக் கழுவி கொள்ளுங்கள். நான் உங்களோடு சில உண்மைகளை பகிந்து கொள்கிறேன்.
மலேசிய இந்தியப் பெண்களுக்கும் தமிழ்நாட்டு இந்தியப் பெண்களுக்கும் இங்கு பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. உடையிலும் அலங்காரத்திலும் வேண்டுமென்றால் சில வித்தியாசங்களை கூறலாம். ஆனால், சராசரி வாழ்க்கையில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை.

வீட்டுப் பொறுப்பை கவனிப்பதிலிருந்து வேலைக்கு போய் சம்பாதிப்பது வரை பெண்கள் தங்கள் உடல் உழைப்பை வழங்கினாலும் அவள் இரண்டாம் இடத்தில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறாள். பூ பொட்டு தாலி சமாச்சாரங்கள் பெண்ணின் அடையாளம் எனவும் அதை அணியாதவள் ஒழுக்கம் கெட்டவள் என்றும் பேசுபவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

எது ஒழுக்கம் என்று இந்த சமுதாயத்திற்கும் எது சுதந்திரம் என்று பெண்களுக்கும்,  நடக்கும் சில விஷயங்களைப்  பார்த்தால் ஏன் எனக்கும் கூட  ஒழுக்கம் மற்றும் பெண் சுதந்திரம் மீது குழப்பங்கள் ஏற்படவே செய்கிறது. நாம் நினைப்பவை எல்லாம் சுதந்திரமும் இல்லை, சமுதாயம் கட்டமைத்து வைத்திருக்கும் அனைத்தும் ஒழுக்கமும் இல்லை என்பதே முடிவான உண்மை.

இந்நிலையில் அண்மையில் இடைநிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திடீர் சோதனையில் அந்தப் பள்ளி ஆசிரியை ஒருவர் சொன்ன தகவல் பயங்கரமாக இருந்தது. இடைநிலைப் பள்ளி என்பது 13 வயதிலிருந்து 17-18 வயதுக்குட்பட்டவர்கள் பயிலும் கல்விச்சாலையாகும். 

மாணவி ஒருவரின் கையில் பெலேட் கத்தியால் கீறிய காயங்களை ஆசிரியர் பார்வையில் பட்டிருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட மாணவியை விசாரிக்க, வீட்டில் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அந்த மாணவி மன உளைச்சலில் தனக்கு தானே காயம் ஏற்படுத்திக் கொண்டதாகவும், அப்படி கீறும்போது வலிக்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

அந்த மாணவிக்கு கவுன்சிலிங் கொடுப்பது மிக அவசியம் என தோன்றிய ஆசிரியை மனதில் வேறொரு எண்ணமும் தோன்றியது. தனது வகுப்பறையில் இருக்கும் 32 மாணவிகளின் கைகளையும் சோதனையிட்டிருக்கிறார். பயங்கரம் என்ன வென்றால் 30 மாணவியர்கள் கையில் தன்னை தானே கத்தியால் கீறி காயம் விளைவித்துக் கொண்ட அடையாளங்கள் இருந்திருக்கின்றன.

இது ஒரு வகுப்பறைக்குள் நடந்த சம்பவம்.  ஒட்டு மொத்தமாக எல்லா பள்ளிகளையும் சோதனையிட்டால் கிடைக்கும் பதிவை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தன்னைத்தானே காயம் விளைவித்துக் கொண்டு, ஒரு பிரச்சனையை ரத்த வாடையோடு பார்ப்பது எம்மாதிரியான மனப்பிறழ்வின் அறிகுறி என தெரியவில்லை. மலேசிய பெண்கள் குறிப்பாக தமிழ்ப் பெண்கள் அதுவும் அடுத்த தலைமுறை பெண்களின் இந்த மனநிலை எம்மாதிரியான எதிர்வினையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்ற கேள்வியை வைக்கும்போது அதற்கான பதிலையும் யூகிக்கவே முடியவில்லை.

சம்பந்தப்பட்ட மாணவிகளை விசாரிப்பதை காட்டிலும் அவர்களின் குடும்ப பின்னணியை ஆராய வேண்டியதுதான் மிக முக்கியமான விஷயமாகத் தோன்றுகிறது. காரணம் ஒட்டு மொத்த உளவியல் சிக்கலும் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதைக் கருத்தில் கொண்டுதான் குழந்தைகளின் உலகத்தை பார்க்க வேண்டிய தேவையும் இருக்கிறது.  
அவசர உலகத்தில் பணம் மட்டும் பிரதான ஒன்றாக ஆனப்பிறகு, இதுபோல பிரச்னைகள் பெற்றோர்களின் கண்களுக்கு தெரிவதில்லை என்பதோடு அதற்கான நேரமும் இங்கில்லை. காரணம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். உணர்ச்சிவசப்படுதல், சட்டென கோப்படுதல் என மாறிவரும் வேளையில், மலேசியாவில் தமிழ்ப் பெண்களிடத்தில் அதிகரித்துவரும் இந்த மனநலப் பிரச்னைக்கு இன்னும் சரியான அணுகுமுறை கண்டறியப்படவில்லை என்றே தோன்றுகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் கிரைம் மற்றும் போதைப் பொருளுக்கு இலக்கான பெண்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்திருக்கிறது.

சம்பவம் 1

2015-ஆம் ஆண்டு மலேசியாவில் தாப்பா எனுமிடத்தில் நடந்த  கொடூரமான தொடர் கொலைச் சம்பவங்களில்  அந்த வீட்டுத் தலைவி இரக்கமே இல்லாமல் தன் கணவருக்கு துணை புரிந்துள்ளார்.  6 பேர் கொலை செய்யப்பட்டதில் ஒருவர் பெண் ஆவார்.  ஆட்களை கொன்று எரித்து, மனித இறைச்சியை நாய்களுக்கு கொடுத்து (இந்த விவரம் குறித்து உறுதியான தகவல் ஆயாயப்படுகிறது)  சாம்பலை ஓடும் ஆற்றில் கொட்டி ஓர் அமானுஷ்யம்போல அந்தக் கொலை வழக்கு ஆனாது. இத்தகைய கொடூரச் செயல்களில் பெண் ஈடுபட்டது அதிர்ச்சியான ஒன்று.
 அதில் அந்த வீட்டுப் பெண் ஈடுபட்டது ஒரு காரணமாகும்.

சம்பவம் 2

2015 ஆம் ஆண்டு, 16 வயது பள்ளி மாணவி, செந்தூல் எனுமிடத்தில் போதை பொருள் வைத்திருந்தபோது அகப்பட்டார். ஒரு குண்டர் கும்பலில் இணைந்திருந்த அந்தப் பெண் அவர்களின் கட்டளையின் பேரில் அதை செய்ததாக அறியப்படுகிறது.

சம்பவம் 3
-பள்ளி மாணவிகள் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர்
- பதின்ம வயதே கொண்ட பெண் ஒருவர், வயதான பெண் ஒருவரை பகடி வதை செய்கிறார்.
-சிங்கப்பூருக்கு போதை பொருளைக் கொண்டு போகும்போது போலீசில் சிக்கினார் 30 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் .

மேற்குறிப்பிட்ட இந்த சில சம்பவங்கள் அனைத்தும் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்ட குற்றவியல் சம்பவங்கள். தமிழ்நாட்டு சினிமாவில் காட்டும்போது சில விஷயங்களை நம்ப முடியாது. ஆனால், இச்சம்பவங்களை காணும்போது அவற்றை நம்பத்தோன்றுகிறது. பணத்தேவைக்காக  கொலை செய்வதும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதும், இன்னும் பல அறமில்லாத செயல்களை குற்றமெனத் தெரிந்தும்  செய்கிறார்கள் என்றால் இந்த வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே தோன்றுகிறது.

நம்பிக்கையில்லாத வாழ்க்கையை எதிர்கொள்வதைவிட  வேறு என்ன மனஉளைச்சல் பெண்களுக்கு பெரிதாக  இருந்திட முடியும்?
மலேசிய அரசியலில் முக்கிய பதவிகளில் இருக்கும் பெண்களே கத்தி முனையில் நின்றுகொண்டு தனக்கும் மற்றவருக்கும் காயம் ஏற்படாமல் நடந்து கொள்ள  வேண்டியிருக்கிறது. காயம் படுவதாக இருந்தாலும் அது பெண்ணே ஏற்றுக்கொள்ள வேண்டிய எழுதப் படாத கட்டாயமும் இருக்கிறது.
வெறும் இரக்கத்திற்குரிய பிராணியாக பெண்களை பார்க்கும் கலாச்சாரம் இந்தியர்களிடத்தில் மட்டுமல்ல  சீன - மலாய் சமூகத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாத விலக்கு வரும் பெண்ணால் அரசியலில் ஈடுபட முடியாது என அரசியல் தளத்திலேயே நக்கலடித்து கிண்டல் செய்த நாடு இது.  ஒரு மெழுகுவர்த்தி எரிந்து அணைவது போல அத்தனை விரைவில் இந்த விவகாரம் அணைந்துபோனது.

பெண் உரிமை என்றெல்லாம் பேசுவதற்கு மலேசியா ஒரு சரியான நாடா என்று தோன்றவில்லை. மலாய்க்காரர்கள் மத்தியில், மாப்பிளை வீட்டாரிடம்  வரதட்சனையை கேட்டுப் பெறும் உரிமை பெண் வீட்டாருக்கு இருந்தாலும்கூட பெண் அடுப்படிக்குரியவள் என்ற அடைமொழியை இன்னும் அச்சமூகத்தால் மாற்ற முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

இந்நிலையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படும் அகம், புறம் சார்ந்த உளவியல் சிக்கல்களை சரியான முறையில் கையாளுதல் என்பது முடியாத ஒன்றாகவே இருக்கிறது. பெண்களுக்காக அலோசனை வழங்க தனியார் இயக்கங்களும் அரசு சார்ந்த அமைப்புகளும் இருந்தாலும்கூட இந்த விவகாரத்தை சரியாக கையாள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
பெண் சுதந்திரம் என்பதை தவறாக புரிந்துகொள்ளுதல், குடும்பச் சிக்கல், காதல் விவகாரம், பொருளாதாரப் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களில் பெண்கள் சரியான முடிவு எடுக்க முடியாமல் அல்லது முடிவு எடுப்பதற்கு போதிய அவகாசம் இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் பாதிப்படைகின்றனர். மலேசியாவில் இது தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவர்களை கொண்டு நிறுத்துகிறது என்பது கசப்பான உண்மை.

நன்றி குங்குமம் 'தோழி'  நவம்பர் மாத இதழ் 2016





2 கருத்துகள்: