வெள்ளி, 25 நவம்பர், 2016

மலேசியாவை அதிர வைக்கும் 5.0! - மலேசியப் பெண்கள் எழுச்சி

“தற்கொலை செய்துகொள்ளவிருந்த மூன்று இளம்பெண்களின் வழக்குகளை நான் கையாண்டேன். இதில் இரண்டு வழக்குகள், பெற்ற தந்தையே தன் மகள்களை பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தியது தொடர்பானவை. அந்தக் கொடுமையை அப்பெண்கள் தங்கள் அம்மாக்களிடம்கூட சொல்ல முடியாத சூழ்நிலை. இந்த மனஉளைச்சலில்தான் அப்பெண்கள் தற்கொலை முடிவெடுத்தார்கள். மூன்றாவது தன் தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள, அதன் பிறகு நிராதரவாக விடப்பட்ட நிலையில், மகள் எடுத்த தற்கொலை முடிவு தொடர்பான வழக்கு.

இந்த மூன்று வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கியபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 15 வயதிலிருந்து 19 வயதுக்குட்பட்ட அந்தப் பெண்களுக்கு இந்த நாட்டுச் சட்டம் பாதுகாப்பு வழங்கவில்லை, கல்வி அவர்களுக்கு உதவவில்லை, சமூக அமைப்புகள் ஆதரவளிக்கவில்லை என்பதை நான் அப்போதுதான் உணர்ந்தேன்”
- மரியா சின்.
மரியா சின், தற்போது உலகத்தின் பார்வையை மலேசியா பக்கம் திருப்பியிருக்கிறார். மலேசியாவில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும் தன்னுடைய இயக்கத்தின் 5.0 பெர்சே எனும் பேரணியை (Bersih 5.0 Movement) முன்னெடுத்தற்காக ‘சோஸ்மா’ பாதுகாப்புக் குற்ற (சிறப்பு நடவடிக்கை)  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தனிமைச்சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மக்கள் பேரணியை முன்னெடுக்கும் போதெல்லாம் போலீஸ் காவலால் தடுக்கப்படுவதும், விசாரிக்கப்படுவதும் தொடர்ந்து மலேசியர்கள் காணும் நிகழ்வுதான். மலேசிய அரசு சாசனத்தின் பத்தாவது  கோட்பாடு, அமைதியான முறையில் பேரணி நடத்துவதற்கு சட்டம் வகை செய்கிறது என்கிறது. அதோடு, 2010-ம் ஆண்டுக்கான சட்டத் திருத்தத்தில் ஒரு பேரணியை நடத்துவதற்கு (உரிமம்) அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், 10 நாட்களுக்கு முன்னதாக போலீஸிடம் அதுகுறித்து தெரிவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் மலேசியாவில் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிபடுத்துவதற்கும் பேரணி நடத்துவதற்கும் பெரிய போராட்டமே செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் உண்மை. அரசின் இந்த நிலைப்பாட்டையும் எதிர்த்தே பெர்சே பேரணியில் குரல் எழுப்பினார் மரியா சின்.
மரியா சின் லண்டனில் 1956-ம் ஆண்டு பிறந்தார். அப்போது பெற்றோர் இட்ட பெயர் மேரி சின் சீன் லியான். லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் செயல்முறை வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டமும், நகர திட்டமிடல் துறையில் எம்.எஸ்சி பட்டமும் பெற்றார். திருமணத்துக்குப் பின் இஸ்லாம் மதத்தை தழுவினார். கணவர், பாலஸ்தீன விடுதலை முன்னணிப் போராளி என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே மனித உரிமைக்காக குரல் கொடுத்து வந்தனர். 1974-ம் ஆண்டிலிருந்து போராட்டங்களும் சிறைச்சாலைகளும் இவர்களின் குடும்ப வாழ்க்கையோடு ஒன்றாயின.சிறுநீரக செயலிழப்பு காரணமாக, 2010-ம் ஆண்டு கணவர் மரணமடைந்தார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது 60 வயதை கடந்திருக்கும் மரியா சின், கடந்த ஆண்டு பெர்சே அமைப்பில் நடந்த தேர்தலில் தலைவியாக வெற்றி பெற்றார்.

பெர்சே பேரணி
‘பெர்சே’ என்றால் மலாய் மொழியில் சுத்தம், தூய்மை என்று அர்த்தம். நாட்டின் தேர்தல் தூய்மையாக நடத்தப்பட வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையோடு வடிவம் கொண்ட அமைப்புதான் பெர்சே. பெர்சே 1.0 போராட்டம் 2007-ம் ஆண்டு ஆரம்பித்தபோது நாட்டு மக்களிடத்தில் பெரிய தாக்கத்தையோ அழுத்தத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக அது அமைச்சரவையில் கேள்வி கேட்கப்பட்டு தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு மிரட்டலாகவும் எச்சரிக்கையாகவும் மட்டுமே அமைந்தது.
2011-ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பெர்சே 2.0 பேரணி மற்றும் 2012-ம் ஆண்டு நடந்த பெர்சே 3.0 பேரணி இரண்டும், மாபெரும் மக்கள் போராட்டமாக அரசே எதிர்பார்க்காத அளவுக்கு வெடித்தது. அந்தப் பேரணிக்கு வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கடந்த ஆண்டு பெர்சே அமைப்பில் நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற மரியா சின், பெர்சே 4.0 பேரணியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுச்சிப் பேரணியாக வடிவமைத்தார். தொடர்ந்து 34 மணி நேரம் இலக்கு வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இரு நாட்கள் இளைஞர்களும் யுவதிகளும் நாட்டு பிரதமர் மேல் அதிருப்தி கொண்டவர்களும், வேறு வேலை எதிலும் ஈடுபடாமல் ஒரே நோக்கத்துக்காக கைகோத்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது நடந்து முடிந்திருக்கும் பெர்சே பேரணி 5.0 க்கும் மரியா சின் தலைமை ஏற்றிருந்தார்.
அனைத்து மலேசியர்களுக்குமான இந்த பெர்சே போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட 5 கோரிக்கைகள்..
1. தூய்மையான தேர்தல்
2. தூய்மையான அரசாங்கம்
3. நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்
4. எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை
5. சபா மற்றும் சரவாக் ஆகிய இரு மாநிலங்களையும் மேம்படுத்துதல்
இந்தப் பேரணியின் தலைவி என்ற ரீதியில் மரியா சின்னும், அவருக்கு ஆதரவு தெரிவித்த மேலும் 10 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மரியா இன்னும் விடுவிக்கப்படாமல் ஜன்னல் இல்லாத தனிச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சோஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்கள் அவர் சிறையில்  வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் தற்போது மரியா சின் விடுதலை குறித்த போராட்டம் பெண்கள் போராட்டமாக மாறிவருகிறது. ‘ஒரு பெண்ணுக்கு நீதிக்காகவும் நாட்டுக்காகவும் குரல் எழுப்புவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது.  எவ்வித குற்றமும் செய்யாத மரியா சின் விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையேல் நாங்கள் அனைவரும் மரியாவாக மாறுவோம்‘ என பெண்கள் அமைப்புகள் அணி திரண்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மலேசியப் பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மரியா சின் மாறி வருகிறார்.
நன்றி: விகடன். http://www.vikatan.com/news/world/73427-50-protest-women-led--in-malaysia.art 25.11.2016

2 கருத்துகள்: