வெள்ளி, 25 நவம்பர், 2016

குருதி 2

அன்றொரு நாள்தான்
அந்த நாளின்
தேதி நினைவில் இல்லை
நேரமும் நினைவில் இல்லை
ஆனால் அந்த நாள்
ஏற்படுத்தியிருந்த
பதற்றம்
இன்னும் மறப்பதாக இல்லை

அவள் உடலிருந்து வழிந்த
குருதியும் நாசியில் ஏறிய நெடியும்
இன்னும்  அந்தச் சின்னத் திரையைவிட்டு
 நீங்குவதாக இல்லை

பிரேதத்தை
காகித்தைக் கொண்டு மூடியிருந்தார்கள்
அவளின் இடது கை மேலும்
வலது கை கீழ் நோக்கியும் இருந்தது
கால்களும் அப்படிதான்

அன்றவள்
விருப்பமாக போட்டு வந்திருந்த
டாப்ஸ் கிழிந்திருக்கலாம்
அது அவளுக்கு
தெரிந்திருக்க  வாய்ப்பில்லை

அவள் குருதியில்
மொய்த்த ஈக்கள்
அதை மொய்த்தக் கண்கள்
என எதைப் பற்றியும்
அவள் அறியவில்லை

முதல் அனுபவங்களை
பட்டியலிட்டு
பாதுகாத்து ரசிப்பவர்களால்
இறுதி நிகழ்வுகளை
சிலாகிக்க முடிவதில்லை
எல்லா இறுதி காட்சிகளும்
மரணத்தோடு
ரகசியமாகிவிடுகின்றன
சிந்திவிட்ட அந்தக் குருதியைப் போல…

நன்றி: படிகம் நவம்பர்  2016 இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக